#navbar-iframe { height: 0px; visibility: hidden; display: none; }

Monday, May 31, 2010

தி.மு.க. அறிவிப்பு: அன்புமணிக்கு சீட் இல்லை!

தி.மு.கவின் உயர்நிலை செயல்திட்டக்குழு 30.5.2010 அன்று மாலை அண்ணா அறிவாலயம் முரசொலி வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான கலைஞர் தலைமையில் கூடியது.

இதில்
, பொதுச்செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், தென் மண்டல அமைப்பு செயலாளர் மு.க.அழகிரி, துரைமுருகன், கொள்கைப்பரப்பு செயலாளர் ஆ.இராசா, கனிமொழி, சற்குணபாண்டியன், மு.நாகநாதன் உட்பட 28 பேர் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.


இராமதாசு எழுதிய கடிதம்
கடந்த 26.04.2010 மற்றும் 15.05.2010 ஆகிய தேதிகளில் திமுக தலைவர் கருணாநிதிக்கு மருத்துவர் இராமதாசு, அனுப்பிய இரு கடிதங்கள் திமுகவின் உயர்நிலை செயல்திட்டக்குழுவில் பார்வைக்கு வைக்கப்பட்டன.

அதில், கடந்த 2006 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பா.ம.க. நிபந்தனையற்ற ஆதரவு அளித்தது. அன்று முதல் இன்று வரை தி.மு.க.வுக்கு ஆதரவு என்கிற நிலைமையில் மாற்றமில்லை. இடையே நடைப்பெற்ற சில விரும்பத்தகாத சம்பவங்கள் நாங்கள் மறந்து விட்டோம். அதேபோல் நீங்களும் மறந்து விட்டீர்கள் என நம்புகிறோம். 2011 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் தி.மு.க. தலைமையிலான ஆட்சி அமைய பா.ம.க. விரும்புகிறது. அதனால் தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. போட்டியிட விரும்புகிறது. 2010 இல் நடக்க உள்ள மாநிலங்களைத் தேர்தலில் பா.ம.க.வுக்கு ( இராமதாசின் மகன் அன்புமணிக்கு) ஒரு இடம் கொடுக்க வேண்டும் என விரும்புகிறோம் என்று இராமதாசு கூறியிருந்தார்.

தீர்மானங்கள்
(1) மருத்துவர் இராமதாசு தனது கடிதத்தில் எழுதியுள்ளதை போல மீண்டும் இரு இயக்கங்களும் உறவை புதுப்பித்துக் கொண்டு, அடுத்து வர இருக்கும் 2011 ஆம் ஆண்டு சட்டப் பேரவை பொதுத் தேர்தலிலும், விரைவில் வர இருக்கின்ற சட்ட மேலவைத் தேர்தலிலும் இரு கட்சிகளும் கூட்டணி வைத்து போட்டியிடுவது என்பதை தி.மு.க. ஏற்றுக் கொள்கிறது.

(2) 2011 ஆம் ஆண்டில் வர இருக்கும் சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கு அடுத்து நடைபெற இருக்கும் மாநிலங்களவைத் தேர்தலில் பா.ம.க.விற்கு ஒரு இடத்தை வழங்குவது என்றும், இதனை பா.ம.க. ஏற்றுக் கொள்ளும் என்று நம்புகிறோம். இதற்கு இணக்கமான நிலைமைகளை இந்த இரு இயக்கங்களும் இப்போது முதலே கடைப்பிடிப்பது.

(3) இலங்கையில் இன்னமும் முகாம்களில் உள்ள தமிழர்கள் உடனடியாக விடுவிக்கப்பட்டு தங்களது சொந்த வீடுகளுக்குச் சென்று வாழ வழிவகை செய்ய வேண்டும். தமிழகத்தில் முகாம்களில் தங்கியிருக்கும் 73 ஆயிரம் இலங்கை தமிழர்களை இந்தியக் குடியுரிமைச் சட்டம் மற்றும் ஏனைய சட்டங்களின் கீழ் மறுகுடியமர்த்தும் முயற்சியில் நடுவண் அரசை, தமிழக அரசு கேட்டுக் கொண்டது. ஆனால், இதுவரையில் நடுவண் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனியாவது இந்தப் பிரச்சனையில் ஆக்கப்பூர்வமான அணுகுமுறையை கையாண்டு தீர்வு காண வேண்டும்.

