கலைஞர் ஆட்சியில்தான் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை: அமைச்சர் ஆ.இராசா பேச்சு
ஊட்டி அண்ணா கலையரங்கில் நடந்த உள்ளாட்சி தின விழாவில் நல திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு மத்திய அமைச்சர் ஆ.இராசா வழங்கினார். மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் உட்பட பலர் கலந்துகொண்டனர்
===================================================================
ஊட்டி:
ஊட்டி அண்ணா கலையரங்கில் உள்ளாட்சி தின விழா மற்றும் நகராட்சி பூங்காக்கள் திறப்பு விழா நடந்தது.
உள்ளாட்சி அமைப்புகள், மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்களுக்கு ரூ.1 கோடியே 12 இலட்சத்து 32 ஆயிரத்து 623 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசிய மத்திய அமைச்சர் ஆ.இராசா, தமிழகம் சிறந்த முதல்வரை பெற்றுள்ளது. இந்தியாவில் முதல் முறையாக கடந்த 1989ம் ஆண்டில் தான் சுய உதவிக்குழு தொடங்கப்பட்டது. கலைஞர் ஆட்சியில்தான் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்கப்பட்டது. சுய உதவிக்குழுக்கள் மூலம் பெண்களுக்கு சுழல்நிதி மற்றும் வங்கி கடன் உதவி வழங்கி பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டு வருகின்றனர் என்று தெரிவித்தார்.
கடந்த 2006ம் ஆண்டு தேர்தலின் போது கலைஞர் தனது வாக்குறுதியில் தெரிவித்ததை விட பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்துவிட்டார். குறிப்பாக கலைஞர் காப்பீடு திட்டம், கலைஞர் வீட்டு வசதி திட்டம், ரூ.1க்கு அரிசி மற்றும் இலவச கலர் டிவி போன்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். கலைஞர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் தகரம் மற்றும் பிளாஸ்டிக் வேய்ந்த குடிசை வீடுகள் கான்கிரிட் வீடுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் ஊட்டியில் மின் மயானம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து தமிழகத்தின் முன்னோடி மாவட்டமாக திகழ என்றும் உறுதுணையாக இருப்பேன் என்றார்.
விழாவில் விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் தலைமை வகித்து பேசினார். நகராட்சி ஆணையாளர் இராமமூர்த்தி வரவேற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் குப்புசாமி, முன்னாள் அரசு கொறடா முபாரக், எம்.எல்.ஏ.க்கள் சவுந்திரபாண்டியன், கோபாலன், துணை தலைவர் ரவிக்குமார், மாவட்ட வேளாண் விற்பனை குழு தலைவர் இளங்கோ, மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் முஸ்தபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
Post a Comment