#navbar-iframe { height: 0px; visibility: hidden; display: none; }

Wednesday, August 26, 2009

விடுதலை ஏட்டுக்கு அஞ்சல் உறை வெளியிடுவது பகுத்தறிவுக் கொள்கைக்கு கிடைத்த அங்கீகாரம் - அமைச்சர் ஆ.இராசா பெருமிதம்

விடுதலை ஏட்டை போர்வாளாக கொண்டு மத்திய அரசை எதிர்த்து தந்தை பெரியார் பல கடுமையான, தீவிரமான போராட்டங்களை நடத்தினார்கள். அவற்றையும் தாண்டி அதன் சாதனைக்காக பகுத்தறிவுக் கொள்கைளை அங்கீகரித்து இந்திய அரசு சிறப்பு உறையை வெளியிட்டு உள்ளது. இது நம் கருத்துகளுக்கு திராவிடர் கழகத்துக்குக் கிடைத்த வெற்றி என்று நடுவண் தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஆ.இராசா பெருமிதத்துடன் கூறினார்.

ஈரோட்டில் நடைபெற்ற விடுதலை நாளிதழின் பவள விழாவில் சிறப்பு அஞ்சல் உறையை நடுவண் அமைச்சர் ஆ. இராசா வெளியிட, தமிழ்நாடு துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.

அப்போது அமைச்சர் ஆ. இராசா உரையாற்றுகையில், “வரலாற்றுச் சிறப்பு மிக்க காரணத்துக்காக தந்தை பெரியார் பிறந்த மண்ணில் இந்தக் குடும்பத்தில் பிறந்த நான் பங்கேற்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். மத்திய அரசை எதிர்த்து தந்தை பெரியார் பல கடுமையான, தீவிரமான போராட்டங்களை நடத்தினார்கள். விடுதலை ஏடு அதற்காகத் தந்தை பெரியார் அவர்களின் போர்வாளாக இருந்து வந்திருக்கிறது. இந்த நிலையிலும் அவற்றையும் தாண்டி அதன் சாதனைக்காக பகுத்தறிவுக் கொள்கைளை அங்கீகரித்து இந்திய அரசு சிறப்பு உறையை வெளியிட்டு உள்ளது. இது நம் கருத்துகளுக்கு திராவிடர் கழகத்துக்குக் கிடைத்த வெற்றியாகும். நாத்திக ஏடு என்றால் வித்தியாசமான பார்வையில் அணுகப்பட்ட காலம் போய், இந்திய அரசே ஏற்று அங்கீகரிக்கும் நிலை ஏற்பட்டது கூட சிந்தனையில் ஏற்பட்ட மாற்றம்தான். ஒருவருக்கு அஞ்சல் தலை வெளியிடவேண்டும் என்றால் எவ்வளவோ நிபந்தனைகள் வைக்கப்பட்ட காலமெல்லாம் இப்போது மாறுதலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன’’ என்று கூறினார்.

”நான் யார் என்றால் மானமுள்ள சுயமரியாதைக்காரன் என்று ஒரு வரியில் பதில் சொன்னவர் நமது மானமிகு கலைஞர் அவர்கள். அவரின் ஆதரவால் இன்றைய நாள் ஒரு மத்திய அமைச்சர் ஆகியிருக்கிறேன். இந்தத் துறை அமைச்சர் பொறுப்பேற்று செய்ய வேண்டிய முக்கிய கடமையை ஆற்றியிருக்கிறேன் - இதன் மூலம் மனநிறைவடைகிறேன்’’ என்றும் ஆ.இராசா குறிப்பிட்டார்.

”1931 இல் அந்நியன் யார் என்ற கேள்விக்கு தந்தை பெரியார் பதில் சொன்னார்: என்னை அடிமை என்பவனும், வைப்பாட்டி மகன் என்பவனும், கிட்ட வர வேண்டாம் - தொட வேண்டாம் என்பவனும், கிட்ட வந்தாலே, கண்ணில் பட்டாலே தோஷம் என்பவனும், நான் தொட்டதைச் சாப்பிட்டால், என் எதிரில் சாப்பிட்டால் நரகம் என்பவனும் அந்நியனா? அல்லது உனக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லை, தொட்டாலும் பரவாயில்லை; நாம் எல்லோரும் சமம்தான் என்று சொல்லுகிறவன் அந்நியனா? என்பதை யோசித்துப் பாருங்கள் (குடி-அரசு 6.-9.-1931) என்று தந்தை பெரியார் சொல்லியிருக்கிறார்’’ என்று சுட்டிக்காட்டிய அமைச்சர் ஆ.இராசா, ’’எங்கிருந்தோ வந்த சோனியா காந்தி சேது சமுத்திரத் திட்டம் தேவை என்கிறார். ஆனால் இங்கு இருக்கும் ஒரு பார்ப்பன அம்மையாரோ அந்தத் திட்டம் கூடாது என்று நீதிமன்றம் வரை செல்கிறார். இதில் யார் அந்நியர்?’’ என்று வினா எழுப்பினார்.

