#navbar-iframe { height: 0px; visibility: hidden; display: none; }

Monday, November 23, 2009

நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவை தடுக்க முன்னெச்சரிக்கை: அமைச்சர் ஆ.ராசா


ஊட்டி, நவ. 23-
நீலகிரி மாவட்டத்தில் குன்னூர்- கோத்தகிரி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நடுவண் அமைச்சர் ஆ. ராசா பார்வையிட்டார். அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர்
குன்னூர், காட்டேரி, மரப்பாலம் வழியாக சின்ன குரும்பாடி எனும் ஆதிவாசி மக்கள் குடியிருப்பு பகுதிக்கு வந்தார். நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு போக்குவரத்து வசதி எதுவும் இல்லாமல் அவதிப்பட்டு வந்த ஆதிவாசி மக்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு நிரந்தர வீடு அமைக்க வேண்டும் என்று அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர்.

அதையடுத்து பர்லியாருக்கு சென்ற அமைச்சர் ஆ.ராசா, பர்லியார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தங்கவைக்கப்பட்டு இருந்த மரப்பாலம், வடுகன்தோட்டம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

மேட்டுப்பாளையத்தில் உள்ள நீலகிரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலகத்தில், பவானி ஆற்றின் கரையோரப் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 50 பேருக்கு இலவச வேட்டி, சேலை, நிவாரணத்தொகையை அமைச்சர் ஆ.ராசா வழங்கினார்.

பின்னர் அமைச்சர் ஆ.ராசா செய்தியாளர்களுக்கு அளித்த நேர்காணலில் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் அதிக அளவில் நிலச்சரிவுகள், பூமியில் பிளவுகள் ஏற்பட்டு உள்ளன. புவியியல் துறை துணை இயக்குநர் தலைமையில் அமைக்கப்பட்டு உள்ள குழுவினர் நிலச்சரிவு மற்றும் பூமி பிளவுக்கான காரணம் பற்றி ஆராய்ந்து, ஒரு மாத காலத்திற்குள் அறிக்கை தர உள்ளனர். அந்த அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட நிருவாகத்தோடு கலந்து பேசி எந்த மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது என ஆலோசிக்கப்படும். பின்னர் மேல்நடவடிக்கை தொடர்பாக நடுவண், மாநில அரசுகளை அணுகி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அமைச்சர் ஆ.ராசா கூறினார்.

அமைச்சர்
ஆ.ராசாவுடன் தமிழக அமைச்சர் கா.இராமச்சந்திரன், குன்னூர் சட்டப்பேரவை உறுப்பினர் சவுந்தரபாண்டியன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பா.மு.முபாரக், பா.அருண்குமார் மற்றும் கட்சி பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Read more...

Saturday, November 21, 2009

நீலகிரியில் இனி கட்டடத் தடைச் சட்டங்கள் கடுமையாகும்: நடுவண் அமைச்சர் ஆ.இராசா சேதி


நீலகிரி, நவ. 22-
நீலகிரி மாவட்டத்தில் இனி கட்டடத் தடைச் சட்டங்கள் கடுமையாக அமல்படுத்தப்படும் என்று நடுவண் தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ஆ.இராசா (A.RAJA) தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களாக பெய்து வந்த கடும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தொகுதி மக்களவை உறுப்பினரும், நடுவண் தொலைத் தொடர்புத்துறை அமைச்சருமான ஆ.இராசா (A.RAJA) சனிக்கிழமை ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீலகிரி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள கோத்தகிரி - மேட்டுப்பாளையம் சாலை மற்றும் கோத்தகிரி - உதகை சாலை போர்க்கால அடிப்படையில் சரிசெய்யப்பட்டு வருகின்றன. வரும் திங்கட்கிழமை முதல் கோத்தகிரி - உதகை சாலையில் இலகுரக ஊர்திகள் மட்டும் செல்ல அனுமதிக்கப்படும். அதே போல குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் இன்னும் 20 நாட்களுக்குள் தற்காலிக பணிகள் முடிக்கப்பட்டு இதே போன்ற இலகுரக ஊர்திகள் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்படும் என்று கூறினார்.

