#navbar-iframe { height: 0px; visibility: hidden; display: none; }

Monday, September 07, 2009

பிராமணியத்திற்கும், இந்துத்துவாவிற்கும் வித்தியாசமில்லை : ஆ.இராசா பேச்சு

தந்தை பெரியார் பிராமணீயம் என்று எடுத்துக்கொண்டிருக்கக்கூடாது, இந்துத்துவா என்றுதான் எடுத்துக்கொண்டிருக்க வேண்டும் என்று சொன்னார்கள். நாங்கள் படித்துப் பார்த்தவரை, அய்யா எஸ்.வி.ஆர் அவர்களும் ஒப்புக்கொள்வார்கள், பிராமணியத்திற்கும், இந்துத்துவாவிற்கும் ஒரு மிகப்பெரிய வித்தியாசமில்லை. இரண்டும் ஒன்றுதான். ஒரு சமூகத்தைப் படைத்து அந்த சமூகம் இப்படித்தான் வாழவேண்டுமென்பது மட்டுமல்ல, அவர்களைப் படிக்காதே என்று சொன்ன சமூகம் உலகத்திலே இன்னொரு சமுதாயம் இல்லை.

இன்னும் கூட அம்பேத்கர் ஒருமுறை ஆய்வு செய்கிறார். The caste system in India is not virtually visible இந்த அரங்கத்திலே இருக்கிற யாரையாவது பார்த்து வன்னியர் யார்? ஆதிதிராவிடர் யார்? கவுண்டர் யார்? பள்ளர் யார்? என்று நிறம் பிரிக்க முடியுமா? இந்த முகத்தைப் பார்த்து யாரையாவது ஜாதி சொல்ல முடியுமா உங்களால்? வேறுபாடு இருக்கிறது என்பது வேறு. Racial difference என்று சொல்லுவார்கள். ஒரு இன வேறுபாடு என்பது முகத்திலேயே தெரியும்.

நீக்ரோக்களைப் பார்த்தால் தெரியும். நீக்ரோக்கள் எவ்வளவு அல்லல் பட்டிருக்கிறார்கள்? The world owes a duty to untouchables as it is declared to other communities in the world என்று அம்பேத்கர் ஒரு இடத்திலே சொல்லுவார். உலகத்திலே நீக்ரோவை எப்படிப் பார்த்தீர்களோ, உலகத்திலே வேறு விதமான இன ஒடுக்கல் முறையை எப்படிப் பார்த்தீர்களோ, அப்படிப்பட்ட இன ஒடுக்கல் முறைதான் இந்தியாவில் இருக்கிறதென்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அது தெரியவில்லை நமக்கு. அவ்வளவு தான். ஒரு நீக்ரோவைப் பார்த்தால் தெரியும், வெள்ளைக்காரன் இவன், கருப்பன் இவன், இவனுக்கு கஷ்டம் இருக்கிறது என்று சொல்லலாம்.

நீக்ரோக்கள் படும் கொடுமையை பெஞ்சமின் மொலாய்சியஸ் என்கின்ற கவிஞன் ஒருமுறை சொன்னான். ஒரு கருப்புப் பெண்மணியை நீதிமன்றத்துக்கு அழைத்து வருகிறார்கள், அந்தக் கருப்பு இனப் பெண்மணி வெள்ளைக்காரப் போலீஸ்காரர்களால் கைது செய்யப்பட்டு காவல்நிலையத்தில் கொடுமைப்படுத்தப்படுகிறாள். எப்படிக் கொடுமைப்படுத்தப்படுகிறாள் என்பதை நீதிமன்றத்திலே பெஞ்சமின் மொலாய்சியஸ் என்கின்ற சிந்தனையாளன் தன்னுடைய கருத்தை சொல்லுகிற போது நீதிமன்றக் காட்சி வாயிலாகச் சொல்லுவான். ஒரு கருப்பு இனப் பெண்ணை நீதிமன்றத்திற்கு கூட்டி வருகிறார்கள்.
நீதிபதி கேட்கிறார்: ”அம்மா, சிறையில் உன்னை யாராவது கொடுமைப் படுத்தினார்களா?”
”இல்லை, எந்தக் கொடுமையும் படுத்தவில்லை”.

