#navbar-iframe { height: 0px; visibility: hidden; display: none; }

Thursday, November 05, 2009

ஊரகப் பகுதிகளில் 100 பேரில் 40 பேருக்கு தொலைத் தொடர்பு சேவை : அமைச்சர் ஆ. இராசா தகவல்

மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ. இராசா புது தில்லியில் தொலைத் தொடர்பு 2009 என்ற கண்காட்சிக்கு முன்னோட்டமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.
......................................................................................................................................................................

புது தில்லி:

ஐந்தாண்டுகளில் ஊரகப் பகுதிகளில் 100 பேரில் 40 பேருக்கு தொலைத் தொடர்பு சேவைகள் என்ற 40 சதவிகித ஊரக தொலை அடர்த்திநிலை எட்டப்படும் என்று மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ. இராசா கூறியுள்ளார்.

புது தில்லியில் இந்திய தொலைத் தொடர்பு 2009 என்ற கண்காட்சிக்கு முன்னோட்டமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் ஆ. இராசா பேசியதாவது :

உள்ளடக்கிய வளர்ச்சிக்கு தொலைத் தொடர்பு என்ற கருத்து சரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. தொலை தூரத்தில் உள்ள ஊரகப் பகுதிகளிலும் தொலைத் தொடர்பு சேவைகளை விரிவாக்கம் செய்ய வேண்டிய அவசரத் தேவையை இந்த கருத்தரங்கு எடுத்துரைக்கிறது.

இந்திய தொலை தொடர்புத் துறையின் வளர்ச்சி தடையின்றி வளர்ந்து வருகிறது. சுமார் மூன்றாண்டுகளுக்கு முன்பு 2010-ஆம் ஆண்டு வாக்கில் 50 கோடி இணைப்புகளை எட்ட திட்டமிடப்பட்டது. அரசாங்கத்தின் சாதகமான கொள்கைகளால் இவ்வாண்டு செப்டம்பர் மாதத்திலேயே 50 கோடி இணைப்புகளையும் தாண்டிவிட்டோம். அத்துடன் ஒட்டுமொத்த தொலைத் தொடர்பு அடர்த்தியும் 44 சதவிகிதத்தை அடைந்துள்ளது. குறிப்பிட்ட கால வரையறைக்கு முன்பாகவே இந்த வளர்ச்சியை அரசாங்கத்துடன் கைகோர்த்து எட்டிய தொலைத் தொடர்பு நிறுவனங்களை நான் பாராட்டுகிறேன்.

அரசு மற்றும் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் தொடர் முயற்சிகளின் காரணமாக ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளிலிருந்த ஏற்றத் தாழ்வு விகிதம் குறுகிய காலத்திலேயே 1:10 என்ற விகிதத்தில் இருந்து 1:5 என்ற விகிதத்தில் குறைந்துள்ளது. அத்துடன் ஊரகப் பகுதிகளில் தொலைத் தொடர்பு அடர்த்தி விகிதமும் 4.5 சதவிகிதத்திலிருந்து 19 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. தனியார் துறையும் ஊரகப் பகுதிகளில் தொலைத் தொடர்பை ஏற்படுத்துவதில் பங்களித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களுடைய தொடர் பங்கேற்பு 2014-ஆம் ஆண்டுக்குள் ஊரக தொலைத் தொடர்பு அடர்த்தியை 40 சதவிகிதமாக எட்ட வேண்டும் என்ற அரசின் இலக்கை அடைய உதவும்.
குறைந்த விலையில் சாதாரண மக்களுக்கும் உலகத் தரத்திலான தொலைத் தொடர்பு வசதிகளை வழங்குவதை உறுதிப்படுத்துவது நம்முடைய தொலைத் தொடர்பு கொள்கையாகும். அந்த வகையில் இந்தியாவின் எந்த பகுதியில் இருந்தும் பேசுவதற்கு ஒரு நிமிடத்திற்கு 50 பைசா கட்டணத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை மேலும் குறைப்பதற்கு புதிய செல்போன் நிறுவனங்கள் அறிமுகம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. இவை நடைமுறைப்படுத்தப்படும் போது கடும் போட்டி காரணமாக தற்போதைய ஒரு நிமிட கட்டணத் திட்டம் மேலும் கணிசமாக குறையும்.