தற்போது மாவட்டத்தில் 3053 வீடுகள் பகுதி அளவிலும், 2600 வீடுகள் முழுமையாகவும் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு கேத்தி பகுதியிலுள்ள தொடக்க நலவாழ்வு நடுவம் அருகில் 50 வீடுகளும், உதகையில் உள்ள இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் தொழிற்சாலை அருகே 50 வீடுகளும் உடனடியாக கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் பணிகள் 20 நாட்களுக்குள் நிறைவு பெற்று பாதிக்கப்பட்ட மக்களை குடியமர்த்துவோம். மீதம் உள்ளவர்களுக்கு இந்திரா குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ஆ.இராசா கூறினார்.

நீலகிரி மாவட்டத்தில் இனி கட்டடங்கள் கட்டும் போது கட்டடத் தடைச் சட்டத்தை கடுமையாக அமல்படுத்தப்படும் என்றும், கட்டடம் கட்டுபவர்கள் புவியியல் துறையின் வல்லுநர்களின் அனுமதி பெற்ற பிறகே கட்டடம் கட்ட அனுமதிக்கப்படுவர் என்றும் அமைச்சர் ஆ.இராசா கூறினார்.

இந்த ஆய்வின் போது கதர்வாரியத்துறை அமைச்சர் கா.இராமச்சந்திரன், குன்னூர் சட்டப்பேரவை உறுப்பினர் சவுந்தரபாண்டியன், மாவட்ட ஆட்சியர் ஆனந்த ராவ் பாட்டீல் ஆகியோர் உடனிருந்தனர்.

Read more...

Saturday, November 14, 2009

நீலகரி மாவட்டத்தின் சேத மதிப்பு ரூ.300 கோடி : அமைச்சர் ஆ.இராசா சேதி


நீலகிரி:

கனமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நீலகரி மாவட்டத்தின் சேத மதிப்பு 300 கோடி ரூபாய் என்று மத்திய அமைச்சர் ஆ.இராசா கூறியுள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆங்காங்கே வெள்ளத்தால் மண் சரிவு ஏற்பட்டு, வீடுகள் இடிந்து மக்கள் இறந்துள்ளனர். நீலகிரி மக்களவை உறுப்பினரும் நடுவண் அமைச்சருமான ஆ.இராசா, மாநில கதர் துறை அமைச்சர் க.இராமச்சந்திரன் ஆகியோரின் மேற்பார்வையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை சரிசெய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இது குரித்து நீலகிரியில் அமைச்சர் ஆ.இராசா, செய்தியாளர்களுக்கு அளித்த நேர்காணலில், “கடுமையான மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் ரூ.300 கோடி அளவுக்கு சேதமடைந்துள்ளது. மேட்டுப்பாளையம் - கோத்தகிரி - உதகமண்டலம் சாலையில் பேருந்து சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. 8 டன்னுக்கும் அதிகமான எடையுள்ள வாகனங்கள் இந்த சாலையில் அனுமதிக்கப்பட மாட்டாது’’ என்று கூறினார்.

அனைத்து சாலைகளையும் சீர்செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், மேட்டுப்பாளையம் - குன்னூர் சாலை சீரமைப்பிற்கு மத்திய அரசின் உதவி கோரப்பட்டுள்ளது என்றும்
16ஆம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு வந்து செல்லலாம் என்றும் அமைச்சர் ஆ.இராசா கூறினார்.

Read more...

நீலகிரி மழை பாதிப்பு - நிவாரண பணி தீவிரம்


நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்கள் பெய்த பலத்த மழையால் அழகான நகரங்கள் அலங்கோலமாயின. நிலச்சரிவு, காட்டாற்று வெள்ளம், சாலைகள் துண்டிப்பு என்று நகரங்கள் தனித்தீவுகளாக காட்சி அளிக்கின்றன.

