#navbar-iframe { height: 0px; visibility: hidden; display: none; }

Friday, July 31, 2009

ஊட்டியில் கடும் மழை; மக்களை சந்தித்தார் அமைச்சர் ஆ.இராசா

நீலகிரி மாவட்டத்தில் கடும் மழை காரணமாக முகாம்களில் தஞ்சமடைந்துள்ள பொதுமக்களை அமைச்சர் ஆ.இராசா சந்தித்து நல உதவி பொருட்களை வழங்கினார்.



உதகையில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சேரம்பாடி, பந்தலூர், கூடலூர் பகுதிகளில் முகாம்களில் தஞ்சமடைந்துள்ள மக்களை நடுவண் தொலைத்தொடர்பு மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சரும் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.இராசா சந்தித்தார். அங்கு தங்கியுள்ள குடும்பங்களுக்கு தேவையான அரிசி, கோதுமை, 3 ஆயிரம் ரூபாய் மற்றும் கம்பளி ஆகிய நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.

பின்னர் அமைச்சர் ஆ.இராசா, செய்தியாளர்களிடம் பேசுகையில், “ நீலகிரி மாவட்டத்தில் கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை நானும் மாநில கதர் துறை அமைச்சர் இராமச்சந்திரனும் மாவட்ட ஆட்சியரோடு கலந்து பேசிவிட்டு சந்தித்தோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு மற்றும் மாவட்ட தி.மு.க. சார்பில் அரிசி, கம்பளி, பணம் ஆகியவை வழங்கினோம். பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.

Read more...

Monday, July 27, 2009

"பெரியார் - அம்பேத்கர் இன்றைய பொருத்தப்பாடு" : ஆ. இராசாவின் உரை (ஒலி வடிவில் கேட்க..)

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயராய்வு மையமும், மகளிரியல் துறையும் இணைந்து நடத்திய ` பெரியார் அம்பேத்கர் : இன்றைய பொருத்தப்பாடு’ என்ற தலைப்பிலான சிறப்புச்சொற்பொழிவில் பங்கேற்று மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆ. இராசா அவர்கள் ஆற்றிய உரை - (ஒலி வடிவில்)





ஆ.இராசா என்ற மனிதர், ஓர் அரசியல்வாதி என்ற நிலையை கடந்து ஓர் சமூக பொறுப்புள்ள கருத்தியல் சிந்தனையாளர் என்பதை உறுதிப்படுத்துகிறது அவர் ஆற்றிய இந்த உரை.





data - Origin

.....................................................................................................................
உரையை கேட்கும் முறை : play பொத்தானை அழுத்தினால், மாதிரி பேச்சு மட்டுமே கேட்கும். மாறாக, play பொத்தானை அழுத்தி விட்டு play full song here என்பதை அழுத்தினால் http://www.imeem.com/people/FIkjxAJ/music/J6p-tmyW/origin-data/ என்ற சுட்டியுள்ள ஒரு புதிய சன்னல் திறக்கும். அதில் அமைச்சர் ஆ.இராசா 63 நிமிடம் 36 நொடி நேரம் ஆற்றிய உரை முழுவதையும் கேட்கலாம்.
..........................................................................................................................


Read more...

Wednesday, July 22, 2009

இப்படி ஒரு போராளியைப் பெறுவது எளிதல்ல! : அமைச்சர் ஆ.இராசா

தெற்காசியாவில் குறிப்பாக இந்தியாவில் பசுவையும் குரங்கையும் மண்டியிட்டு வணங்கும் மூடத்தனம் இருக்கும் வரை - மனிதர்களுக்குள் பிறவி ஏற்றத் தாழ்வுகள் இருக்கும் வரை சமூக மாற்றமோ, பண்பாட்டுப் புரட்சியோ வருமா? என்பது ஐயத்திற்குரியதே என்று காரல் மார்க்ஸ், "இந்தியாவில் முதல் சுதந்திரப் போர்’’ என்னும் கட்டுரையில் கூறியுள்ளார். இதை இந்நாட்டு மார்க்சியவாதிகள் மறந்து போனது எவ்வளவு பெரிய தவறு என்பதை இப்போது அவர்களும் மற்றவர்களும் உணருகின்ற காலம் வந்திருக்கின்றது. இந்த மாற்றம் தானகவோ, சுயதாக்கத்தாலோ வந்ததல்ல; பெரியார் - அண்ணா என்னும் இரு பெரும் தலைவர்களும் அவர்களது இயக்கங்களான திராவிடர் கழகமும் திராவிட முன்னேற்றக் கழகமும் ஆற்றிய அரும்பணிகளால் விளைந்த விளைச்சல்கள்.

