அறிவு சமூகத்துக்கு பயன்பட வேண்டும் : பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் ஆ.இராசா பேச்சு
சென்னை அண்ணா பல்கலை கழகத்தில் செயல்பட்டுவரும் கிண்டி பொறியியல் கல்லூரி, சென்னை தொழில்நுட்பக் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, கட்டடக் கலை மற்றும் திட்டமிடும் கல்லூரி ஆகியவற்றில் 2009-ஆம் ஆண்டில் பயின்று தேர்ச்சி பெற்ற 124 தங்கப் பதக்க சாதனையாளர்கள் உட்பட 4151 மாணவர், மாணவியருக்கு பட்டமளிப்பு விழா மார்ச் 26ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு பல்கலைக் கழகத் துணைவேந்தர் மன்னர் ஜவகர் தலைமை ஏற்றார். மத்திய தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.இராசா முதன்மை விருந்தினராக பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டம் வழங்கி சிறப்புரையாற்றினார்.
அமைச்சர் ஆ.இராசா பேச்சு:
அண்ணா பல்கலைக் கழகத் துனைவேந்தர் மன்னர் ஜவகர் அவர்களே, பதிவாளர் அவர்களே, துறை தலைவர்களே, பட்டம் பெறும் மாணவர் கண்மணிகளே, பேராசிரியர்களே, பத்திரிகையாளர்களே உங்கள் அனைவருக்கும் வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துகொள்கிறேன்.
அண்ணா பெயரால் சிறப்பாக செயல்படும் இந்த மாதிரி பல்கலைக் கழகங்களில் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லையே என்ற ஏக்கமும், ஆசையும் என் மனத்தில் எப்போதும் இருக்கிறது. இங்கு உரையாற்றுகிற வாய்ப்பை பெற்றமைக்காக துணைவேந்தருக்கு நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.
பெரும்பாலான பட்டமளிப்பு விழாக்களில் பேசுகிறவர்கள் மாணவர்களுக்கு ஒளியூட்டுகிற கருத்துக்களை மட்டுமே பகிர்ந்துகொள்வார்கள். நானும் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் கருத்துக்களையோ, ஒளியூட்டுகிற கருத்துக்களையோ பேசி உரையை நிறைவு செய்ய விரும்பவில்லை.
பட்டமளிப்பு விழா ஒன்றில் அறிஞர் அண்ணா உரையாற்றுகையில், இளைஞர்களே சாதியை ஒழிக்க முன்வாருங்கள், அடக்கு முறைகளை ஒழிக்க முன்வாருங்கள். இவையெல்லாம் சகோதரத்துவத்திற்கும் சமத்துவத்துக்கும் எதிரானது என்று முழங்கினார். அண்ணாவின் பெயரால் செயல்படும் பல்கலைக் கழகம் என்பதால், அண்ணா கண்ட சமூகத்தை உருவாக்குவதற்கு தேவையான கருத்துக்களை உங்கள் முன் பகிர்ந்துகொள்ளலாமென எண்ணுகிறேன். அதே நேரத்தில் ஆங்கிலத்தில் உரையாற்றுவதை காட்டிலும், அனைவராலும் எளிதாக விளங்கிக் கொள்ள இயலும் என்பதால் தாய்மொழியான தமிழில் கருத்துக்களை பகிர்ந்துகொள்கிறேன்.
ஒரு படித்தவருக்கும், சிந்தனையாளருக்கும் வேறுபாடு இருக்கிறது. எல்லா படித்தவர்களும் சிந்தனையாளராக ஆக முடியாது. தான் கற்ற கல்வியை - அறிவை சமுதாயத்திற்காக பயன்படுத்துபவனே சிந்தனையாளன். மாணவர்கள் சிந்தனையாளர்களாக வர வேண்டும் என்று அண்ணா குரிப்பிட்டார். அண்ணா வழியில் வந்த இயக்கத்திற்கு தலைமையேற்று முதல்வர் கலைஞர் ஆட்சி செய்கிற இந்த காலக்கட்டத்தில் - மத்தியில் அமைச்சராக இருக்கும் நான், பாடத் திட்டங்கள் சொல்லும் கருத்துக்களே உரையாக இருக்க கூடாது என்று எண்ணுகிறேன்.