இவ்விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, அமைச்சர் க. பொன்முடி, என்கேகேபி. இராஜா, நடுவண் இணை அமைச்சர் காந்திசெல்வன், இராஜராஜன் அய்.பி.எஸ். மற்றும் பொதுச்செயலாளர் கலி. பூங்குன்றன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Read more...

Monday, August 24, 2009

பெரியாரின் பார்வையில் நாட்டு பற்று - மொழி பற்று : அமைச்சர் ஆ.இராசா உரை

ண்ணகிக்குச் சிலை வைத்தபோது தந்தை பெரியார் அதை ஏற்கவில்லை. ஏனென்றால் பெண்களை அடிமைப்படுத்துகின்ற ஒரு weapon, ஒரு கருவி கற்பு, கற்பு என்றால் அது ஆணுக்கும் இருக்க வேண்டும். நான் என்னவிதமான ஒழுக்கத்தை என்ன விதமான நடத்தையை இராஜதுரை அவர்கள் என்மீது காட்டவேண்டுமென்று எண்ணுகிறேனோ அதை நான் அவரிடத்திலேயும் காட்டவேண்டும், மற்றவருக்கும் காட்டவேண்டும். அது தான் கற்பு, அதுதான் ஒழுக்கம்.

ஒழுக்கத்துக்கு ரொம்ப எளிமையாக விளக்கம் சொன்னார் பெரியார்: ``நான் உன்னிடம் என்ன எதிர்பார்க்கிறேனோ அதை நீ என்னிடம் எதிர்பார்ப்பதற்கும் இன்னொருவனிடம் நான் எதிர்பார்ப்பதற்கும் ஒன்றாக இருக்கவேண்டும். இதுதான் ஒழுக்கம்’’. அந்த அடிப்படையில் கண்ணகிக்கு சிலை வைப்பதைக்கூட தந்தை பெரியார் விமர்சித்தார்.

ஆனால் அண்ணா வேறு விதமாகச் சொன்னார்: கற்பு உண்டா இல்லையா என்பது வேறு, கண்ணகி கற்புக்கு அரசியா என்பது வேறு , ஆனால் இந்த மண்ணில் ஒருகலாச்சாரப் படையெடுப்பு நடந்திருக்கிறது. ஒரு உயர்ந்த செம்மாந்த வாழ்க்கை, ஒருவனுக்கு ஒருத்திதான் வாழவேண்டுமென்கின்ற வாழ்க்கை. ஒரு வேளை விதவையாகிவிட்டால் அந்த விதவையை மறுமணம் வேண்டுமென்கின்ற உரிமைகூட இந்த தொல்சமுதாயத்தில் இருந்திருக்கிற இந்த தமிழ் சமுதாயத்தில் திடீரென்று `ஐவனுக்கும் தேவி அழியாத பத்தினி’ என்று திரௌபதி அம்மனுக்குக் கோயில் கட்டவேண்டிய அவசியம் என்ன? இந்தக் கலாச்சாரப் படையெடுப்பை மறுப்பதற்காகத்தான் கண்ணகிக்கு நான் சிலை வைக்கிறேன்.

கண்ணகிக்கு சிலை இந்த திராவிட இயக்கத்திற்கு அவசியப்பட்டதற்குக் காரணம் , இது எங்கள் அடையாளம், இது எங்கள் நாகரீகம், இது எங்கள் பண்பாடு, வரலாறு என்று சொல்வதற்கு ஒரு அண்ணா இந்த மண்ணிற்கு அவசியப்பட்டதாக அண்ணா கருதிக்கொண்டார். எனவே திராவிட சட்டகம் என்கின்ற சட்டகத்திற்குள் பெரியார் தன்னை அடக்கிக்கொண்டதற்குக் காரணம் ஆரியருக்கு எதிர்ப்பு, இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் பிராமணர்களுக்கு எதிர்தளத்தில் இயங்குவதற்கு ஒரு அடையாளம் தேவைப்பட்டது அவ்வளவு தான். அதற்காக திராவிடர் அல்லாத ஒரு சமுதாயம் இந்த மண்ணிலே வாழக்கூடாது என்றோ, அவர்களுக்கு உரிமையற்றுப் போய்விட வேண்டுமென்றோ பெரியார் ஒரு போதும் கருதியவர் அல்ல.

”எனக்கு மொழிப்பற்று கிடையாது, நாட்டுப்பற்று கிடையாது, தேசியக்கொடி என் கோவணத் துணி, இந்திய வரைபடத்தை எரிப்பேன்”

என்று எதையெல்லாம் எரிக்கமுடிந்ததோ அதையெல்லாம் செய்தவர் தந்தை பெரியார். இன்னும் கூட நான் சொல்லுவேன். ஒரு காலத்தில் இந்த நாட்டின் மீது சீனா படையெடுத்து வந்த போது இந்த நாட்டிலுள்ள தலைவர்களெல்லாம் துண்டேந்தி வசூல் செய்தார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேரறிஞர் அண்ணா உட்பட. ஆனால் பெரியார் அந்தக் காரியத்தைச் செய்யவில்லை. நான் கர்ப்பக்கிரகத்திற்குள்ளே போகிறேன் என்று சொன்னார்.
பத்திரிகையாளர்கள் கேட்டார்கள், ”சீனா படையெடுத்து வருகிறது, நாடு பறிபோகிறது, நீங்கள் இப்போதுதான் ஜாதியை ஒழிக்கிறேன். மதத்தை ஒழிக்கிறேன் என்கிறீர்களே?’’ என்று கேட்ட போது பெரியார் சொன்னார்: ”ஒ ரு வேளை சீனாக்காரன் படையெடுத்து வந்து என் சூத்திரப்பட்டம் போகுமானால், பற, பள்ளுபட்டம் போகுமானால் அவனையும் வரவேற்பதற்கு நான் தயார்’’

