#navbar-iframe { height: 0px; visibility: hidden; display: none; }

Saturday, September 26, 2009

சமஸ்கிருதம் படித்தால்தான் எம்.பி.பி.எஸ். அட்மிஷன் சட்டத்தை எதிர்த்தவர் அண்ணா : ஆ.இராசா பேச்சு


இந்துத்துவாவின் குணாம்சத்தில் ஒன்று: Prohibition of power - அதிகாரத்திற்கு வந்துவிடக்கூடாது என்று கவனமாக இருப்பது.

1930இல், 40 இல் நடந்ததெல்லாம் உங்களுக்குத் தெரியாது. பல மாணவர்களுக்குத் தெரியாது. இன்றைக்கு இருக்கிற அரசியலில் மாணவர்கள் எங்கெங்கோ போய்க்கொண்டிருக்கிறார்கள். திருவிழாவிலே குழந்தைகளை ஒரு நிமிடம் இடுப்பிலேயிருந்து தாய்மார்கள் கழட்டிவிட்டால் கிலுகிலுப்பைக்காரன் பக்கத்திலே ஓடிப்போகிற குழந்தையைப் போல் இன்றைக்கு இருக்கிற இளைஞர்கள் எங்கெங்கோ அரசியல் கட்சிக்குப் போய்க்கொண்டிருக்கிறார்கள். ஆனால் நான் சொல்ல விரும்புகிறேன் 1931 வரை இந்த மண்ணில் சமஸ்கிருதம் படித்தால் மட்டும்தான் எம்.பி.பி.எஸ் - இல் அட்மிஷன். பார்ப்பதற்குப் பைத்தியக்காரத்தனமாக இருக்கும். அண்ணா எழுதுகிறார்.

அண்ணா நேரடியாகச் சொன்னால் எடுக்காது என்று சொல்லி வேறுவிதமாக எழுதுகிறார்:
ரோமனசோ என்று ஒருவன் இருந்தான் ரஷ்யாவில், அவனுக்குத் தாய்மொழி இலத்தீன். ஆனால் இலத்தீன் படித்த அவனுக்கு மருத்துவக்கல்லூரியில் இடம் மறுக்கப்பட்டது. அதனால் அவன் இலக்கியத்திலே பின்னால் பெரிய ஆளாகி பெரிய நோபல் பரிசு பெற்றான். ஆனால் அவன் அப்போது வருந்தினான், எனக்கு இரஷ்ய மொழி தெரியவில்லை என்பதற்காக எம்.பி.பி.எஸ் சீட்
கொடுக்கவில்லையே என்று. உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும், ஒரு மொழி தெரியவில்லையே என்பதற்காக அந்த மண்ணிலே வாழுகிறவனுக்கு எம்.பி.பி.எஸ்ஸிலே சீட் இல்லையா என்று கேட்கிறாய் தம்பி, இங்கு மட்டும் என்ன வாழ்ந்தது? 1931 வரை எந்த ஜாதிக்காரனாக இருந்தாலும் சமஸ்கிருதம் தெரிந்தவனுக்கு மட்டும்தான் எம்.பி.பி.எஸ்ஸில் இடம் என்கின்ற சட்டத்தை உருவாக்கிய நாடு இந்த நாடு. எத்தனை மாணவர்களுக்குத் தெரியும்?

ஆக இது தெரியாமல் போன காரணத்தினால்தான் இன்றைக்கு நிழலிலே இருக்கின்றோம் என்கிற காரணத்தினால்தான் வெயிலின் வெப்பம் அறியாமல் நடந்து வந்த தலைவர்களையெல்லாம் நாம் மறந்துபோகின்ற அவலத்திற்கு நாம் ஆளாகியிருக்கிறோம். ஆகவே இது மூன்றாவது இடம்.
Prohibition of power -அதிகாரத்துக்கு வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார்கள்.
மூன்று Ban on property - சொத்து வாங்கக்கூடாது என்பது இந்துயிசத்தினுடைய தத்துவம். நான்கு, பெண்களை சிறுமைப்படுத்துவது, பெண்களை அடக்கி வைப்பது. Suppression of women – மிகப்பெரிய குற்றச்சாட்டு ஒன்று இருக்கிறது. அம்பேத்கர் மீது. பெரியார் பேசிய அளவிற்கு, பெரியார் போராடிய அளவிற்கு அம்பேத்கரை ஒரு பெண்ணுரிமைப் போராளியாக அடையாளப்படுத்த
முடியவில்லை என்று சொல்லுகிறார்கள்.

அம்பேத்கர் அதற்காகத் தனியாகக் குரல் கொடுக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால், அவருடைய குரல் வேறு விதமாக இருக்கிறது.

(தொடரும்...) அடுத்து,
பெரியார் - அம்பேத்கர் : வெள்ளையருக்கு வால்பிடித்தார்களா?

Read more...

Wednesday, September 23, 2009

தேயிலைதோட்ட தொழிலாளருக்கும் நல திட்ட உதவிகள் : அமைச்சர் ஆ.இராசா பெருமிதம்


குன்னூர்:

தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பயன் பெறும் வகையிலான பல்வேறு நல திட்ட உதவி களை முதல்வர் அறிவித்து செயல்படுத்தி வருவதாக மத்திய அமைச்சர் தெரிவித்தார்.

நீலகிரி பொது தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் உறுப்பினராக உள்ளவர்கள் அமைப்பு சாரா நல வாரியத்தில் இணைக்கப்பட்டதை தொடர்ந்து இதற்கான உறுப்பினர் அட்டை வழங்கும் விழா கோத்தகிரி புயல் நிவாரண கூடத்தில் செப்டம்பர் 11-ஆம் தேதி நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட பொது செயலாளர் இரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.

இந்த விழாவில், மத்திய அமைச்சர் ஆ.இராசா சிறப்பு விருந்தினராக பங்கேற்று நல வாரிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கி பேசுகையில், “தமிழக அரசு பல்வேறு நல திட்ட உதவிகளை ஏழை, எளிய மக்களுக்கு செய்து வருகிறது. கூலி தொழிலாளர்கள், விவசாய தொழிலாளர்களுக்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அரசு சார்பில் அமைப்பு சாரா நல வாரியம் ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் பல்வேறு நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே ஏழை, எளிய மக்களின் மீது அக்கறை கொண்ட அரசு கலைஞர் அரசு தான். கலைஞர் காப்பீடு திட்டத்தின் கீழ் 51 நோய்களுக்கான சிகிச்சை அளிக்க ரூ.1 இலட்சம் நிதி வழங்கும் வகையில் உயிர் காக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் தான் உடல் ரீதியாக ஏற்படும் நோய் குறித்து அனைத்து தரப்பு மக்களுக்கும் தெரிய வந்துள்ளது” என்று கூறினார்.

”நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலும் தேயிலை தொழிலை சார்ந்த தொழிலாளர்களே அதிகம் உள்ளனர். இவர்களுக்கு மாநில அரசின் நல திட்ட உதவிகள் கிடைக்க பெறவில்லை என்று கிடைத்த தகவலின் பேரில் தமிழக முதல்வரிடம் இதுகுறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
எனவே திருமண உதவி திட்டம், மகப்பேறு உதவி திட்டம் மட்டுமின்றி மாநில அரசின் அனைத்து நல திட்ட உதவிகளும் கிடைக்கும் வகையில் தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த மாவட்ட மக்களின் நலனுக்காக என்றும் நான் பாடுபட தயாராக உள்ளேன். அனைத்து தரப்பு மக்களும் தங்கள் குறைகளை தெரிவித்து பயன் பெற வேண்டும்” என்றும் அமைச்சர் ஆ.இராசா கூறினார்.

Read more...

Tuesday, September 22, 2009

3-ஆவது கட்டமாக 67 அஞ்சலகங்கள் நவீனமயம் : அமைச்சர் ஆ.இராசா தகவல்

ஊட்டி-திருப்பூர் இடையேயான அஞ்சலக சரக்கு போக்குவரத்து சேவையை மத்திய தகவல் மற்றும் தொழில் நுட்ப துறை அமைச்சர் ஆ.இராசா, ஊட்டியில் தொடக்கி வைத்தார். மாநில கதர் வாரியத்துறை அமைச்சர் இராமச்சந்திரன், குன்னூர் சட்டப்பேரவை உறுப்பினர் சவுந்திர பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
........................................................................................................................................................................
ஊட்டி:

புராஜக்ட் ஏரோ திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மூன்றாவது கட்டமாக 67 அஞ்சலகங்கள் அதி நவீனமயமாக்கப்படும் என அமைச்சர் ஆ.இராசா தெரிவித்தார்.

இந்திய அஞ்சல் துறை சார்பில் அதி நவீன அஞ்சல் அலுவலகத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 27 அதிநவீன அஞ்சலகங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா ஊட்டியில் நடந்தது. தமிழக அஞ்சல்துறை தலைவர் சக்கரவர்த்தி வரவேற்றார். தமிழக கதர் வாரியத்துறை அமைச்சர் இராமச்சந்திரன், ஊட்டி சட்டப்பேரவை உருப்பினர் கோபாலன், குன்னூர் சட்டப்பேரவை உறுப்பினர் சவுந்திரபாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் குப்புசாமி, ஊட்டி நகராட்சி தலைவர் இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆ.இராசா கலந்துகொண்டு 27 அதி நவீன அஞ்சலகங்களை நாட்டிற்கு அர்ப்பணித்து பேசுகையில், “புராஜக்ட் ஏரோ திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 27 அஞ்சலகங்கள் அதி நவீன அஞ்சலகங்களாக மாற்றப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டத்தில் மட்டும் ஊட்டி, அருவங்காடு உட்பட 9 அஞ்சலகங்கள் அதிநவீன அஞ்சலகங்களாக மாற்றப்பட்டுள்ளது.
நாட்டிலுள்ள இரு துறைகள் சேவை செய்து வருகிறது. ஒன்று இரயில்வே துறை. மற்றொன்று அஞ்சல்துறை. இரயில்வே துறை சேவையும், லாபமும் ஈட்டி வருகிறது. ஆனால் அஞ்சல் துறை மட்டுமே லாபத்தை பார்க்காமல் சேவை செய்து வருகிறது.
இந்தியாவில் உள்ள 6 இலட்சம் கிராமங்களில் ஒரு இலட்சத்து 60 ஆயிரம் அஞ்சலகங்கள் உள்ளன. இவை மூலம் மக்களுக்கு அஞ்சல் துறை தொடர்ந்து உணர்வு பூர்வமாக சேவை செய்து வருகிறது’’ என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், ”தற்போது இந்தியாவிலுள்ள அஞ்சலகங்கள் ரூ.500 கோடி மதிப்பில் நவீன மயமாக்கப்படவுள்ளது. முதற்கட்டமாக 50 அஞ்சலகங்கள் நவீனமயமாக்க முடிவு செய்யப்பட்டது. கடந்த ஆட்சியில் 9 அஞ்சலகங்கள் தமிழகத்தில் நவீன மயமாக்கப்பட்டது. தற்போது இரண்டாவது கட்டமாக தமிழகத்தில் 27 அஞ்சலகங்கள் நவீனப்படுத்தப்பட்டுள்ளது. மூன்றாவது கட்டத்தில், 67 அஞ்சலகங்கள் நவீன மயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள தோட்ட தொழிலாளர்கள் உண்மையான பிரச்னை என்னவென்று தமிழக முதல்வருக்கு கொண்டு செல்லப்படாமல் இருந்தது. முதியோர் உதவித் தொகை, திருமண உதவித் தொகை போன்றவை கிடைக்காமல் இருந்தது. தற்போது இது தமிழக முதல்வரிடம் கொண்டு செல்லப்பட்டு சட்டத்தை திருத்தி தோட்ட தொழிலாளர்களுக்கு அனைத்து வசதிகளும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார்.

இந்த நிகழ்வில் ஊட்டி நகராட்சி துணை தலைவர் இரவிக்குமார், வேளாண் விற்பனை குழு தலைவர் இளங்கோ, தேர்தல் பணிக்குழு செயலாளர் முபாரக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read more...

Monday, September 21, 2009

இந்துத்துவாவின் குணாம்சங்கள் என்னென்ன செய்யும்? - அமைச்சர் ஆ.இராசா பேச்சு


இந்துத்துவா என்னும் கொள்கை சொல்கிறோமே, இதனுடைய அடிப்படைக் கூறுகள் என்ன? முதல்கூறு, சமூகத்தை ஏற்றத்தாழ்வுள்ள படைப்புகளாக மாற்றுவது. Gradual graded inequality – the first character of the Hinduism, இந்துயிசத்தினுடைய தத்துவம் என்று அம்பேத்கர் நான்கு கூறுகளைச் சொல்லுகிறார். Graded inequality வேற்றுமையைக் கூட ரொம்ப புத்திசாலித்தனமாக படிப்படியாக வைப்பது. Horizontal division வேறு Vertical division வேறு அம்பேத்கர் மிகத் தெளிவாகச் சொல்லுகிறார்.

Horizontal division என்று சொன்னால், கிடைநிலையில் பாகுபடுத்திக்கொண்டே போவது இதிலே ஒரு கட்டையை எடுத்துவிட்டு இன்னொரு கட்டைக்குத் தாவலாம். ஆனால் ஏணிப்படியைப் போல vertical ஆக வைத்தால் ஒரு படியை விட்டு இன்னொரு படிக்குப் போகமுடியாது. இந்தியாவில் ஜாதி எப்படி இருக்கிறது என்றால் படிக்கட்டைப் போல இருக்கிறது. Vertical division - vertical ஆக இருக்கிற காரணத்தினாலேதான் ஒரு ஜாதியிலிருந்து இன்னொரு ஜாதியை தாண்டமுடியாமல் போகிறது என்கிற ஆய்வினை அம்பேத்கர் வைக்கிறார். அதைத் தந்தை பெரியாரும் ஒப்புக்கொண்டு, ஜாதியை நாம் எடுக்கவேண்டுமென்று சொன்னால் மதத்தை ஒழித்தாக வேண்டும். மதத்தை ஒழிக்க வேண்டுமென்று சொன்னால் மதத்தைக் காப்பாற்றுகின்ற கடவுளை ஒழித்தாக வேண்டும் என்றார். இந்த இடத்திலே நான் ஒன்றைச் சொல்ல வேண்டும்.