இந்த இயற்கை சீற்றத்துக்கு 43 பேர் பலியாகி உள்ளனர். வீடுகள் இடிந்து தரைமட்டம் ஆகிவிட்டன.ஆயிரக்கணக்கானோர் இருக்க இடம் இன்றி தவிக்கிறார்கள்.அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

இதையொட்டி ஊட்டி தமிழக மாளிகையில் நேற்று காலை மத்திய தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை மந்திரி ஆ.இராசா தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் நெடுஞ்சாலை துறை அமைச்சர் சாமிநாதன், கதர்வாரிய துறை அமைச்சர் கா.இராமச்சந்திரன், நீலகிரி மாவட்ட கலெக்டர் ஆனந்த்பாட்டில், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் இராஜீவ் கே.ஸ்ரீவஸ்தவா, ஊட்டி வடக்கு கோட்ட வன அதிகாரி சவுந்திரபாண்டியன், தெற்கு கோட்ட வன அதிகாரி சேவாசிங், மாவட்ட வருவாய் அதிகாரி குப்புசாமி, குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் சவுந்திர பாண்டியன், முன்னாள் அரசு கொறடா பா.மு.முபாரக் உள்பட மாவட்ட அளவிலான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின்னர் மத்திய அமைச்சர் ஆ.இராசா செய்தியாளர்களுக்கு அளித்த நேர்காணலில் கூறியதாவது:

’’கடந்த சில நாட்களுக்கு முன்பு நீலகிரி மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாக வீடுகள் இடிந்து மழை வெள்ளத்திற்கு 43 பேர் பலியாகி உள்ளனர். மாவட்டம் முழுவதும் தற்போது கணக்கெடுப்பின் படி 816 வீடுகள் மழையால் நாசமாகி உள்ளது. இதில் 360 வீடுகள் முழுமையாக இடிந்து உள்ளது. தொடர்ந்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது வீடுகளை இழந்தவர்கள் 1,100 பேர் ஊட்டி, குன்னூர் உள்பட பல இடங்களில் உள்ள 10 முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

முகாம்களில் தங்கி உள்ளவர்களுக்கு உணவு மற்றும் கம்பளி, போர்வை போன்ற பொருட்கள் வழங் கப்பட்டு உள்ளன.

மாவட்டம் முழுவதும் 600 ஹெக்டர் நிலத்தில் விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளது. சமையல் கியாஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் போன்றவை பாலக்காட்டில் இருந்து நீலம்பூர், கூடலூர் வழியாக ஊட்டிக்கு கொண்டு வரப்படுகிறது.

பெட்ரோல் பங்க்களுக்கு கொண்டு வரப்பட்டு பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லாமல் வழங்கப்படுகிறது. உடனடியாக மின் கம்பங்கள் சரி செய்யப்பட்டு மின்சாரம் வழங்கப்படும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக மருத்துவ வசதி செய்யப்பட தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

குன்னூர் அருகே குரும்பர்பாடியில் இருந்த தனியார் தங்கும் விடுதியில் பணிபுரிந்த பாதுகாப்பாளர் ஒருவரை மட்டும் காணவில்லை என்று புகார் செய்யப்பட்டு உள்ளது. வருகிற 16-ஆம் தேதி முதல் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வர அனுமதிக்கப்படுவார்கள்’’
இவ்வாறு அமைச்சர் ஆ.இராசா தெரிவித்தார்.

Read more...

Thursday, November 05, 2009

ஊரகப் பகுதிகளில் 100 பேரில் 40 பேருக்கு தொலைத் தொடர்பு சேவை : அமைச்சர் ஆ. இராசா தகவல்

மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ. இராசா புது தில்லியில் தொலைத் தொடர்பு 2009 என்ற கண்காட்சிக்கு முன்னோட்டமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.
......................................................................................................................................................................

புது தில்லி:

ஐந்தாண்டுகளில் ஊரகப் பகுதிகளில் 100 பேரில் 40 பேருக்கு தொலைத் தொடர்பு சேவைகள் என்ற 40 சதவிகித ஊரக தொலை அடர்த்திநிலை எட்டப்படும் என்று மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ. இராசா கூறியுள்ளார்.