இந்தியாவானது நம்முடைய முன்னோர்கள் காலத்தில் இருந்து அறிவு நாடாக கருதப்படுகிறது. இன்டர்நெட் மற்றும் அகண்ட அலைவரிசை ஆகியவை காரணமாக அறிவுத் துறையில் தற்போது ஒட்டுமொத்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் அகண்ட அலைவரிசையைப் பரப்புகின்ற முயற்சியாக 2010-ஆம் ஆண்டுக்குள் இரண்டு கோடி இணைப்புகள் என்ற நம்முடைய இலக்கில் இதுவரை 70 லட்சம் இணைப்புகள் என்ற இலக்கு எட்டப்பட்டுள்ளது.
தற்போது 3ஜி எனப்படும் மூன்றாம் தலைமுறை ஸ்பெக்ட்ரம் மற்றும் பிடபுள்யூ சேவைகளை ஏலம் விடும் நிலையை எட்டியுள்ளோம். ஸ்பெக்ட்ரம் ஏலம் விடும் நடைமுறை தொடங்கப்பட்டு 2010-ம் ஆண்டு பிப்ரவரிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

செல்போன்களில் சாதாரண மனிதனும் அதிக வேகத்தில் தகவல்களை படியிறக்கம் செய்தல், பிராண்ட் பேண்ட் இணைப்பு பெறுதல், ஆடியோ மற்றும் வீடியோ வசதிகளை பெறுதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெறுவதற்கு இந்த 3ஜி ஸ்பெக்ட்ரம் மற்றும் பிடபுள்யூஏ சேவைகள் உதவும்.
தற்போது ஊரகப் பகுதிகளில் அகண்ட அலைவரிசை நெட்வொர்க்கை அமைப்பதில் உள்ள சிக்கல்கள், தனிநபர் கம்ப்யூட்டர் உள்ளிட்ட வாடிக்கையாளர் வளாக சாதனத்தின் அதிக விலை, வழிக்கான உரிமைத் தொடர்பான பிரச்சனைகள், மோசமான மின்சப்ளை ஆகியவற்றில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு காணவும் இந்த 3ஜி ஸ்பெக்ட்ரம் மற்றும் பிடபுள்யூஏ சேவைகள் உதவும்.

பொது மற்றும் தனியார் பங்களிப்பில் இரண்டாண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட ஏழு தொலைத் தொடர்பு சீர்மிகு மையங்கள் மற்றும் ஒருங்கிணைப்பு மையம் ஆகியவை நன்றாக செயல்பட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்திய தொலைத் தொடர்புத் துறையின் கண்காண்காட்சியானது இந்தியா மட்டுமின்றி உலகளவிலும் முக்கிய தொலைத் தொடர்பு நிகழ்ச்சியாகியுள்ளது. இதில் பங்கேற்பாளர்கள் மற்றும் மாநாடுகள் என்ற அம்சங்களின் அடிப்படையில் பெரிய அளவில் வளர்ச்சி ஏற்பட்டிருப்பதாக அறிய வருகிறேன். இந்திய சந்தையின் ஆற்றல்கள் மற்றும் இந்திய செல்போன் நிறுவனங்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துதல் ஆகியவற்றுக்கு இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு பங்கேற்பாளர்களை நான் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் ஆ. இராசா பேசினார்.

நிகழ்ச்சியில் மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் சச்சின் பைலட், தொலைத் தொடர்புத் துறை செயலாளர் பி. ஜே. தாமஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Read more...

தேசிய மின் ஆளுமைத் திட்டத்தின் கீழ் அனைத்து ஊராட்சிகளிலும் பொது சேவை மையங்கள் நிறுவப்படும் : அமைச்சர் ஆ. இராசா தகவல்


புது தில்லியில் 27.10.2009 தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்களின் மாநாட்டை துவக்கி வைத்து மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ. இராசா உரையாற்றினார்.

............................................................................................................................................................
புது தில்லி:

தேசிய மின் ஆளுமைத் திட்டத்தின் கீழ் அனைத்து ஊராட்சிகளிலும் பொது சேவை மையங்கள் நிறுவ மேலும் கூடுதலாக 1.50 இலட்சம் பொது சேவை மையங்கள் அமைக்க தகவல் தொழில்நுட்பத் துறை திட்டம் தயாரித்திருப்பதாக மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ. இராசா தெரிவித்துள்ளார்.