அம்பேத்கர் தன்னை ஒரு ஆன்மீகவாதி என்று அடையாளப்படுத்திக் கொண்டவர். அதனால் தான் பெரியாரை நான் கவனமாகச் சொன்னேன், பெரியாரை நாம் நாத்திகனாகப் பார்ப்பது என்பது வேறு, அந்த நாத்திகத்துக்குள் அவர் சொல்லுவது நான் ஒரு தாராளவாதி என்று அவர் சொல்லுவதற்குக் காரணம், கடவுளை நேரடியாக வெறுக்க வேண்டிய அவசியம், எதிர்க்க வேண்டிய அவசியம் பெரியாருக்கு வந்ததற்குக் காரணம் வேறு. பகுத்தறிவு என்பது வேறு. ஆனால் பெரியாருடைய நாத்திகத்திற்குப் பின்னால் இருக்கிற சமூகம் சார்ந்த உணர்வும், அம்பேத்கர் உயர்த்திப்பிடித்த ஆன்மீகமும் ஒரு இடத்தில் சந்திக்கிறது. ஜாதி கூடாது, இறப்புக்குப் பிறகு ஒன்றும் கிடையாது.

புத்தரிடத்திலே கேட்டார்கள், இறப்புக்கு, சாவிற்குப் பிறகு மனிதன் எங்கே போகிறான் என்று கேட்டதற்கு அவர் சொன்னார்:

``ஒரு விளக்கு அணைந்ததற்குப் பிறகு அந்த ஒளி எங்கே போகிறது என்று கேட்டால் நான் என்ன சொல்லுவேன்’’. ரொம்ப எளிமையாகச் சொன்னார்.

ஒரு
காலகட்டத்தில் அம்பேத்கர் இன்னும் தெளிவாகச் சொல்லுகிறார். அவர் எழுதிய இரண்டு புத்தகங்களைக் கல்லூரி மாணவர்கள், வரலாற்று மாணவர்கள் படித்தாக வேண்டும். Who were the sudras? Why they have been called as sudras and termed as fourth varna in Indo-aryan society? சூத்திரர்கள் யார்? அவர்கள் ஏன் நான்காவது வர்ணமாக ஆக்கப்பட்டார்கள்? என்று ஒரு புத்தகம். ஆய்வுக்கட்டுரை. இன்னொரு புத்தகம். Who were the untouchables? Why they have been called as untouchables? அவர்கள் ஏன் தீண்டத்தகாதவர்களாக அழைக்கப்பட்டார்கள் என்று சொன்னபோது சொல்கிறார், தீண்டாமை ஜாதி எல்லாம் எப்போது வருகிறது என்று சொன்னால், கிறிஸ்து பிறந்ததற்குப் பின்பு 400 ஆண்டுகளில் அதற்கு முன்பு கிடையாது. பாகியான் வருகிற பொழுது அதைக் குறிப்பிட்டுச் சொல்கிறார். கி.மு.400 வது ஆண்டு பௌத்தத்திற்கும் ஏற்கனவே இருந்த ஆரிய சமூகத்திற்கும் நடந்த மோதலின் வெளிப்பாடுதான் இந்த ஜாதிகளெல்லாம் வருகிறதென்று அங்கே அவர் குறிப்பிட்டு ஒரு ஆய்வுக்கட்டுரை வைக்கிறார். அந்த ஆய்வை மறுதலிக்கிறவர்களும் இருக்கிறார்கள், ஏற்றுக்கொண்டவர்களும் இருக்கிறார்கள்.

ஆனால், எங்கே நாம் நிற்கிறோம் என்று சொன்னால் , இந்த நான்கு குணங்கள் இருக்கிறதே, Graded inequality-number one வேறுபாடுகளை ஏற்படுத்தி அந்த வேறுபாடுகளைக் கட்டாயமாக ஆக்குவது. இன்னொன்று, அப்படி வேறுபாடுகளை ஏற்படுத்தியதற்குப் பின்னால் பெரும்பான்மை சமூகத்திற்குக் கல்வியை மறுப்பது. இது ஒரு குணாம்சம். இந்துத்துவாவினுடைய குணாம்சத்தில் இதுவும் ஒன்று. மூன்றாவது, Prohibition of power அவன் அதிகாரத்திற்கு வந்துவிடக்கூடாது என்று கவனமாக இருப்பது. 1930இல், 40 இல் எல்லாம் என்ன பண்ண முடியும்?

(தொடரும்...) அடுத்து வருவது
சமஸ்கிருதம் படித்தால்தான் எம்.பி.பி.எஸ். அட்மிஷன்!

Read more...

Saturday, September 19, 2009

கல்வி, தொழில்துறைகளை வளப்படுத்த கூடுதல் முயற்சி : அமைச்சர் ஆ.இராசா பேச்சு

பெரம்பலூரில் புதிதாக கட்டப்பட்ட தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனையை மத்திய அமைச்சர் ஆ.இராசா திறந்து வைத்தார். நிறுவனர் சீனிவாசன்,செயலாளர் நீல்ராஜ், துணை தலைவர் கதிரவன், சட்டப் பேரவை உறுப்பினர் இராஜகுமார், திமுக மாவட்டச் செயலாளர் துரைசாமி மற்றும் பலர் உடனுள்ளனர்.
.........................................................................................................................................................................
பெரம்பலூர்:

பெரம்பலூரில் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை திறப்புவிழா 18-ஆம் தேதி நடைபெற்றது. இந்த விழாவிற்கு கல்வி நிறுவனங்களின் தாளாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். செயலாளர் நீல்ராஜ் வரவேற்றார்.துணைத்தலைவர் கதிரவன், இயக்குநர்கள் மணி, இராஜபூபதி, நிர்வாக அலுவலர் இராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வனிதா, மாவட்ட வருவாய் அதிகாரி பழனிச்சாமி, சட்டப்பேரவைறுப்பினர்கள் இராஜ்குமார், சிவசங்கர், சட்டப் பேரவை முன்னாள்உறுப்பினர் துரைசாமி, முன்னாள் சேர்மன் அட்சயகோபால், அரசு வழக்குரைஞர் இராஜேந்திரன், நகராட்சி துணைத் தலைவர் முகுந்தன், ரோவர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் வரதராஜன், நகர வர்த்தகர் சங்கத் தலைவர் பழனியாண்டி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

மருத்துவமனையை மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆ.இராசா திறந்து வைத்து பேசுகையில்,”பொதுவாழ்வில் செல்வம் ஈட்டுவது அவரவரர் உரிமையாகும். அவ்வாறு ஈட்டக்கூடிய செல்வம் அறத்தின் பயனாக ஈட்டும்போது பிறருக்கும் அது இன்பத்தை தரக்கூடியதாக இருக்கும். பெரம்பலூர் மாவட்டத்தில் செய்யப்பட்ட பல்வேறு பணிகளுக்கும் காரணகர்த்தா முதல்வர் கருணாநிதி தான். எனது பிறந்தவீடான பெரம்பலூர் மட்டுமின்றி தற்போது புகுந்த வீடாக உள்ள நீலகிரியிலும் மக்கள் நலனுக் காக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறேன். பெரம்பலூர் மாவட்டத்தில் கல்வி மற்றும் தொழில்துறைகளை வளப்படுத்த கூடுதல் முயற்சி எடுக்கப்படும்’’ என்று கூறினார்.

