#navbar-iframe { height: 0px; visibility: hidden; display: none; }

Monday, November 15, 2010

கலைஞர் விளக்கம்: ஆ.ராசா பதவி விலகல்

தி.மு.. தலைமைக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளரும், பிள்ளை பிராயத்தில் இருந்து தன்மான இயக்கத்தின் வழி பற்றி நடந்து வருபவரும், ந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, அண்ணல் அம்பேத்கர் போன்ற அரசியல் சமுதாய சீர்த்திருத்த தலைவர்கள் காட்டிய வழியில் தொடர்ந்து செல்பவரும், என் உள்ளம் கவர்ந்த தம்பிமார்களில் ஒருவராக விளங்கி வருபவரும்; பழைய திருச்சி மாவட்டம் - பெரம்பலூர்ப் பகுதியில் பட்டிக்காட்டுப் பொட்டலில் பூத்து குலுங்கிவரும் புரட்சியாளருமான அருமைத் தம்பி இராசா அவர்கள் - தன்னை வெற்றி பெற வைத்த தொகுதி மக்களுக்கும், அந்த வாய்ப்பை வழங்கிய தலைமைக் கழகத்திற்கும் என்றேன்றும் நம்பிக்கைக்குரியவராகவும்; ஏற்றுக் கொண்ட பணியில் நேர்மை, நியாயம், கடமையுணர்வு ஆகியவற்றை தொடர்ந்து கடைப்பிடித்து; “தலித்” இனத்தின் தகத்தகாய கதிரவனாகவும் விளங்குபர் என்பதை இந்த நாட்டு மக்கள் அனைவரும் தெளிவாக அறிவார்கள்.


அவரை மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலக்க வேண்டுமென்று திட்டமிட்ட முயற்சி பல நாட்களாக நடைபெற்று; ஜனநாயகக் கூடங்களில் சந்தைக் கடை இரைச்சல் மேலிடவும்; நாட்டு மக்களுடைய பிரச்சினைகளை விவாதித்திடவும், அணுகிடவும் முடியாத அளவிற்கு ஜனநாயக மன்றங்களின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்திடவுமான செயல்கள் தொடர்ந்து ஓராண்டுக் காலமாக நிகழ்த்தப் பெற்று வருகின்றன.

அவர் மீது என்ன பழி சுமத்தப்படுகிறது என்று பார்த்தால்; 1999 முதல் மத்தியில் உள்ள தகவல் தொழில்நுட்பத் துறை 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை எந்த முறையை கையாண்டு அளித்து வந்ததோ. அதே முறையைத்தான் தம்பி இராசா பின்பற்றினார் என்றெல்லாம் அளிக்கப்பட்ட விளக்கங்கள் எதையும் ஏற்றுக் கொள்ளாமல், அவர் இராஜினாமா செய்தே தீர வேண்டும் என்றும் பிடிவாதம் செய்து - நாடாளுமன்ற அவைகளையே நடக்க விடாமல் செய்து வருகிறார்கள். எல்லோராலும் நடத்தப்படுகிற குழப்பம் அல்ல; குழப்பத்தை உருவாக்க பலர் தேவையில்லை; சிலரே போதும்; அந்தச் சிலரால் இன்று இந்தியாவில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் நிர்வாகத்தையும், பாராளுமன்ற நடவடிக்கைகளையும் தடைப்படுத்துவதன் மூலம் முழுவதும் ஸ்தம்பித்துப் போகக் கூடிய சூழலை உருவாக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.

இந்தியாவில் பாராளுமன்ற ஜனநாயகத்தை - அதன் மாண்பை, அதன் நடுநிலையைத் தழைத்திடச் செய்யவும், தக்க வைத்திடவுமான பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது. பேரறிஞர் அண்ணா அவர்கள் அந்த ஜனநாயக நெறியிலேயேதான் நம்மையெல்லாம் வளர்த்து ஆளாக்கியிருக்கிறார். அந்த நெறிக்கே விபத்து ஏற்படும்போது, அந்த விபத்திலேயிருந்து இந்திய ஜனநாயகத்தை, குறிப்பாக, பாராளுமன்ற ஜனநாயகத்தை பாதுகாக்கும் பொறுப்பு நமக்கிருகிறது.

அதனை நிலைநாட்டிடும் வகையில் பாராளுமன்ற உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் இருக்கின்ற தம்பி ஆ.இராசா அவர்கள்; அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்வதென்று முடிவெடுத்து அவருக்கும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இன்றிரவே (14.11.2010) தனது அமைச்சர் பதவி விலகல் கடிதத்தை இந்திய பிரதமரிடத்திலே தம்பி இராசா அவர்கள் வழங்கிடுவார் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.


0 comments:

  ©Template by Dicas Blogger.

TOPO