வறுமையை ஒழிக்க தொழிற்சாலைகள் வர ஒத்துழையுங்கள்: மத்திய அமைச்சர் ஆ.இராசா பேச்சு
ஜெயங்கொண்டம் பகுதியில் வறுமையை ஒழிக்க தொழிற்சாலைகள் வரவேண்டும். அதனால் மின்திட்டம் தொடங்குவதற்கு ஒத்துழைப்பு தாருங்கள் என்று மத்திய அமைச்சர் ஆ.இராசா, பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
அரியலூர் மாவட்டத் தி.மு.க. சார்பில் முதல்வர் கலைஞரின் 86-வது பிறந்தநாள் விழா, ஸ்டாலினை துணை முதல்வராக்கியதற்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் ஜெயங்கொண்டம் அண்ணாசிலை அருகே நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் தனசேகர் தலைமை ஏற்றார். மாவட்ட அவைத் தலைவர் ஆறுமுகம், பொருளாளர் முத்துக்குமரசாமி, பொன்பக்கிரி ஆகியோர் முன்னிலை ஏற்றனர். நகரச் செயலாளர் கருணாநிதி வரவேற்றார்.
இந்தப் பொதுக்கூட்டத்தில், மத்திய தகவல் தொலைதொடர்பு மற்றும் தொழிற்நுட்பத்துறை அமைச்சர் ஆ.இராசா கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது, ”அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம் மின்திட்டம் தொடங்குவதற்கு ஒத்துழைப்பு தாருங்கள். இதற்காக சார்பு நீதிமன்றங்கள் உத்தரவிடும் தொகை எவ்வளவாக இருந்தாலும், அத்தொகையை இந்த அரசு உரியவர்களுக்கு வழங்கும். ஒரு ஏக்கருக்கு ரூ.10 இலட்சம் கொடுக்க சொன்னாலும் கொடுக்கப்படும். அந்தத் தீர்ப்பை மீறி அரசு மேல்முறையீடு செய்யாமல், மின்திட்டப் பணியை முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஜெயங்கொண்டம் பகுதியில் வறுமையை ஒழிக்க தொழிற்சாலைகள் வரவேண்டும். அதற்கு ஒத்துழைப்பு தாருங்கள்” என்று கேட்டுக்கொண்டார்.
இக்கூட்டத்தில் தி.மு.க. சட்டத் திருத்தக்குழு உறுப்பினர் சிவசுப்பிரமணியன், சட்டப்பேரவை உறுப்பினர் சிவசங்கர், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சுபாஷ் சந்திரசேகரன், மாநிலப் பேச்சாளர் பெருநற்கிள்ளி, நகர்மன்றத் தலைவர் லதாகணேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
1 comments:
Dear sir,
Congratulation for your Victory and elected you by People to India.
You can do the Improvement especialy in Tamil Nadu.
Pls Improve in Tamil nadu, Tamil People and India.
Regds / Siddiq / Perambalur / Camp Dubai.
Post a Comment