#navbar-iframe { height: 0px; visibility: hidden; display: none; }

Monday, May 31, 2010

தி.மு.க. அறிவிப்பு: அன்புமணிக்கு சீட் இல்லை!

தி.மு.கவின் உயர்நிலை செயல்திட்டக்குழு 30.5.2010 அன்று மாலை அண்ணா அறிவாலயம் முரசொலி வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான கலைஞர் தலைமையில் கூடியது.

இதில்
, பொதுச்செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், தென் மண்டல அமைப்பு செயலாளர் மு.க.அழகிரி, துரைமுருகன், கொள்கைப்பரப்பு செயலாளர் ஆ.இராசா, கனிமொழி, சற்குணபாண்டியன், மு.நாகநாதன் உட்பட 28 பேர் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.


இராமதாசு எழுதிய கடிதம்
கடந்த 26.04.2010 மற்றும் 15.05.2010 ஆகிய தேதிகளில் திமுக தலைவர் கருணாநிதிக்கு மருத்துவர் இராமதாசு, அனுப்பிய இரு கடிதங்கள் திமுகவின் உயர்நிலை செயல்திட்டக்குழுவில் பார்வைக்கு வைக்கப்பட்டன.

அதில், கடந்த 2006 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பா.ம.க. நிபந்தனையற்ற ஆதரவு அளித்தது. அன்று முதல் இன்று வரை தி.மு.க.வுக்கு ஆதரவு என்கிற நிலைமையில் மாற்றமில்லை. இடையே நடைப்பெற்ற சில விரும்பத்தகாத சம்பவங்கள் நாங்கள் மறந்து விட்டோம். அதேபோல் நீங்களும் மறந்து விட்டீர்கள் என நம்புகிறோம். 2011 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் தி.மு.க. தலைமையிலான ஆட்சி அமைய பா.ம.க. விரும்புகிறது. அதனால் தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. போட்டியிட விரும்புகிறது. 2010 இல் நடக்க உள்ள மாநிலங்களைத் தேர்தலில் பா.ம.க.வுக்கு ( இராமதாசின் மகன் அன்புமணிக்கு) ஒரு இடம் கொடுக்க வேண்டும் என விரும்புகிறோம் என்று இராமதாசு கூறியிருந்தார்.

தீர்மானங்கள்
(1) மருத்துவர் இராமதாசு தனது கடிதத்தில் எழுதியுள்ளதை போல மீண்டும் இரு இயக்கங்களும் உறவை புதுப்பித்துக் கொண்டு, அடுத்து வர இருக்கும் 2011 ஆம் ஆண்டு சட்டப் பேரவை பொதுத் தேர்தலிலும், விரைவில் வர இருக்கின்ற சட்ட மேலவைத் தேர்தலிலும் இரு கட்சிகளும் கூட்டணி வைத்து போட்டியிடுவது என்பதை தி.மு.க. ஏற்றுக் கொள்கிறது.

(2) 2011 ஆம் ஆண்டில் வர இருக்கும் சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கு அடுத்து நடைபெற இருக்கும் மாநிலங்களவைத் தேர்தலில் பா.ம.க.விற்கு ஒரு இடத்தை வழங்குவது என்றும், இதனை பா.ம.க. ஏற்றுக் கொள்ளும் என்று நம்புகிறோம். இதற்கு இணக்கமான நிலைமைகளை இந்த இரு இயக்கங்களும் இப்போது முதலே கடைப்பிடிப்பது.

(3) இலங்கையில் இன்னமும் முகாம்களில் உள்ள தமிழர்கள் உடனடியாக விடுவிக்கப்பட்டு தங்களது சொந்த வீடுகளுக்குச் சென்று வாழ வழிவகை செய்ய வேண்டும். தமிழகத்தில் முகாம்களில் தங்கியிருக்கும் 73 ஆயிரம் இலங்கை தமிழர்களை இந்தியக் குடியுரிமைச் சட்டம் மற்றும் ஏனைய சட்டங்களின் கீழ் மறுகுடியமர்த்தும் முயற்சியில் நடுவண் அரசை, தமிழக அரசு கேட்டுக் கொண்டது. ஆனால், இதுவரையில் நடுவண் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனியாவது இந்தப் பிரச்சனையில் ஆக்கப்பூர்வமான அணுகுமுறையை கையாண்டு தீர்வு காண வேண்டும்.

(4) மலேசியாவில் சிறைப்பட்டுள்ள 75 இலங்கை தமிழர்களை காப்பாற்ற நடுவண் அரசு கருணை உள்ளத்தோடு நடவடிக்கை எடுக்க வேண்டும். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த அத்தியாவசிய பொருட்கள் சட்டம் உள்ளிட்ட சட்டங்களில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்., யூக வணிக முறைகளை தடுத்து நிறுத்தி போர்க்கால அடிப்படையில் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும்.

(5) மகளிர் இடஒதுக்கீடு சட்ட முன்வடிவு மக்களவையில் நிறைவேற்றப்படாமல் இருப்பது குறித்து தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக் குழு வேதனை அடைகிறது. அந்தச் சட்டத்தை விரைவில் நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளில் நடுவண் அரசு தொடர்ந்து ஈடுபட வேண்டும். மக்களவையில் இந்த மகளிர் இடஒதுக்கீடு சட்ட முன்வடிவை நிறைவேற்ற அனைத்துக் கட்சியினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

(6) தமிழகத்தில் மீண்டும் சட்ட மேலவையை கொண்டு வர முழு முதல் காரணமாக இருந்த கலைஞருக்கும், இச்சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற பெரிதும் காரணமாக இருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கும் நன்றி, பாராட்டு.