பருவ கால மற்றங்கள் பற்றி மத்திய அரசோ, பிற மாநில அரசுகளோ கண்டுகொள்ளாத நேரத்தில், நான் சுற்றுச் சூழல் அமைச்சராக இருந்தபோது பருவக் கால மாற்றத்திற்கென தனி துறை ஒன்றை இந்த பல்கலைக் கழகத்தில் கலைஞர் உருவாக்கினார்.
இப்போது பருவ நிலை மாற்றம் நம்மை அச்சத்தில் மூழ்கடிக்கிறது. நான் ஒரு கல்லூரியில் பேசும்போது சொன்னேன்: நான் பள்ளிக்கு போகிறபோது வழியெங்கும் இருக்கிற தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் குடிக்க முடியும். என் மகள் பள்ளிக்கு போகிறபோது தண்ணீர் பாட்டில் கொண்டு போகிறாள். எல்லா இடங்களில் இயல்பாக கிடைக்கிற தண்ணீர் அசுத்தமானதால் பாட்டிலில் தண்ணீர் கொண்டுபோகிற நிலை வந்திருக்கிறது. எனக்கு இருக்கிற கவலையெல்லாம், இன்று என் மகள் தண்ணீர் பாட்டிலை கொண்டுபோகிறாள். என் மகளின் பிள்ளை சுவாசிப்பதற்கான காற்றை சிலிண்டரில் அடைத்து கொண்டு செல்கிற காலம் வரும் என்று குறிப்பிட்டேன். எனவே இது போன்ற சமூக அக்கறையை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ள வேண்டும்.
1950 ஆம் ஆண்டில் இந்தியாவின் ஜி.டி.பி. உற்பத்தி 5 விழுக்காடு, அது இன்றைக்கு 8 விழுக்காடாக உயர்ந்திருக்கிறது. உலகமே பொருளாதார சரிவால் கதிகலங்கி போயிருக்கிற இந்த நேரத்திலும் கூட இந்தியா 7 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியில் இருக்கிறது. கட்டுமானத் துறையில் 47 விழுக்காடு உயர்ந்திருக்கிறது. தகவல் தொடர்பு துறையிலும் இந்தியா வளர்ந்திருக்கிறது.
நம் நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக் கழகங்களையும் 5 ஆண்டுகளில் ஒரு குடையின் கீழ் இணைக்கிற திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கிவிட்டுதான் இங்கு வந்திருக்கிறேன். நாம் அறிவியலில் உயர்ந்திருக்கிறோம், பொருளாதாரத்தில் உயர்ந்திருக்கிறோம், தொலைத் தொடர்பு துறையில் வளர்ந்திருக்கிறோம். இந்திய தொலைத் தொடர்பு துறை 1999ஆம் ஆண்டிலேயே 6 ஆயிரம் மில்லியன் இணைப்புகளை உருவாக்கி சாதனை படைத்திருக்கிறது. அத்துறை 2 ஆண்டுகளுக்கு முன்னரே தனது இலட்சியத்தை நிறைவேற்றியிருக்கிறது. ஆனாலும் நாம் செல்லும் இடம் வெகு தொலைவில் இருக்கிறது.
ஒரு மனிதனின் அறிவு சமூகத்திற்கும் நாட்டிற்கும் பயன்பட வேண்டும். இல்லையெனில் அவனை மனிதனென்று சொல்ல முடியாது. அவன் விலங்குக்கு சமம். காரணம், பகுத்தறிந்து எது நல்லதோ அதன்படி செயல்படுகிற ஆறாம் அறிவு மனிதகுலத்திற்கு மட்டுமே உரியது. விலங்குக்கு ஆறாம் அறிவு கிடையாது. இங்கு இருக்கிற இளைஞர்களில் எத்தனை பேருக்கு சமூக அக்கறை இருக்கிறது. பாடத் திட்டம் சிலுவை அல்ல, அதிலேயே அறைந்தபடி திரிய, பாடத் திட்டம் அலங்காரப் பொருளும் அல்ல, அதை சூட்டிக்கொள்ள, படிப்பு மட்டுமே வாழ்க்கையின் முற்றுப்புள்ளி அல்ல. அதை கடந்து சமூகம் பரந்து விரிந்திருக்கிறது.
