#navbar-iframe { height: 0px; visibility: hidden; display: none; }

Thursday, April 08, 2010

செல்பேசிகள் மூலம் சுகாதாரம், கல்வி, வணிகச் சேவைகள் குறித்து ஆய்வு : அமைச்சர் ஆ.இராசா

புது தில்லி:

சுகாதாரம், கல்வி, வேளாண்மை, வணிகம் போன்ற பல்வேறு துறைகளில் பொது மக்களுக்கு மொபைல் போன்கள் மூலம் சிறப்பான சேவைகள் அளிப்பது குறித்து விரிவாக ஆராய வேண்டும் என்று மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் . இராசா கேட்டுக் கொண்டுள்ளார்.

புது தில்லியில் 7.4.2010 அன்று டிராய் எனப்படும் இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் சார்பில் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் நீடித்த முன்னேற்றத்திற்கு செல்பேசி பயன்பாடுகள் என்பது குறித்த தேசிய கருத்தரங்கு நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட அமைச்சர் ஆ.இராசா உரையாற்றுகையில், “நம்முடைய பொருளாதாரத்தின் விரைவான வளர்ச்சிக்கும் பல்வேறு துறைகளின் நவீனமயமாக்கலுக்கும் தொலைத் தொடர்புகள் ஒரு முக்கிய ஆதரவு சேவையாக உருவாகியுள்ளது. தகவல் மற்றும் தொலைத் தொடர்பு தொழில்நுட்ப வசதிகள் சிறந்த தகவல்கள் கிடைப்பதற்கு உதவுவதுடன் பொது மக்களின் சிறப்பான கல்விக்கும் சமூக இணைப்பு முன்னேற்றத்திற்கும் மேம்பட்ட வணிக வாய்ப்புகளுக்கும் உதவுகிறது. இன்றைக்கு இந்திய தொலைத் தொடர்பு இணைப்பானது உலகில் வேகமாக வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத் தொடர்பு தொழில்நுட்ப சந்தையில் இரண்டாவது பெரிய தொலைத் தொடர்பு இணைப்பாகத் திகழ்கிறது. இவ்வாண்டு பிப்ரவரி மாதம் வரை 60 கோடி தொலைபேசி சந்தாதாரர்கள் உள்ளனர். 2014-ஆம் ஆண்டில் இது 100 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரியில் மட்டும் 18 மில்லியன் சந்தாதாரர்கள் அதிகரித்துள்ளனர். கிராமப்புற பகுதிகளில் 32 சதவீத தொலைபேசிகள் உள்ளன’’ என்று குறிப்பிட்டார்.

”வெகு அண்மைக்காலம் வரை செல்பேசிகள் (மொபைல் போன்கள்) குரல் மற்றும் வார்த்தை செய்திகள் அனுப்புவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டன. ஆனால் தற்போது அடிப்படையான குரல் சேவைகளையும் தாண்டி இணையம் மற்றும் அகண்ட அலைவரிசை சேவைகளையும் அளிக்கக் கூடிய வகையில் உள்ளன. அகண்ட அலைவரிசை சேவையின் பரவல் நம்நாட்டில் குறைவாக உள்ளது. நிலையான கம்பிவட இணைப்புகளுக்கு மட்டுமே தற்போது அகண்ட அலைவரிசை அளிக்கப்படுகிறது. இந்த கம்பிவட இணைப்பு அகண்ட அலைவரிசை வழங்குவதற்கு உகந்ததாக இல்லை. 3ஜி அலைவரிசை தற்போது ஏலம் விடப்பட்டு இருப்பதால் சேவைகளை தனியார் நிறுவனங்களும் வழங்க முடியும். இந்த 3ஜி அலைவரிசை மூலம் கம்பிவடம் இல்லாத அகண்ட அலைவரிசை சேவைகளையும் வழங்க முடியும். இதன் மூலம் அதிகளவில் அகண்ட அலைவரிசை சேவை கிடைக்கும்’’ என்றும் அமைச்சர் ஆ.இராசா தெரிவித்தார்.

பல்வேறு சேவைகளை வழங்குவதில் மிக சக்தி வாய்ந்த ஒரு சாதனமாக செல்பேசிகளின் பயன்பாடு உருவாகி இருக்கிறது. இதன் பயனாக கணினி, தொலைக்காட்சி, திரையரங்கம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக நான்காவது திரையாக செல்பேசி உருவாகியிருக்கிறது.
அடிப்படையான தொலைத் தொடர்பு சேவைகள் மட்டுமின்றி செல்பேசி - ஆளுமை, செல்பேசி-வணிகம், செல்பேசி - கல்வி, செல்பேசி -வேளாண் , செல்பேசி - சுகாதாரம் போன்ற சமூக நன்மைக்கான மேம்பட்ட சேவைகளை செல்பேசிகள் மூலம் அளிக்க வேண்டிய அவசியத்தை இது உணர்த்துகிறது. செல்பேசிகளின் பயன்களை தொழில்நுட்ப முன்னேற்றங்கள் அதிகப்படுத்தியுள்ளன. கணினி செயல்பாடுகள், மென்பொருள், மல்டி மீடியா, விளையாட்டு மற்றும் இ படிப்பு போன்ற மேம்பட்ட வசதிகள் காரணமாக ஸ்மார்ட் செல்பேசிகள் அதிக அளவில் பிரபலமடைந்து வருகின்றன. 2015-ஆம் ஆண்டில் கப்பலில் அனுப்பப்படும் மூன்றில் ஒரு பங்கு செல்பேசிகள் ஸ்மார்ட் செல்பேசிகளாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது’’ என்றும் அவர் கூறினார்.