இந்த விழாவில் கல்லூரி முதல்வர்கள் தாயுமானவன், ஜெயராமன், அனுஷாபாஸ்கர், முத்தரசு, சுகுமார், வேல்முருகன், பாஸ்கரன், துணை முதல்வர்கள் அப்ரோஸ், முத்துமணி, நந்தக்குமார், செந்தில்குமார், டீன்கள் கண்ணன், சேகர் மற்றும் பலர் பங்கேற்றனர். மருத்துவமனை டீன் அரங்கநாதன் நன்றி கூறினார்.

Read more...

Friday, September 18, 2009

பெரியார் களஞ்சியம் - குடிஅரசு 1925 தொகுப்பு வெளியீடு : அமைச்சர் ஆ.இராசா பங்கேற்பு


தந்தை பெரியாரின் 131-ஆம் பிறந்த நாளையொட்டி 17.9.2009 அன்று சேலத்தில் நடைபெற்ற விழாவில், பெரியார் களஞ்சியம் - குடிஅரசு 1925 தொகுப்பு நூலை, பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வெளியிட முதல் பிரதியை மத்திய அமைச்சர் ஆ. இராசா பெற்றுக்கொண்டார்.
......................................................................................................................................................................

தந்தைபெரியாரின் 131 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, அறிஞர் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா, விடுதலை நாளேட்டின் 75 ஆம் ஆண்டு பவள விழா, திராவிடர் கழக மாணவரணி மாநாடு ஆகிய விழாக்கள் சேலம் கோட்டை ஸ்டேட் பேங்க் அருகில் 17.9.2009 அன்று மாலை 7.30 மணியளவில் நடைபெற்றன.

இவ்விழாவில், சென்னை முரசொலி அலுவலகத்திலிருந்தபடி வீடியோ கான்ஃபரன்சிங் மூலமாக தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் கலந்துகொண்டு, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் புதிய வெளியீடான பெரியார் களஞ்சியம் குடிஅரசு 1925 நூலினை வெளியிட்டார். வேளாண்துறை அமைச்சர் வீரபாண்டி எஸ். ஆறுமுகம் ரூபாய் அய்யாயிரம் கொடுத்து நூலினை பெற்றுக்கொண்டார்.

சேலத்தில், மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.இராசா அவர்களிடம், நூலின் பதிப்பாசிரியரும் பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் கி. வீரமணி நூலை வழங்கினார். பின்பு பெரியார் களஞ்சியம் குடிஅரசு முதல் தொகுதி பற்றி கி.வீரமணி அறிமுகவுரை ஆற்றினார்.

இந்நிகழ்வில், அமைச்சர் ஆர்க்காடு நா.வீராசாமி, அமைச்சர் டாக்டர் க. பொன்முடி, சட்டமன்ற உறுப்பினர் வீரபாண்டி ஆ.ராஜா, திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கலி. பூங்குன்றன், திராவிடன் புத்தக நிலைய இயக்குநர் வீ. அன்புராஜ், ஆடிட்டர் ஆர்.இராமச்சந்திரன், பெரியார் திடல் மேலாளர் ப. சீதாராமன், வழக்கறிஞர் த. வீரசேகரன், சேலம் மாநகர தி.மு.க. செயலாளர் எஸ்.டி. கலையமுதன், சேலம் மேயர் ரேகா பிரியதர்சினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more...

Saturday, September 12, 2009

"3 ஜி சேவை” திசம்பர் 31-க்குள் செயல்படும்: அமைச்சர் ஆ.இராசா தகவல்

சென்னையில் வெள்ளிக்கிழமை நடந்த தகவல் தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கில் "இந்தியா 2009- 10: அலைவரிசையின் வளர்ச்சிப் பாதை' என்ற நூலை மத்திய அமைச்சர் ஆ. இராசா வெளியிட்டார். அந்த நூலுடன் ( வலமிருந்து) அமைச்சர் பூங்கோதை, மத்திய அமைச்சர் ஆ.இராசா, கருத்தரங்கின் தலைவர் மகாலிங்கம், இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பின் தேசியத் தொலைத் தொடர்புத் தலைவர் மனோஜ், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பின் தலைவர் சுவாமிநாதன்.
....................................................................................................................................................................
சென்னை:
தொலைத் தொடர்புத் துறையின் வளர்ச்சியான "3 ஜி சேவை” இந்த ஆண்டு திசம்பர் 31- ஆம் தேதிக்குள் செயல்படும் என்று மத்திய அமைச்சர் ஆ.இராசா தெரிவித்தார்.

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை அன்று தகவல் தொழில் நுட்பம் தொடர்பான " கனெக்ட் 2009' கருத்தரங்கம் தொடங்கி யது. "இந்தியா 2009-10: அலைவரிசையின் வளர்ச்சி பாதை என்ற புத்தகத்தை மத்திய அமைச்சர் ஆ.இராசா வெளியிட்டார். அத்துடன், சிறந்த தகவல் தொழில் நுட்ப மற்றுமதியாளர்களுக்கான விருதை வழங்கினார்.

பின்னர் அமைச்சர் உரையாற்றுகையில், ”தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியில் ஊலக நாடுகள் வரிசையில், இந்தியா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. தொலைத் தொடர்புத் துறையின் வளர்ச்சியான "3 ஜி சேவை” இந்த ஆண்டு திசம்பர் 31- ஆம் தேதிக்குள் செயல்படும்.

தகவல் தொடர்புத்துறை தொடர்பாக கொள்கை முடிவுகள் எடுப்பது மத்திய அரசின் கையில் உள்ளது. மாநில அரசுகளும் தகவல் தொடர்புத் துறை கொள்கை முடிவுகள் எடுக்கக்கூடிய அதிகாரம் வழங்குவது குறித்து இந்தக் கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டு மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்கும் பட்சத்தில் இது குறித்து அரசு பரிசீலனை செய்யும்” என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து பி.எஸ்.என்.எல். பங்கு விற்பனை குறித்து செய்தியாளர்கள் வினாவுக்கு ஆ.இராசா விடையளிக்கையில், "இந்திய அரசின் தொலைத் தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். பங்குகளைத் தனி யாருக்கு விற்பனை செய்வது தொடர்பாக தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். பேச்சு வார்த்தையின் முடிவில் பங்குகள் விற்பனை செய்வது தொடர்பாக அரசு முடிவெடுக்கும். பேச்சு வார்த்தை ஒரு வேளை பயனளிக்காமல் போனால் அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிடம் ஆலோசனை செய்வேன்” என்று தெரிவித்தார்.

Read more...