புதிய அரசியல்வாதிகள் ஆட்சிக்கு வருகிறார்கள். முன்னேற்றங்கள் நடைபெறுகின்றன. அரசியல் மாற்றம் மட்டுமே சமூக மாற்றமா என்றால் இல்லைவே இல்லை. 1980ஆம் ஆண்டில் பிரதமராக இந்திராகாந்தி இருந்தபோது, இனி வறுமை இருக்காது என்று சொல்லி வறுமை ஒழிப்பு திட்டத்தை கொண்டுவந்தார். அதற்கு பிறகும் வறுமை ஒழிப்புக்கென பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அந்த திட்டங்களுக்கெல்லாம் எதிர் மறை விளைவு ஏற்பட்டது. பொருளாதார மாற்றம் என்பது மாற்றம்தான், ஆனால் அது நிரந்தர மாற்றமல்ல. சட்டத்தின் மூலம் மாற்றத்தை கொண்டுவர புதிய சட்டங்களை இயற்றுகிறோம். அச்சட்டங்களால் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அதே நேரத்தில் அவற்றால் பாதகங்களும் ஏற்பட்டிருக்கின்றன. சட்டங்களும் திட்டங்களும் சமூக வளர்ச்சிக்கு பயன்படுகிறவை என்றாலும் அவை மாறுதலுக்கு உட்பட்டவை. எனவே சமூக மாற்றத்திற்கு படிப்பை பயன்படுத்த வேண்டும். இதனை இளைஞர் சிந்திக்க வேண்டும்.
பெர்னாஷா சொன்னார்: சரித்திரத்தை கற்காதவன் சரித்திரத்தில் நிற்க முடியாது என்றார். நாமும் சரித்திரத்தை அறிந்து செயல்பட வேண்டும்.
இந்த உலகத்தில் நடக்கும் மாற்றங்கள் புதுமையானவை அல்ல. பழமையில் இருந்து சிறிது பிறழ்ந்து புதிய உருவாகிறது. இதனை நூறு ஆண்டுகளுக்கு முன்னர் நியூட்டன் சொன்னார். நான் பேசுகிற இந்த ஒலிபெருக்கி, ஒரு உலோகம் வெட்டப்பட்டதில் இருந்து உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த மேடை, மரங்கள் வெட்டப்பட்டதில் இருந்து உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த உலகமே ஐந்து பூதங்களால் ஆனது. இதை மாற்றவே இயலாது, பழயவை இல்லாமல் புதியதை சமைக்க முடியாது என்று பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியம் சொல்கிறது.
1866, 1882 ஆம் ஆண்டுகளில் டார்வின், மேண்டலின் ஆகிய இரண்டு அறிஞர்கள் சொன்னார்கள்: மனிதன் தானே தோன்றியவன் அல்ல, ஒரு பழைய உயிரில் இருந்து சில மாற்றங்கள் ஏற்பட்டு மனித உரு கிடைத்திருக்கிறது. இந்த உண்மையை மதங்கள் மறுக்கின்றன. உண்மைகளை கற்று பகுத்தறிவது மூலமே உணரலாம். அந்த வாய்ப்பும் மறுக்கப்பட்டது.
இந்தியாவின் பெரும் அறிஞர்களாக இருந்தவர்களெல்லாம் செய்த கொடுமை என்னவென்றால் மற்றவர்களை படிக்கவிடாமல் செய்து தற்குறிகளாக வைத்திருந்தார்கள் என்று அம்பேத்கர் அறைந்து சொன்னார்.
ஒன்றறிவதுவே உற்றறிவதுவே இரண்டறிவதுவே அவற்றொடு நாவே மூன்றறிவதுவ அவற்றொடு மூக்கே நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே ஆறறிவதுவே அவற்றொடு மனனே நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே
இவ்வுலகில் ஆறுவகை உயிர்கள் இருக்கின்றன. அதில், ஆறாம் அறிவு மனிதனை சிந்திக்க தூண்டுகிறது. இதனை தமிழுக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியர் பல நூறு ஆண்டுகளுக்கு முன் குறிப்பிட்டுள்ளார்.