புது தில்லியில் இந்திய தொலைத் தொடர்பு 2009 என்ற கண்காட்சிக்கு முன்னோட்டமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் ஆ. இராசா பேசியதாவது :

உள்ளடக்கிய வளர்ச்சிக்கு தொலைத் தொடர்பு என்ற கருத்து சரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. தொலை தூரத்தில் உள்ள ஊரகப் பகுதிகளிலும் தொலைத் தொடர்பு சேவைகளை விரிவாக்கம் செய்ய வேண்டிய அவசரத் தேவையை இந்த கருத்தரங்கு எடுத்துரைக்கிறது.

இந்திய தொலை தொடர்புத் துறையின் வளர்ச்சி தடையின்றி வளர்ந்து வருகிறது. சுமார் மூன்றாண்டுகளுக்கு முன்பு 2010-ஆம் ஆண்டு வாக்கில் 50 கோடி இணைப்புகளை எட்ட திட்டமிடப்பட்டது. அரசாங்கத்தின் சாதகமான கொள்கைகளால் இவ்வாண்டு செப்டம்பர் மாதத்திலேயே 50 கோடி இணைப்புகளையும் தாண்டிவிட்டோம். அத்துடன் ஒட்டுமொத்த தொலைத் தொடர்பு அடர்த்தியும் 44 சதவிகிதத்தை அடைந்துள்ளது. குறிப்பிட்ட கால வரையறைக்கு முன்பாகவே இந்த வளர்ச்சியை அரசாங்கத்துடன் கைகோர்த்து எட்டிய தொலைத் தொடர்பு நிறுவனங்களை நான் பாராட்டுகிறேன்.

அரசு மற்றும் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் தொடர் முயற்சிகளின் காரணமாக ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளிலிருந்த ஏற்றத் தாழ்வு விகிதம் குறுகிய காலத்திலேயே 1:10 என்ற விகிதத்தில் இருந்து 1:5 என்ற விகிதத்தில் குறைந்துள்ளது. அத்துடன் ஊரகப் பகுதிகளில் தொலைத் தொடர்பு அடர்த்தி விகிதமும் 4.5 சதவிகிதத்திலிருந்து 19 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. தனியார் துறையும் ஊரகப் பகுதிகளில் தொலைத் தொடர்பை ஏற்படுத்துவதில் பங்களித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களுடைய தொடர் பங்கேற்பு 2014-ஆம் ஆண்டுக்குள் ஊரக தொலைத் தொடர்பு அடர்த்தியை 40 சதவிகிதமாக எட்ட வேண்டும் என்ற அரசின் இலக்கை அடைய உதவும்.
குறைந்த விலையில் சாதாரண மக்களுக்கும் உலகத் தரத்திலான தொலைத் தொடர்பு வசதிகளை வழங்குவதை உறுதிப்படுத்துவது நம்முடைய தொலைத் தொடர்பு கொள்கையாகும். அந்த வகையில் இந்தியாவின் எந்த பகுதியில் இருந்தும் பேசுவதற்கு ஒரு நிமிடத்திற்கு 50 பைசா கட்டணத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை மேலும் குறைப்பதற்கு புதிய செல்போன் நிறுவனங்கள் அறிமுகம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. இவை நடைமுறைப்படுத்தப்படும் போது கடும் போட்டி காரணமாக தற்போதைய ஒரு நிமிட கட்டணத் திட்டம் மேலும் கணிசமாக குறையும்.

இந்தியாவானது நம்முடைய முன்னோர்கள் காலத்தில் இருந்து அறிவு நாடாக கருதப்படுகிறது. இன்டர்நெட் மற்றும் அகண்ட அலைவரிசை ஆகியவை காரணமாக அறிவுத் துறையில் தற்போது ஒட்டுமொத்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் அகண்ட அலைவரிசையைப் பரப்புகின்ற முயற்சியாக 2010-ஆம் ஆண்டுக்குள் இரண்டு கோடி இணைப்புகள் என்ற நம்முடைய இலக்கில் இதுவரை 70 லட்சம் இணைப்புகள் என்ற இலக்கு எட்டப்பட்டுள்ளது.
தற்போது 3ஜி எனப்படும் மூன்றாம் தலைமுறை ஸ்பெக்ட்ரம் மற்றும் பிடபுள்யூ சேவைகளை ஏலம் விடும் நிலையை எட்டியுள்ளோம். ஸ்பெக்ட்ரம் ஏலம் விடும் நடைமுறை தொடங்கப்பட்டு 2010-ம் ஆண்டு பிப்ரவரிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