(4) மலேசியாவில் சிறைப்பட்டுள்ள 75 இலங்கை தமிழர்களை காப்பாற்ற நடுவண் அரசு கருணை உள்ளத்தோடு நடவடிக்கை எடுக்க வேண்டும். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த அத்தியாவசிய பொருட்கள் சட்டம் உள்ளிட்ட சட்டங்களில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்., யூக வணிக முறைகளை தடுத்து நிறுத்தி போர்க்கால அடிப்படையில் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும்.

(5) மகளிர் இடஒதுக்கீடு சட்ட முன்வடிவு மக்களவையில் நிறைவேற்றப்படாமல் இருப்பது குறித்து தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக் குழு வேதனை அடைகிறது. அந்தச் சட்டத்தை விரைவில் நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளில் நடுவண் அரசு தொடர்ந்து ஈடுபட வேண்டும். மக்களவையில் இந்த மகளிர் இடஒதுக்கீடு சட்ட முன்வடிவை நிறைவேற்ற அனைத்துக் கட்சியினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

(6) தமிழகத்தில் மீண்டும் சட்ட மேலவையை கொண்டு வர முழு முதல் காரணமாக இருந்த கலைஞருக்கும், இச்சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற பெரிதும் காரணமாக இருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கும் நன்றி, பாராட்டு.

தி.மு.க. வேட்பாளர்கள் யார்?
இந்த கூட்டத்தில், அடுத்த மாதம் வரவிருக்கும் மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர் யார் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. கே.பி.ராமலிங்கம், டி.எம்.செல்வகணபதி, ச.தங்கவேல் ஆகியோர் மாநிலங்களவைத் தேர்தலில் தி.மு.க. போட்டியிடுவார்கள் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவித்தார்.
கே.பி.இராமலிங்கம்: தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் - விவசாயிகள் நலவாரியத்திற்கு முழு நேரத் தலைவராகவும், திமுக விவசாய அணி செயலாளராகவும் இருக்கிறார். டி.எம்.செல்வகணபதி : வன்னியர் சமுகத்தை சேர்ந்த இவர், அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் சேர்ந்த முன்னாள் அமைச்சர். ச.தங்கவேல் : ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்த இவர் சங்கரன் கோவில் தனி தொகுதியில் 2006-ஆம் ஆண்டு போட்டியிட்டு வெற்றிபெற்று அமைச்சராக பதவி வகித்தவர்

கலைஞர் நேர்காணல்
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய வினாக்களுக்கு தி.மு.க. தலைவர் கலைஞர் விடையளித்தார்.

’பா.ம.க. குறித்து நீங்கள் எடுத்துள்ள முடிவு இராஜதந்திரமான முடிவாக உள்ளது. அதனை அக்கட்சி ஏற்றுக் கொள்ளும் என்று கருதுகிறீர்களா?’ என்று முதல்வர் கலைஞரிடம் கேட்டபோது, “இது இராஜதந்திர முடிவு அல்ல. நல்லெண்ணத்தோடு எடுக்கப்பட்ட முடிவு. இதனை பா.ம.க. ஏற்றுக் கொள்ளும் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.

பா.ம.க.வுக்கு இப்போது ஆதரவு தி.மு.க. கொடுக்காதது ஏன்? என்று கேட்டபோது, அதுபற்றி தீர்மானத்திலேயே தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

பா.ம.க.வுடனான கூட்டணியை காங்கிரசார் ஒப்புக் கொள்வார்களா? என்று கேட்டபோது, காங்கிரசு தலைவர்களை ஒப்புக் கொள்ள வைக்க முயற்சிப்போம் என்று தெரிவித்தார்.

தி.மு.க. - பா.ம.க. கூட்டணிக்கு ஒப்புதல் அளித்த நீங்கள், அமைச்சரவையில் அவர்களை சேர்க்க முயற்சிப்பீர்களா? என்று கேட்டபோது, நடுவண் அரசு அதுபற்றி விவாதிக்கவில்லை என்றார்.

0 comments:

  ©Template by Dicas Blogger.

TOPO