ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை: ஆ. இராசா அறிவிப்பு
உதகமண்டலம், அக். 25-
இரண்டாம் தலைமுறை ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என்றும், இதற்காக பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை என்றும் நடுவண் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆ. இராசா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
உதகமண்டலத்தில் 24.10.2009 அன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யும் விசயத்தில் எனக்கு முன் மத்திய அமைச்சர்களாக இருந்தவர்களும், அதிகாரிகளும் வகுத்து வைத்துள்ள விதிமுறைகளைத்தான் நான் கடைப்பிடித்தேன். அந்த விதிமுறைகளை நான் மீறவில்லை. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் எந்த முறைகேடும் நடக்கவில்லை” என்று தெரிவித்தார்.
தொலைத்தொடர்பு அலுவலகங்களில் நடுவண் புலனாய்வுப்பிரிவினர் ஆய்வு நடத்தியதையடுத்து, நீங்கள் பதவி விலகுவீர்களா? என்று கேட்டபோது, “ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நான் எந்தத் தவறும் செய்யவில்லை. எனக்கு எதிராக சோதனை நடத்தப்பட்டதாக நடுவண் புலனாய்வுப் பிரிவோ அல்லது வேறு ஏதேனும் அமைப்புகளோ அறிவிக்கவில்லை. எனவே, நான் பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை” என்று ஆ. இராசா திட்டவட்டமாகக் கூறினார்.
ஸ்பெக்ட்ரம் ஊழக்குப் பொறுப்பேற்று நீங்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும் வலியுறுத்தி வருகின்றனவே என்று கேட்டபோது, “எதிர்க்கட்சிகளிடமிருந்து இதைத்தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும். தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் என்ற முறையில் நான் ஆற்றிய பணிகளை எதிர்க்கட்சிகள் பாராட்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா?” என்று இராசா எதிர்வினா எழுப்பினார்.
0 comments:
Post a Comment