நான் சட்டம் படித்தவன் ஆதலால் ஒன்றை சொல்கிறேன்: நீதிமன்ற சாட்சிய சட்டத்தில் நேரடி சாட்சி, ஆவண சாட்சி, வழக்க சாட்சி என்ற மூன்று வகை இருக்கிறது. அந்த மூன்று வகையில் ஓலையை சாட்சியாக கொண்டு வந்து திருமணத்தை நிறுத்தியதாக பெரிய புராணத்தில் இருக்கிறது. திராவிட இயக்கத்தில் இருக்கிறவர் பெரிய புராணத்தையும் கடவுளையும் மேற்கோள் காட்டி பேசுகிறேனே என்று எண்ணுகிறீர்கள். நாங்கள் கடவுள் இல்லை என்று சொல்லுகிறோம்; இந்த நாட்டை காப்பாற்ற கடவுள் இல்லையே என்ற வருத்தம் எங்களுக்கு உண்டு.
சேக்கிழாரின் பெரியபுராணத்தில் - திருத்தொண்ட புராணத்தில் - ‘தடுத்தாட கொண்ட புராணம்’ எனும் பகுதி உள்ளது. சுந்தரரின் திருமண நாளன்று ஊர் கூடியிருந்தது. ஆங்காங்கே அலங்காரங்கள், வாத்திய இசைகள் முழங்க மணமேடையில் வீற்றிருந்த அழகிய சுந்தரர், புரோகிதரின் மந்திரத்தைத் தொடர்ந்து மணமுடிக்க இருக்கும் தருவாயில் திருமணப் பந்தலுக்குள் ‘நிறுத்துங்கள்’ எனும் ஒலி அனைவரையும் ஆச்சர்யத்தில் திகழ்த்தியது. வயதான அந்தணக் கிழவன், நெற்றியில் திருநீறு பூசி, பூ நூல் அணிந்து இடது கையில் குடையுடன், மூங்கில் தண்டுடன் நிதானமாய் நடந்து வருகிறார். ஊர் மக்கள் ‘’ஐய நின் வரவு நல்வரவு ஆகுக’’ எனக் குரல் எழுப்பினர். வந்த கிழவனார் ஊர் மக்களிடம் முறையிட்டார். ‘’இந்த நாவல் ஊரன் எனக்கு அடிமை’’ என்று கூறி, அதற்குச் சுந்தரருடைய முன்னோர்கள் எழுதிக் கொடுத்த ஆவணத்தைச் சபையில் வைத்தார். ஆவண ஓலையைக் கண்ட சுந்தரர் பிடுங்கிக் கிழித்துப் போட, மீண்டும் மற்றொரு ஓலையைக் காட்டி சுந்தரர் தமக்கு அடிமை எனக் கூறித் திருமணத்தைத் தடுத்து சுந்தரரை அழைத்துக் கொண்டு திருவருட்துறைக் கோயிலை அடைந்து மறைந்தார். ஆக, ஆவண சாட்சி பற்றி பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட பெரிய புராணத்தில் இருக்கிறது.
சட்ட அறிவு, தொழில்நுட்ப அறிவு, கட்டடக் கலை அறிவு பெற்றிருந்த நாடு, இந்த நாடு. இதனை மாற்றங்களும், புதிய கல்வி மாற்றங்களும் உங்களை மறக்க வைத்திருக்கின்றன என்பதால் சொல்கிறேன். பட்டம் பெறுகிற நீங்கள், சமூக உணர்வு உள்ளவர்களாக மாறி, சமுதாயத்தில் நிலவும் கொடியவைகளை நீக்க வேண்டும். உங்களின் பட்டம் அண்டை வீட்டில் இருப்பவருக்காவது பயன்பட வேண்டும்.