தி.மு.க. வேட்பாளர்கள் யார்?
இந்த கூட்டத்தில், அடுத்த மாதம் வரவிருக்கும் மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர் யார் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. கே.பி.ராமலிங்கம், டி.எம்.செல்வகணபதி, ச.தங்கவேல் ஆகியோர் மாநிலங்களவைத் தேர்தலில் தி.மு.க. போட்டியிடுவார்கள் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவித்தார்.
கே.பி.இராமலிங்கம்: தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் - விவசாயிகள் நலவாரியத்திற்கு முழு நேரத் தலைவராகவும், திமுக விவசாய அணி செயலாளராகவும் இருக்கிறார். டி.எம்.செல்வகணபதி : வன்னியர் சமுகத்தை சேர்ந்த இவர், அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் சேர்ந்த முன்னாள் அமைச்சர். ச.தங்கவேல் : ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்த இவர் சங்கரன் கோவில் தனி தொகுதியில் 2006-ஆம் ஆண்டு போட்டியிட்டு வெற்றிபெற்று அமைச்சராக பதவி வகித்தவர்

கலைஞர் நேர்காணல்
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய வினாக்களுக்கு தி.மு.க. தலைவர் கலைஞர் விடையளித்தார்.

’பா.ம.க. குறித்து நீங்கள் எடுத்துள்ள முடிவு இராஜதந்திரமான முடிவாக உள்ளது. அதனை அக்கட்சி ஏற்றுக் கொள்ளும் என்று கருதுகிறீர்களா?’ என்று முதல்வர் கலைஞரிடம் கேட்டபோது, “இது இராஜதந்திர முடிவு அல்ல. நல்லெண்ணத்தோடு எடுக்கப்பட்ட முடிவு. இதனை பா.ம.க. ஏற்றுக் கொள்ளும் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.

பா.ம.க.வுக்கு இப்போது ஆதரவு தி.மு.க. கொடுக்காதது ஏன்? என்று கேட்டபோது, அதுபற்றி தீர்மானத்திலேயே தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

பா.ம.க.வுடனான கூட்டணியை காங்கிரசார் ஒப்புக் கொள்வார்களா? என்று கேட்டபோது, காங்கிரசு தலைவர்களை ஒப்புக் கொள்ள வைக்க முயற்சிப்போம் என்று தெரிவித்தார்.

தி.மு.க. - பா.ம.க. கூட்டணிக்கு ஒப்புதல் அளித்த நீங்கள், அமைச்சரவையில் அவர்களை சேர்க்க முயற்சிப்பீர்களா? என்று கேட்டபோது, நடுவண் அரசு அதுபற்றி விவாதிக்கவில்லை என்றார்.

Read more...

Monday, May 24, 2010

ஆ.இராசா மீது எந்த தவறும் இல்லை: பிரதமர் மன்மோகன் சிங் விளக்கம்

புதுதில்லி, மே 24-

இந்திய தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் பரிந்துரைத்த வழி காட்டுதல்களின் அடிப்படையிலேயே 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடந்ததால், அமைச்சர் .இராசா மீது எந்த தவறும் இல்லை என்று, பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டார்.

ஐ.மு., கூட்டணி அரசு இரண்டாவது முறையாக பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதையொட்டி, 4 ஆண்டுகளுக்கு பின்னர் பிரதமர் மன்மோகன் சிங் தில்லியில் பத்திரிகையாளர்களுக்கு அளித்த சிறப்பு நேர்காணலின்போது இதனை குறிப்பிட்டார்.

2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் ஊழல் நடந்து விட்டதாக எழுந்த புகார்கள் பற்றி பாராளுமன்றத்தில் ஏற்கெனவே விவாதிக்கப்பட்டுள்ளது. நானும் மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஆ.இராசாவை அழைத்து பேசினேன். அவர் என்னிடம் முழு விளக்கம் கொடுத்தார்.

இந்திய தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் பரிந்துரைத்த வழி காட்டுதல்களின் அடிப்படையிலேயே தான் நடந்து கொண்டதாகவும், 2003-ஆம் ஆண்டில் இருந்து நடைமுறையில் இருக்கும் கொள்கை அடிப்படையில்தான் முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் ஆ.இராசா வெளிப்படையாக விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக தொலை தொடர்பு ஆணையமும் அவருக்கு ஆதரவு தெரிவித்து உள்ளது.

அமைச்சர் ஆ.இராசா அளித்துள்ள விளக்கத்தில் 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு அந்த நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட கொள்கை அடிப்படையில் நடந்ததை தெரிவித்துள்ளார். ஆகவே அமைச்சர் ஆ.இராசா மீது தவறு இல்லை. இதில் உள்ள முழு பிரச்சினையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
மத்திய ஊழல் தடுப்பு ஆணையர் கேட்டுக் கொண்டதற்கிணங்க தற்போது இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. அந்த விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் நான் ஒரு தீர்க்கமான கருத்தை வெளியிடுவது சரியாக இருக்காது. 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுக்கும், 3 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதை ஒத்துக் கொள்கிறேன். இந்த விவகாரத்தில் சரியானதை காண வேண்டியது அவசியமாகும்.

ஊழல் மிகப் பெரிய பிரச்சினையாக இருப்பதை ஆட்சி தொடக்கத்தில் இருந்தே நான் கூறி வருகிறேன். ஆட்சியில் எந்த மட்டத்தில் ஊழல் நடந்தது கண்டு பிடிக்கப்பட்டாலும் நாங்கள் உறுதியான நடவடிக்கை எடுப்போம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு பிரதமர் மன்மோகன்சிங் கூறினார்.

Read more...

Thursday, May 20, 2010

3 ஜி ஏலத்தில் அரசுக்கு ரூ.67,719 கோடி வருமானம்: அமைச்சர் ஆ.இராசா மகிழ்ச்சி

3 ஜி ஸ்பெக்ட்ரம் எனப்படும் மூன்றாம் தலைமுறை தொழில்நுட்ப அலைக்கற்றை சேவைக்கான ஏலம் முடிவடைந்த நிலையில், தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம் அமைச்சகத்தின் மூலம் இந்திய அரசுக்கு ரூ. 67, 719 கோடி வருமானம் கிடைத்துள்ளது. இது பெரும் மகிழ்ச்சியை தருவதாக அமைச்சர் ஆ.இராசா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மூன்றாம் தலைமுறை அலைக்கற்றையைப் பயன்படுத்தி தொலைபேசி மற்றும் காட்சி ஊடகச் சேவையை பொதுமக்களுக்கு வழங்குவதற்கான ஏலத்தை இந்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.இராசா அறிவித்திருந்தார். இதில் தொலைபேசி சேவையில் ஈடுபட்டுள்ள முன்னணி நிறுவனங்களான ஐடியா, ஏல் டெல், ஓடாபோன், ரிலையன்ஸ், ஏர் செல், டாடா, எஸ் டெல் ஆகியவை பங்கேற்றன. விடியோ கான் நிறுவனம் கலந்துகொள்ளவில்லை.