Thursday, September 10, 2009

பெரியாரும் அம்பேத்கரும் பொருள்முதல்வாதிகள் : அமைச்சர் ஆ.இராசா பேச்சு

ஒரு பொருள்முதல்வாதிக்கு இருக்கவேண்டிய அடிப்படையான பண்பு என்ன என்று சொன்னால், இயற்கைக்கும் மனிதனுக்கும் உள்ள உறவை இயற்கையாகவே பார்ப்பது. சிம்பிளா சொன்னா அவ்வளவுதான். மெட்டீரியலிசம்னா போட்டுக் குழப்பிகிட்டு இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. மெட்டீரியலிசம்னு சொன்னா, இயற்கைக்கும் மனிதனுக்கும் உள்ள உறவை இயற்கையாகவே பார்ப்பது.

இந்த மார்க்சிய கண்ணோட்டத்தோடு சமூகத்தைப் பார்த்த இரண்டு தலைவர்கள் இந்தியாவில் உண்டு என்றால் அவர்கள் பெரியாரும் அம்பேத்கரும்தான். வேறு எந்த கம்யூனிஸ்ட்காரர்களும் கிடையாது.

கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மிகப்பெரிய தலைவர் எஸ்.ஏ. டாங்கேவே ”வேதத்திலிருந்து தான் கம்யூனிசம் வந்தது’’ ன்னு சொல்லிட்டுப் போயிட்டாரு. வேதத்துக்கும் கம்யூனிசத்துக்கும் என்ன சம்மந்தம்? இன்றைக்கு இருக்கின்ற இந்த மேடையில் நின்று கொண்டு சொல்கின்றேன். பெரியாருக்கும் அம்பேத்கருக்கும் பொருத்தப்பாட்டைப் பற்றி இன்றைக்கு பேசிக்கொண்டிருக்கின்றோம். ஒரு கால கட்டத்தில் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் பெரியாரையும் அம்பேத்காரையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இவர்களுடைய வாழ்க்கைத் தளம், இவர்களுடைய நெறி எல்லாம் ஒரு சின்ன சிட்டிகைக்குள் அடைக்கப்படவேண்டியவை என்று கம்யூனிஸ்ட்கள் கருதினார்கள். வர்ணபேதம் பேசப்பட வேண்டியதில்லை என்று கருதினார்கள். ஆனால் அப்படிப் பேசாமல் இருப்பதற்கு அவர்கள் மார்க்சியத்தைப் படிக்காமல் போனார்கள் என்பதுதான் உண்மை.

பெரியார் பிறப்பதற்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் சுதந்திரப் போர் என்கின்ற தலைப்பில் இந்தியாவைப் பற்றி காரல் மார்க்ஸ் எழுதுகிறார்: ”பசுவையும் குரங்குகளையும் வணங்குகிற மூடத்தனம் இருக்கின்ற தெற்காசியாவில், குறிப்பாக இந்தியாவில், மனிதனை இன்னொரு மனிதன் கருவியாகக் கருதுகிற புரட்சி வருவதற்கான சாத்தியக் கூறுகளே இல்லை” என்று சொன்னார்.

காரல் மார்க்ஸ் சொன்ன அறிவுரையை ஏற்க மறுத்த மார்க்சியவாதிகள் ஏறத்தாழ 150 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றைக்கு தந்தை பெரியாரின் தடியையும், அம்பேத்கரின் கண்ணாடியையும் போட்டுக்கொண்டு அருந்ததியர்களின் மாநாட்டில் உரிமைக்காகக் கலந்து கொள்கிறார்கள் என்றால் பெரியாரும் அம்பேத்கரும் இன்னும் நூறு ஆண்டுகளுக்குத் தேவைப்படுகிறார்கள் என்பதைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். இதுதான் இவர்களுக்கு இருக்கிற பொருத்தப்பாடு .

பெரியாரும் அம்பேத்கரும் ஒரு தளத்தில் நின்றார்கள்
இந்துயிசம் என்று வருகிற போது இரண்டு பேரும் ஒரு தளத்தில் நின்றார்கள் . அதற்கு என்ன காரணம்? இரண்டுபேரும் ஒருவிதத்திலே நாத்திகவாதிகள். அம்பேத்கர் தன்னை ஒரு இடத்திலேகூட நாத்திகவாதி என்று வெளிப்படையாகச் சொல்லிக்கொள்ளவில்லை. ஆனால் இருக்கிற கட்டமைப்பை உடைக்க வேண்டுமென்று விரும்பியவர்.

இன்னொரு இடத்திலே பெரியார் சொல்லுகிறார்: ”நான் நாத்திகன் என்றுகூட சொல்லிக்கொள்ள விரும்பவில்லை. நான் தாராளவாதி’’ என்று சொல்லுகிறார். அதற்கு என்ன காரணமென்றால் , பெரியாருடைய நாத்திகம், இன்றைக்கும் சொல்லுகின்றேன். திராவிடர்கழகத்தின் மீது அல்லது பெரியாரின் கருப்புச் சட்டைக்காரர்கள் மீது இருக்கிற மிகப் பெரிய குற்றச்சாட்டு. பெரியார் என்றால் இவர்கள் அறிந்தது, அல்லது பெரியார் என்றால் இவர்கள் அடையாளப்படுத்த விரும்புவது கடவுள் மறுப்பாளராக மட்டும்தான் பெரியாரைப் பார்க்கிறார்கள். மதம் வேண்டாம், கடவுள் வேண்டாம், மோட்சம் இல்லை, நரகம் இல்லை என்று சொல்லுவதற்காக மட்டுமே பெரியார் தேவைப்படுகிறார் என்கின்ற ஒரு வறட்டுத்தனமான நாத்திகத்திற்குள் பெரியாரை அடக்குவதற்கு இன்றைக்கு இருக்கிற பெரியாரிஸ்ட்டுகள் தெரிந்தோ, தெரியாமலோ ஆளாகிறார்கள் அல்லது ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள் என்கின்ற ஒரு குற்றச்சாட்டில் இருக்கிற உண்மையை நாம் மறுதலிப்பதற்கில்லை.

அதனால்தான் பெரியார் சொல்லுகிறார்: நான் நாத்திகன் என்பதைக் காட்டிலும் ஒரு தாராளவாதி என்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இப்படி அவர் சொல்லுவதற்குக் காரணம் , பெரியாரின் நாத்திகம் சமூகம் சார்ந்தது. அறிவியல் பூர்வமாக அணுகி கடவுள் இல்லை என்று சொல்கிறார்.

பெரியார் சொல்லுகிறார்: ”மனிதனுக்கு மனிதன் தொடக்கூடாது, கண்ணில் படக்கூடாது , தொட்டால் தீட்டு, நடந்தால் தீட்டு என்று சொல்லுகின்ற ஒரு நாட்டை பூகம்பத்தால் அழிக்காமலோ, சண்டமாருதத்தால் தூளாக்கப்படாமலோ, சமுத்திரம் பொங்கி எழுந்து அமிழச் செய்யாமலோ இருப்பதைப் பார்த்த பிறகும்கூட கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்றால் அதை எப்படி நான் நம்புவது ?’’ என்று கேட்டார். எனவே பிரச்சனை கடவுளுக்கும் பெரியாருக்கும் அல்ல. இந்த சமூகத்தின் மீது பெரியாருக்கு அக்கறை இருக்கிறது. ஜாதிப் பிரச்சனையைப் பெரியார் தொடுகிற போது கடவுள் குறுக்கே வருகிறார். ஏன் காரணம் இப்படி இருக்கிறாய் என்று கேட்ட போது, இல்லை இப்படித்தான் சாஸ்திரம் சொல்லுகிறது என்ற விளக்கம் சொல்லப்பட்டது.

