ஸ்பெக்ட்ரம் விசாரணைக்கு தயார்: அமைச்சர் ஆ.இராசா சவால்
ஸ்பெக்ட்ரம் ஏல ஒதுக்கீட்டில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை. இது குறித்த எந்தவித விசாரணைக்கும் தயாராக இருக்கிறேன் என்று நடுவண் தகவல் தொடர்பு மற்றும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.இராசா தில்லி மேல் சபையில் கூறினார்.
2008 ஆம் ஆண்டு 2 ஜி ஸ்பெக்ட்ரம் எனப்படும் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை அலைவரிசைகளை ஏலம் விட்டதில் 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு மத்திய அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இந்த நிலையில் 3 ஜி ஸ்பெக்ட்ரம் எனப்படும் மூன்றாம் தலைமுறை ஒளிக்கற்றை அலைவரிசைகள் தற்போது ஏலத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
இது குறித்து தில்லி மேல் சபையில் துணை மானிய கோரிக்கைக்கு பதில் அளித்து பேசிய மத்திய தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ஆ.இராசா கூறியதாவது:
2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக சி.பி.ஐ.யில் ஒரு வழக்கு இருப்பது எனக்குத் தெரியும். இது குறித்து எத்தகைய விசாரணையையும் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன். அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான அனைத்துக் கேள்விகளையும் எதிர்கொள்ளும் விதமாக அது குறித்த அனைத்து தகவல்களையும் தரத் தயாராக இருக்கிறோம். தற்போது 3 ஜி அலைக்கற்றை ஏலம் முழுவதும் வெளிப்படையான முறையில் நடத்தப்படுகிறது. இதனை மத்திய ஊழல் கமிஷனும், இதர அமைப்புகளும் கண்காணித்து வருகின்றன. 3 ஜி அலைக்கற்றை ஏல ஒதுக்கீடு பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்.லின் கொள்கை முடிவாகும். இந்த அலைக்கற்றைகளை ஏலம் விடுவதில் தாமதம் ஆனதற்கு காரணம் ரேடியோ அலைவரிசைகள் கிடைக்காததும், இவற்றில் எத்தனை பேருக்கு அனுமதி வழங்குவது என்பதில் நிலவிய கருத்து வேறுபாடுகளும்தான்.
3 ஜி அலைக்கற்றை ஏல ஒதுக்கீட்டுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் 2008 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் உருவாக்கப்பட்டு பின்பு அதே ஆண்டு செப்டம்பர் மாதம் சிறு திருத்தம் செய்யப்பட்டது. எனினும், 3 ஜி அலைக்கற்றைகளை பெறுவது, எத்தனை தொகுதிகளாக அவற்றை ஏலத்தில் விடுவது, மற்றும் முன் நிர்ணயவிலை ஆகியவை தொடர்பான சில பிரச்சினைகளால் ஏலம் விடுவதில் தாமதம் ஏற்பட்டது.
ஸ்பெக்ட்ரம் மூலம் அரசுக்கு ரூ. 45 ஆயிரம் கோடி கிடைக்கும்
கடந்த ஆண்டு 3 ஜி அலைக்கற்றை ஏலம் விடுவதை கவனித்துக் கொள்ள மத்திய அமைச்சர்கள் கொண்ட குழுவிற்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. இந்த அமைச்சர்கள் குழு சில தடவை சந்தித்த பின்பு, ஏலத்தை விடுவதற்கு முடிவு செய்தது. அதன்படி இந்த ஆண்டு ஏப்ரல் 9 -ஆம் தேதி முதல் 3 ஜி அலைக்கற்றை ஏலத்தில் விடப்பட்டு வருகிறது. இந்த ஏலத்தின் மூலம் 35 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும் என்று மத்திய அரசு முதலில் எதிர்பார்த்தது. ஆனால் இது 45 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டி விடும் என்று தற்போது மதிப்பிடப்பட்டு இருக்கிறது.
இவ்வாறு அமைச்சர் ஆ.இராசா, ஸ்பெக்ட்ரம் பற்றி தனது கருத்தை தெளிவாக எடுத்துரைத்தார்.
0 comments:
Post a Comment