நீலகிரியில் இனி கட்டடத் தடைச் சட்டங்கள் கடுமையாகும்: நடுவண் அமைச்சர் ஆ.இராசா சேதி
நீலகிரி, நவ. 22-
நீலகிரி மாவட்டத்தில் இனி கட்டடத் தடைச் சட்டங்கள் கடுமையாக அமல்படுத்தப்படும் என்று நடுவண் தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ஆ.இராசா (A.RAJA) தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களாக பெய்து வந்த கடும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தொகுதி மக்களவை உறுப்பினரும், நடுவண் தொலைத் தொடர்புத்துறை அமைச்சருமான ஆ.இராசா (A.RAJA) சனிக்கிழமை ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீலகிரி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள கோத்தகிரி - மேட்டுப்பாளையம் சாலை மற்றும் கோத்தகிரி - உதகை சாலை போர்க்கால அடிப்படையில் சரிசெய்யப்பட்டு வருகின்றன. வரும் திங்கட்கிழமை முதல் கோத்தகிரி - உதகை சாலையில் இலகுரக ஊர்திகள் மட்டும் செல்ல அனுமதிக்கப்படும். அதே போல குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் இன்னும் 20 நாட்களுக்குள் தற்காலிக பணிகள் முடிக்கப்பட்டு இதே போன்ற இலகுரக ஊர்திகள் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்படும் என்று கூறினார்.
தற்போது மாவட்டத்தில் 3053 வீடுகள் பகுதி அளவிலும், 2600 வீடுகள் முழுமையாகவும் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு கேத்தி பகுதியிலுள்ள தொடக்க நலவாழ்வு நடுவம் அருகில் 50 வீடுகளும், உதகையில் உள்ள இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் தொழிற்சாலை அருகே 50 வீடுகளும் உடனடியாக கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் பணிகள் 20 நாட்களுக்குள் நிறைவு பெற்று பாதிக்கப்பட்ட மக்களை குடியமர்த்துவோம். மீதம் உள்ளவர்களுக்கு இந்திரா குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ஆ.இராசா கூறினார்.
நீலகிரி மாவட்டத்தில் இனி கட்டடங்கள் கட்டும் போது கட்டடத் தடைச் சட்டத்தை கடுமையாக அமல்படுத்தப்படும் என்றும், கட்டடம் கட்டுபவர்கள் புவியியல் துறையின் வல்லுநர்களின் அனுமதி பெற்ற பிறகே கட்டடம் கட்ட அனுமதிக்கப்படுவர் என்றும் அமைச்சர் ஆ.இராசா கூறினார்.
இந்த ஆய்வின் போது கதர்வாரியத்துறை அமைச்சர் கா.இராமச்சந்திரன், குன்னூர் சட்டப்பேரவை உறுப்பினர் சவுந்தரபாண்டியன், மாவட்ட ஆட்சியர் ஆனந்த ராவ் பாட்டீல் ஆகியோர் உடனிருந்தனர்.
0 comments:
Post a Comment