அலைவரிசை ஒதுக்கீட்டில் அரசுக்கு இழப்பு என்பது முற்றிலும் தவறானது : மாநிலங்களவையில் அமைச்சர் ஆ.இராசா விளக்கம்
3 ஜி எனப்படும் மூன்றாம் தலைமுறை அலைவரிசை ஏலம் விடப்படுவதன் மூலம் அரசுக்கு வரும் வருமானம் குறித்தும் அதனை நடைமுறைப்படுத்துவது குறித்தும் மாநிலங்களவையில் உறுப்பினர்கள் அருண் ஜேட்லி மற்றும் சுப்புராம ரெட்டி ஆகியோர் வினா எழுப்பினர்.
அவர்களின் வினாக்களுக்கு நடுவண் தகவல் தொலைத்தொடர்பு மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆ.இராசா விளக்கமளிக்கையில், “ 3 ஜி சேவை எனப்படும் புதிய தொழில்நுட்பத்துடன் இயக்கப்படும் சேவைகளுக்கான அனுமதியை எத்தனை நிறுவனங்களுக்கு வழங்குவது என்பதிலும், அதற்கான அடிப்படை விலையை தீர்மானிப்பதிலும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வழங்கிய பரிந்துரைகளில் மாறுபட்ட கருத்து இருந்ததால், அப்பரிந்துரைகளை முடிவு செய்ய அமைச்சர் குழு அமைக்கப்பட்டது. அதன் முடிவுகளின் அடிப்படையில் அடுத்த 3 மாதங்களில் 3 ஜி அலைவரிசை ஏலம் நிறைவடையும்’’ என்று தெரிவித்தார்.
2 ஜி அலைவரிசை ஒதுக்கீட்டில் அரசுக்கு உரிய வருமானம் கிடைக்க புதிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமா? என்று அருண் ஜெட்லியின் வினாவுக்கு அமைச்சர் ஆ.இராசா விளக்கமளிக்கயில், “சட்ட வல்லுநர் ஒருவரே இவ்வினாவை கேட்டதற்காவும், அவர் அமைச்சராக இடம் பெற்ற காலத்தில் 1999-ஆம் ஆண்டு தேசிய தொலைத்தொடர்புக்கொள்கை உருவாக்கப்பட்டதாலும், சில விளக்கங்களை அளிக்க முன் வருகிறேன். 2 ஜி அலைவரிசையை ஏலம் விட்டிருந்தால் அரசுக்கு ரூ.60 ஆயிரம் கோடி வ்ருமானம் வந்திருக்கும் என்று சில நாளேடுகளும் ஒரு இலட்சம் கோடி அரசுக்கு இழப்பு என்று சில அரசியல் கட்சிகளும் பரப்பினார்கள். அலைவரிசை ஒதுக்கீட்டில் போதுமான தகவலும் புரிதலும் இல்லாத காரணத்தினால், அத்தகைய தவறான கருத்தை கொண்டிருக்கிறார்கள் என்பதை நானறிவேன். எனவே, இது குறித்து உறுப்பினர்களின் எண்ணத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள தவறான கருத்துப் படிவை அகற்ற நான் கடைமைப்பட்டுள்ளேன்.
3 ஜி என்பது ஒரு வகை தொழில்நுட்பம், அது வீடியோ மற்றும் உயர் புள்ளி விவர மாற்றத்திற்காக பயன்படும். 2 ஜி என்பது தொலைபேசியில் குரலை மட்டுமே பரிமாற்றம் செய்வது. 2 ஜி அலைவரிசையை பயன்படுத்திய நிறுவனங்கள் 1998-ஆம் ஆண்டு வரை உரிய கட்டணத்தை செலுத்த முடியாததால், 1999-ஆம் ஆண்டு அரசு ஏலமுறை என்பதில் இருந்து வருவாயில் பங்கு என்னும் முறைக்கு மாறியது. அதற்காகத்தான் தேசிய தொலைத்தொடர்புக் கொள்கை உருவாக்கப்பட்டது.
உரிமைதாரர்களுக்கு இலவசம்
அப்படி உருவாக்கப்பட்ட கொள்கையை அருண் ஜேட்லியும் அமைச்சராக இருந்துதான் உருவாக்கினார். அதன்படி அலைவரிசை மற்றும் உரிமம் மீது ஆண்டுக்கு ரூ.60 ஆயிரம் கோடி அரசுக்கு வருமானம் வருகின்றது. எனவே அலைவரிசை உரிமைதாரர்களுக்கு அடிப்படையில் இலவசமாகத்தான் வழங்கப்படுகிறது என்பதும் பின்னிட்டு சேவை அடிப்படையில் உரிம நிறுவனங்களின் வருவாயில் குறிப்பிட்ட விழுக்காட்டுத் தொகை அரசுக்கு வருவாயாக வசூலிப்படுகிறது என்பதும் உறுப்பினர்களுக்கும் ஊடகங்களுக்கும் இந்த மன்றத்தின் வாயிலாக தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.
உரிமம் வழங்கப்படும்போது 6.2 (MHz) மெகாகட்ஸ் அலைவரிசைக்கு மேல் வழங்கப்படும் அலைவரிசைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்னும் கொள்கையை நான் நடைமுறைப்படுத்த எண்ணியுள்ளேன்.
இது குறித்து பிரதமர் மற்றும் நிதி அமைச்சரை பலமுறை கலந்து பேசியுள்ளேன். எனவே, 2 ஜி அலைவரிசை ஏலம் விடாததால் அரசுக்கு வருவாய் இழப்பு என்பது சட்டப்படியும், அரசின் கொள்கைப்படியும் ஏற்புடையதல்ல என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன்” என்று அமைச்சர் ஆ.இராசா கூறினார்.
0 comments:
Post a Comment