நீலகிரி மழை பாதிப்பு - நிவாரண பணி தீவிரம்
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்கள் பெய்த பலத்த மழையால் அழகான நகரங்கள் அலங்கோலமாயின. நிலச்சரிவு, காட்டாற்று வெள்ளம், சாலைகள் துண்டிப்பு என்று நகரங்கள் தனித்தீவுகளாக காட்சி அளிக்கின்றன.
இந்த இயற்கை சீற்றத்துக்கு 43 பேர் பலியாகி உள்ளனர். வீடுகள் இடிந்து தரைமட்டம் ஆகிவிட்டன.ஆயிரக்கணக்கானோர் இருக்க இடம் இன்றி தவிக்கிறார்கள்.அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இதையொட்டி ஊட்டி தமிழக மாளிகையில் நேற்று காலை மத்திய தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை மந்திரி ஆ.இராசா தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் நெடுஞ்சாலை துறை அமைச்சர் சாமிநாதன், கதர்வாரிய துறை அமைச்சர் கா.இராமச்சந்திரன், நீலகிரி மாவட்ட கலெக்டர் ஆனந்த்பாட்டில், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் இராஜீவ் கே.ஸ்ரீவஸ்தவா, ஊட்டி வடக்கு கோட்ட வன அதிகாரி சவுந்திரபாண்டியன், தெற்கு கோட்ட வன அதிகாரி சேவாசிங், மாவட்ட வருவாய் அதிகாரி குப்புசாமி, குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் சவுந்திர பாண்டியன், முன்னாள் அரசு கொறடா பா.மு.முபாரக் உள்பட மாவட்ட அளவிலான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின்னர் மத்திய அமைச்சர் ஆ.இராசா செய்தியாளர்களுக்கு அளித்த நேர்காணலில் கூறியதாவது:
’’கடந்த சில நாட்களுக்கு முன்பு நீலகிரி மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாக வீடுகள் இடிந்து மழை வெள்ளத்திற்கு 43 பேர் பலியாகி உள்ளனர். மாவட்டம் முழுவதும் தற்போது கணக்கெடுப்பின் படி 816 வீடுகள் மழையால் நாசமாகி உள்ளது. இதில் 360 வீடுகள் முழுமையாக இடிந்து உள்ளது. தொடர்ந்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது வீடுகளை இழந்தவர்கள் 1,100 பேர் ஊட்டி, குன்னூர் உள்பட பல இடங்களில் உள்ள 10 முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
முகாம்களில் தங்கி உள்ளவர்களுக்கு உணவு மற்றும் கம்பளி, போர்வை போன்ற பொருட்கள் வழங் கப்பட்டு உள்ளன.
மாவட்டம் முழுவதும் 600 ஹெக்டர் நிலத்தில் விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளது. சமையல் கியாஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் போன்றவை பாலக்காட்டில் இருந்து நீலம்பூர், கூடலூர் வழியாக ஊட்டிக்கு கொண்டு வரப்படுகிறது.
பெட்ரோல் பங்க்களுக்கு கொண்டு வரப்பட்டு பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லாமல் வழங்கப்படுகிறது. உடனடியாக மின் கம்பங்கள் சரி செய்யப்பட்டு மின்சாரம் வழங்கப்படும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக மருத்துவ வசதி செய்யப்பட தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
குன்னூர் அருகே குரும்பர்பாடியில் இருந்த தனியார் தங்கும் விடுதியில் பணிபுரிந்த பாதுகாப்பாளர் ஒருவரை மட்டும் காணவில்லை என்று புகார் செய்யப்பட்டு உள்ளது. வருகிற 16-ஆம் தேதி முதல் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வர அனுமதிக்கப்படுவார்கள்’’
இவ்வாறு அமைச்சர் ஆ.இராசா தெரிவித்தார்.
0 comments:
Post a Comment