இவ்வாறு சொல்லுவதற்கு ஒரே ஒரு தலைவன் தான் இந்த மண்ணிலே இருந்தார். எனவே இருவரும் வேறுபட்ட அடையாளங்களோடு இருந்த தலைவர்கள். அம்பேத்கர் தேசியத்தை விரும்பியவர், பெரியார் தேசியத்தை விரும்பியவர் அல்ல. தேசியம் ஒரு கற்பிதம் என்று சொன்னவர்,
நாட்டுப்பற்று பொய் என்று சொன்னவர், நேற்றுவரை பாகிஸ்தான் நம்மோடு இருந்தது, நாளைக்கு அது பிரிந்துபோய் விட்டால் அதன்மீதும் நாட்டுப்பற்று உனக்கு வருமா எனக் கேட்டவர். எனவே பெரியாருக்கு நாட்டுப்பற்று கிடையாது, பெரியாருக்கு மொழிப்பற்று கிடையாது. உண்மையில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தையேகூட தமிழ் மேல் இருக்கிற காதலால் தந்தை பெரியார் செய்யவில்லை, இந்தி இங்கு வந்துவிடக்கூடாதே என்கின்ற அந்த வேகத்தில்தான் தந்தை பெரியார் செய்கின்றார்.

அதற்கு ஒரு அருமையான தலையங்கத்தையே தீட்டினார். தந்தை பெரியார் எழுதிய தலையங்கத்தில் ஒன்று, இரண்டு உணர்ச்சிப் பூர்வமானவை.

நாகம்மை மறைந்த போது எந்தக் கணவனும் அப்படி எழுத முடியாது.

தன்னுடைய துணைவியார் மறைந்த பொழுது எழுதினார்:
``எனக்கு இருக்கிற ஒரே தடையும் போய்விட்டது, என்னுடைய சுகம் போய்விட்டது எனச் சொல்வேனா? சொத்துப் போய்விட்டது எனச் சொல்வேனா? எனக்கு இருந்த ஒரே ஒரு நலன் போய்விட்டது என்று சொல்வேனா? நாகம்மை வாழ்ந்தது எனக்காகவே தவிர தனக்காக அல்ல’’
என்றெல்லாம் குறிப்பிட்டு விட்டுச் சொல்கிறார்: ”இருந்தாலும் ஒழிந்தது, இன்றோடு எனக்கிருந்த ஒரு தடை ஒழிந்தது. இனிமேல் இந்தத் தமிழ்ச்சமுதாயத்திற்காக என் வாழ்நாட்களை அர்ப்பணிக்கப்போகிறேன்''

மனைவி இறந்த போது கூட இப்படி ஒரு கட்டுரையை ஒரு தலைவனால் எழுத முடியுமென்கின்ற வரலாறு பெரியாருக்கு உண்டு.

அந்தப் பெரியார் மறைமலையடிகளுக்கு ஒரு முறை ஒரு கடிதம் எழுதினார்: நான் உங்களைப் பல்வேறு விதமாக விமர்சித்திருக்கிறேன். உங்களுடைய சைவக்கோட்பாடு மீது எனக்கு நம்பிக்கை இல்லை. நீங்கள் பேசுகின்ற தனித்தமிழ் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஏனென்றால் தனித்தமிழ்க் கோட்பாடு என்பது பிராமணர்களுக்கு எதிராக சைவ வேளாளப் பண்பாடு என்கின்ற தளத்தோடு நின்று போய்விட்டது. தனித்தமிழ் இயக்கம் தேவைதான். தனித்தமிழ் இயக்கம் எதுவரை வந்தது என்றால் மொழியைப் பிரித்துப் பார்த்ததே தவிர கீழே இருக்கிற ஜாதி ஒழிய வேண்டுமென்று விரும்பவில்லை. அது சைவ வேளாளப் பண்பாடு என்கின்ற அந்தத் தளத்தோடு தனித்தமிழ் இயக்கம் நின்று போய் விட்டது. இதை தந்தை பெரியாரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால், உங்கள் மீது எனக்கு நிறைய கருத்து மாறுபாடு உண்டு, உங்களோடு உடன்படாத தளங்கள் நிறைய உண்டு, என்றாலும் தமிழை நாம் காப்பாற்றவேண்டியதற்குக் காரணம், தமிழர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து விடுவார்கள், தமிழ் மொழி இல்லாவிட்டால் தமிழ் மக்கள் சுபிட்சமாக வாழமுடியாது என்பதற்காக உங்களை அழைக்கிறேன். கடந்த காலத்தில் தவறு செய்திருந்தால் அய்யா அவர்கள் மன்னித்து அருளுங்கள் என்று எழுதியவர் தந்தை பெரியார்.