கடந்த 34 நாட்களாக நடந்த ஏலத்தில் ஐடியா நிறுவனம் ரூ. 5,765 கோடிக்கு 11 பகுதிகளையும், ஏர் டெல் நிறுவனம் 12,290 கோடி ரூபாய்க்கு 13 பகுதிகளையும், ஓடாபோன் 11,617 கோடி ரூபாய்க்கு 9 பகுதிகளையும், ரிலையன்ஸ் 8,583 கோடி ரூபாய்க்கு 13 பகுதிகளையும், டாடா 5,864 கோடி ரூபாய்க்கு 8 பகுதிகளையும், எஸ் டெல் 337 கோடி ரூபாய்க்கு 3 பகுதிகளையும் ஏலத்தில் பெற்றுள்ளன.

ஏலம் விடப்பட்ட பகுதிகளில் அதிகத் தொகையாக 3,317 கோடி ரூபாய்க்கு தில்லி பகுதியும், அடுத்தப்படியாக 3,247 கோடிக்கு மும்பை பகுதியும் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளன

அரசு பொதுத்துறை நிறுவனங்களான பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல். ஆகியவற்றுக்கு ஏலத்தில் குறிப்பிட்ட பகுதிகளை அரசு ஒதுக்கியுள்ளது. என்றாலும், தனியார் நிற்வனங்கள் அளித்துள்ள தொகையை கணக்கில் கொண்டு, பொதுத் துறை நிறுவனங்களுக்கு தொகை நிருணயிக்கப்பட உள்ளது.

ஏலம் முடிந்துள்ள நிலை குறித்து நடுவண் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.இராசா கூறுகையில், “நான் ஏற்கெனவே மீண்டும் மீண்டும் வலியுறுத்தி சொல்லியதை போல, அலைக்கற்றை ஏலம் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடந்து முடிந்துள்ளது. இதன் மூலம் அரசுக்கு ரூ. 67,719 கோடி வருமானம் கிடைத்துள்ளது. இது அரசு எதிர்பார்த்ததை விட அதிக தொகையாகும். இந்த பெரும் வருமானம் அரசுக்கு கிடைத்துள்ளதால், அத்துறை அமைச்சர் என்ற வகையில் நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நடுவண் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறுகையில், “ 3 ஜி அலைக்கற்றை விற்பனை ஏலத்தில் நாங்கள் எதிர்பார்ததை விட அதிக தொகைக்கு தனியார் சேவை நிறுவனங்கள் பகுதிகளை பெற்றுள்ளன.இந்த ஏலத்தில் அரசுக்கு 2 மடங்கு அதிக தொகை கிடைத்துள்ளது. இந்த வருமானம் அரசுக்கு உதவியாக இருக்கும் ’’ என்று தெரிவித்துள்ளார்.

2010-11 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் 3 ஜி அலைக்கற்றை விற்பனை ஏலத்தில் அரசுக்கு ரூ. 35 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், சுமார் ரூ.67,719 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


அலைக்கற்றை ஏலத்தை எடுத்த நிறுவனங்கள் மற்றும் தொகை, பகுதிகள் முழு விவரம்:

* Delhi: Vodafone, Bharti, Reliance Communications at Rs 3317 cr

* Mumbai: Reliance, Vodafone, Bharti Airtel at Rs 3247 cr

* Maharashtra: Tata, Idea, Vodafone at Rs 1258 cr

* Gujarat: Tata, Vodafone, Idea at Rs 1076 cr

* Andhra Pradesh: Bharti, Aircel, Idea at Rs 1373 cr

* Karnataka: Tata, Aircel, Bharti at Rs1580 cr

* Tamil Nadu: Bharti, Vodafone, Aircel at Rs 1465 cr

* Kolkata: Vodafone, Aircel, Reliance Communications at Rs 544 cr

* Kerela: Idea cellular, Tata, Aircel at Rs 312.5 cr

* Punjab: Idea Cellular, Reliance Communications, Tata, Aircel at Rs 322 cr

* Haryana: Idea Cellular, Tata, Vodafone at Rs 222.6 cr

* MP: Idea Cellular, Reliance Communications, Tata at Rs 258.4 cr

* Rajasthan: Reliance Communications, Bharti, Tata at Rs 321 cr

* U.P. (West): Bharti, Idea Cellular, Tata at Rs 514 cr

* U.P (East): Aircel, Idea Cellular, Vodafone at Rs 364.6 cr

* West Bengal: Bharti, Reliance Communications, Vodafone, Aircel at Rs 123.63 cr

* Himachal Pradesh: Bharti, Sing Tel, Idea, Reliance at Rs 37.23 cr

* Bihar: Sing Tel, Bharti, Reliance, Aircel at Rs 203.46 cr

* Orissa: Sing Tel, Aircel, Reliance Communications at Rs 96.98 cr

* Assam: Reliance Telecommunications, Bharti, Aircel at Rs 41.48 cr

* North East: Aircel, Bharti, Reliance Communications at Rs 42.30 cr

* Jammu & Kashmir: Idea Cellular, Aircel, Reliance Communications, Bharti at Rs 30.30 cr

Read more...

Tuesday, May 18, 2010

முன்னாள் அமைச்சர் உடலுக்கு முதல்வர் கலைஞர், அமைச்சர்கள் அஞ்சலி

சென்னையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ.கிருட்டினசாமி காலமானார். அவரது உடலுக்கு முதலமைச்சர் கலைஞர், மு.க.ஸ்டாலின், ஆ.இராசா உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

உடுமலைப்பேட்டை அருகில் உள்ள கணியூரில் திராவிடப் பாரம்பரிய மிக்க குடும்பத்தில் பிறந்தவர் கே.ஏ.கிருட்டினசாமி. இவர் மறைந்த மூத்த அரசியல் தலைவர் கே.ஏ. மதியழகனின் இளைய சகோதரர்.