செல்போன்களில் சாதாரண மனிதனும் அதிக வேகத்தில் தகவல்களை படியிறக்கம் செய்தல், பிராண்ட் பேண்ட் இணைப்பு பெறுதல், ஆடியோ மற்றும் வீடியோ வசதிகளை பெறுதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெறுவதற்கு இந்த 3ஜி ஸ்பெக்ட்ரம் மற்றும் பிடபுள்யூஏ சேவைகள் உதவும்.
தற்போது ஊரகப் பகுதிகளில் அகண்ட அலைவரிசை நெட்வொர்க்கை அமைப்பதில் உள்ள சிக்கல்கள், தனிநபர் கம்ப்யூட்டர் உள்ளிட்ட வாடிக்கையாளர் வளாக சாதனத்தின் அதிக விலை, வழிக்கான உரிமைத் தொடர்பான பிரச்சனைகள், மோசமான மின்சப்ளை ஆகியவற்றில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு காணவும் இந்த 3ஜி ஸ்பெக்ட்ரம் மற்றும் பிடபுள்யூஏ சேவைகள் உதவும்.

பொது மற்றும் தனியார் பங்களிப்பில் இரண்டாண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட ஏழு தொலைத் தொடர்பு சீர்மிகு மையங்கள் மற்றும் ஒருங்கிணைப்பு மையம் ஆகியவை நன்றாக செயல்பட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்திய தொலைத் தொடர்புத் துறையின் கண்காண்காட்சியானது இந்தியா மட்டுமின்றி உலகளவிலும் முக்கிய தொலைத் தொடர்பு நிகழ்ச்சியாகியுள்ளது. இதில் பங்கேற்பாளர்கள் மற்றும் மாநாடுகள் என்ற அம்சங்களின் அடிப்படையில் பெரிய அளவில் வளர்ச்சி ஏற்பட்டிருப்பதாக அறிய வருகிறேன். இந்திய சந்தையின் ஆற்றல்கள் மற்றும் இந்திய செல்போன் நிறுவனங்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துதல் ஆகியவற்றுக்கு இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு பங்கேற்பாளர்களை நான் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் ஆ. இராசா பேசினார்.

நிகழ்ச்சியில் மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் சச்சின் பைலட், தொலைத் தொடர்புத் துறை செயலாளர் பி. ஜே. தாமஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Read more...

தேசிய மின் ஆளுமைத் திட்டத்தின் கீழ் அனைத்து ஊராட்சிகளிலும் பொது சேவை மையங்கள் நிறுவப்படும் : அமைச்சர் ஆ. இராசா தகவல்


புது தில்லியில் 27.10.2009 தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்களின் மாநாட்டை துவக்கி வைத்து மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ. இராசா உரையாற்றினார்.

............................................................................................................................................................
புது தில்லி:

தேசிய மின் ஆளுமைத் திட்டத்தின் கீழ் அனைத்து ஊராட்சிகளிலும் பொது சேவை மையங்கள் நிறுவ மேலும் கூடுதலாக 1.50 இலட்சம் பொது சேவை மையங்கள் அமைக்க தகவல் தொழில்நுட்பத் துறை திட்டம் தயாரித்திருப்பதாக மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ. இராசா தெரிவித்துள்ளார்.

புது தில்லியில் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்களின் மாநாட்டில் அமைச்சர் ஆ. இராசா உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது :

இந்தப் பொது சேவை மையங்கள் பாரத் நிர்மாண் திட்டத்தின் கீழ் சேவைகளை அளிக்கும். அத்துடன் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம், சர்வ சிக்ஷா அபியான் எனப்படும் அனைவருக்கும் கல்வித் திட்டம், தேசிய ஊரக சுகாதார திட்டம் முதலிய முக்கியத் திட்டங்களுக்கும் இம்மையங்கள் ஒத்துழைப்பு நல்கும்.