ஆக, நான் இவ்வளவு பூடகம் போட்டுப் பேசுவதற்குக் காரணம், அம்பேத்கர் இயங்கிய தளம் வேறு, தந்தை பெரியார் இயங்கிய தளம் வேறு, இவர்களுக்குள் இருக்கிற ஓர்மை வேறு இடத்திலே வருகிறது. எதிலே வருகிறது?
(தொடரும்...)

Read more...

Wednesday, August 19, 2009

பெரியாரும் அம்பேத்கரும் சுயபரிசோதனை செய்துகொண்ட தலைவர்கள்(2)

` பெரியார் அம்பேத்கர் : இன்றைய பொருத்தப்பாடுஎன்ற தலைப்பிலான கருத்தரங்கில் அமைச்சர் . இராசா பங்கேற்று ஆற்றிய உரையின் தொடர்ச்சி...

அம்பேத்கர் - பெரியார் இந்த இரண்டு தலைவர்களும் தன்னைப் பற்றி பரிசோதனை செய்து கொண்டவர்கள். சுயவிளம்புகை செய்து கொண்டவர்கள்.
குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்று சொன்னால், பெரியார் , ``நான் யார்? ஈ.வே.இராமசாமி என்கிற நான், திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகத்திலே இருக்கிற பிற சமுதாயத்தைப்போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்குகிற தொண்டினை மேற்போட்டுக்கொண்டிருக்கிறேன். இந்தத் தொண்டினைச் செய்வதற்கு எனக்கு யோக்கியதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் இதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் செய்து கொண்டிருக்கிறேன்’’

- இது பெரியார் தன்னைப்பற்றிச் சொல்லிக்கொண்டிருக்கிற சுய பிரகடனம்.
அதைப்போல் அம்பேத்கர் ஒரு இடத்தில் சொல்லுகிறார்:
I am not a worshipper of idol - நான் சிலைகளை, கடவுளை வணங்குகிறவன் அல்ல. I believe destruction of idols- நான் கடவுளை சிலைகளை அழிப்பதை ஒரு தொழிலாக நம்பிக்கையாகக் கொண்டிருக்கிறவன்.
என்று சொல்லிவிட்டு மீண்டும் அவர் சொல்லுகின்றார்: I hate Gandhi and his philosophy of Hinduism நான் காந்தியையும் அவர் சார்ந்திருக்கிற இந்துயிசத்தையும் வெறுக்கிறேன், ஏனென்றால் காந்தியைப் பாராட்டுவது என்பது வேறு, தேசத்திற்கு நலன் செய்வது என்பது வேறு, வேறு வேறு மட்டுமல்ல சில நேரங்களில் இவை எதிரும் புதிருமாக இருக்கின்றன என்று அவர் சொல்கிறார். I love India அதனால்தான் சொல்லுகிறார்: Gandhi and loving this nation are two distinct and different things and sometimes afford equally opposite என்று குறிப்பிடுகிறார். ஆக இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில்தான் இரண்டு தலைவர்களும் இந்த மண்ணில் வாழ்ந்திருக்கிறார்கள்.

பெரியார் - அம்பேத்கர்: இயங்கிய தளம் வேறு


இன்னொன்று இன்றைக்குப் பெரியார் யார், அம்பேத்கர் யார் என்கின்ற சிந்தனையில் இந்த இரண்டு தளத்திலும் சில வேறுபாடுகளைக் கொண்டுவருகிறார்கள். பெரியாருக்குள்ளும் அம்பேத்கருக்குள்ளும் போகிற போது நாம் மிகத்தெளிவாக இருக்க வேண்டும். இரண்டு பேருக்கும் ஓர்மை உண்டு. இருவரும் ஒன்றாகச் சிந்தித்த இடங்கள் உண்டு. இரண்டு பேருக்கும் வேறுபாடுகளும் இருக்கிறது. நாம் மறுதலித்துவிட முடியாது.

பெரியார் எந்தப் பற்றுக்கும் ஆட்படாதவர், எந்தப் பற்றுக்கும் ஆட்படாத தன்னை திராவிட சித்தாந்தம் என்ற சட்டகத்துக்குள் வைத்துக்கொண்டது உண்மைதான். ஆனால் அம்பேத்கருக்கு அந்தக் கட்டாயம் தேவைப்படவில்லை. இன்னும் நான் சொல்லவேண்டுமென்று சொன்னால் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொள்வதற்கு தந்தைபெரியாருக்கு இரண்டு மூன்று காரணங்கள் இருந்திருக்கிறது. ஆனால் இந்திதான் இந்த மண்ணிற்கு ஆட்சிமொழியாக, பொது மொழியாக இருக்க வேண்டுமென்று பதிவு செய்தவர் அம்பேத்கர். வேறுபாடுதான். புரிந்து கொள்ள வேண்டும்.