திராவிட மாணவர் இயக்கத்தில் தீவீரமாக ஈடுபட்ட கிருட்டினசாமி, 1972 முதல் 1978 வரை மாநிலங்களவை உறுப்பினராகவும், பின்னர் தமிழக மேலவை உறுப்பிரனராகவும், அமைச்சராகவும் பணியாற்றியவர். கடந்த சில மாதமாக உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த கே.ஏ.கிருட்டினசாமி, செவ்வாய்க்கிழமை காலை சென்னையில் காலமானார். கே.ஏ.கிருட்டினசாமியின் இறுதி சடங்கு புதன்கிழமை நடைபெறுகிறது.

கருணாநிதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.இராசா ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். இறந்த கிருட்டினசாமியின் மகன் அருணுக்கு அவர்கள் ஆறுதல் கூறினர்.

Read more...

Monday, May 17, 2010

நீரா ராடியாவுடன் உரையாடல், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து அமைச்சர் ஆ.இராசா சிறப்பு நேர்காணல்

ஜூனியர் விகடன் இதழுக்கு தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.இராசா அளித்த சிறப்பு நேர்காணல்...

வினா: ''வருமான வரிப் புலனாய்வுத் துறையினர் பதிவு செய்ததாகச் சொல்லப்படும் தொலைபேசி உரையாடல்களில் தனியார் டெலிகாம் 'லயஸன்' அதிகாரி நீரா ராடியாவும் நீங்களும் பேசியதாக வெளியாகும் தகவல் பற்றி..?''

''எப்போது யார் என்னோடு பேசினார்கள்... நான் யாரோடு என்ன பேசினேன் என்பதையெல்லாம் காலவரிசைப்படி நினைவுபடுத்திக் கொள்வது... என்னால் மட்டுமல்ல... எவராலும் சாத்தியப்படாதது. ஓர் அரசு புதிதாக அமையும்போது, எந்தவொரு துறைக்கும் வரப்போகும் புதிய அமைச்சர் யார் என்பதை தெரிந்துகொள்வதில் பல்வேறு நிறுவனங்களும், தொழிலதிபர்களும், ஊடகங்களும் ஆர்வம் காட்டுவார்கள். இது இயற்கை. உதாரணமாக, 'ஆ.இராசாவுக்கு அமைச்சரவையில் மீண்டும் இடமில்லை' என்று பல டி.வி. சேனல்கள் ஒளிபரப்பின. அதற்காக அந்த சேனல்கள், பிரதமரின் அதிகாரத்தில் தலையிட்டன என்று சொல்ல முடியுமா? பிரதமரிடம் கேட்டுக்கொண்டா அப்படி அவர்கள் செய்தி வெளியிட்டார்கள்? இவையெல்லாம் அனுமானங்கள் மட்டுமல்ல... அவர்களின் சுய விருப்பு வெறுப்புகளின் வெளிப்பாடும் உண்டு. இவற்றுக்கெல்லாம் எந்த அமைச்சரும் விளக்கமளிக்க முடியாது.

அந்த வகையில், இந்த முறை அரசு அமைந்தபோது, 'ஆ.இராசாவுக்கு மந்திரிப் பதவி உண்டா?’ உண்டு எனில் எந்த இலாகா என்பதை எனக்கு வேண்டியவர்களும் ஆராய்ந்திருக்கக்கூடும். 'இல்லையா' என்பதை அறிய வேண்டாதவர்களும் தெரிந்துகொள்ள முயற்சித்திருக்கக்கூடும். அந்த வகையில் என்னிடமும் பல அரசியல்வாதிகள், அதிகாரிகள், தொழிலதிபர்கள், ஊடக நண்பர்கள் அந்த நேரத்தில் வெவ்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளனர். ஆனால், தலைவர் கலைஞரைத் தாண்டி - காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாரதப் பிரதமர் ஒப்புதல் இன்றி இன்னொருவர் எனக்கு அமைச்சர் பதவியையோ குறிப்பிட்ட இலாகாவையோ தர முடியும் என்று நம்புகிற அளவுக்கு நான் அரசியலில் - நிருவாகத்தில் முட்டாள் அல்ல. எனவே, சில ஊடகங்கள் தங்கள் அறியாமைக்கு என்னை இரையாக்க வேண்டியதில்லை!.''

வினா: ''அந்த 'லாபியிஸ்ட்' பெண்மணி நீரா ராடியாவோடு நீங்கள் பேசுவதாக ஆடியோ உரையாடல் கூறுகிறது. அவருக்கும் உங்களுக்கும் எப்படி தொடர்பு ஏற்பட்டது?''

''நீரா ராடியா டாடா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான பொதுத் தொடர்பு அலுவலர். இது குறித்து டாடா நிறுவனம் தெளிவான பத்திரிகைச் செய்தியையும் வெளியிட்டுள்ளது. எந்தத் தொலைத்தொடர்புத் துறை அமைச்சருக்கும் இருக்கும் தலையாய பணிகளில் ஒன்று - இத்துறையில் உள்ள பி.எஸ்.என்.எல். உள்ளிட்ட தொலைபேசி நிறுவனங்களிடையே அரசோடு நல்லிணக்கத்தை ஏற்படுத்தி, வர்த்தகத்தை சீராக வைத்திருப்பதுதான். அந்த வகையில் ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல் பலமுறை என்னை சந்திக்கிறார். ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் அனில் அம்பானி என்னை சந்திக்கிறார். அதேபோல வோடஃபோன், ஏர்செல் போன்ற எல்லா நிறுவனங்களின் தலைவர்களோ, தலைமை அதிகாரிகளோ சந்திப்பதும் சாதாரணமானது. அந்த வகையில் 'டாடா டெலிகம்யூனிகேசன்' நிறுவனத்துக்காக நீரா ராடியா ஆபரேட்டர் கூட்டங்களிலும் இதர சந்திப்புகளிலும் கலந்துகொண்டுள்ளார். என்னிடம் பல்வேறு சட்டப்படியான கோரிக்கைகளை கடந்த காலத்தில் வலியுறுத்தியுள்ளார்.