அதனால் தான் அம்பேத்கர் Annihilation of Caste என்ற புத்தகத்திலே சொன்னார், ”You must take the stand that Buddha took; You must take the stand that Guru Nanak took; those leaders who not only denied the sastras and also the authorities of sastras. வேதங்களை மறுப்பது மட்டுமல்ல, வேதங்களுக்கு ஆதாரமாக இருக்கிற எல்லாவற்றையும் நீ அறுத்து விடு என்று Annihilation of Caste இல் சொல்லுவதற்குக் காரணம், இங்கேதான் அந்த மய்யப்புள்ளி இருக்கிறது.

அதனால் தான் பெரியார் சொன்னார். ”நான் ஜாதியை ஒழிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். நான் ஜாதியை ஒழிக்க விரும்புகிற இந்தப் போரில் உன்னுடைய கடவுளை, மதத்தைக் காப்பாற்றிக் கொள்ள முடியுமென்று சொன்னால், காப்பாற்றிக் கொண்டு போ.”

நம்மால முடியலைங்கறது தானே பிரச்சனை. ஜாதியை ஒழிக்க வேண்டுமென்று முயற்சி செய்கிற போது அந்த ஜாதி எங்கே இருக்கிறது என்றால் வர்ணாஸ்ரமத்திலே இருக்கிறது. வர்ணாஸ்ரமம் எங்கே இருக்கிறது என்று சொன்னால், வர்ணாஸ்ரமத்தைப் படைத்தது நானே என்று கண்ணன் சொல்கிறான். ஆக, Philosophy of Hinduism - இந்துயிசத்தின் தத்துவம் என்று வருகிறபோது, அம்பேத்கர் தனியாகவே இதற்கென்று ஒரு சேப்டரே எழுதுகின்றார். Philosophy of Hinduism என்று வருகிற போது தந்தை பெரியார் சொன்ன அந்தத் தத்துவத் தளத்திலேதான் அம்பேத்கர் நிற்கிறார். அம்பேத்கர் செய்த ஆய்விலேதான் தந்தை பெரியார் நிற்கிறார். இது இவர்களுக்கிடையிலே இருக்கிற ஓர்மை.

(தொடரும்...) அடுத்து.

இந்துத்துவா என்னும் கொள்கையின் அடிப்படைக் கூறுகள்?

Read more...

Monday, September 07, 2009

பிராமணியத்திற்கும், இந்துத்துவாவிற்கும் வித்தியாசமில்லை : ஆ.இராசா பேச்சு

தந்தை பெரியார் பிராமணீயம் என்று எடுத்துக்கொண்டிருக்கக்கூடாது, இந்துத்துவா என்றுதான் எடுத்துக்கொண்டிருக்க வேண்டும் என்று சொன்னார்கள். நாங்கள் படித்துப் பார்த்தவரை, அய்யா எஸ்.வி.ஆர் அவர்களும் ஒப்புக்கொள்வார்கள், பிராமணியத்திற்கும், இந்துத்துவாவிற்கும் ஒரு மிகப்பெரிய வித்தியாசமில்லை. இரண்டும் ஒன்றுதான். ஒரு சமூகத்தைப் படைத்து அந்த சமூகம் இப்படித்தான் வாழவேண்டுமென்பது மட்டுமல்ல, அவர்களைப் படிக்காதே என்று சொன்ன சமூகம் உலகத்திலே இன்னொரு சமுதாயம் இல்லை.

இன்னும் கூட அம்பேத்கர் ஒருமுறை ஆய்வு செய்கிறார். The caste system in India is not virtually visible இந்த அரங்கத்திலே இருக்கிற யாரையாவது பார்த்து வன்னியர் யார்? ஆதிதிராவிடர் யார்? கவுண்டர் யார்? பள்ளர் யார்? என்று நிறம் பிரிக்க முடியுமா? இந்த முகத்தைப் பார்த்து யாரையாவது ஜாதி சொல்ல முடியுமா உங்களால்? வேறுபாடு இருக்கிறது என்பது வேறு. Racial difference என்று சொல்லுவார்கள். ஒரு இன வேறுபாடு என்பது முகத்திலேயே தெரியும்.

நீக்ரோக்களைப் பார்த்தால் தெரியும். நீக்ரோக்கள் எவ்வளவு அல்லல் பட்டிருக்கிறார்கள்? The world owes a duty to untouchables as it is declared to other communities in the world என்று அம்பேத்கர் ஒரு இடத்திலே சொல்லுவார். உலகத்திலே நீக்ரோவை எப்படிப் பார்த்தீர்களோ, உலகத்திலே வேறு விதமான இன ஒடுக்கல் முறையை எப்படிப் பார்த்தீர்களோ, அப்படிப்பட்ட இன ஒடுக்கல் முறைதான் இந்தியாவில் இருக்கிறதென்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அது தெரியவில்லை நமக்கு. அவ்வளவு தான். ஒரு நீக்ரோவைப் பார்த்தால் தெரியும், வெள்ளைக்காரன் இவன், கருப்பன் இவன், இவனுக்கு கஷ்டம் இருக்கிறது என்று சொல்லலாம்.

நீக்ரோக்கள் படும் கொடுமையை பெஞ்சமின் மொலாய்சியஸ் என்கின்ற கவிஞன் ஒருமுறை சொன்னான். ஒரு கருப்புப் பெண்மணியை நீதிமன்றத்துக்கு அழைத்து வருகிறார்கள், அந்தக் கருப்பு இனப் பெண்மணி வெள்ளைக்காரப் போலீஸ்காரர்களால் கைது செய்யப்பட்டு காவல்நிலையத்தில் கொடுமைப்படுத்தப்படுகிறாள். எப்படிக் கொடுமைப்படுத்தப்படுகிறாள் என்பதை நீதிமன்றத்திலே பெஞ்சமின் மொலாய்சியஸ் என்கின்ற சிந்தனையாளன் தன்னுடைய கருத்தை சொல்லுகிற போது நீதிமன்றக் காட்சி வாயிலாகச் சொல்லுவான். ஒரு கருப்பு இனப் பெண்ணை நீதிமன்றத்திற்கு கூட்டி வருகிறார்கள்.
நீதிபதி கேட்கிறார்: ”அம்மா, சிறையில் உன்னை யாராவது கொடுமைப் படுத்தினார்களா?”
”இல்லை, எந்தக் கொடுமையும் படுத்தவில்லை”.

“நன்றாகச் சொல் கொடுமைப்படுத்தினார்களா?”

”இல்லை. அய்யா எனக்கு எந்தக் கொடுமையும் நடக்கவில்லை. ஆனால் ஒன்று, என் அருகிலே இருக்கிறானே இந்தப் போலீஸ்காரனுடைய தடிக்கு மட்டும் விந்து பாய்ச்சுகிற ஆற்றல் இருந்தால் நான் இந்நேரம் ஒரு குழந்தைக்குத் தாய்’’.