இளைஞர்களின் பார்வை எந்த வட்டத்தில் ஏறக்குறைய 75 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தத் தத்துவங்கள் தேவைப்படுகின்றன என்பது மகிழ்ச்சிக்குரியதா?, ஆராய்ச்சிக்கும் வியப்புக்கும் உரியதா? என்பதை எடைபோட வேண்டிய இளைஞர்களின் பார்வை எந்த வட்டத்திற்குள்ளும் கட்டுப்படாமல் காணாமல் போய்க்கொண்டிருப்பதும் கள்ள மனிதர்களோடு களவு போவதும் நல்ல அறிகுறியல்ல! என் மதிப்புக்குரிய ஆசிரியர் வீரமணி அவர்களின் பிறந்த நாளில் என்னுள் பிறக்கும் முதல் ஏக்கப் பெருமூச்சு இதுதான்!

1840-களில் காரல்மார்க்ஸ் தந்த எச்சரிக்கையை தகவல் பரிமாற்றம் இல்லாதா அந்தக் காலத்தில் உணர்ந்து உழைத்த புரட்சியாளர் தந்தை பெரியார்.

அந்தத் தத்துவங்களை முன்னெடுத்து அரியணையேற்றி மாற்றங்களையும் - மறுக்கப்பட்டவர்களுக்கு உரிமைகளையும் உறுதியையும் தர ஆவன செய்தவர் அண்ணா.

இவர்கள் இருவரோடும் - இவ்விரு இயக்கங்களோடும் இந்தத் தத்துவ அரசியல் ஓட்டம் நின்றிருந்தால் இந்த மண்ணில் மனிதர்களுக்குப் புதிய பொருளை அகராதிகள் மீண்டும் வழங்கியிருக்கும். இயற்கை வழங்கிய அருட்கொடை என்னவெனில் தலைவர் கலைஞரும் ஆசிரியர் வீரமணியாரும் வாழ்ந்து கொண்டிருப்பதோடு தத்துவம் தழைத்தோங்க தங்களையே தாரை வார்த்துக்கொண்டிருப்பதுதான்!

1980-களில் திராவிடர் கழகத்தின் மாணவரணியில் நான் பணியாற்றியபோது இலால்குடி இடையாற்று மங்களம் அசோகன், சேலம் அசோகன் உள்ளிட்ட நண்பர்களோடு ஆசிரியர் அவர்களை தொலைவில் நின்றும் பின்பு அருகில் இருந்தும் அறியும் வாய்ப்பை பெற்றேன். அப்போது, இலால்குடி பரமசிவம் கல்யாண மண்டபத்தில் சமூக நீதி மற்றும் மண்டல் குழு குறித்த 2 நாள் பயிலரங்கு நடைபெற்றது. அதில், விதைக்கப்பட்ட விதைகள் ஆசிரியர் ஆற்றிய அந்த அற்புதமான விளக்க உரைகள் என்னுள் எப்போதும் காண சாகா வரம் பெற்றவை.