ஆனால், ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள்... ஒரு நிறுவனத்தின் தலைவரோ, அதிகாரியோ என்னை துறை சார்பாக சந்திக்கிறார் என்பதற்காக அவர் துறைக்கு வெளியேயும் மற்ற இடங்களிலும் செய்கிற அல்லது ஈடுபடுகிற காரியங்களுக்கு எல்லாம் என்னை சம்பந்தப்படுத்திப் பேசுவது முறையல்ல. என்னோடு ஒரு விருந்தில் ஒருவர் கலந்துகொண்டு படம் பிடித்துக்கொண்டார் என்பதற்காக, அவர் செய்யும் ஏனைய காரியங்களுக்கு நானே பொறுப்பு என்பதுபோல் செய்தி வெளியிட முயற்சிப்பது பத்திரிகை தர்மமல்ல என்பதை பத்திரிகை துறையிலே இருப்பவர்கள் உணரவேண்டும்.''

வினா
:
''டாடா நிறுவனம் நீங்கள்தான் மறுபடியும் இந்த இலாகாவுக்கு அமைச்சராக வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. 'தயாநிதி மாறன் மீண்டும் அமைச்சரானால் டெலிகாம் துறையிலிருந்து டாடா வெளியேற வேண்டும்' என்று ரத்தன் டாடா கூறியதாகவும் சொல்லப்படுகிறதே... இந்தளவுக்கு டாடா யோசிக்கக் காரணம் என்ன?''

''ஆங்கில சேனல் ஒன்றில் என்னுடைய தொலைபேசி உரையாடல் ஒளிபரப்பானது என்ற அடிப்படையில், அடுத்த நாள் பத்திரிகையைப் பார்த்து அதன் விவரங்களை (டெக்ஸ்ட்) படித்துப் பார்த்தேன். அதுகுறித்து மட்டுமே உங்களுக்கு என்னால் விளக்கமளிக்க முடியும். வேறு உரையாடல்கள் குறித்து எனக்குத் தகவல் இல்லை; எனவே, அது குறித்து நான் கருத்து சொல்வது நியாயமாக இருக்காது.''

வினா: ''2008-இல் இந்த ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடைபெற்ற சமயத்திலேயே வருமான வரி புலனாய்வுத் துறையினர் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்டு உரையாடல்களைப் பதிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதில் நீரா ராடியா சில நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு செய்வதில் பேரம் பேசியதாகவும், சில நிறுவனங்களுக்கு முன் உரிமை கொடுக்கச் செய்வதற்கு அவர் முயற்சித்ததாகவும்கூட தகவல்கள் உள்ளனவே..?''

''அதில் நீரா ராடியா என்ன பேசியிருக்கிறார் என்பது தெரியவில்லை. ஆனால், எந்த ஒரு விதிமுறையும் யாரோ ஒரு தனி நபரால் மாற்றக்கூடிய அளவுக்கு அரசாங்கம் பலகீனமானதல்ல... நானும் சட்டம் படிக்காதவனல்ல!''

வினா: ''சில ஆவணங்களை வருமான வரியினர் சி.பி.ஐ. வேண்டுகோள்படி அனுப்பி வைத்ததாகவும், அதில் தங்கள் துறையிலும் இன்னும் சில அமைச்சகங்களிலும் நீரா ராடியா தலையிட்டு இடைத் தரகராகச் செயல்பட்டதாகவும்கூட செய்திகள் வருகிறதே?''

''ஓர் ஆவணத்தைப்பற்றி பேச இரண்டு பேருக்குத்தான் தகுதி உண்டு. ஒருவர் அந்த ஆவணத்தை எழுதியவர் அல்லது தயாரித்தவராக (Executor) இருக்கவேண்டும். இன்னொருவர், அந்த ஆவணத்தை வைத்திருப்பவராக (Custodian) இருக்க வேண்டும். நீங்கள் குறிப்பிடும் ஆவணங்களில் நான் இந்த இரு நிலைகளிலும் தொடர்புடையவன் அல்ல; எனவே, அது உண்மையா... போலியா என்பதை நான் தீர்மானிக்க முடியாது.''

வினா: ''ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஏலம் எடுத்தவர்கள் வெளிநாட்டு முதலீடுகளை தவறான வழியில் கொண்டுவந்துள்ளார்கள் என்ற குற்றச்சாட்டு குறித்து தங்கள் கருத்தென்ன?''

''என்னுடைய துறையின் பணி என்பது உரிமங்கள் மற்றும் அவைகளுக்கான அலைவரிசை ஒதுக்கீடு மட்டுமே. உரிமங்கள் வழங்கிய பிறகு ஒரு நிறுவனம் கொண்டுவரும் அன்னிய முதலீடு பற்றி நாங்கள் விசாரிக்க வேண்டிய அவசியமில்லை. இதுகுறித்து ஆய்வு செய்ய வேண்டியது நிதி மற்றும் உள்துறை அமைச்சகங்களின் பணிதான்.''

வினா: ''இரண்டு துறைகளுக்கும் இடையே நடக்கும் ரகசியக் கடிதப் போக்குவரத்துகள் மீடியாக்களில் வெளி வருகிறது... இதன் பின்ன ணியில் எந்த சக்தி இருப்பதாகக் கருதுகிறீர்கள்?

''நான் பலமுறை எழுப்பும் கேள்விதான் இங்கும்... இந்தத் துறையில் நான் மட்டும் ஏன் கடுமையாக விமர்சிக்கப்படுகிறேன்... குற்றம் சாற்றப்படுகின்றேன்? புதிதாக நான் ஏதாவது சட்டம் கொண்டு வந்தேனா? அல்லது இருக்கிற சட்டத்தை தூக்கியெறிந்து விட்டேனா? இல்லையே! ஸ்பெக்ட்ரம் - அலைவரிசை இருப்பை வெளியுலகுக்கு காட்டாமல் மறைத்துவைத்துவிட்டு ஏர்டெல், ஏர்செல், வோடஃபோன் ஐடியா போன்ற 'ஏற்கெனவே இருக்கும்' நிறுவனங்கள் மட்டுமே தொடர்ந்து தொலைபேசி சேவை வழங்கினால், தொலைபேசி இணைப்புகளின் எண்ணிக்கையும் உயராது; மக்கள் அளிக்கவேண்டிய கட்டணமும் குறையாது. அதனால் புதிய நிறுவனங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவேண்டும் என்ற ஒழுங்குமுறை ஆணையத்தின் கொள்கையை பிடிவாதமாக இருந்து நிறைவேற்றினேன். கால் நூற்றாண்டு காலமாக தங்கள் கையில் மட்டுமே இருந்த தொழில், இன்னும் சிலபேருக்கு கை மாறுகிறது என்ற கோபத்தில் - ஒரு வர்த்தகக் கூட்டு (Cartel) உடைக்கப்படுகிறது என்ற எரிச்சலில் சிலர் இருந்திருக்கலாம். இது இயற்கையான, சராசரி வியாபார உணர்ச்சிதான். அதன் விளைவுகளையும் நான் எதிர்கொள்ளத்தான் வேண்டும்.