நீதிபதிக்குப் புரியவில்லை. அப்படியானால் எவ்வளவு பெரிய கொடுமையை அந்தப் போலீஸ்காரர்கள் அந்தப் பெண்ணுக்கு செய்திருக்கிறார்கள் என்பதிலிருந்து அந்த இன ஒடுக்கலினுடைய அடர்த்தியை உங்களால் அறிய முடியும்.

அம்பேத்கர் சொல்லுகிறார்: இந்த ஒடுக்கலைக் காட்டிலும் எங்கள் நாட்டில் இருக்கிற ஜாதிய ஒடுக்குமுறை கொடுமையானது. ஆனால் இதைச் சொல்லாமல் பார்த்துக்கொள்கிற வேலையை பிராமணீயம் இங்கே செய்து கொண்டிருக்கிறது. அதனால்தான் அவங்க அக்ரிமென்ட் போட்டாங்க. எந்த இடத்திலே தந்தை பெரியாருக்கும் அண்ணல் அம்பேத்கருக்கும் ஓர்மை வருகிறது என்று சொன்னால், முதல்ல சுதந்திரம் வேணான்னு சொன்னது ரெண்டுபேர்தான். இன்னும் சொல்லப்போனால் 1927 இல் சைமன் கமிஷன் வருகிறது. 1919 ஆம் ஆண்டு அரசியல் சட்டத்தை எப்படித் திருத்தலாம் என்பதற்காக சைமன் கமிஷன் வந்த போது , இங்கே இருக்கிற காங்கிரஸ்காரர்கள் சைமன் கமிஷனே வெளியேறு என்று சொல்லுகிறார்கள். அதற்கு அவர்கள் சொன்ன காரணம் போலித்தனமானது. இந்தியாவில் யாரும் இந்தியர்கள் அந்தக் குழுவிலே இல்லை என்று சொன்னார்கள். அது அல்ல நோக்கம். சைமன் கமிஷன் எதற்காக வந்தது என்றால், இந்தியாவில் ஜாதி என்றால் என்ன? எத்தனை ஜாதி இருக்கிறது? ஏன் இவர்கள் படிக்க வைக்கப்படாமல் இருக்கிறார்கள்? ஏன் இவர்கள் நாகரீகம் இல்லாமல் இருக்கிறார்கள்? இவர்களுக்கு யார் காரணம்? என்பதைக் கண்டறியவேண்டிய சூழ்நிலை கமிஷனுக்கு தேவைப்பட்டது.

அம்பேத்கர் இன்னொரு இடத்தில் சொல்லுகிறார்.
No intellectual class in the world has prostituted its intelligence to invent a philosophy to keep its fellowmen in perpetual state of imbalance and poverty as Brahmin community has done to India உலகத்திலே இருக்கிற எந்த முன்னேறிய ஜாதியும், மேட்டுக்குடி ஜாதியும் தான் வளரும் - சுரண்டும் உண்மைதான். ஆனால் படிக்காதே. வறுமையிலும், ஏழ்மையிலும் இரு என்பதற்காக கடவுளின் பெயரால் ஒரு தத்துவத்தைக் கண்டுபிடித்து அந்த தத்துவத்தைச் சுமத்தி ஒரு மிகப்பெரிய சமுதாயத்தை 95 பேர் இருக்கிற சமூகத்தை அறியாமையிலும், ஏழ்மையிலும், கல்வியறிவில்லாமலும் வைத்திருக்கிற ஒரு கொடுமைக்குச் சொந்தக்காரர்கள் யாரென்று சொன்னால் இந்தியாவில் பிராமணர்களைத் தவிர வேறு யாரும் கிடையாது. இது அம்பேத்கர் அவர்கள் சொன்னது.

இதைத் தான் அய்யா தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள்: உலகத்திலே எந்த தேசத்திலேயும் இப்படி இல்லையே, வேற்றுமைகள் இருக்கிறது. ஆனால் அந்த வேற்றுமைகளை பிறப்போடு முடிச்சுப் போடவில்லையே என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள். ஆக அந்த இரண்டு பேருக்கும் இருக்கின்ற ஒற்றுமை என்ன என்று சொன்னால், இந்து மதத்தை எதிர்ப்பது. அதற்குக் காரணம் , மனிதனை மனிதனாகப் பார்ப்பது. அது ஒரு விதம்.

(தொடரும்)... அடுத்து,
அம்பேத்கரும் பெரியாரும் பொருள்முதல்வாதிகள்

Read more...

Wednesday, September 02, 2009

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட முதல் புத்தகம் : அம்பேத்கர் எழுதியது - அமைச்சர் ஆ.இராசா பேச்சு


Genesis, Mechanisism and Development of Caste in India என்ற கட்டுரையை அம்பேத்கர் எழுதுகிற போது அவருக்கு வயது 25. 25 வயதில் ஒரு இளைஞன் இப்படி ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையை எழுத முடியுமா என்று இதுவரை யாருக்கும் தெரியாது. அவரால் பயன்படுத்தப்பட்ட மேற்கோள்கள் எவ்வளவு என்பதை இதுவரை ஆழம் பார்த்தவர்கள் இல்லையோ என எண்ணுகிற அளவுக்கு அம்பேத்கரினுடைய அறிவுநுட்பம் அந்த நூல்களில் வெளிப்படுகிறது.

இன்னும் சொல்லப்போனால் 1857 இல் 1856 இல் சிப்பாய்க் கலகம் நடந்த பொழுது மதவிவகாரங்களில் நாங்கள் தலையிட மாட்டோம் என்று வெள்ளைக்காரர்கள் இந்தியத் தலைவர்களுக்கு எழுதிக் கொடுத்தார்கள். பன்றிக் கொழுப்பை துப்பாக்கியிலே வைத்ததாகச் சொல்லப்பட்ட பொழுது அதை இஸ்லாமியர்கள் ஒப்புக்கொள்ள முடியாது என்று சொன்னபோது ஒரு மிகப்பெரிய இராணுவக் கலவரம் வெடித்தது. சிப்பாய்களுக்குள் கலகம் வந்த பொழுது வெள்ளைக்கார அரசாங்கம் ஒரு ஒப்புதலுக்கு வந்தது, உங்களுடைய மத விவகாரங்களில் நாங்கள் தலையிட மாட்டோம் என்று .

