ஆ.ராசா மீது ஆக்ஷன்?!: கலைஞர் சிறப்பு பேட்டி
தி.மு.க.வுக்கு சவாலாகவும், நெருக்கடியாகவும் உள்ள ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை கலைஞர் எப்படி சமாளிக்கப் போகிறார் என்று தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவே எதிர்பார்க்கிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், அவருடைய மனநிலையை படம் பிடிக்கும் வகையில் எடுக்கப்பட்ட பேட்டி இது.....
கேள்வி: ஜெயின் கமிஷன் அறிக்கை வெளியானபோது, அகில இந்திய அளவில் தி.மு.க.வை தனிமைப்படுத்தும் முயற்சிகள் நடந்தன. அப்போது அதை வெற்றிகரமாக எதிர்கொண்டீர்கள். அரசியல் ராஜதந்திரி எனப்படும் நீங்கள் இந்த ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் எத்தகைய நிலை எடுக்கவிருக்கிறீர்கள்?
கலைஞர்:
ஜெயின் கமிஷன் அறிக்கை மட்டுமல்ல, தி.மு.கழகத்தைத் தனிமைப்படுத்த எத்தனையோ சூழ்ச்சிகள் யார் யாராலோ நடத்தப்பட்டு, ஒவ்வொன்றில் இருந்தும் தி.மு.கழகம் எவ்வாறு வெற்றிகரமாக தலைநிமிர்ந்து நின்றதோ, அதைப் போலவே இந்தப் பிரச்சனையிலும் தி.மு.கழகம் தலைநிமிர்ந்து நிற்கும்.
ஸ்பெக்ட்ரம் பிரச்சனையைப் பொறுத்தவரை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படும் இழப்பு என்பது யூகத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட கருத்தியலான இழப்பாகும். இந்த இழப்பினை கணக்கிடப்பட்ட முறையே விவாதத்திற்குரியது. இதைத் தான் நான் ஒரு விழாவில் பேசும்போது, அந்தக் காலத்தில் பேசாப் படம் ஓடிக்கொண்டிருக்கும்போது திரையில் நடப்பதை வர்ணிக்கும் ஒருவர் அதோ பார் பகாசூரன் வருகிறான். அவனுக்கு பல்லுக்கு பல் இரு காதம், பல்லிடுக்கு முக்காதம் என்றேல்லாம் சொல்வான். ஐந்து காதம் என்றால் ஐம்பது மைல். அந்த அளவுக்கு ஒருவன் இருக்க முடியுமா என்றெல்லாம் யாரும் எண்ணிப் பார்ப்பதில்லை என்றெல்லாம் பேசினேன்.
தற்போது கிடைக்கின்ற வருவாயைப் போல இந்த முயற்சியை பத்தாண்டுகளுக்கு முன்பு மேற்கொண்டிருந்தால் இதே அளவிற்கு கிடைத்திருக்கும் என்று கற்பனையில் ஒரு தொகையை தாங்களே நிர்ணயித்துக் கொண்டு, அந்தத் தொகை இழப்பாகி விட்டது, அந்தத் தொகை யாருக்கோ போய்விட்டது, அந்தத் தொகை அளவுக்கு ஊழல் நடந்துவிட்டது என்றெல்லாம்தான் அனுமானித்து ஏடுகளும், ஊடகங்களும் அதனை பெரிதுப்படுத்தி பூதாகரமாக்குகின்றன. உண்மை ஒருநாள் வெளிவரும்போது உண்மையான இழப்பு எவ்வளவு, அந்த இழப்புக்கு காரணம் யார் அல்லது எது என்பது வெளிவரத் தான் போகிறது.

கலைஞர்:
சி.பி.ஐ. ரெய்டுகளுக்கும் மத்திய அரசுக்கும் அல்லது காங்கிரஸ் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. உச்சநீதிமன்றத்தால் இந்தப் பிரச்சனையில் புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.க்கு வழங்கப்பட்ட அறிவுரைகளின் அடிப்படையிலும் ஆணைகளின் அடிப்படையிலும்தான் இந்தச் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். சி.பி.ஐ. ரெய்டு நடத்தியதாலேயே ஒருவரை குற்றவாளி என்று கருதிட முடியாது.