I need a strong centre என்று சொன்னவர் அம்பேத்கர். மிக முக்கியமான இடத்திலிருக்கிற மய்ய அரசுக்கு அதிக அதிகாரங்கள் தேவை என்று சொன்னவர் அம்பேத்கர். ஆனால், மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் தேவை என்று போராடிய இயக்கங்களுக்கு தந்தையாக இருந்தவர் தந்தை பெரியார். இவையெல்லாம் இருக்கின்ற வேறுபாடுகள். ஒரு காலகட்டத்தில் `தமிழ்நாடு தமிழருக்கே’ என்று கேட்டவர் தந்தை பெரியார். அப்படிப்பட்ட பிரிவினையை அம்பேத்கர் ஒரு நாளும் ஏற்றுக்கொண்டதில்லை. ஏனென்றால் அந்தத் தளத்தில் அவர் இயங்குகிற போது, தலித் விடுதலை என்று வருகிறபோது அல்லது மானிட விடுதலை என்று வருகிறபோது இந்த பூகோள அமைப்பு என்கின்ற எல்லைக்கோடுகளைத் தாண்டி, தான் எந்த இனம் என்கின்ற அடையாளத்தைத் தாண்டிச் செல்ல வேண்டியிருந்தது. திராவிட இன அடையாளத்தைக்கூட தந்தை பெரியார் ஒரு பெருமைமிக்க அடையாளமாகச் சொல்லிக்கொள்ளவில்லை.

(தொடரும்... அடுத்து)
பெரியாரின் பார்வையில் நாட்டு பற்று - மொழி பற்று

Read more...

Monday, August 17, 2009

பெரியார் - அம்பேத்கர்- இன்றைய தேவை :அமைச்சர் ஆ.இராசா கருத்துரை

மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் . இராசா அவர்களை ஒரு அரசியல்வாதியாக எல்லோருக்கும் தெரியும். ஆனால், பலருக்கும் தெரியாத அவரின் முகம் ஒன்று இருக்கிறது. அந்த முகம்தான் அவரை கட்சி பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறது. அது பெரியார் - அம்பேத்கர் ஆகிய இருபெரும் தலைவர்களின் கொள்கைகளை கற்றுணர்ந்து செயல்படுத்த முனையும் ஒரு கருத்தியல் சிந்தனையாளர் என்பதாகும்.

அமைச்சரின் அறிவு சார்ந்த அந்த இன்னொரு பக்கத்தை அறிய பலருக்கும் வாய்ப்பு கிடைத்திருக்காது என்று எண்ணுகிறோம். ஆகவே, 22.02.2008 அன்று திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயராய்வு மையமும், மகளிரியல் துறையும் இணைந்து நடத்திய ` பெரியார் அம்பேத்கர் : இன்றைய பொருத்தப்பாடுஎன்ற தலைப்பிலான கருத்தரங்கில் அமைச்சர் . இராசா பங்கேற்று ஆற்றிய உரையை இயக்கவாதிகளுக்கும் பொதுமக்களுக்கும் அறிய தருகிறோம்.

63 நிமிடம் 36 நொடி நேரம் அமைச்சர் பேசியதை எழுத்து வடிவில் வாசகர்களுக்கு தரும்போது, ஒரே நேரத்தில் அவ்வளவையும் படிப்பது பலருக்கும் முடியாத செயல் என்றே தோன்றுகிறது. ஆகவே, வரலாற்றில் மிகச் சிறந்த இந்த பேருரையை கொஞ்சம் கொஞ்சமாக தொடர் போல் தொடர்ச்சியாக சில நாட்களுக்கு பதிவிட முடிவு செய்துள்ளோம்.

அமைச்சர் .இராசாவின் இந்த உரையை படிக்கும், உங்கள் கருத்தை பகிர்ந்துகொள்ள வேண்டுமென விரும்புகிறோம்.

இதோ அமைச்சர் ஆ.இராசா பேசுகிறார்:

பெரியார் - அம்பேத்கர் : ஒருகட்டுக்குள் அடங்காத இரயில்கள்
பெரியார் - அம்பேத்கர் என்னும் இரு தலைவர்களைப் பற்றிப் பேசுகிறபோது இந்தத் தலைவர்களுக்கிடையே வந்து போகிற சில தலைவர்களைப் பற்றிய விமர்சனம் - மத்தியிலே அமைச்சராக இருக்கிற நான் இந்தத் தலைப்பிலே பேச இருக்கிற காரணத்தினால் - சில தலைவர்களைப் பற்றி அங்கொன்றும் இங்கொன்றுமாக இந்த இருபெரும் தலைவர்கள் சொல்லியதைச் சொல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் மாணவர்களோ, பத்திரிகையாளர்களோ அதைத் தனித்தனியாக அப்படியே பார்க்கவேண்டுமே தவிர அதையே அந்தத் தலைவர்களுக்கு இருக்கிற அடையாளமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதை என் உரையின் தொடக்கத்திலேயே நான் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். ஏனென்றால், ஒரு அரசியல் கூட்டத்தில் பெரியாரைப் பேசுவதென்பது வேறு, ஒரு சமூகக் கூட்டத்தில் அல்லது ஒரு பொருளாதாரக் கூட்டத்தில் அம்பேத்கரின் தத்துவங்களை எடுத்துவைப்பதென்பது வேறு.