புது தில்லியில் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்களின் மாநாட்டில் அமைச்சர் ஆ. இராசா உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது :

இந்தப் பொது சேவை மையங்கள் பாரத் நிர்மாண் திட்டத்தின் கீழ் சேவைகளை அளிக்கும். அத்துடன் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம், சர்வ சிக்ஷா அபியான் எனப்படும் அனைவருக்கும் கல்வித் திட்டம், தேசிய ஊரக சுகாதார திட்டம் முதலிய முக்கியத் திட்டங்களுக்கும் இம்மையங்கள் ஒத்துழைப்பு நல்கும்.

வர்த்தக விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் வர்த்தக நிறுவனங்கள் ரிட்டர்ன்களை பதிவு செய்தல், தாக்கல் செய்தல் தொடர்பான சேவைகள், வருமான வரி ரிட்டர்ன்கள் மற்றும் வருமான வரித் துறையின் திரும்ப வழங்குதல்கள், 28 தேசிய வங்கிகள் மூலமாக நேரடி மற்றும் மறைமுக வரிகளை ஆன்லைனில் செலுத்துதல், ஓய்வூதியதாரர்களின் இணையதளம் மூலமாக ஓய்வூதியதாரர்களுக்கு ஆன்லைன் சேவைகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பொது சேவைகள் தற்போது ஆன்லைனில் உள்ளன. இந்த தேசிய சேவைகளுடன் சேர்த்து கணினிமயமாக்கப்பட்ட உரிமைகள் பதிவேட்டை வழங்குவதற்கு நிலப் பதிவேடுகளையும் சொத்துக்கள் பதிவு செய்தலையும் மற்றும் பேப்பர் அடிப்படையிலான ஓட்டுனர் உரிமங்களை ஸ்மார்ட் கார்டுகளாகவும் பல்வேறு மாநிலங்கள் கணினிமயமாக்கியுள்ளன. இந்த நடவடிக்கைகள் சாதாரண மனிதனுக்கு அதிலும் குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு கணிசமான அளவில் நிவாரணம் கொண்டு வந்துள்ளது.

இந்த பொது சேவை மையங்களை நிறுவுதல் மற்றும் இணைப்பு கொடுப்பதில் உள்ள சிக்கலை தீர்த்தல் ஆகியவற்றில் திட்டங்களின் பயன்களைப் பெறுவதற்கு சாதாரண மனிதனுக்கு அதிகாரம் வழங்க வேண்டியுள்ளது. அனைவருக்கும் தொழில்நுட்ப பயன்பாடு கிடைக்கும் வகையில் மத்திய அரசானது பாரத் செயல்பாட்டு முறை தீர்வுகள் (பிஓஎஸ்எஸ்) என்று பெயரிடப்பட்ட இந்திய தேவைகள் மற்றும் இந்திய மொழி உதவியோடு கூடிய ஜிஎன்யூ-லைனக்ஸ் உள்ளூர் டெஸ்க்டாப் விநியோகத்தை கொண்டு வந்துள்ளது. இது மின் ஆளுமை மற்றும் ஆன்லைன் கல்வியின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் அரசும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய தேவையுள்ளது. இந்த முயற்சியில் விரைவான அமலாக்கத்தை உறுதி செய்ய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்களிப்பு மிகவும் அவசியமாகும். பொதுச் சேவைகளை வழங்குவதில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு வாய்ப்பளிப்பதற்காக தேவையான சட்ட வழிமுறைகள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன. 2008-ஆம் ஆண்டின் தகவல் தொழில்நுட்ப (திருத்தம்) சட்டமானது மின்னாளுமையை விரைவாகவும் சிறப்பாகவும் செய்வதற்கான திட்டங்களை செயல்படுத்துவதில் பொது மற்றும் தனியார் பங்களிப்பை சிறந்த முறையில் உறுதி செய்கிறது. இதன் பயனாக மின்னாளுமைத் திட்டங்களை தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நடைமுறைப்படுத்துவது பலமடங்கு அதிகரித்துள்ளது. எம்சிஏ 21, பாஸ்போர்ட் மற்றும் பொது சேவை மையங்கள் ஆகியவை பொது சேவைகளை வழங்குவதில் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்களிப்புக்கு சிறந்த உதாரணங்களாகும். இவ்வாறு அமைச்சர் ஆ.இராசா பேசினார்.