அன்று முதல் இன்று வரை அரசியல் தளத்தில் பிறழ்வுகள் நேர்ந்தபோதும்கூட அவரிடம் மலைத்து போகிற பல காரணிகளை நான் கண்டு வியக்கிறவன்.
எப்போதும் நின்றுவிடாத அவரது அறிவுத்தேடல்! தேடிய அறிவை தனது இலட்சியத்தை வென்றெடுக்க மட்டுமே பயன்படுத்தும் பாங்கு!கொள்கையைப் பேசுகிறபோது எதிரிகளையும் தம் பக்கம் ஈர்க்க வைக்கும் அறிவார்ந்த பேச்சு! எழுத்து!
தாம் வாழ்நாளில் தாம் கொண்டிருக்கும் கொள்கையால் சமூகத்தை ஓர் ஆங்குலமாவது உயார்த்திட முடியாதா என்பதில் அவர் காட்டும் உறுதி.
"ஓய்வு என்று தனியே ஒன்றில்லை; அது இன்னொரு பணியில் தன்னை இருத்திக்கொள்வது" என்று சேகுவாரா கூறினார். அவரின் சொற்களோடு இணைந்தது ஆசிரியரின் அயராத உழைப்பு!
இப்படி ஒரு சமூகப் போராளிக்காகத் தமிழ்ச் சமுதாயம் இன்னொரு முறை தவமிருக்க உறுதியாக முடியாது.

பிறந்த நாள் மகிழ்ச்சிக்குரியதுதான் என்றாலும் அவருக்கு வயது எழுபத்தைந்தா?! எழுபத்தைந்து ஆண்டு ஆகிவிட்டதே என்ற ஏக்கம் மனத்தில் ஒருபுறம்! ஏன் இவருக்கு எழுபத்தைந்து என்று இயற்கையின் மீது எரிச்சல் மறுபுறம்!
ஆயினும், இவர் காலத்தில் அல்லாமல் எப்போது வெல்லும் பெரியாரியம் என்ற வினா நாற்புறம்!

வாழ்க அசிரியர் பல்லாண்டு! வளர்க அவரது தொண்டு தலைவர் கலைஞருடன் இணைந்து..!
( திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் பிறந்த நாள் பவள விழா சிறப்பு மலருக்காக அமைச்சர் ஆ.இராசா எழுதியது)

Read more...

Friday, July 17, 2009

இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் தொழிற்சாலைக்கு புத்துயிரூட்டி சீரமைக்க வேண்டும் : அமைச்சர் ஆ.இராசா வேண்டுகோள்



புதுதில்லி:
உதகமண்டலத்தில் உள்ள இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் தொழிற்சாலைக்கு புத்துயிரூட்டி சீரமைக்க வேண்டும் என்று நடுவண் தொலைத்தொடர்பு மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆ.இராசா, நடுவண் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இது தொடர்பாக நடுவண் கனவகை தொழில்கள் மற்றும் பொது நிறுவனங்கள் துறை அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் அவர்களுக்கு அமைச்சர் ஆ.இராசா கடிதம் எழுதியுள்ளார்.

அதன் விவரம்:
"நீலகிரி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் தொழிற்சாலையை புதுப்பிக்க வேண்டும் என்று உங்களை கேட்டுக்கொள்கிறேன். இந்தக் கோரிக்கையை பொது நிறுவனங்கள் சீரமைப்பு வாரியம் இம்மாதம் 17-ஆம் தேதியன்று பரிசீலிக்க உள்ளது. கனவகை தொழில்துறை அமைச்சகத்தின் 100 நாள் செயல் திட்டத்தில் இந்தத் தொழில்சாலையை புனரமைக்கும் திட்டத்தையும் சேர்த்துள்ளதற்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

எனது நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள இந்தத் தொழிற்சாலை தென்கிழக்கு ஆசியாவிலேயே போட்டோ நுட்பம் சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்யும் ஒரே தொழிற்சாலையாகும். போட்டோ நுட்பம் சார்ந்த துறையில் நம் நாடு தன்னிறைவு பெறுவதற்காகவும், வேலைவாய்ப்பு குறைவாக உள்ள பிந்தங்கிய மாவட்டமான நீலகிரியின் சமூக பொருளாதார வளர்ச்சியையும் நோக்கங்களாக கொண்டு இந்தத் தொழிற்சாலை அமைக்கப்பட்டது. நவீன தொழில்நுட்பத்தின் காப்பாளராகவும் இராணுவம் சார்ந்த துறைகளின் தேவைகளை நிறைவேற்றுவதாகவும் இந்தத் தொழிற்சாலை விளங்குகிறது.

சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளையும் புதுமையான தொழில்நுட்பத்தையும் பெற்றிருந்தபோதிலும் தனது கட்டுப்பாட்டில் இல்லாத பல்வேறு காரணங்களால் இந்தத் தொழிற்சாலை நலிவடைந்தது வருத்தத்திற்குரிய ஒன்று. நலிவடைய தொடங்கிய ஆரம்ப கட்டத்திலேயே அதனை சரி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படாததால் இந்தத் தொழிற்சாலை இப்போதுள்ள நிலையை எட்டியுள்ளது தெளிவாக தெரிகிறது.

இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலையை புதுப்பிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை மிக விரைவிலேயே எடுக்க வேண்டியிருப்பது அத்தியாவசியமான ஒன்று. இதனை தாமதப்படுத்தினால், இத்தொழிற்சாலை விற்பனை சந்தையில் தனக்குரிய இடத்தையும் உற்பத்தி திறனையும் இழந்து விடும். ஏனெனில் இந்தத் தொழிற்சாலைக்கு இயங்குமுதல் எதுவும் இல்லை. இதன் பணியாளர்கள் கடந்த 16 ஆண்டுகளாக 1987-ஆம் ஆண்டின் ஊதிய விகிதத்திலேயே ஊதியம் பெற்றுக்கொண்டு இன்னும் பணியாற்றி வருகிறார்கள்.

இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலைக்கு புத்துயிரூட்டும் திட்டப்படி, ரூ.200 கோடி இயங்குமுதல் மற்றும் ஊதியத்துக்காக ரூ.50 கோடி. பழுது பார்க்கும் பணிகளுக்காக ரூ.9 கோடி. பிற செலவுகளுக்காக ரூ.43 கோடி தேவைப்படுகிறது.

இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் தொழிற்சாலைக்கு புத்துயிரூட்டும் திட்டத்தில் சாதகமான முடிவை எடுக்குமாறு பொதுத்துறை நிறுவனங்கள் சீரமைப்பு வாரியத்தை அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இம்மாதம் 17-ஆம் தேதியன்று நடைபெறும் கூட்டத்தில் சீரமைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பரிந்துரைக்கும் பணியை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்" என்று அமைச்சர் ஆ.இராசா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Read more...

Monday, July 13, 2009

அரக்கோணம் டெலிகாம் நிறுவனத்தை மீண்டும் இயக்க பரிசீலனை : டி.கே.அரங்கராஜன் வினாவுக்கு அமைச்சர் ஆ.இராசா பதில்

புதுடில்லி :
அரக்கோணம் பிரிவாக செயல்பட்டு வந்து, இப்போது நலிவடைந்த நிலையில் உள்ள தமிழ்நாடு தொலைத்தொடர்பு நிறுவனத்தை, மீண்டும் புதுப்பித்து இயங்க வைக்க அரசு பரிசீலனை செய்து வருகிறது என்று மத்திய தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆ. இராசா விடையளித்தார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் வியாழனன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.கே.அரங்கராஜன் பேசுகையில், ”தமிழ்நாடு தொலைத்தொடர்பு நிறுவனம், அரக்கோணம் பிரிவு, நலிவடைந்த நிறுவனம் என்று பிரகடனம் செய்யப்பட்டிருக்கிறதா?, அல்லது அதனை புதுப்பிக்க அரசு ஏதேனும் குறிப்பிட்ட காலநிர்ணயம் செய்திருக்கிறதா?” என்று வினா எழுப்பினார்.

இதற்கு மத்திய தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆ.இராசா விடையளிக்கையில், ”தமிழ்நாடு தொலைத்தொடர்பு நிறுவனம், அரக்கோணம் பிரிவு நலிவுற்ற ஆலை என்று பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அதனால், அது தற்சமயம் செயல்படவில்லை. அதனை புதுப்பித்து இயங்க வைக்க, தொழில் மற்றும் நிதி மறுபுனரமைப்பு வாரியத்தின் முன் நிலுவையில் உள்ள முன்மொழிவு, அரசின் பரிசீலனையில் இருந்து வருகிறது. மறைமலை நகரில் உள்ள ஆப்டிகல் ஃபைபர் கேபிள் உற்பத்தி செய்யும் பிரிவு இயங்கி வருகிறது” என்று தெரிவித்தார்.