ஆனால், பல்கலைக்கழக மாணவர்களுக்கு முன்னால் இருபெரும் தலைவர்களைக் கொண்டு வந்து நிறுத்துவது என்பது, அதுவும் ஒரு அரசியல்வாதியாகிய நான் கொண்டு வந்து நிறுத்துவது என்பது வேறு. என்னையும் அறியாமல் இரயில் தடம் புரண்டுவிடுமோ என்ற பயத்தோடு நான் இங்கு நின்றுகொண்டிருக்கிறேன். ஏனென்றால் இந்த இரண்டு இரயில்களும் - பெரியார் அம்பேத்கர் என்கின்ற இரண்டு இரயில்களும் - ஒருகட்டுக்குள் அடங்காத இரயில்கள் - எந்த தண்டவாளத்திற்கும் கட்டுப்படாத இரண்டு இரயில்கள். எந்தத் தண்டவாளத்திற்கும் கட்டுப்படாத இரண்டு இரயில்களை தண்டவாளத்தோடு கூடிய ஒரு போக்கான ஒரு போக்கிற்கு கொண்டுவந்து நிறுத்துவது என்பது அறிவார்ந்த வேலையா, ஆபத்தான வேலையா என்று எனக்குத் தெரியாது. ஆனால் உத்தரவை எஸ்.வி. இராஜதுரை அய்யா அவர்கள் பிறப்பித்திருக்கிற காரணத்தினால் நான் முயற்சி செய்கிறேன் அவ்வளவு தான்.

ஆங்கிலத்திலே சொல்லுவார்கள் comparision is always odious ஒருவரை இன்னொருவரோடு ஒப்பிடுவது என்பது அவரை புண்படுத்துகிற மாதிரி இருக்கும். நீ இராஜாவைப் போல் இல்லை என்று சொன்னால் அல்லது இராஜா 31 வயதில் 32 வயதில் அமைச்சர் ஆகிவிட்டான் நீ ஏன் அமைச்சர் ஆகவில்லை என்று யாராவது என்னுடைய வகுப்புத் தோழரைப் பார்த்து அவருடைய தாய் தந்தையர் கேட்டால் கேட்பதற்கு இனிப்பாக இருக்கும், ஆனால் அந்த ஒப்புமை odious புண்படுத்தக் கூடியதாக இருக்கும். ஆனால் comparision of values is something productive என்று சொல்லுவார்கள். இரண்டு மனிதர்களின் மதிப்பீடுகளை தனித்தனியாக ஒப்பீடு செய்வதென்பது வேறு, நேரடியாக ஒரு மனிதனை இன்னொரு மனிதனோடு சேர்த்துப் பார்ப்பது என்பது வேறு.

எனவே, அந்தக் கோணத்தில் பெரியாரையும் அம்பேத்கரையும் நாம் இங்கே பார்க்க இருக்கிறோம். இதிலே பெரியாரும் அம்பேத்கரும் முரண்பட்டு நிற்கக் கூடிய இடங்கள் கூட உண்டு. பெரியாரையும் அம்பேத்கரையும் முரண்படுத்திப் பார்த்தவர்கள் கூட சில இடங்களில் பெரியாரையும் அம்பேத்கரையும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.

பெரியாரைப் பற்றிச் சொல்லவேண்டுமென்றால், கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்து மதத்தை எழுதியவர். தன் வாழ்நாளெல்லாம் கண்ணன்தான் தன்னைக் காப்பாற்ற வேண்டுமென்று தன்னுடைய கடைசி நாட்களைக் கழித்தவர். இந்து மதத்தைத் தூக்கி நிறுத்தியவர். ஆனால் வாழ்நாளெல்லாம் இந்து மதம் வேண்டாமென்று சொன்ன பெரியார் மரித்த போது அந்தக் கண்ணதாசன் பாடினான்:

சரித்திரம் மறைந்த செய்தி தலைவனின் மரணச்செய்தி
விரித்ததோர் புத்தகத்தின் வீழ்ச்சியைக் கூறும் செய்தி
நரித்தனம் கலங்கச்செய்த நாயகன் மரணச் செய்தி
மரித்தது பெரியாரல்ல, மாபெரும் தமிழர் வாழ்க்கை

என்று முடித்தான்.
கடவுளை நம்புகிற, இந்துமதத்தைப் போற்றுகிற கண்ணதாசனே கூட பெரியார் மரித்துப் போனதற்குப் பிறகு மரித்தது பெரியாரல்ல மாபெரும் தமிழர் வாழ்க்கை என்று சொன்னார் என்றால் கண்ணதாசன் இருவிதமான கோணங்களைப் பெற்றிருக்கிறார் என்றாலும் பெரியாரை மதித்திருக்கிறார் என்று பொருள்.