Read more...

Wednesday, October 28, 2009

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முந்தைய முறையை நானும் செய்தேன் - பதவி விலகல் பேச்சு எழ வாய்ப்பே இல்லை : அமைச்சர் ஆ.இராசா விளக்கம்


புது தில்லி, அக்.28-
எனக்கு முந்தைய அமைச்சர்கள் எல்லோரும் பின்பற்றிய நடைமுறைகளைத்தான் நானும் செய்தேன். சட்ட விதிகள் மீறல் எதுவும் இல்லை. எனவே, இதில் பதவி விலகல் பேச்சு எழ வாய்ப்பே இல்லை என்று நடுவண் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.இராசா கூறியுள்ளார்.

நடுவண் அரசின் சோலிசிட்டர் ஜெனரல் தெளிவான ஒப்புதல் வழங்கிய பிறகு, பிரதமருடன் கலந்தாய்வு நடத்தி, தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரைகளுக்கு ஏற்பதான் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று நான் கூறி வருகிறேன். எனவே எவ்வித தெளிவின்மைக்கோ, விதி மீறல்களுக்கோ இடமில்லை. பா.ச.க. தலைமையிலான ஆட்சியினால் 1999-இல் கொண்டுவரப்பட்ட தொலைத் தொடர்புக் கொள்கையில் கூறப்பட்டுள்ள, முதலில் வருபவருக்கு முதலில் ஒதுக்கீடு என்ற நன்கு நிலைநாட்டப்பட்ட கொள்கை நடைமுறைதான் பின்பற்றப்பட்டுள்ளது என்று என்று அமைச்சர் இராசா செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.

இதே நடைமுறையைத்தான் எனக்கு முந்தைய அமைச்சர்கள் எல்லோரும் பின்பற்றி இருக்கிறார்கள். நானும் அதைத்தான் செய்தேன். எனவே பின்பற்றப்பட்ட சட்ட விதிகள் மற்றும் நடைமுறையைப் பொறுத்தவரையில் மீறல் எதுவும் இல்லை என்று ஆ.இராசா கூறினார்.

கூட்டணி அமைத்துக் கொண்டு செயல்படும் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களால் நீங்கள் பழிவாங்கப்படுகிறீர்களா என்ற வினாவுக்கு, “அதிக நிறுவனங்கள் இருக்கக் கூடாது என்று முதலில் கருதப்பட்டது. அதனால் தேக்கநிலையும், ஒருவகையான தொழில்நிறுவனக் கூட்டணிகளும் இருந்தன. தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) நெறிமுறைகளுக்கு ஏற்ப போட்டியைக் கொண்டு வர வேண்டும் என்று நான் விரும்பினேன். எனவே அந்தப் போட்டி சில கொந்தளிப்புகளை ஏற்படுத்தி இருக்கலாம். அது விசாரிக்கப்பட வேண்டும்” என்று இராசா விடை அளித்தார்
.
அவரது அமைச்சகத்தைத் தொடர்புபடுத்தி விசாரணைகள் நடந்து வரும் நிலையில், அவர் பதவி விலக வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை பற்றி கேட்டதற்கு, “பதவி விலகல் என்ற கேள்விக்கு எங்கே இடம் இருக்கிறது? அந்தக் கேள்வியே எழவில்லை. தொலைத் தொடர்புத் துறை அதிகாரிகள் ஏதும் நடைமுறைத் தவறுகள் செய்திருக்கிறார்களா என்பது புலனாய்வு அமைப்பின் முன்னால் இருக்கிறது. புலனாய்வு விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது நான் அதில் தலையிடவோ, விமர்சனம் செய்யவோ மாட்டேன் என்று அமைச்சர் ஆ.இராசா குறிப்பிட்டுள்ளார்.

Read more...