மேலும், ”பாரத ஸ்டேட் வங்கியால் இத் தொழிற்சாலையை இயங்க வைக்க சில உள் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது, அதற்கான வழிமுறைகள் கண்டறியப்பட்டிருக்கிறது. தற்சமயம் அதற்கு 27 கோடி ரூபாய் வங்கிக் கடன் அளிக்கப்பட்டிருக்கிறது. மத்தியப் பொதுத் துறை நிறுவனமான டி.சி.ஐ.எல். மூலமாக மேலும் 17 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டிருக்கிறது. இவற்றின் மூலம் அதனைப் புதுப்பித்து இயங்க வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்நிறுவனத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனமான டி.சி.ஐ.எல். 30.67 விழுக்காடும், தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான டிட்கோ எனப்படும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் 29.49 விழுக்காடும், இந்நிறுவனத்திற்குத் தொழில்நுட்ப உதவிகளைச் செய்து வந்த ஃபுஜிகுரா என்னும் நிறுவனம் 14.47 விழுக்காடும் இதன் பங்குகளைப் பெற்றிருந்தன. பொது மக்களின் பங்குகள் 25 விழுக்காடு இருந்தன. இதுதான் இந்நிறுவனத்தின் முந்தைய பங்கு வீதமாக இருந்தது.
இப்போது, செயலாளர் குழு பரிந்துரைகளின்படி இது மாற்றப்பட்டிருக்கிறது. அதன்படி டி.சி.ஐ.எல். 49 விழுக்காடும், டிட்கோ 14.63 விழுக்காடும், ஃபுஜிகுரா 0.718 விழுக்காடும், பொதுமக்கள் 12 விழுக்காடும், வங்கிகள் 16 விழுக்காடும் பெற்றிருப்பார்கள்” என்று அமைச்சர் ஆ.இராசா தெரிவித்தார்.

Read more...

Wednesday, July 08, 2009

அலைவரிசை ஒதுக்கீட்டில் அரசுக்கு இழப்பு என்பது முற்றிலும் தவறானது : மாநிலங்களவையில் அமைச்சர் ஆ.இராசா விளக்கம்

3 ஜி எனப்படும் மூன்றாம் தலைமுறை அலைவரிசை ஏலம் விடப்படுவதன் மூலம் அரசுக்கு வரும் வருமானம் குறித்தும் அதனை நடைமுறைப்படுத்துவது குறித்தும் மாநிலங்களவையில் உறுப்பினர்கள் அருண் ஜேட்லி மற்றும் சுப்புராம ரெட்டி ஆகியோர் வினா எழுப்பினர்.

அவர்களின்
வினாக்களுக்கு நடுவண் தகவல் தொலைத்தொடர்பு மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆ.இராசா விளக்கமளிக்கையில், “ 3 ஜி சேவை எனப்படும் புதிய தொழில்நுட்பத்துடன் இயக்கப்படும் சேவைகளுக்கான அனுமதியை எத்தனை நிறுவனங்களுக்கு வழங்குவது என்பதிலும், அதற்கான அடிப்படை விலையை தீர்மானிப்பதிலும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வழங்கிய பரிந்துரைகளில் மாறுபட்ட கருத்து இருந்ததால், அப்பரிந்துரைகளை முடிவு செய்ய அமைச்சர் குழு அமைக்கப்பட்டது. அதன் முடிவுகளின் அடிப்படையில் அடுத்த 3 மாதங்களில் 3 ஜி அலைவரிசை ஏலம் நிறைவடையும்’’ என்று தெரிவித்தார்.

