#navbar-iframe { height: 0px; visibility: hidden; display: none; }

Saturday, August 07, 2010

செல்போன்களில் வரும் தேவையற்ற அழைப்புகளை தடுக்க நடவடிக்கை : அமைச்சர் ஆ.ராசா உத்தரவு

புதுடெல்லி:


செல்போன்களில் வரும் தேவையற்ற அழைப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு தொலை தொடர்பு துறை செயலாளருக்கு மத்திய அமைச்சர் ஆ.ராசா உத்தரவிட்டுள்ளார்.

செல்போன்களை வைத்திருப்பவர்கள். முக்கியமான வேலையில் இருக்கும்போது இன்சூரன்ஸ் வேண்டுமா?, கார் வேண்டுமா?, நிலம் வாங்குகிறீர்களா? என யாராவது பேசி தொந்தரவு செய்கின்றனர். இதுபோல, எண்ணற்ற எஸ்.எம்.எஸ். தகவல்களும் வருவது வழக்கம். சதாரண மக்கள் அனைவரும் இதை சகித்துக் கொண்டுள்ளனர். ஆனால், மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கே அத்தகைய அனுபவம் ஏற்பட்டது.

விலைவாசி பிரச்சினையால் பாராளுமன்றம் முடங்கியதால் அது குறித்து எதிர்க்கட்சி தலைவர்களுடன் திங்கள்கிழமையன்று காலையில் விவாதித்துக் கொண்டு இருந்தார். அப்போது, அவருடைய செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசியவர், வீட்டு கடனுதவி வேண்டுமா? என கேட்டார். இதனால், பிரணாப் முகர்ஜி கடுமையாக ஆத்திரம் அடைந்தார். எனினும், `இப்போது முக்கிய கூட்டத்தில் இருக்கிறேன். வேண்டாம்' என தெரிவித்தார். அவருடைய கோபமான தோற்றத்தை பார்த்து மற்ற அரசியல் கட்சி தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நிதி அமைச்சரிடமே வீட்டுக் கடன் வேண்டுமா? என கேட்டது போலவே, மத்திய அமைச்சர் அம்பிகா சோனி, பாரதிய .ஜனதா கட்சியின் மூத்த தலைவர் வெங்கையா நாயுடு, பிஜு ஜனதா தளம் எம்.பி. கலிகேஷ், காங்கிரஸ் எம்.பி. ரஷீத் ஆல்வி என பல்வேறு கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் எம்.பி.க்களும் பாதிக்கப்பட்டதாக புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து, வேண்டாத தொலைபேசி அழைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு தொலைத் தொடர்பு செயலாளர் பி.ஜே.தாமசுக்கு மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.ராசா கடிதம் அனுப்பினார்.

அதில், ”உற்பத்திப் பொருட்கள் மற்றும் சேவைகள் போன்றவை டெலி மார்க்கெட்டிங் மூலமாக வழங்குவது, தற்போதைய காலகட்டத்தில் அதிகமாக இருக்கிறது. இதன் விளைவாக, தொலைபேசி வாடிக்கையாளர்களுக்கு தொந்தரவும், அசவுகரியமும் ஏற்படுகிறது. ஒவ்வொரு செல்போன் வாடிக்கையாளருக்கும் தேவையற்ற அழைப்புகள் வராமல் இருக்க தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் கண்காணித்து வருகிறது. எனினும், இத்தகைய தேவையற்ற அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ். தகவல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. எனவே, இது தொடர்பாக அவசர கூட்டத்தை கூட்டி, தேவையற்ற அழைப்புகளை உடனடியாக தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்”. - என்று அமைச்சர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

0 comments:

  ©Template by Dicas Blogger.

TOPO