ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முந்தைய முறையை நானும் செய்தேன் - பதவி விலகல் பேச்சு எழ வாய்ப்பே இல்லை : அமைச்சர் ஆ.இராசா விளக்கம்
புது தில்லி, அக்.28-
எனக்கு முந்தைய அமைச்சர்கள் எல்லோரும் பின்பற்றிய நடைமுறைகளைத்தான் நானும் செய்தேன். சட்ட விதிகள் மீறல் எதுவும் இல்லை. எனவே, இதில் பதவி விலகல் பேச்சு எழ வாய்ப்பே இல்லை என்று நடுவண் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.இராசா கூறியுள்ளார்.
நடுவண் அரசின் சோலிசிட்டர் ஜெனரல் தெளிவான ஒப்புதல் வழங்கிய பிறகு, பிரதமருடன் கலந்தாய்வு நடத்தி, தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரைகளுக்கு ஏற்பதான் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று நான் கூறி வருகிறேன். எனவே எவ்வித தெளிவின்மைக்கோ, விதி மீறல்களுக்கோ இடமில்லை. பா.ச.க. தலைமையிலான ஆட்சியினால் 1999-இல் கொண்டுவரப்பட்ட தொலைத் தொடர்புக் கொள்கையில் கூறப்பட்டுள்ள, முதலில் வருபவருக்கு முதலில் ஒதுக்கீடு என்ற நன்கு நிலைநாட்டப்பட்ட கொள்கை நடைமுறைதான் பின்பற்றப்பட்டுள்ளது என்று என்று அமைச்சர் இராசா செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.
இதே நடைமுறையைத்தான் எனக்கு முந்தைய அமைச்சர்கள் எல்லோரும் பின்பற்றி இருக்கிறார்கள். நானும் அதைத்தான் செய்தேன். எனவே பின்பற்றப்பட்ட சட்ட விதிகள் மற்றும் நடைமுறையைப் பொறுத்தவரையில் மீறல் எதுவும் இல்லை என்று ஆ.இராசா கூறினார்.
கூட்டணி அமைத்துக் கொண்டு செயல்படும் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களால் நீங்கள் பழிவாங்கப்படுகிறீர்களா என்ற வினாவுக்கு, “அதிக நிறுவனங்கள் இருக்கக் கூடாது என்று முதலில் கருதப்பட்டது. அதனால் தேக்கநிலையும், ஒருவகையான தொழில்நிறுவனக் கூட்டணிகளும் இருந்தன. தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) நெறிமுறைகளுக்கு ஏற்ப போட்டியைக் கொண்டு வர வேண்டும் என்று நான் விரும்பினேன். எனவே அந்தப் போட்டி சில கொந்தளிப்புகளை ஏற்படுத்தி இருக்கலாம். அது விசாரிக்கப்பட வேண்டும்” என்று இராசா விடை அளித்தார்
.
அவரது அமைச்சகத்தைத் தொடர்புபடுத்தி விசாரணைகள் நடந்து வரும் நிலையில், அவர் பதவி விலக வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை பற்றி கேட்டதற்கு, “பதவி விலகல் என்ற கேள்விக்கு எங்கே இடம் இருக்கிறது? அந்தக் கேள்வியே எழவில்லை. தொலைத் தொடர்புத் துறை அதிகாரிகள் ஏதும் நடைமுறைத் தவறுகள் செய்திருக்கிறார்களா என்பது புலனாய்வு அமைப்பின் முன்னால் இருக்கிறது. புலனாய்வு விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது நான் அதில் தலையிடவோ, விமர்சனம் செய்யவோ மாட்டேன் என்று அமைச்சர் ஆ.இராசா குறிப்பிட்டுள்ளார்.