2 ஜி அலைவரிசை ஒதுக்கீட்டில் அரசுக்கு உரிய வருமானம் கிடைக்க புதிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமா? என்று அருண் ஜெட்லியின் வினாவுக்கு அமைச்சர் ஆ.இராசா விளக்கமளிக்கயில், “சட்ட வல்லுநர் ஒருவரே இவ்வினாவை கேட்டதற்காவும், அவர் அமைச்சராக இடம் பெற்ற காலத்தில் 1999-ஆம் ஆண்டு தேசிய தொலைத்தொடர்புக்கொள்கை உருவாக்கப்பட்டதாலும், சில விளக்கங்களை அளிக்க முன் வருகிறேன். 2 ஜி அலைவரிசையை ஏலம் விட்டிருந்தால் அரசுக்கு ரூ.60 ஆயிரம் கோடி வ்ருமானம் வந்திருக்கும் என்று சில நாளேடுகளும் ஒரு இலட்சம் கோடி அரசுக்கு இழப்பு என்று சில அரசியல் கட்சிகளும் பரப்பினார்கள். அலைவரிசை ஒதுக்கீட்டில் போதுமான தகவலும் புரிதலும் இல்லாத காரணத்தினால், அத்தகைய தவறான கருத்தை கொண்டிருக்கிறார்கள் என்பதை நானறிவேன். எனவே, இது குறித்து உறுப்பினர்களின் எண்ணத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள தவறான கருத்துப் படிவை அகற்ற நான் கடைமைப்பட்டுள்ளேன்.

3 ஜி என்பது ஒரு வகை தொழில்நுட்பம், அது வீடியோ மற்றும் உயர் புள்ளி விவர மாற்றத்திற்காக பயன்படும். 2 ஜி என்பது தொலைபேசியில் குரலை மட்டுமே பரிமாற்றம் செய்வது. 2 ஜி அலைவரிசையை பயன்படுத்திய நிறுவனங்கள் 1998-ஆம் ஆண்டு வரை உரிய கட்டணத்தை செலுத்த முடியாததால், 1999-ஆம் ஆண்டு அரசு ஏலமுறை என்பதில் இருந்து வருவாயில் பங்கு என்னும் முறைக்கு மாறியது. அதற்காகத்தான் தேசிய தொலைத்தொடர்புக் கொள்கை உருவாக்கப்பட்டது.

உரிமைதாரர்களுக்கு இலவசம்
அப்படி உருவாக்கப்பட்ட கொள்கையை அருண் ஜேட்லியும் அமைச்சராக இருந்துதான் உருவாக்கினார். அதன்படி அலைவரிசை மற்றும் உரிமம் மீது ஆண்டுக்கு ரூ.60 ஆயிரம் கோடி அரசுக்கு வருமானம் வருகின்றது. எனவே அலைவரிசை உரிமைதாரர்களுக்கு அடிப்படையில் இலவசமாகத்தான் வழங்கப்படுகிறது என்பதும் பின்னிட்டு சேவை அடிப்படையில் உரிம நிறுவனங்களின் வருவாயில் குறிப்பிட்ட விழுக்காட்டுத் தொகை அரசுக்கு வருவாயாக வசூலிப்படுகிறது என்பதும் உறுப்பினர்களுக்கும் ஊடகங்களுக்கும் இந்த மன்றத்தின் வாயிலாக தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.

உரிமம் வழங்கப்படும்போது 6.2 (MHz) மெகாகட்ஸ் அலைவரிசைக்கு மேல் வழங்கப்படும் அலைவரிசைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்னும் கொள்கையை நான் நடைமுறைப்படுத்த எண்ணியுள்ளேன்.
இது குறித்து பிரதமர் மற்றும் நிதி அமைச்சரை பலமுறை கலந்து பேசியுள்ளேன். எனவே, 2 ஜி அலைவரிசை ஏலம் விடாததால் அரசுக்கு வருவாய் இழப்பு என்பது சட்டப்படியும், அரசின் கொள்கைப்படியும் ஏற்புடையதல்ல என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன்” என்று அமைச்சர் ஆ.இராசா கூறினார்.

Read more...

Monday, July 06, 2009

உதகை நிழற்படச் சுருள் ஆலையை புனரமைக்க ரூ.30 கோடி நிதியுதவி : மத்திய அமைச்சர் ஆ.இராசா

கடந்த 4-ஆம் தேதி சென்னையில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா, தமிழக முதல்வர் கலைஞரை சந்தித்தார். அப்போது, மத்திய அமைச்சர் .இராசா உடனிருந்தார்.
-----------------------------------------------------------------------------------------------

உதகையிலுள்ள ஹெச்.பி.எப். பிலிம் தொழிற்சாலையை புனரமைக்க நிதியுதவி ரூ.30 கோடி ஒதுக்க வேண்டும் என மத்திய தகவல் தொலைத் தொடர்புத் துறை மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.இராசா வலியுறுத்தியுள்ளார்.