பிரதமர் இது குறித்து நன்றாகவே அறிவார். இந்த முயற்சியில் நான் இறங்காமல் இருந்திருந்தால் எனக்கு பிரச்சனையே இருந்திருக்காது. நாடாளுமன்றத்தில் இதுகுறித்து கேள்வி வந்தபோது, 'நான் தேங்கிக் கிடக்கும் சாக்கடையாக இந்தத் துறையில் இருக்க விரும்பவில்லை; நீரோட்டத்தில்தான் மின்சாரம் வெளிப்படும்' (I don't want to be a stagnated stinking pool.. Flowing water only explores current) என்று குறிப்பிட்டு இருக்கின்றேன். அதுமட்டுமல்ல, இந்தத் துறையில் எவ்வளவு அலைவரிசை கையிருப்பு இருக்கிறது என்று முதன்முதலில் இணையதளத்தில் வெளியிட்ட இந்தத் துறையின் ஒரே அமைச்சர் நான்தான் என்பதையும் நாடாளுமன்றத்தில் பதிவு செய்துள்ளேன். இவையெல்லாம் சிலருக்கு தொழில்ரீதியான பின்னடைவுகளை ஏற்படுத்தியிருக்கலாம்... அதன் காரணமாகவும் நான் குறி வைக்கப்படுகின்றேன்.''

வினா: ''இப்போது 3 ஜி ஏலத்தில் விட ஏற்பாடு நடப்பதுபோலவே அதற்கு முந்தைய 2 ஜி-யை ஏன் ஏலத்தில் விடவில்லை?அங்கேதானே சர்ச்சையின் அடிப்படையே எழுகிறது?''

''நல்லகேள்வி! இதை சில நாளிதழ்களும் எழுப்பியுள்ளன. 2 ஜி என்பது பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் அரிசி போன்றது. 3ஜி என்பதோ பிரியாணிக்கு பயன்படும் உயர்தர பாசுமதி அரிசி போல! பொது விநியோகத் திட்டத்தில் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்கப்படுகிறது என்பதற்காக, பாசுமதி அரிசியை ஒப்பீடு காட்டி 'ஒரு ரூபாய் அரிசி விநியோகத்தால் அரசுக்கு நஷ்டம்' என்று சொன்னால் ஏற்றுக்கொள்வீர்களா? 2 ஜி சேவை என்பது சாதாரண மனிதனுக்கும் போய்ச் சேரவேண்டிய குரல் (Voice) சேவை. 3 ஜி என்பது வர்த்தக ஆவணங்களை அனுப்புவதற்கும், வீடியோ சினிமா போன்ற உயர்ரக சேவைக்கும் உரியது. 2 ஜி சேவை கல்வி, சுகாதாரம், கிராமிய வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் கடைசி மனிதனுக்கும் பயன்படவேண்டிய ஒன்று. 3ஜி என்பது வர்த்தகம் சார்ந்த மற்றும் வசதி படைத்தவர்களுக்கு சேவை அளிக்கக் கூடியது. ஒழுங்குமுறை ஆணையம் உலக நாடுகளில் உள்ள நடைமுறைகளை எல்லாம் கருத்தில்கொண்டுதான், 3ஜி அலைவரிசையை ஏலம்விட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. இப்போதைய இந்தியாவின் சமூகப் பொருளியல் புள்ளி விவரங்களின் அடிப்படையில், சாதாரண குரல் வழி சேவை வழங்கும் 2ஜி சேவைதான் சாதாரண சாமானிய மக்களுக்கு தேவையே தவிர, 3ஜி அல்ல! இன்னுமொரு 10, 20 ஆண்டுகள் கழித்து நிலைமை மாறலாம். 1994-ம் ஆண்டு 2ஜி சேவை வந்தபோது எத்தனை பேர்கள் செல்போனை பயன்படுத்தினார்கள்? இப்போது நிலை என்ன? அதேபோல கல்வி அறிவும், தொழில்நுட்ப தாக்கமும் சாதாரண மக்களிடையே உயருமானால் இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகு 3ஜி சேவைகூட எளிதாக்கப்படலாம்; படவேண்டும்! அப்போது, 4ஜி சேவையும் வந்துவிடும். இதுகுறித்து ஒழுங்குமுறை ஆணையம் உரிய முடிவுகளை சூழலுக்கு ஏற்ப எடுக்கும். இப்போதைய ஒழுங்குமுறை ஆணையத்தின் முடிவின்படி 3ஜி ஏலம் விடப்படுகிறது.''

வினா: ''இந்த உரிமங்களை பெற்ற கம்பெனிகளில் நீங்களோ உங்களுக்கு சம்பந்தப்பட்டவர்களோ முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறதே?''

''இது அப்பட்டமான, அரசியல் காழ்ப்புணர்ச்சி கலந்த பொய். ஒரு கம்பெனியின் பங்குகள் யார் யாருக்கு சொந்தம் என்பதை இணைய தளத்திலும் தெரிந்துகொள்ளலாம். தகவல் உரிமைச் சட்டத்தினாலும் தெரிந்து கொள்ளலாம்.''