கேள்வி: 60 ஆயிரம் கோடி இழப்பு என்று தொடங்கிய எதிர்க்கட்சிகள் தற்போது 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி என்கிற அளவுக்கு கணக்கை உயர்த்தியுள்ளன. மத்திய தணிக்கைத் துறையின் அறிக்கையும் இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. உலகிலேயே இந்தளவுக்கு எங்குமே முறைகேடு நடந்ததில்லை என தி.மு.க. மீதும் அதன் சார்பில் அமைச்சராக இருந்த ஆ.ராசா மீதும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு கட்சியின் தலைவர் என்ற முறையில் உங்கள் பதில் என்ன?
கலைஞர்:
1 இலட்சத்து 80 ஆயிரம் கோடி என்பதெல்லாம் பூதாகரமாக பெரிதுபடுத்தப்படுகிற புள்ளி விவரம்தான். கடந்த ஆண்டுகளில் - கடந்த கால அமைச்சர்கள் கையாண்ட அதே நடைமுறையை அந்தத் துறையின் பின்பற்றியிருப்பதாகத்தான் அந்தத் துறையின் அமைச்சராக இருந்த ராசா திரும்பத் திரும்ப சொல்கிறார். அதனால்தான் கடந்த காலத்தில் என்ன நடைமுறை பின்பற்றப்பட்டது என்பதை அறிய உச்சநீதிமன்றம், கடந்த பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில் இருந்தே சி.பி.ஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கின்றது. அத்தகைய விசாரணை நடைபெற்றால் உண்மை வெளிச்சத்துக்கு வந்துவிடும்.
கேள்வி: மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ஆ.ராசா மீது கட்சியும் நடவடிக்கை எடுக்கப் போகிறது என்று வெளியாகும் செய்திகள்...?
கலைஞர்:
இந்தக் கேள்விக்கு விளக்கமாக நான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியிலே பதில் கூறியிருக்கிறேன். ராசா குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால், அதற்கு பிறகு கட்சி தயவு தாட்சண்யம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கும். அதுவரையில், நான் எதுவும் சொல்வதற்கில்லை. ராசா எந்தத் தவறும் செய்யவில்லை என்று தி.மு.க நம்புகிறது. அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கபடுகிற வரையில் நாங்கள் ராசாவை கைவிட தயாராக இல்லை என்று நான் கூறி, அது ஏடுகளில் வெளிவந்துள்ளது. ஆனால் குற்றவாளி என்று நிரூபிக்கபடாத நிலையிலேயே அவரை கட்சியிலிருந்து ஓரம் கட்டிவிட மாட்டார்களா என்று ஒருசிலர் நினைப்பதையும் நான் அறிவேன்.
கேள்வி: தேசியக் கட்சிகள் - மாநிலக் கட்சிகள் என அனைத்துத் தரப்பிலும் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை தீவிரமாக கையில் எடுத்திருப்பதால், தமிழக சட்டமன்ற தேர்தலில் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறதே?
கலைஞர்:
சட்டமன்ற தேர்தலில் ஸ்பெக்டரம் பிரச்சனை தாக்கத்தை ஏற்படுத்தாதா, ஏற்படுத்த வேண்டும் என்று எதிர்கட்சிகள் ஆசைப்படுகின்றன. தமிழ்நாட்டில் கழக ஆட்சி தொடர்ந்து நிறைவேற்றி வரும் பல்வேறு நலத் திட்டங்களாலும், ஏழையெளியோர், நலிந்த பிரிவினர்க்கு செய்யப்படும் சலுகைகளாலும் கழக அரசுக்கு மக்களிடம் பேராதரவு இருப்பதை கண்டு, இதை எப்படி கெடுக்கலாம் என்று யோசித்து கொண்டிருந்த எதிர்கட்சியினர் ஸ்பெக்ட்ரம் பிரச்சனையைப் பயன்படுத்தியாவது ஏதாவது நடக்காதா என்று எண்ணுகிறார்கள். ஆனால் அவர்களின் எண்ணம் நிறைவேறாது.