நீலகிரி மாவட்டம் உதகையில் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம் (நிழற்படச் சுருள்) தொழிற்சாலை புதிய தொழில்நுட்பத்துடன் உற்பத்தியை தொடங்குவதற்காக ஏற்கெனவே கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி மத்திய பொதுத் துறை மறு சீரமைப்பு வாரியம் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் ரூ. 30 கோடியை வழங்கி இந்நிறுவனத்தின் தொடர் வணிகம் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்ள வேண் டும் என மத்திய கனரக தொழில் துறை மற்றும் பொது நிறுவனங்களின் அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்கிடம், மத்திய தகவல் தொழி ல்நுட்பத்துறை அமைச்சர் ஆ.இராசா கேட்டுக் கொண்டுள்ளார்.

மறு சீரமைப்பு வாரியத்தின் பரிந்துரைகள் முழுவதையும் நடைமுறைப்படுத்துவதில் ஏற்படும் கால தாமதத்தை தவிர்க்கவும், தொழிற்சாலையின் வணிக இயக்கத்திற்கு தேவையான அடிப்படை நிதி ஆதாரத்தை பெற்று புதிய வணிக வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும், முதல் தவணையாக ரூ. 30 கோடி அத்தியாவசியமானதாக கருதப்பட வேண்டும் எனவும் வலியறுத்தியுள்ளார்.

மேலும், மறு சீரமைப்பு வாரியத்தின் பரிந்துரைகள் குறித்து விரிவாக துறை அதிகாரிகளோடு விவாதித்து, அதன் அடிப்படையில் ஒட்டு மொத்த தீர்வும் வழங்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் ஆ.இராசா கோரிக்கை விடுத்துள்ளார். இக்கோரிக்கைகளை பெற்றுக்கொண்ட மத்திய கனரக தொழில்துறை அமைச்சர், மறு சீரமைப்பு வாரியத்தின் பரிந்துரையை ஏற்றுக்கொண்டு ரூ. 30 கோடியை முதற்கட்டமாக ஒதுக்க பரிசீலித்து ஆவன செய்வதாக உறுதியளித்துள்ளார்.

இந்த நிதியுதவியை பெறுவதன் மூலம் இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை நிறுவனம் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தனது புனரமைப்புப் பணிகளை உடனடியாகத் தொடங்க வழிவகுக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் ஆ.இராசா கூறினார்.

Read more...

Saturday, July 04, 2009

ஸ்பெக்ட்ரம் ஏலம் பற்றி அமைச்சர் குழு முடிவு : ஆ.இராசா தகவல்

புதுதில்லி,
செல்போன் சேவையில் 3-ஆவது தலைமுறைக்காக 3ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் பற்றி அமைச்சர்கள் குழு இறுதி முடிவு எடுக்கும் என்று மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் ஆ.இராசா கூறினார்.
பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாள் அன்று மாநிலங்களவையில் வினா- விடை நேரத்தின் போது துணை வினாக்களுக்கு தகவல் தொலை தொடர்புத் துறை மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.இராசா விடை அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ’’ 3ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் தொடர்பாக தொலை தொடர்புத் துறை ஆணையத்துக்கும் (ட்ராய்) தொலை தொடர்புத் துறைக்கும் பல விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. குறிப்பாக ஏலத்தில் விடப்பட வேண்டிய ஸ்பெக்ட்ரம் பிளாக்ஸ், ஒதுக்கீடு செய்யப்படும் விலை மற்றும் நிருவாகக் கட்டணம் போன்றவற்றில் வேறுபாடுகள் உள்ளன. இதில் இறுதி முடிவு எடுப்பதற்காக மத்திய அமைச்சர்கள் குழு விரைவில் கூடும். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஊழல் அல்லது முறைகேடு நடப்பதற்கு வாய்ப்பு இல்லை’’ என்று அமைச்சர் ஆ.இராசா கூறினார்.

Read more...

  ©Template by Dicas Blogger.

TOPO