வினா: ''கடந்த சில மாதங்களுக்கு முன்பு உங்கள் துறையைச் சேர்ந்த சீப்-போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் பாலி என்பவர் இரண்டு கோடியை கையூட்டு பெறும்போது சி.பி.ஐ-யிடம் கையும் களவுமாக பிடிபட்டுள்ளாரே? இதே அதிகாரியோடு கைதான அருண் டால்மியா உங்களுக்குத் தெரிந்தவர் என்றும் அவர் மீது அன்னியச் செலவாணி குற்றச்சாற்றுகள் இருக்கிற செய்தியும் வந்ததே?''

''அமைச்சர் என்ற முறையில், துறை சார்ந்த நிகழ்ச்சிகளிலும், வேறு தனியார் நிகழ்ச்சிகளிலும் பலர் என்னோடு கலந்துகொள்கிறார்கள். அவர்களை எல்லாம் அடையாளப்படுத்தி ஞாபகப்படுத்தி நேரடியாக தொடர்புபடுத்த எத்தனிப்பது சரியல்ல.. என்னுடைய பிறந்த நாளிலோ, வேறு விழாக்களிலோ, புத்தாண்டுக் கொண்டாட்டத்திலோ, பலர் பலரோடு என்னை சந்திக்க வருகிறார்கள்; புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள். படத்தில் இருக்கின்ற அனைவரோடும் தனிப்பட்ட பரிச்சயம் இருக்கவேண்டும் என்று பொதுவாழ்க்கையில் உள்ள ஒருவருக்கு அவசியமில்லை. நீங்கள் சொல்லுகின்ற நபர்மீது வழக்கு ஒன்று இருந்து - அந்த வழக்கில் என் பங்கோ, முயற்சியோ இருக்குமானால் வழக்கின் விசாரணையில் வெளிப்பட்டிருக்கும். அதுபற்றிய குற்றச்சாற்றேகூட என் மீது எதுவுமில்லை.''

வினா: ''நெருப்பில்லாமல் புகையுமா? இத்தனை மீடியாக்களும் ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து விமர்சிக்க வேண்டிய அவசியம் என்ன?''

''ஊடகங்களுக்கு இவ்விஷயத்தில் எந்த சார்புத்தன்மையும் இல்லை என்று சொன்னால், பாமர மனிதன்கூட ஏற்றுக்கொள்ள மாட்டான். காரணம் தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள், மீடியாக்கள் மூலமாக விளம்பரத்திற்காக மட்டும் ஆண்டொன்றுக்கு 2,000 கோடி வரை செலவு செய்கின்றன. இந்த விளம்பர வருமானத்தை எந்த பத்திரிகையோ சேனலோ இழக்க முன்வருமா? எனவே, ஊடகங்கள் இந்த விஷயத்தில் பல நேரங்களில் நியாயமாக செயல்படவில்லையென்றே எண்ணத் தோன்றுகிறது. நான் இந்த துறைக்கு பொறுப்பேற்றவுடன் என்னென்ன மாறுதல் அடைந்துள்ளது என்பதைப் பற்றி பத்திரிகைகளும் ஊடகங்களும் எழுதுவதில்லை. தொலைபேசி இணைப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது மட்டுமட்டுமல்ல... கட்டணம் குறைந்துள்ளது. நாட்டில் எல்லா பொருளும் விலை ஏற்றத்தில் உள்ளன. ஆனால், தொலைபேசிக் கட்டணம் மட்டுமே குறைந்து கொண்டே இருக்கிறது. மேலும் பல வசதிகள் கிடைக்கவுள்ளது. உள்ளூர் அழைப்பு 10 பைசாவுக்கும், அகில இந்தியக் கட்டணம் 25 பைசாவுக்கும் விரைவில் வரவுள்ளது. இப்படியிருக்க ஸ்பெக்ட்ரம் குறித்து ஒரு ஆங்கில பொருளாதார நாளேட்டில் இது 'இராஜாவின் அவமானம்' [It is Raja's shame] என்று எழுதினார்கள். நான் சொல்கின்றேன்... 'It is my pride' ஆம், இது எனது பெருமை!

நல்ல விஷயங்களைப் பாராட்டாவிட்டாலும் போகிறது... உண்மையை இவர்கள் பேச மறுப்பது ஏன்? அதற்கு பின்னால் உள்ள சக்திகள் எவை? சதி என்ன? அதுதான் இங்கே 'மில்லியன் டாலர்' கேள்வி!'

(ஜூனியர் விகடன் இதழுக்கு நன்றி)

Read more...

Sunday, May 02, 2010

ஆ. இராசா பதவி விலகமாட்டார்: தில்லியில் கலைஞர் அறிவிப்பு

புதுதில்லி:
இரண்டாம் தலைமுறை ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் சிக்கலில் நடுவண் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. இராசா பதவி விலகமாட்டார் என்று முதலமைச்சர் கலைஞர் கூறியிருக்கிறார்.

நடுவண் திட்டக்குழுக் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக முதலமைச்சர் கலைஞர் 2 நாள் பயணமாக காலை தில்லி வந்தார்.

தில்லி வானூர்தி நிலையத்தில் அவருக்கு நடுவண் அமைச்சர்கள் மு.க. அழகிரி,. ஆ.இராசா, து.நெப்போலியன், காந்திசெல்வன், மாநில அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி மற்றும் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

பின்னர் குடியரசு தலைவர் பிரதிபா பாட்டீலை அவரது மாளிகைக்குச் சென்று சந்தித்த கலைஞர், அடுத்த மாதம் 23ஆம் தேதி முதல் கோவையில் நடைபெறவிருக்கும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்கான அழைப்பிதழை வழங்கி, மாநாட்டில் கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த சந்திப்பின்போது, தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு, மகள் கனிமொழி, தலைமைச் செயலாளர் சிறீபதி ஆகியோர் உடனிருந்தனர்.

இதைத் தொடர்ந்து தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்கு நிச்சயமாக வருவதாக குடியரசு தலைவர் உறுதியளித்தார்” என்று தெரிவித்தார்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பாக தி.மு.க.வைச் சேர்ந்த நடுவண் அமைச்சர் ஆ. இராசா மீது ஏராளமான குற்றச்சாற்றுகளை சுமத்தி அவர் பதவி விலகவேண்டும் என்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருவது பற்றியும், இதை ஏற்று அவர் பதவியிலிருந்து நீக்கப்படுவாரா? அல்லது நீடிப்பாரா? என்றும் செய்தியாளர்கள் வினா எழுப்பினர். ஆனால், அதற்கு விடையளித்த முதலமைச்சர் கலைஞர், “உங்களுக்கெல்லாம் மகிழ்ச்சியான செய்தி எதையும் நான் கொண்டுவரவில்லைஎன்று கூறி நடுவண் அமைச்சர் இராசா பதவி விலக மாட்டார் என்று மறைமுகமாக செய்தியாளர்களுக்கு உணர்த்தினார்.