Genesis, Mechanisism and Development of Caste in India - ஜாதியினுடைய தோற்றமும் வளர்ச்சியும் அது இயங்குகிற முறையும் என்று ஒரு புத்தகத்தை அம்பேத்கர் 1916 இல் எழுது கிறார். இந்தியாவில் முதன்முதலாகத் தடைசெய்யப்பட்ட ஒரு புத்தகம் வெள்ளைக்கார அரசாங்கத்தால் உண்டு என்று சொன்னால் அதுதான் அந்தப் புத்தகம் இந்தியாவில் முதன்முதலாகத் தடைசெய்யப்பட்ட அம்பேத்கரின் புத்தகம்தான் வெள்ளைக்கார அரசாங்கத்தால் ஒரு இந்தியர் எழுதி முதன்முதலில் தடைசெய்யப்பட்ட புத்தகம். அந்தப் புத்தகத்தைத் தடைசெய்ய வேண்டுமென்று Privy Council என்று சொல்லப்படுகிற உச்சநீதி மன்றம் வரை சென்றனர். இன்றைக்கு உச்சநீதி மன்றம் டெல்லியிலே இருக்கிறது. ஆனால் அன்றைக்கு உச்சநீதி மன்றம் Privy Council என்று சொல்லப்பட்ட, இங்கிலாந்திலே இருந்த அந்த உச்சநீதிமன்றம் வரை சென்று அந்தப் புத்தகத்திற்குத் தடை வாங்கினார்கள் இங்கே இருக்கின்ற பிராமணர்கள். ஏனென்றால் அதிலேதான் ஜாதி எப்படித் தோன்றியது ? அது இயங்குகிற காரணத்தினால் என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றன? என்று சொன்னார். அதிலே ஒரு இடத்திலே சொல்லுவார்: Hindus are the only people in the world whose relation between man to man has been consecrated as sacred, eternal and inviolative. உலகத்திலே வேறுபாடுகள் இருக்கிறது.

பிளாட்டோ எழுதிய `குடியரசே’ Division of Labour தான். Division of Labour என்பது வேறு , Division of Labourers என்பது வேறு. தொழிலைப் பிரிப்பதென்பது வேறு, தொழிலாளர்களைப் பிரிப்பதென்பது வேறு. மேலை நாடுகளில் தொழிலைப் பிரித்தார்கள்,

நான்கூட ஒருமுறை வெளிநாட்டிற்குச் சென்றிருந்தேன். வெளிநாட்டிற்குச் சென்றிருந்து, ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டல் அறையிலே நான் தங்கியிருந்த போது , திடீரென்று கதவைத் தட்டினார்கள் மாணவர்கள். மாணவர்கள் என்று தெரியாது. இளம் பிராயத்திலே இருக்கின்ற பெண்கள், ஆண்கள் எல்லாம் திடீரென்று கதவைத் தட்டினார்கள். உங்கள் அறையைச் சுத்தம் செய்யப் போகிறோம் என்று சொன்னார்கள். எனக்கு ஒரு சந்தேகம். யாரைப் பார்த்தாலும் நமது இந்தியன் புத்தி இருக்கிறதே நமக்குள் தெருக்கூட்டி என்றால் இப்படித்தான் இருப்பான், தோட்டி என்றால் இப்படித்தான் இருப்பான்., என்று நம்மையும் அறியாமல் நமது மூளைக்குள் இருக்கிற புத்தி அங்கே வெளியே வந்தது. நீங்களெல்லாம் யார்? உங்களுக்கு எவ்வளவு சம்பளம் தருகிறார்கள் என்று அவர்களைப் பார்த்து நான் கேட்டேன். அவர்கள் உடுத்தியிருந்த உடை, அவர்கள் வந்த நாகரீகம், அவர்கள் பழகிய பண்பாடு இவற்றையெல்லாம் பார்த்து எவ்வளவு உங்களுக்கு சம்பளம் என்று கேட்டேன்.

முதலில் அவர்கள் கேட்ட கேள்வி, Are you Indian? நீ ஒரு இந்தியனா? என்று கேட்டார்கள், பரிகாசத்தோடு. ஏன் என்று கேட்டேன். இந்தியாவில்தான் கூட்டுவதற்கும், கழுவுவதற்கும் ஒரு ஜாதி இருக்கிறது என்று கேள்விப்பட்டோம், நாங்கள் பக்கத்திலே இருக்கிற மருத்துவக் கல்லூரியின் மாணவர்கள், இந்த ஓட்டலைக் குத்தகைக்கு எடுத்திருக்கிறோம். ஒரு முறை பகலிலும், இரவிலும் சுத்தம் செய்து விட்டுப் போனால் எங்களுக்கு பாக்கெட் மணி இத்தனை டாலர் கிடைக்கிறது. இதைத்தான் நாங்கள் பெருமையாகக் கருதுகிறோம் என்று சொல்லுகின்ற மனப்பாங்கு அந்த நாட்டில் இருக்கின்றது.

எனவே அங்கு சலவைத் தொழிலாளி இருக்கிறான். ஆனால் பிறப்போடு அது முடிச்சுப்போடப்படவில்லை. அங்கே தச்சன் இருக்கிறான், ஆனால் பிறப்போடு அது முடிச்சுப் போடப்படவில்லை. அங்கே செருப்புத் தைக்கிற தொழிலாளி இருக்கிறான். ஆனால் அவன் பிறப்போடு முடிச்சுப் போடப்படவில்லை. இன்றைக்குச் செருப்புத் தைக்கிற தொழிலாளி நாளைக்குத் தன் தொழிலை மாற்றிக் கொள்ளுவார். அதனால்தான் சொன்னார், Division of Labour என்பது வேறு , Division of Labourers என்பது வேறு. அம்பேத்கர் சொல்லுவார்: Hindus are the only people in the world whose relation between man to man has been consecrated by the religion as inviolative and eternal மாற்ற முடியாது. ஒருமுறை ஒருவன் பிறந்து விட்டால் மாற்றமுடியாது. நீ இந்த ஜாதி என்று பிறந்து விட்டால் நான் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் மாற்ற முடியாது.

அய்யா கிண்டலாகச் சொல்லுவார். இந்து யார் என்று விளம்பரம் சொல்லுகிற போது, இந்து யாரென்று அரசியல் சட்டத்திலே, நம்முடைய இந்து லாவிலே சொல்லுகிறபோது, யார் இந்து என்று சொன்னால் அய்யா சொல்லுகிறார்:

எதுன்னு கேட்டா எதுன்னு நீ சரியாச் சொல்லனுமில்ல? எது மாடு இல்லையோ, எது கோழி இல்லையோ, எது கொக்கு இல்லையோ அதெல்லாம் ஆடு ன்னு சொன்னா அவன் பைத்தியக்காரன்ல? அது மாதிரின்னு சொன்னார். அதுவரைக்கும் புரியல நமக்கு.

அய்யா சொல்றார், இந்துன்னா யாருன்னு இவன் சொல்லணுமில்ல? Those who are not Muslims, those who are not Christians, those who are not Persians, those who are not Jews, they are Hindus. யாரெல்லாம் முகம்மதியன் அல்லவோ, யாரெல்லாம் கிறிஸ்துவன் அல்லவோ, யாரெல்லாம் பார்சியன் அல்லவோ, யாரெல்லாம் அவனல்லவோ, இவனல்லவோ அவனெல்லாம் இந்து.

இதைத் தாண்டி இன்னொருவன் பிறக்கமுடியாது இந்த மண்ணில். இந்த முடிச்சை கொண்டு வந்த சேர்த்த இழிவு , பெருமை எது என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அது இந்த இந்துமதத்திற்குத் தான் உண்டு.

இதைத்தான் தந்தை பெரியார் அவர்களும், அண்ணல் அம்பேத்கர் அவர்களும் ஒரே இடத்தில் நின்று சொன்னார்கள்.

( தொடரும்...) அடுத்து
பிராமணியத்திற்கும், இந்துத்துவாவிற்கும் வித்தியாசமில்லை

Read more...

  ©Template by Dicas Blogger.

TOPO