#navbar-iframe { height: 0px; visibility: hidden; display: none; }

Thursday, November 05, 2009

ஊரகப் பகுதிகளில் 100 பேரில் 40 பேருக்கு தொலைத் தொடர்பு சேவை : அமைச்சர் ஆ. இராசா தகவல்

மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ. இராசா புது தில்லியில் தொலைத் தொடர்பு 2009 என்ற கண்காட்சிக்கு முன்னோட்டமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.
......................................................................................................................................................................

புது தில்லி:

ஐந்தாண்டுகளில் ஊரகப் பகுதிகளில் 100 பேரில் 40 பேருக்கு தொலைத் தொடர்பு சேவைகள் என்ற 40 சதவிகித ஊரக தொலை அடர்த்திநிலை எட்டப்படும் என்று மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ. இராசா கூறியுள்ளார்.

புது தில்லியில் இந்திய தொலைத் தொடர்பு 2009 என்ற கண்காட்சிக்கு முன்னோட்டமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் ஆ. இராசா பேசியதாவது :

உள்ளடக்கிய வளர்ச்சிக்கு தொலைத் தொடர்பு என்ற கருத்து சரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. தொலை தூரத்தில் உள்ள ஊரகப் பகுதிகளிலும் தொலைத் தொடர்பு சேவைகளை விரிவாக்கம் செய்ய வேண்டிய அவசரத் தேவையை இந்த கருத்தரங்கு எடுத்துரைக்கிறது.

இந்திய தொலை தொடர்புத் துறையின் வளர்ச்சி தடையின்றி வளர்ந்து வருகிறது. சுமார் மூன்றாண்டுகளுக்கு முன்பு 2010-ஆம் ஆண்டு வாக்கில் 50 கோடி இணைப்புகளை எட்ட திட்டமிடப்பட்டது. அரசாங்கத்தின் சாதகமான கொள்கைகளால் இவ்வாண்டு செப்டம்பர் மாதத்திலேயே 50 கோடி இணைப்புகளையும் தாண்டிவிட்டோம். அத்துடன் ஒட்டுமொத்த தொலைத் தொடர்பு அடர்த்தியும் 44 சதவிகிதத்தை அடைந்துள்ளது. குறிப்பிட்ட கால வரையறைக்கு முன்பாகவே இந்த வளர்ச்சியை அரசாங்கத்துடன் கைகோர்த்து எட்டிய தொலைத் தொடர்பு நிறுவனங்களை நான் பாராட்டுகிறேன்.

அரசு மற்றும் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் தொடர் முயற்சிகளின் காரணமாக ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளிலிருந்த ஏற்றத் தாழ்வு விகிதம் குறுகிய காலத்திலேயே 1:10 என்ற விகிதத்தில் இருந்து 1:5 என்ற விகிதத்தில் குறைந்துள்ளது. அத்துடன் ஊரகப் பகுதிகளில் தொலைத் தொடர்பு அடர்த்தி விகிதமும் 4.5 சதவிகிதத்திலிருந்து 19 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. தனியார் துறையும் ஊரகப் பகுதிகளில் தொலைத் தொடர்பை ஏற்படுத்துவதில் பங்களித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களுடைய தொடர் பங்கேற்பு 2014-ஆம் ஆண்டுக்குள் ஊரக தொலைத் தொடர்பு அடர்த்தியை 40 சதவிகிதமாக எட்ட வேண்டும் என்ற அரசின் இலக்கை அடைய உதவும்.
குறைந்த விலையில் சாதாரண மக்களுக்கும் உலகத் தரத்திலான தொலைத் தொடர்பு வசதிகளை வழங்குவதை உறுதிப்படுத்துவது நம்முடைய தொலைத் தொடர்பு கொள்கையாகும். அந்த வகையில் இந்தியாவின் எந்த பகுதியில் இருந்தும் பேசுவதற்கு ஒரு நிமிடத்திற்கு 50 பைசா கட்டணத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை மேலும் குறைப்பதற்கு புதிய செல்போன் நிறுவனங்கள் அறிமுகம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. இவை நடைமுறைப்படுத்தப்படும் போது கடும் போட்டி காரணமாக தற்போதைய ஒரு நிமிட கட்டணத் திட்டம் மேலும் கணிசமாக குறையும்.

