அரக்கோணம் டெலிகாம் நிறுவனத்தை மீண்டும் இயக்க பரிசீலனை : டி.கே.அரங்கராஜன் வினாவுக்கு அமைச்சர் ஆ.இராசா பதில்
புதுடில்லி :
அரக்கோணம் பிரிவாக செயல்பட்டு வந்து, இப்போது நலிவடைந்த நிலையில் உள்ள தமிழ்நாடு தொலைத்தொடர்பு நிறுவனத்தை, மீண்டும் புதுப்பித்து இயங்க வைக்க அரசு பரிசீலனை செய்து வருகிறது என்று மத்திய தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆ. இராசா விடையளித்தார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் வியாழனன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.கே.அரங்கராஜன் பேசுகையில், ”தமிழ்நாடு தொலைத்தொடர்பு நிறுவனம், அரக்கோணம் பிரிவு, நலிவடைந்த நிறுவனம் என்று பிரகடனம் செய்யப்பட்டிருக்கிறதா?, அல்லது அதனை புதுப்பிக்க அரசு ஏதேனும் குறிப்பிட்ட காலநிர்ணயம் செய்திருக்கிறதா?” என்று வினா எழுப்பினார்.
இதற்கு மத்திய தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆ.இராசா விடையளிக்கையில், ”தமிழ்நாடு தொலைத்தொடர்பு நிறுவனம், அரக்கோணம் பிரிவு நலிவுற்ற ஆலை என்று பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அதனால், அது தற்சமயம் செயல்படவில்லை. அதனை புதுப்பித்து இயங்க வைக்க, தொழில் மற்றும் நிதி மறுபுனரமைப்பு வாரியத்தின் முன் நிலுவையில் உள்ள முன்மொழிவு, அரசின் பரிசீலனையில் இருந்து வருகிறது. மறைமலை நகரில் உள்ள ஆப்டிகல் ஃபைபர் கேபிள் உற்பத்தி செய்யும் பிரிவு இயங்கி வருகிறது” என்று தெரிவித்தார்.
மேலும், ”பாரத ஸ்டேட் வங்கியால் இத் தொழிற்சாலையை இயங்க வைக்க சில உள் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது, அதற்கான வழிமுறைகள் கண்டறியப்பட்டிருக்கிறது. தற்சமயம் அதற்கு 27 கோடி ரூபாய் வங்கிக் கடன் அளிக்கப்பட்டிருக்கிறது. மத்தியப் பொதுத் துறை நிறுவனமான டி.சி.ஐ.எல். மூலமாக மேலும் 17 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டிருக்கிறது. இவற்றின் மூலம் அதனைப் புதுப்பித்து இயங்க வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்நிறுவனத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனமான டி.சி.ஐ.எல். 30.67 விழுக்காடும், தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான டிட்கோ எனப்படும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் 29.49 விழுக்காடும், இந்நிறுவனத்திற்குத் தொழில்நுட்ப உதவிகளைச் செய்து வந்த ஃபுஜிகுரா என்னும் நிறுவனம் 14.47 விழுக்காடும் இதன் பங்குகளைப் பெற்றிருந்தன. பொது மக்களின் பங்குகள் 25 விழுக்காடு இருந்தன. இதுதான் இந்நிறுவனத்தின் முந்தைய பங்கு வீதமாக இருந்தது.
இப்போது, செயலாளர் குழு பரிந்துரைகளின்படி இது மாற்றப்பட்டிருக்கிறது. அதன்படி டி.சி.ஐ.எல். 49 விழுக்காடும், டிட்கோ 14.63 விழுக்காடும், ஃபுஜிகுரா 0.718 விழுக்காடும், பொதுமக்கள் 12 விழுக்காடும், வங்கிகள் 16 விழுக்காடும் பெற்றிருப்பார்கள்” என்று அமைச்சர் ஆ.இராசா தெரிவித்தார்.
0 comments:
Post a Comment