தொலைதொடர்பு வளர்ச்சியால் உலகமே நெருக்கமாகிவிட்டது அண்டை வீடுகள் அந்நியமாகிவிட்டன
என்று ஒரு கவிஞர் சொன்னார். கூலி வேலை செய்து படிக்கவைத்த குடும்பத்தில் பிறந்த பிள்ளைகள், படித்து முடித்து அமெரிக்காவில் வேலை செய்கிறார்கள். சொந்த ஊரில் இருக்கிற தாய் - தந்தையரை கண்டுகொள்வதில்லை.
ஈ மெயிலில் நீ மேய்ந்திருக்கிற நேரத்தில் என் உடலில் ஈ மொய்த்த சேதி உனக்கு வரும். உன் மீது நம்பிக்கையில்லை தபால்காரர் மீது நம்பிக்கையில் இந்த கடிதத்தை எழுதுகிறேன்.
என்று அமெரிக்காவில் இருக்கிற மகனுக்கு ஒரு தந்தை கடிதம் எழுதியதாக இன்னொரு கவிஞர் எழுதினார்.
காதல் உள்ள இதயங்கள் இப்போது சுருங்கிவிட்டன. காதல் உணர்வு எல்லோருக்குமே தேவையானது. பால் உணர்வு மிருகங்களுக்கு போதும். பாச உணர்வு சகோதரர்களுக்கு போதும். பால் உணர்வும் பாச உணர்வும் சேரும் புள்ளியே காதல். ஆனால் இப்போது இளைஞர்கள் பலர் பால் உணர்வுடனே காதலிக்கிறார்கள். அதற்கு பெயர் காதல் அல்ல.
உன்னை பார்த்தபோது
முதல் ஆச்சரியம்
உன் வீட்டு நிலைக்கண்ணாடியை
பார்த்தபோது இரண்டாம் ஆச்சரியம்
உன் அழகில் உடையாமல் இருக்கிறதே..
இப்படி ஒரு இளைஞன் காதல் கவிதை எழுதுகிறான். கல்லூரி மாணவர்களுக்கு நடந்த கவிதை போட்டியில், ஒரு கல்லூரி மாணவி எழுதினார்:
என்னை
மானே என்றாய்..
மலரே என்று சொன்னாய்..
தேனே என்றாய்...
என்னை மனுசியாக
எப்போது பார்ப்பாய்..
என்று காதலனிடம் சொல்வதாக சிறப்பான எழுதினார். அந்தக் கவிதையில் பெண்களை இந்த சமூக வைத்திருக்கும் நிலையை சிந்திக்க தூண்டும் கருத்துக்களும், சமூக உணர்வு கருத்துக்களும் இருக்கின்றன.
நாம் செய்கிற ஒவ்வொரு செயலும் சக மனிதனுக்கும் சமூகத்துக்கும் பயன்பட வேண்டும். கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம் கிடைக்க வேண்டும். ஜனநாயகம் என்பது ஓட்டுக்களால் மட்டுமே உருவாக்கப்படுவது மட்டுமல்ல; மனிதனை உருவாக்கும் கூட்டு முயற்சி அது. சமூக அக்கறையுடன் இங்கிருந்து உங்கள் பயணம் தொடங்கட்டும்.
இந்த வாய்ப்பை அளித்த பல்கலைக் கழகத் துணைவேந்தர் உட்பட அனைவருக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்.
1 comments:
//என்னை
மானே என்றாய்..
மலரே என்று சொன்னாய்..
தேனே என்றாய்...
என்னை மனுசியாக
எப்போது பார்ப்பாய்..
என்று காதலனிடம் சொல்வதாக சிறப்பான எழுதினார். அந்தக் கவிதையில் பெண்களை இந்த சமூக வைத்திருக்கும் நிலையை சிந்திக்க தூண்டும் கருத்துக்களும், சமூக உணர்வு கருத்துக்களும் இருக்கின்றன.//
எண்ணற்ற எடுத்துக்காட்டுகளுடன் அனைவரையும் கவரும் விதத்தில் கருத்துகளை எடுத்துவைக்கும் அடுத்த தலைமுறையின் நம்பிக்கைக்குரிய கொள்கைப் பற்றாளர் ஆ.ராசா அவர்களின் உரைகளை தொடர்ந்தும் வெளியிட்டுவரும் இவ்விணையத்திற்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகள்!
Post a Comment