இந்தியாவானது நம்முடைய முன்னோர்கள் காலத்தில் இருந்து அறிவு நாடாக கருதப்படுகிறது. இன்டர்நெட் மற்றும் அகண்ட அலைவரிசை ஆகியவை காரணமாக அறிவுத் துறையில் தற்போது ஒட்டுமொத்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் அகண்ட அலைவரிசையைப் பரப்புகின்ற முயற்சியாக 2010-ஆம் ஆண்டுக்குள் இரண்டு கோடி இணைப்புகள் என்ற நம்முடைய இலக்கில் இதுவரை 70 லட்சம் இணைப்புகள் என்ற இலக்கு எட்டப்பட்டுள்ளது.
தற்போது 3ஜி எனப்படும் மூன்றாம் தலைமுறை ஸ்பெக்ட்ரம் மற்றும் பிடபுள்யூ சேவைகளை ஏலம் விடும் நிலையை எட்டியுள்ளோம். ஸ்பெக்ட்ரம் ஏலம் விடும் நடைமுறை தொடங்கப்பட்டு 2010-ம் ஆண்டு பிப்ரவரிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

செல்போன்களில் சாதாரண மனிதனும் அதிக வேகத்தில் தகவல்களை படியிறக்கம் செய்தல், பிராண்ட் பேண்ட் இணைப்பு பெறுதல், ஆடியோ மற்றும் வீடியோ வசதிகளை பெறுதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெறுவதற்கு இந்த 3ஜி ஸ்பெக்ட்ரம் மற்றும் பிடபுள்யூஏ சேவைகள் உதவும்.
தற்போது ஊரகப் பகுதிகளில் அகண்ட அலைவரிசை நெட்வொர்க்கை அமைப்பதில் உள்ள சிக்கல்கள், தனிநபர் கம்ப்யூட்டர் உள்ளிட்ட வாடிக்கையாளர் வளாக சாதனத்தின் அதிக விலை, வழிக்கான உரிமைத் தொடர்பான பிரச்சனைகள், மோசமான மின்சப்ளை ஆகியவற்றில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு காணவும் இந்த 3ஜி ஸ்பெக்ட்ரம் மற்றும் பிடபுள்யூஏ சேவைகள் உதவும்.

பொது மற்றும் தனியார் பங்களிப்பில் இரண்டாண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட ஏழு தொலைத் தொடர்பு சீர்மிகு மையங்கள் மற்றும் ஒருங்கிணைப்பு மையம் ஆகியவை நன்றாக செயல்பட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்திய தொலைத் தொடர்புத் துறையின் கண்காண்காட்சியானது இந்தியா மட்டுமின்றி உலகளவிலும் முக்கிய தொலைத் தொடர்பு நிகழ்ச்சியாகியுள்ளது. இதில் பங்கேற்பாளர்கள் மற்றும் மாநாடுகள் என்ற அம்சங்களின் அடிப்படையில் பெரிய அளவில் வளர்ச்சி ஏற்பட்டிருப்பதாக அறிய வருகிறேன். இந்திய சந்தையின் ஆற்றல்கள் மற்றும் இந்திய செல்போன் நிறுவனங்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துதல் ஆகியவற்றுக்கு இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு பங்கேற்பாளர்களை நான் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் ஆ. இராசா பேசினார்.

நிகழ்ச்சியில் மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் சச்சின் பைலட், தொலைத் தொடர்புத் துறை செயலாளர் பி. ஜே. தாமஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

0 comments:

  ©Template by Dicas Blogger.

TOPO