Tuesday, October 27, 2009

அமைச்சர் ஆ.இராசாவுடன் தென் கொரிய குழு சந்திப்பு


மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ. இராசாவை புது தில்லியில் தென் கொரிய குடியரசின் அதிபருக்கு ஆலோசனைகள் வழங்கக்கூடிய அமைப்பான எதிர்காலம் மற்றும் தொலைநோக்கு குறித்த அதிபர் கவுன்சிலின் தலைவர் டாக்டர் வாக் செங்-ஜன் சந்தித்துப் பேசினார்.
.........................................................................................................


புது தில்லி,
தகவல் தொழில்நுட்பத் துறையில் கூட்டுறவுக்கான வாய்ப்புகளை ஆராய்வதற்காக டாக்டர் வாக் செங்-ஜன் தலைமையிலான ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட தென் கொரிய குழுவினர் மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ. இராசாவை புது தில்லியில் சந்தித்துப் பேசினார்கள்.

தென் கொரிய குடியரசின் அதிபருக்கு ஆலோசனைகள் வழங்கக்கூடிய அமைப்பான எதிர்காலம் மற்றும் தொலைநோக்கு குறித்த அதிபர் கவுன்சிலின் தலைவர் டாக்டர் வாக் என்பது குறிப்பிடத்தக்கது. மின்னணு ஆளுமை, சைபர் பாதுகாப்பு, தகவல் தொழில்நுட்பத் துறையில் உள்ள மனிதவள மேம்பாடு, தகவல் தொழில்நுட்ப வன்பொருள் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இரு தரப்பினரும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

தகவல் தொழில்நுட்பத் துறை கூட்டுறவுக்காக இந்தியாவிற்கும் தென் கொரியாவிற்கும் இடையே 2001-ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் 2006-வுடன் முடிவடைந்து விட்டது. தகவல் மற்றும் தொலைத் தொடர்புத் துறையில் உள்ள ஆற்றல்களை பயன்படுத்திக் கொள்ள இந்த ஒப்பந்தத்தை மீண்டும் புதுப்பிக்க இருநாடுகளும் விரும்புகின்றன. அதற்கு ஏற்ற வகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

Read more...

எம்டிஎன்எல் நிறுவனம் ரூ.35.43 கோடி பங்கு ஈவுத் தொகை, மத்திய அமைச்சர் இராசாவிடம் வழங்கியது

புது தில்லி,

போட்டி சூழல் இருந்த போதிலும் மற்ற நிறுவனங்களைக் காட்டிலும் எம்டிஎன்எல் நிறுவனம் முந்தி நிற்க வேண்டும் என்று மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ. இராசா தெரிவித்துள்ளார். எம்டிஎன்எல் நிறுவனம் தனது சமூக கடமைகளை ஆற்றுவதற்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.

புது தில்லியில் எம்டிஎன்எல் வழங்கிய ரூ.35,43,72,740 தொகை பங்கு ஈவுத் தொகைக்கான காசோலை வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் கலந்து கொண்டு பேசினார். 25.09.2009 அன்று நடைபெற்ற எம்டிஎன்எல் நிறுவனத்தின் 23-வது ஆண்டு பேரவைக் கூட்டத்தில் ரூ.63 கோடி ஈவுத் தொகை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த ரூ.63 கோடியில் ரூ.35.43 கோடி இந்திய அரசுக்கு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பங்கு ஈவுத் தொகைக்கான காசோலையை வழங்கிய எம்டிஎன்எல் தலைவர் ஆர் எஸ் பி சின்கா, கடந்த ஆண்டு எம்டிஎன்எல் நிறுவனம் 40 சதவிகிதம் ஈவுத் தொகை அளித்தாகவும் தற்போது சம்பள உயர்வு போன்றவற்றால் செலவுகள் உயர்ந்ததால் பங்கு ஈவுத் தொகையை குறைத்து கொள்ள நேரிட்டதாகவும் தெரிவித்தார்.

Read more...

Sunday, October 25, 2009

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை: ஆ. இராசா அறிவிப்பு


உதகமண்டலம், அக். 25-

இரண்டாம் தலைமுறை ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என்றும், இதற்காக பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை என்றும் நடுவண் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆ. இராசா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

உதகமண்டலத்தில் 24.10.2009 அன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யும் விசயத்தில் எனக்கு முன் மத்திய அமைச்சர்களாக இருந்தவர்களும், அதிகாரிகளும் வகுத்து வைத்துள்ள விதிமுறைகளைத்தான் நான் கடைப்பிடித்தேன். அந்த விதிமுறைகளை நான் மீறவில்லை. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் எந்த முறைகேடும் நடக்கவில்லை” என்று தெரிவித்தார்.

