#navbar-iframe { height: 0px; visibility: hidden; display: none; }

Sunday, July 18, 2010

ஏமாறுபவர்கள் பற்றி நாம் கவலைப்பட வேண்டும் : கலைஞர் பேட்டி


சென்னை:

போலி மதிப்பெண் சான்றிதழ் தயாரிப்பு விவகாரத்தில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஏமாற்றுபவர்கள் பற்றி நமக்கு கவலையில்லை. ஏமாறுபவர்கள் பற்றித்தான் நாம் கவலைப்படவேண்டும் என்று தமிழக முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி தெரிவித்தார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடந்து வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களில் மாணவர்களுக்கு சேர்க்கை இடம் வழங்கப்பட்டு வருகிறது. சில மாணவர்கள் போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து கலந்தாய்வில் பங்கேற்றது தெரியவந்தது.

இந்நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்துவரும் கலந்தாய்வை தமிழக முதல்வர் கலைஞர் ஞாயிற்றுக்கிழமை காலை பார்வையிட்டார். கலந்தாய்வு நடைபெறும் அரங்கம் முழுவதையும் சுற்றிப்பார்த்து விட்டு, துணைவேந்தர் மன்னர் ஜவகரிடம் கலந்தாய்வு பற்றி கேட்டறிந்தார்.

பின்னர் கலைஞர் செய்தியாளர்களுக்கு அளித்த நேர்காணலில், ”பொறியியல் படிப்பில் தமிழ்வழிக் கல்வியில் இதுவரை 149 பேர் சேர்ந்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் உயரும். குடும்பத்தில் தாத்தா, பாட்டி, தாய், தந்தை, அக்கா, அண்ணன் உள்பட யாரும் படிக்காமல் முதல் தலைமுறையாக படிக்க வரும் மாணவருக்கு இலவச கல்வி உள்பட பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. முதல் தலைமுறை மாணவர்கள் இதுவரை 76 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில், 13,437 பேர் கல்லூரிகளை தேர்வு செய்துள்ளனர். போலி மதிப்பெண் சான்றிதழ் விவகாரத்தில் உயர்கல்வி அமைச்சர், துணைவேந்தர் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். கல்வி வளாகங்களில் சுற்றித்திரியும் தரகர்களை விசாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஏமாற்றுபவர்கள் பற்றி நமக்கு கவலையில்லை. ஏமாறுபவர்கள் பற்றித்தான் நாம் கவலைப்படவேண்டும். எனவே, மோசடி பேர்வழிகளிடம் ஏமாறாமல் இருக்கவேண்டும். போலி மதிப்பெண் பட்டியல் மோசடியில் மாணவர்கள், தரகர்கள் உள்பட யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

இந்த ஆய்வின்போது, மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ஆ.இராசா, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழக உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு, மாநில உயர்கல்வித்துறை செயலாளர் கணேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

1 comments:

Anonymous,  July 28, 2010 at 1:03 PM  

ஏமாறுபவர்கள் பாமர மக்கள் என்பது கலைஞருக்கு தெரியும் அதனால் கவலை படுகிறார் மற்றபடி இன்னும் பாமர மக்கள் சூழ்ச்சியிலிருந்து மீளவில்லை என்பது கலைஞருக்கு தெரியும் அவரால் முடிந்தததை செய்கிறார் ஆனால் ஆடு வெட்டுகிறவனை நம்புவதுபோல் பாமர மக்கள் ஜெயலலிதாவிடம் ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள்

  ©Template by Dicas Blogger.

TOPO