”தற்போது இந்தியாவில் சுமார் 80 முதல் 90 இலட்சம் ஸ்மார்ட் போன்கள் உள்ளன. இது வருங்காலத்தில் வேகமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வளர்ச்சி மற்றும் செல்பேசிகளின் பயன்பாட்டை அதிகப்படுத்த வேண்டிய தேவையுள்ளது. இந்தியாவில் பொழுது போக்கு, தகவல், விளம்பரம் மற்றும் சமூக இணைப்பு ஆகியவற்றுக்காக மட்டுமே தற்போது செல்பேசிகள் பயன்படுத்தப்படுகின்றன.
கட்டணங்களை கட்டுதல், தொடர்வண்டி பயணச்சீட்டு முன்பதிவு செய்தல், பணபரிமாற்றம் ஆசிய வணிக சேவைகளுக்கும் செல்பேசிகள் பயன்படுத்தப்படுகின்றன. செல்பேசிகளின் வணிக சேவை துறையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதும் இன்னும் அவை தொடக்க நிலையிலேயே உள்ளன. உருவாகி வரும் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பொது மக்களுக்கு சிறந்த முறையில் சேவை செய்வதில் அரசு அக்கறையுடன் உள்ளது. சுகாதாரம், கல்வி, வேலை வாய்ப்பு, காவல் துறை, செலுத்துதல், நீதி மற்றும் சட்ட சேவைகள் போன்றவை தொடர்பான பல்வேறு வகையான அரசு சேவைகளை செல்பேசிகள் மூலம் அளிக்க முடியும்’’ என்றும் அமைச்சர் ஆ.இராசா குறிப்பிட்டார்.

”கிராமப்புற மக்களில் பெரும்பாலோர் ஒரு வங்கிக் கணக்கைகூட வைத்திருக்கவில்லை என்பதை தேசிய மாதிரி ஆய்வு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அடிப்படையான நிதிச் சேவைகள் பெறுவதற்குகூட அவர்களுக்கு வசதியில்லை என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது. விவசாயக் குடும்பங்களில் 13 விழுக்காட்டினர் மட்டுமே வங்கிக் கடன்கள் பெறுகின்றனர். எல்லா கிராமப்புற பகுதிகளிலும் வங்கிக் கிளைகள் இல்லாததே இதற்கு அடிப்படை காரணமாகும். வங்கிகளுடன் தொடர்பு இல்லாதவர்களுக்கு செல்பேசி மூலம் வங்கிச் சேவை அளிப்பது பயனுடையதாக அமையும். செல்பேசி - வங்கிச் சேவைக்காக மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் துடிப்புடன் பணியாற்றி வருகிறது. இத்திட்டம் அடுத்த சில மாதங்களில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது’’ என்றும் அமைச்சர் கூறினார்.

”அண்மையில் அனைவருக்கும் கல்வி உரிமையை அரசு அறிமுகப்படுத்தியது. கிராமப்புற மற்றும் தொலை தூரப் பகுதிகளில் முறையான கல்வி நிறுவனங்கள் குறைவாக உள்ளன. அதற்கு செல்பேசி கல்வி முறை சிறப்பானதாக இருக்கும். இதே போல சுகாதாரச் சேவைகள், வேளாண் சேவைகள் போன்றவற்றையும் செல்பேசிகள் மூலம் சிறந்த முறையில் வழங்க முடியும். ஒவ்வொரு தனிநபருக்கும் தனிப்பட்ட முறையில் சேவைகளை வழங்குவதற்கு செல்பேசிகளின் பயன்பாடு குறித்து ஆராய்வதற்கான நேரம் தோன்றியுள்ளது. அந்த வகையில் செல்பேசிகளின் பயன்பாட்டு வளர்ச்சிக்கு நிறைய வாய்ப்புள்ளது. அத்திசையில் இந்த கருத்தரங்கம் ஒரு முக்கிய நடவடிக்கையாகும்’’ என்றும் அமைச்சர் ஆ.இராசா சுட்டிக்காட்டினார்.

0 comments:

  ©Template by Dicas Blogger.

TOPO