தொலைத்தொடர்பு அலுவலகங்களில் நடுவண் புலனாய்வுப்பிரிவினர் ஆய்வு நடத்தியதையடுத்து, நீங்கள் பதவி விலகுவீர்களா? என்று கேட்டபோது, “ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நான் எந்தத் தவறும் செய்யவில்லை. எனக்கு எதிராக சோதனை நடத்தப்பட்டதாக நடுவண் புலனாய்வுப் பிரிவோ அல்லது வேறு ஏதேனும் அமைப்புகளோ அறிவிக்கவில்லை. எனவே, நான் பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை” என்று ஆ. இராசா திட்டவட்டமாகக் கூறினார்.

ஸ்பெக்ட்ரம் ஊழக்குப் பொறுப்பேற்று நீங்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும் வலியுறுத்தி வருகின்றனவே என்று கேட்டபோது, “எதிர்க்கட்சிகளிடமிருந்து இதைத்தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும். தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் என்ற முறையில் நான் ஆற்றிய பணிகளை எதிர்க்கட்சிகள் பாராட்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா?” என்று இராசா எதிர்வினா எழுப்பினார்.

Read more...

25 பைசாவில் போன் பேச வசதி : அமைச்சர் ஆ.இராசா தகவல்

அஞ்சல் அலுவலகங்களில் ‘உடனடி பன்னாட்டு பணப்பரிமாற்ற சேவை’ தொடக்க விழா 24.10.2009 அன்று கோவையில் நடந்தது. மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆ.ராசா புதிய சேவையை தொடக்கி வைத்தார். கோவை மேயர் வெங்கடாசலம், துணை மேயர் கார்த்திக், தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏ., கந்தசாமி, மாநகராட்சி மண்டல தலைவர் பைந்தமிழ்பாரி, செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
............................................................................................................................................................

கோவை:
‘‘இந்தியா முழுவதும் தொலைபேசியில் 25 பைசாவில் பேசும் வசதி அடுத்த ஆண்டுக்குள் அறிமுகம் செய்யப்படும்,’’ என மத்திய அமைச்சர் ஆ.இராசா கூறினார்.

இந்திய அஞ்சல் துறை சார்பில், ‘உடனடி பன்னாட்டு பணிப்பரிமாற்ற சேவை’, அயல்நாட்டிற்கு பொருட்கள் அனுப்புவதற்கான ‘ஓர்முக கட்டண பெட்டி’ அறிமுக விழா கோவையில் 24.10.2009 அன்று நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஆ.இராசா பேசியதாவது:
”5 ஆயிரம் அஞ்சல் நிலையங்கள் நவீன தோற்றத்துடன் கணினிமயமாக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் பணியாற்றுவோர், வெளிநாட்டில் கல்வி கற்போர் உடனுக்குடன் பணப்பரிமாற்றம் செய்யலாம். உலகின் எந்த இடத்தில் இருந்து பணம் அனுப்பினாலும் ஒரு நிமிடத்தில் கிடைத்துவிடும். வெளிநாட்டுக்கு பொருட்கள் அனுப்ப ‘ஓர்முக கட்டண பெட்டிகள்’ ரூ.1000, ரூ.1500, ரூ.2500ல் கிடைக்கும். இதில் பொருட்களை வைத்து அனுப்பலாம். முதல்கட்டமாக கோவை, ஊட்டி அஞ்சல் நிலையங்களில் இவ்வசதி கிடைக்கும்’’ என்று கூறினார்.

“100 கோடி மக்கள் தொகையில் 42 கோடி பேர் தொலை பேசி இணைப்பு பெற்றுள்ளனர். கிராமப்புறங்களில் 40 சதவீதம் பேருக்கு தொலைபேசி வசதியை ஏற்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் தொலைபேசியில் 25 பைசாவில் பேசும் வசதி அடுத்த ஆண்டுக்குள் அறிமுகம் செய்யப்படும்’’ என்றும் அமைச்சர் ஆ.இராசா கூறினார்.

Read more...

  ©Template by Dicas Blogger.

TOPO