உதாரணம் வேண்டுமென்றால், ஒரு சில மாதங்களுக்கு முன்பு அதாவது ஜூலையில் பிகார் மாநில முதலமைச்சர் மீது 1500 கோடி ரூபாய் ஊழல் புகார் சொல்லி சட்டசபையையே நடக்க விடாமல் ஸ்தம்பிக்க செய்த பிறகும் நடைபெற்ற பொதுத் தேர்தலில் மக்கள் எந்த அளவிற்கு அவருக்கு வாக்குகளை வழங்கினார்கள் என்பதை எண்ணிப் பார்த்தால், ஸ்பெக்ட்ரம் பிரச்சனை சட்டமன்ற தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது.
கேள்வி: மீண்டும் ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு தி.மு.க. அரசின் திட்டங்கள், தமிழகத்தின் பெரும்பான்மையான மக்களை அடைந்துள்ளதா? மக்களிடம் இத்திட்டங்களுக்கு கிடைத்துள்ள ஆதரவு, வரும் தேர்தலில் தி.மு.க.வை பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் அமர்த்தும் என நம்புகிறீர்களா?
கலைஞர்:
விலையை குறைக்க ஒரு அரசினால் என்னென்ன முயற்சிகள் எடுக்க முடியுமோ அத்தனையையும் தி.மு.கழக அரசு எடுத்து வருவதை நாட்டு மக்கள் நன்றாகவே அறிவார்கள். அலுவலர்களுக்கு, தொழிலாளர்களுக்கு விலைவாசி உயர்வை சமாளிப்பதற்காக ஊதிய உயர்வையும் சலுகைகளையும் அவ்வப்போது அளித்தும் வருகின்றோம். எனவே, தேர்தலில் எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடாது.
மக்களுக்கு தொடர்ந்து நன்மை செய்யும் நல்லாட்சி - மக்களின் நல்வாழ்வுக்காகவும், மேம்பாட்டுக்காகவும் திட்டங்களை தீட்டி செயல்படுத்தும் ஆட்சி - கழக ஆட்சி என்பதை தமிழ்நாட்டு அனைத்துத் தரப்பு மக்களும் நன்றாகவே அறிந்துள்ளார்கள், புரிந்துள்ளார்கள். எனவே, நல்லாட்சி மேலும் தொடர வேண்டுமென்ற நல்லெண்ணத்தோடு வரும் தேர்தலிலும் தி.மு.க. கூட்டணியை பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் அமர்த்துவார்கள் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
===============================================
(நன்றி: நக்கீரன் - டிசம்பர் 2010)
===============================================
ஒரேயடியாக இதைப் பற்றி மட்டுமே வெறித்தனத்தோடு பார்த்துகொண்டிராமல், மற்ற விஷயத்தையும் கொஞ்சம் பார்ப்போமே. செல்லுலார் ஆப்பரேட்டர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவரும், பா.ஜ., - ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளின் ஆதரவு ராஜ்யசபா எம்.பி.ராஜீவ் சந்திரசேகர் மத்திய அரசுக்கு, 19 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய ஆடிட்டர் ஜெனரல் (சி.ஏ.ஜி.,) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறியிருக்கிறார். ரத்தன் டாட்டா, வாஜ்பாய் ஆட்சியில் ஸ்பெக்ட்ரம் இழப்பீடு ரூ.60000 கோடி நட்டம் என்றிருக்கிறார். அதன் தற்போதய மதிப்பு 60 லட்சம் கோடி. இதற்க்கு எத்தனை ஜீரோ என்று யாராலும் சொல்லவே முடியாது. இதைப் பேசாமல் எங்கே போனாங்க இந்த பிஜேபி and அதிமுக பசங்கெல்லாம். இது அவர்களோட வரிப் பணமில்லையா (எப்போ இவங்கெல்லாம் வரி கட்டினாங்க ?)..
It is obvious that the minister has done the Indian consumer a great service by granting spectrum at throwaway prices. The net result is that India has perhaps the lowest call rates in the world and the tele density has sky rocketted in the past few years.
Post a Comment