#navbar-iframe { height: 0px; visibility: hidden; display: none; }

Wednesday, August 26, 2009

விடுதலை ஏட்டுக்கு அஞ்சல் உறை வெளியிடுவது பகுத்தறிவுக் கொள்கைக்கு கிடைத்த அங்கீகாரம் - அமைச்சர் ஆ.இராசா பெருமிதம்

விடுதலை ஏட்டை போர்வாளாக கொண்டு மத்திய அரசை எதிர்த்து தந்தை பெரியார் பல கடுமையான, தீவிரமான போராட்டங்களை நடத்தினார்கள். அவற்றையும் தாண்டி அதன் சாதனைக்காக பகுத்தறிவுக் கொள்கைளை அங்கீகரித்து இந்திய அரசு சிறப்பு உறையை வெளியிட்டு உள்ளது. இது நம் கருத்துகளுக்கு திராவிடர் கழகத்துக்குக் கிடைத்த வெற்றி என்று நடுவண் தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஆ.இராசா பெருமிதத்துடன் கூறினார்.

ஈரோட்டில் நடைபெற்ற விடுதலை நாளிதழின் பவள விழாவில் சிறப்பு அஞ்சல் உறையை நடுவண் அமைச்சர் ஆ. இராசா வெளியிட, தமிழ்நாடு துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.

அப்போது அமைச்சர் ஆ. இராசா உரையாற்றுகையில், “வரலாற்றுச் சிறப்பு மிக்க காரணத்துக்காக தந்தை பெரியார் பிறந்த மண்ணில் இந்தக் குடும்பத்தில் பிறந்த நான் பங்கேற்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். மத்திய அரசை எதிர்த்து தந்தை பெரியார் பல கடுமையான, தீவிரமான போராட்டங்களை நடத்தினார்கள். விடுதலை ஏடு அதற்காகத் தந்தை பெரியார் அவர்களின் போர்வாளாக இருந்து வந்திருக்கிறது. இந்த நிலையிலும் அவற்றையும் தாண்டி அதன் சாதனைக்காக பகுத்தறிவுக் கொள்கைளை அங்கீகரித்து இந்திய அரசு சிறப்பு உறையை வெளியிட்டு உள்ளது. இது நம் கருத்துகளுக்கு திராவிடர் கழகத்துக்குக் கிடைத்த வெற்றியாகும். நாத்திக ஏடு என்றால் வித்தியாசமான பார்வையில் அணுகப்பட்ட காலம் போய், இந்திய அரசே ஏற்று அங்கீகரிக்கும் நிலை ஏற்பட்டது கூட சிந்தனையில் ஏற்பட்ட மாற்றம்தான். ஒருவருக்கு அஞ்சல் தலை வெளியிடவேண்டும் என்றால் எவ்வளவோ நிபந்தனைகள் வைக்கப்பட்ட காலமெல்லாம் இப்போது மாறுதலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன’’ என்று கூறினார்.

”நான் யார் என்றால் மானமுள்ள சுயமரியாதைக்காரன் என்று ஒரு வரியில் பதில் சொன்னவர் நமது மானமிகு கலைஞர் அவர்கள். அவரின் ஆதரவால் இன்றைய நாள் ஒரு மத்திய அமைச்சர் ஆகியிருக்கிறேன். இந்தத் துறை அமைச்சர் பொறுப்பேற்று செய்ய வேண்டிய முக்கிய கடமையை ஆற்றியிருக்கிறேன் - இதன் மூலம் மனநிறைவடைகிறேன்’’ என்றும் ஆ.இராசா குறிப்பிட்டார்.

”1931 இல் அந்நியன் யார் என்ற கேள்விக்கு தந்தை பெரியார் பதில் சொன்னார்: என்னை அடிமை என்பவனும், வைப்பாட்டி மகன் என்பவனும், கிட்ட வர வேண்டாம் - தொட வேண்டாம் என்பவனும், கிட்ட வந்தாலே, கண்ணில் பட்டாலே தோஷம் என்பவனும், நான் தொட்டதைச் சாப்பிட்டால், என் எதிரில் சாப்பிட்டால் நரகம் என்பவனும் அந்நியனா? அல்லது உனக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லை, தொட்டாலும் பரவாயில்லை; நாம் எல்லோரும் சமம்தான் என்று சொல்லுகிறவன் அந்நியனா? என்பதை யோசித்துப் பாருங்கள் (குடி-அரசு 6.-9.-1931) என்று தந்தை பெரியார் சொல்லியிருக்கிறார்’’ என்று சுட்டிக்காட்டிய அமைச்சர் ஆ.இராசா, ’’எங்கிருந்தோ வந்த சோனியா காந்தி சேது சமுத்திரத் திட்டம் தேவை என்கிறார். ஆனால் இங்கு இருக்கும் ஒரு பார்ப்பன அம்மையாரோ அந்தத் திட்டம் கூடாது என்று நீதிமன்றம் வரை செல்கிறார். இதில் யார் அந்நியர்?’’ என்று வினா எழுப்பினார்.

இவ்விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, அமைச்சர் க. பொன்முடி, என்கேகேபி. இராஜா, நடுவண் இணை அமைச்சர் காந்திசெல்வன், இராஜராஜன் அய்.பி.எஸ். மற்றும் பொதுச்செயலாளர் கலி. பூங்குன்றன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

1 comments:

தமிழ் ஓவியா August 26, 2009 at 5:40 PM  

//இந்தத் துறை அமைச்சர் பொறுப்பேற்று செய்ய வேண்டிய முக்கிய கடமையை ஆற்றியிருக்கிறேன் - இதன் மூலம் மனநிறைவடைகிறேன்’//

பெரியார் தொண்டர்களான நாங்களும் மனநிறைவடைகிறோம்.

அமைச்சர் அவர்களின் தொண்டுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

மிக்க மகிழ்ச்சி - மிக்க நன்றி

  ©Template by Dicas Blogger.

TOPO