அதைப்போல அம்பேத்கரை விமர்சனம் செய்தவர்கள் இருக்கிறார்கள். கடவுள் பெயரை நாக்கிலும், கட்டாரியைக் கக்கத்திலும் வைத்திருக்கிற ஒரு ஆளுக்குப் பெயர் மகாத்மா என்றால் a person who is keeping god’s name in his tongue, keeping knife in his armpit is deserved for appellation of Mahatma, then Mohandass Karamsanth Gandhi is also a Mahatma என்று அம்பேத்கர் சொல்கிறார். கடவுள் பெயரை நாக்கிலும், கட்டாரியைக் கக்கத்திலும் வைத்திருக்கி ற ஒரு ஆளுக்குப் பெயர் மகாத்மா என்றால் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியும் மகாத்மாதான் என்று கொடூரமான விமர்சனத்தை முன்வைத்தவர் அம்பேத்கர். ஆனால் அந்த அம்பேத்கரைப் பார்த்து நீங்கள் ஒரு மிகப்பெரிய தேசபக்தர் உங்களைப் போன்ற ஒரு தேசியவாதியை நான் பார்த்ததில்லை என்று காந்தி சொல்லுகிறார். அதனால்தான் சொல்லுகிறேன் comparison is sometimes odious ஒப்பீடு என்பது சில நேரங்களில் புண்படுத்தும் எனவே, அவரை அவராகவே பார்ப்பது என்ற அந்தக் கோணத்தில்தான் இந்தக் கருத்தரங்கில் நான் கலந்து கொள்ள விரும்புகிறேன்.

(தொடரும்...) அடுத்து,
பெரியாரும் அம்பேத்கரும் சுயபரிசோதனை செய்துகொண்ட தலைவர்கள்

Read more...

Thursday, August 06, 2009

திராவிட இயக்க சாதனையின் அடையாளம் அமைச்சர் ஆ.இராசா : கி.வீரமணி பெருமிதம்


குருவரெட்டியூர், ஆக.5-

தபால் கொடுக்கக் கூட தெருவுக்குள் செல்லமுடியாத சமூகத்தில் பிறந்த ஆ.இராசா, தபால் துறைக்கே அமைச்சராக இருக்கிறார். இதுவே திராவிட இயக்க சாதனைக்கு அடையாளம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி குறிப்பிட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகில் உள்ள குருவரெட்டியூரில் 18.7.2009 அன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் ஒரு பகுதி:

மனிதன் நாயைக் கொஞ்சுகிறான். பூனையை மடியில் தூக்கி வைத்துக் கொஞ்சுகிறான். இன்னும் மிருகங்களைக் கொஞ்சுகிறான். ஆறறிவு படைத்த எனது சகோதரன் அவனைத் தாழ்த்தப்பட்டவன், பள்ளன், பறையன், சக்கிலியன் என்று சொல்லி இன்னும் ஒதுக்கி வைக்கிறான் என்று சொன்னால் இதைவிட வேறு கேடு என்ன என்று மனிதநேயத்தோடு தந்தை பெரியார் அவர்கள் தான் கேட்டார். அப்படி கேட்டதோடு அவர் வீட்டுக்குப் போகவில்லை. இதை மாற்றியமைப்பதற்காகத்தான் என்னுடைய வாழ்க்கையை மக்களுக்காக அர்ப்பணிக்கிறேன் என்று சொல்லி மிகப்பெரிய அளவுக்குத் தொண்டாற்றியவர்.

உதாரணத்திற்கு ஒன்றைச் சொல்கின்றேன். இந்த நூலில் ஆய்வாளர் ஒன்றை எழுதியிருக்கின்றார். 1924ஆம் ஆண்டில் தென்னார்க்காடு மாவட்டம் கமலாபுரம் கிராமத்தில் அக்கிரகாரத்தில் அமைந்திருந்த தபால் நிலையத்திற்கு - ஓர் தொடக்கப் பள்ளிக்குச் செல்ல முடியாத அளவிற்கு தாழ்த்தப்பட்ட தோழர் தடுக்கப்பட்டார். இதன் விளைவாக பொதுக் கடமைகளில் அதாவது தபால் அலுவலங்களில் கடிதங்களைப் போடுவது, அங்கிருந்து தொடக்கப் பள்ளிக்குச் சென்று வருவது போன்ற கடமைகளை செய்ய முடியாத அளவிற்கு அவர் தடுக்கப்பட்டார்.

தபால் நிலையத்தில் ஒரு போஸ்ட்மேனாக இருக்கக் கூடியவர் அக்கிரகாரத்திற்குச் சென்று கடிதத்தைப் போடமுடியவில்லை. அக்கிரகாரத்திற்குப் போகக் கூடாது. போனால் தீட்டு. பிணமாகவாவது போக முடியுமா என்றால் முடியாது. மேல் ஜாதிக்காரன் இருக்கின்ற, வசிக்கின்ற இடத்தில் தாழ்த்தப்பட்டவன் பிணமாகக் கூட போக முடியாது. இவ்வளவு பெரிய காட்டுமிராண்டிகளைக் கொண்ட சமுதாயம் நம் சமுதாயம்தான். ஆனால், இன்றைக்கு எப்படி ஆகியிருக்கிறது? யாராவது சட்டப் பூர்வமாக சொல்ல முடியுமா?