முதலமைச்சர் கலைஞரின் புதல்வரும், நடுவண் அமைச்சருமான மு.க. அழகிரி, நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட வினாக்களுக்கு பதில் அளிக்கவில்லை என்றும், இதுதொடர்பாக மக்களவைத் தலைவர் மீரா குமார் விடுத்த அழைப்பையும் அவர் நிராகரித்துவிட்டார் என்று கூறப்படுகிறதே? என்று செய்தியாளர்கள் கேட்டனர். இந்த விவரங்களையெல்லாம் நீங்கள் மு.க. அழகிரியிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் என்று தெரிவித்தார். ஆனால் செய்தியாளர்கள் விடாப்பிடியாக, “கட்சித் தலைவர் என்ற வகையில் மு.க. அழகிரியிடம் நீங்கள் விசாரிக்கலாமே?” என்று கேட்டனர். அதற்கு விடையளித்த கலைஞர், அப்படி விசாரித்தால் அதுபற்றி உங்களுக்குத் தெரியவருமே” என்று குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறை அதிகமாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் பரப்புரை செய்வது குறித்த வினாவிற்கு விடையளித்த கலைஞர்,
“இந்தியா முழுவதுமே மின்பற்றாக்குறை அதிகமாக உள்ளது. அதுபற்றி நான் விளக்கமாக அறிக்கை கொடுத்திருக்கிறேன். அதைப் படித்தால் உண்மை புரியும். மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டால் தமிழ்நாட்டில் மின்வெட்டு அவ்வளவாக இல்லை என்பதை புரிந்து கொள்ளலாம்” என்று கூறினார். மின்பற்றாக்குறை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படுமா? என்று கேட்டபோது, தாம் அளித்துள்ள அறிக்கையே வெள்ளை அறிக்கை போன்றதுதான் எனக் கலைஞர் தெரிவித்தார்.

2ஆவது நாளாக திங்கட்கிழமையும் தில்லியில் தங்கியிருக்கும் முதலமைச்சர் கலைஞர் காலை நடுவண் திட்டக்குழு துணைத் தலைவர் மான்டெக்சிங் அலுவாலியாவைச் சந்தித்து தமிழகத்திற்கான திட்ட ஒதுக்கீடு குறித்து பேச்சு நடத்த உள்ளார். பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரசு தலைவர் சோனியா காந்தி ஆகியோரையும் அவர் சந்தித்துப் பேசவுள்ளார். பிரதமருடனான சந்திப்பின்போது, சேலம் இரும்பு ஆலைக்காக நிலம் அளித்தோரின் வாரிசுகளுக்கு வேலை வழங்குவது தொடர்பாக வலியுறுத்த இருப்பதாக கலைஞர் கூறினார்.

மான்டெக்சிங் அலுவாலியவுடனான சந்திப்பின்போது திட்டக்குழுவில் தமிழத்தின் ஒதுக்கீட்டாக எவ்வளவு தொகை கேட்கப்பட்டது? எவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டது? என்னென் திட்டங்களுக்காக நிதியை ஒதுக்கக் கோரினோம்? என்னென்ன திட்டங்களுக்காக நிதி உதவி கோரினோம் என்பது பற்றியெல்லாம் சந்திப்பு முடிந்த பிறகு நானே உங்களைச் சந்தித்து தெரிவிப்பேன் என்று முதலமைச்சர் கலைஞர் செய்தியாளர்களிடம் கூறினார்.

Read more...

சமூகத்துக்கு பயன்படுவதே சிறந்த கல்வி: அமைச்சர் ஆ.இராசா

அப்பலோ கல்வி குழுமத்தின் சார்பில் பட்டமளிப்பு விழா சென்னை வாணிமகால் அரங்கில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக நடுவண் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் .இராசா கலந்துகொண்டார்.

மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய அமைச்சர் பேசியதாவது:

ஒரு நதி எப்படி கடலில் கலப்பதையே நோக்கமாக கொண்டு செயல்படுகிறதோ, அது போல் நீங்கள் அனைவரும், ஒரு இலட்சியத்துடன் உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். நல்லவர்கள் நதி நீரை பருகுவார்கள். கெட்டவர்கள் அதில் கல்லை விட்டெறிவார்கள். ஆனாலும் நதி ஓடிக் கொண்டே இருக்கிறது. கடைசியில் அது கடலில் கலக்கிறது. அதுபோல், நீங்களும் உங்கள் பாதையில் குறுக்கிடுவதை புறக்கணித்து விட்டு பயணப்பட வேண்டும்.

கடந்த 1999-ஆம் ஆண்டு மத்திய அரசு தொலைத் தொடர்பு கொள்கை வகுத்தபோது, 2012 ஆம் ஆண்டுக்குள் 60 கோடி தொலைப்பேசி இணைப்புகள் வழங்கப்பட வேண்டும் என இலக்கு நிருணயிக்கப்பட்டது. ஆனால், 2010-ஆம் ஆண்டிலேயே கடந்த மாதமே நம் நாடு இந்த இலக்கை அடைந்துவிட்டது.

பல்வேறு துறைகளிலும் நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது. எனவே, அறிவார்ந்த சமுதாயம் என்பது சமூகத்தை முன்னேற்ற பயன்பட வேண்டும். சமுகத்திற்கு பயன்படுவதே சிறந்த கல்வி.

இவ்வாறு அமைச்சர் ஆ.இராசா பேசினார்.

இந்தப் பட்டமளிப்பு விழாவில், அப்பல்லோ கல்வி குழுமத்தின் தலைவர் சுப்பிரமணி, முதல்வர் சுதாகர் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Read more...

  ©Template by Dicas Blogger.

TOPO