வர்த்தக விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் வர்த்தக நிறுவனங்கள் ரிட்டர்ன்களை பதிவு செய்தல், தாக்கல் செய்தல் தொடர்பான சேவைகள், வருமான வரி ரிட்டர்ன்கள் மற்றும் வருமான வரித் துறையின் திரும்ப வழங்குதல்கள், 28 தேசிய வங்கிகள் மூலமாக நேரடி மற்றும் மறைமுக வரிகளை ஆன்லைனில் செலுத்துதல், ஓய்வூதியதாரர்களின் இணையதளம் மூலமாக ஓய்வூதியதாரர்களுக்கு ஆன்லைன் சேவைகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பொது சேவைகள் தற்போது ஆன்லைனில் உள்ளன. இந்த தேசிய சேவைகளுடன் சேர்த்து கணினிமயமாக்கப்பட்ட உரிமைகள் பதிவேட்டை வழங்குவதற்கு நிலப் பதிவேடுகளையும் சொத்துக்கள் பதிவு செய்தலையும் மற்றும் பேப்பர் அடிப்படையிலான ஓட்டுனர் உரிமங்களை ஸ்மார்ட் கார்டுகளாகவும் பல்வேறு மாநிலங்கள் கணினிமயமாக்கியுள்ளன. இந்த நடவடிக்கைகள் சாதாரண மனிதனுக்கு அதிலும் குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு கணிசமான அளவில் நிவாரணம் கொண்டு வந்துள்ளது.

இந்த பொது சேவை மையங்களை நிறுவுதல் மற்றும் இணைப்பு கொடுப்பதில் உள்ள சிக்கலை தீர்த்தல் ஆகியவற்றில் திட்டங்களின் பயன்களைப் பெறுவதற்கு சாதாரண மனிதனுக்கு அதிகாரம் வழங்க வேண்டியுள்ளது. அனைவருக்கும் தொழில்நுட்ப பயன்பாடு கிடைக்கும் வகையில் மத்திய அரசானது பாரத் செயல்பாட்டு முறை தீர்வுகள் (பிஓஎஸ்எஸ்) என்று பெயரிடப்பட்ட இந்திய தேவைகள் மற்றும் இந்திய மொழி உதவியோடு கூடிய ஜிஎன்யூ-லைனக்ஸ் உள்ளூர் டெஸ்க்டாப் விநியோகத்தை கொண்டு வந்துள்ளது. இது மின் ஆளுமை மற்றும் ஆன்லைன் கல்வியின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் அரசும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய தேவையுள்ளது. இந்த முயற்சியில் விரைவான அமலாக்கத்தை உறுதி செய்ய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்களிப்பு மிகவும் அவசியமாகும். பொதுச் சேவைகளை வழங்குவதில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு வாய்ப்பளிப்பதற்காக தேவையான சட்ட வழிமுறைகள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன. 2008-ஆம் ஆண்டின் தகவல் தொழில்நுட்ப (திருத்தம்) சட்டமானது மின்னாளுமையை விரைவாகவும் சிறப்பாகவும் செய்வதற்கான திட்டங்களை செயல்படுத்துவதில் பொது மற்றும் தனியார் பங்களிப்பை சிறந்த முறையில் உறுதி செய்கிறது. இதன் பயனாக மின்னாளுமைத் திட்டங்களை தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நடைமுறைப்படுத்துவது பலமடங்கு அதிகரித்துள்ளது. எம்சிஏ 21, பாஸ்போர்ட் மற்றும் பொது சேவை மையங்கள் ஆகியவை பொது சேவைகளை வழங்குவதில் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்களிப்புக்கு சிறந்த உதாரணங்களாகும். இவ்வாறு அமைச்சர் ஆ.இராசா பேசினார்.

Read more...

  ©Template by Dicas Blogger.

TOPO