நீ பறையன் நீ பள்ளன், நீ சக்கிலி, நீ கீழ் ஜாதிக்காரன், ஆகவே நீ தபால்காரனாக இருக்கக் கூடாது என்று சொல்கின்ற துணிச்சல் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, வேறு எங்காவது உண்டா என்றால் இல்லை. இன்றைக்கு அதே சமுதாயத்தைச் சார்ந்த ஒருவர், இன்றைக்கு இந்தியாவிலே அஞ்சல் துறைக்கே அமைச்சராக மத்திய அமைச்சராக இருக்கின்றார்; அவர் தான் ஆ.இராசா அவர்கள். எல்லா பார்ப்பானும், பாப்பாத்தியும் அதிகாரிகளாக இருக்கின்றவர்கள் கைகட்டி நிற்கிறார்களே. அதற்குப் பிறகு இவர் உத்தரவு போடுகிறார். சார் என்ன சொல்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். இன்றைக்கு எவ்வளவு பெரிய சமுதாய மாற்றம் வந்திருக்கிறது.

தந்தை பெரியார் அறிவு ஆசானுடைய இடையறாத போராட்டங்கள்; அவருடைய அறிவுக் கருத்துகளை எங்கு பார்த்தாலும் மக்கள் மத்தியிலே எதிர்த்து எதிர்நீச்சல் அடித்துச் சொன்னதன் விளைவாக ஏற்பட்ட மாறுதல்கள் அவை. இப்படி எத்தனையோ சொல்லலாம். நடைமுறை உதாரணத்திற்காக உங்களிடம் சொன்னேன். 80 ஆண்டுகளுக்கு, 85 ஆண்டுகளுக்கு முன்னாலே தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த ஒரு தபால்காரர் கூட அக்கிரகாரத்திற்குள் நுழைய முடியவில்லை. ஆனால், இன்றைக்கு அந்த தபால்துறைக்கே மத்திய அமைச்சராக ஆ.இராசா, விளங்குகிறார். இது திராவிடர் இயக்கத்தின் சாதனைகள். பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராசர், முத்தமிழ் அறிஞர் கலைஞர் போன்றவர்களுடைய முயற்சி, உழைப்பு, சாதனையாகும். இத்தனைக்கும் அடித்தளம் யார்? தந்தை பெரியார் மூலக்காரணம்; தந்தை பெரியார் அவர்களுடைய உழைப்பு.

(நன்றி: விடுதலை இதழ் - 5.8.2009)

இணைப்பு : http://files.periyar.org.in/viduthalai/20090805/Page04.html

Read more...

Tuesday, August 04, 2009

தேசிய அடையாள எண் ஆணைய உறுப்பினராக ஆ.இராசா நியமனம்
















தேசிய அடையாள எண் ஆணைய உறுப்பினராக தொலைத்தொடர்புத்துறை மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் .இராசா அவர்களை, பிரதமர் மன்மோகன் சிங் தேர்வு செய்து நியமித்துள்ளார்.

புது தில்லி:

இந்தியாவின் அண்டை நாடுகளாக உள்ள பாகிஸ்தான், சீனா, நேபாளம் உள்ளிட்ட நாடுகள் வழியாக நுழையும் தீவிரவாதிகளால் இந்தியாவுக்கு ஆபத்து இருப்பதாக இந்தியப் பாதுகாப்புத் துறை கருதுகிறது. இதனால், உள்துறை அமைச்சகத்தின் சார்பில் இந்திய குடிமக்கள் அனைவருக்கும் அடையாள எண் வழங்க நடுவண் அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக நந்தன் நிலேகனி தலைமையில் தேசிய அடையாள எண் ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணியை சிறப்பாக மேற்கொள்ள 10 பேர் கொண்ட உறுப்பினர் குழு அமைக்க முடிவெடுத்த பிரதமர் மன்மோகன் சிங், தேசிய அடையாள எண் ஆணைய உறுப்பினர் குழு பட்டியலை வெளியிட்டுள்ளார்.

இந்தக்குழுவில் தமிழகத்தை சேர்ந்த அமைச்சர்களான ப.சிதம்பரம், .இராசா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ” இந்திய குடிமக்கள் அனைவருக்கும் அடையாள எண் வழங்க தேசிய அடையாள எண் ஆணையம் உருவாக்கப்பட்டு, அதன் தலைவராக நந்தன் நிலேகனி நியமிக்கப்பட்டுள்ளார். அந்த ஆணையக் குழுவில் நடுவண் அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம், .இராசா, சரத்பவார், வீரப்பமொய்லி, கபில்சிபல், சி.பி.ஜோஷி, எஸ்.எம்.கிருஷ்ணா, மாண்டேக் சிங் அலுவாலியா, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் உறுப்பினர்களாக இருந்து செயல்படுவார்கள்” என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஆ.இராசா மீது எதிர்கட்சிகள் ஊழல் புகார் கூறிவரும் நிலையில், அமைச்சரின் திறமையான செயல்பாட்டில் நம்பிக்கை கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், இந்தக் கூடுதல் பொறுப்பை வழங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

  ©Template by Dicas Blogger.

TOPO