“நன்றாகச் சொல் கொடுமைப்படுத்தினார்களா?”

”இல்லை. அய்யா எனக்கு எந்தக் கொடுமையும் நடக்கவில்லை. ஆனால் ஒன்று, என் அருகிலே இருக்கிறானே இந்தப் போலீஸ்காரனுடைய தடிக்கு மட்டும் விந்து பாய்ச்சுகிற ஆற்றல் இருந்தால் நான் இந்நேரம் ஒரு குழந்தைக்குத் தாய்’’.


நீதிபதிக்குப் புரியவில்லை. அப்படியானால் எவ்வளவு பெரிய கொடுமையை அந்தப் போலீஸ்காரர்கள் அந்தப் பெண்ணுக்கு செய்திருக்கிறார்கள் என்பதிலிருந்து அந்த இன ஒடுக்கலினுடைய அடர்த்தியை உங்களால் அறிய முடியும்.

அம்பேத்கர் சொல்லுகிறார்: இந்த ஒடுக்கலைக் காட்டிலும் எங்கள் நாட்டில் இருக்கிற ஜாதிய ஒடுக்குமுறை கொடுமையானது. ஆனால் இதைச் சொல்லாமல் பார்த்துக்கொள்கிற வேலையை பிராமணீயம் இங்கே செய்து கொண்டிருக்கிறது. அதனால்தான் அவங்க அக்ரிமென்ட் போட்டாங்க. எந்த இடத்திலே தந்தை பெரியாருக்கும் அண்ணல் அம்பேத்கருக்கும் ஓர்மை வருகிறது என்று சொன்னால், முதல்ல சுதந்திரம் வேணான்னு சொன்னது ரெண்டுபேர்தான். இன்னும் சொல்லப்போனால் 1927 இல் சைமன் கமிஷன் வருகிறது. 1919 ஆம் ஆண்டு அரசியல் சட்டத்தை எப்படித் திருத்தலாம் என்பதற்காக சைமன் கமிஷன் வந்த போது , இங்கே இருக்கிற காங்கிரஸ்காரர்கள் சைமன் கமிஷனே வெளியேறு என்று சொல்லுகிறார்கள். அதற்கு அவர்கள் சொன்ன காரணம் போலித்தனமானது. இந்தியாவில் யாரும் இந்தியர்கள் அந்தக் குழுவிலே இல்லை என்று சொன்னார்கள். அது அல்ல நோக்கம். சைமன் கமிஷன் எதற்காக வந்தது என்றால், இந்தியாவில் ஜாதி என்றால் என்ன? எத்தனை ஜாதி இருக்கிறது? ஏன் இவர்கள் படிக்க வைக்கப்படாமல் இருக்கிறார்கள்? ஏன் இவர்கள் நாகரீகம் இல்லாமல் இருக்கிறார்கள்? இவர்களுக்கு யார் காரணம்? என்பதைக் கண்டறியவேண்டிய சூழ்நிலை கமிஷனுக்கு தேவைப்பட்டது.

அம்பேத்கர் இன்னொரு இடத்தில் சொல்லுகிறார்.
No intellectual class in the world has prostituted its intelligence to invent a philosophy to keep its fellowmen in perpetual state of imbalance and poverty as Brahmin community has done to India உலகத்திலே இருக்கிற எந்த முன்னேறிய ஜாதியும், மேட்டுக்குடி ஜாதியும் தான் வளரும் - சுரண்டும் உண்மைதான். ஆனால் படிக்காதே. வறுமையிலும், ஏழ்மையிலும் இரு என்பதற்காக கடவுளின் பெயரால் ஒரு தத்துவத்தைக் கண்டுபிடித்து அந்த தத்துவத்தைச் சுமத்தி ஒரு மிகப்பெரிய சமுதாயத்தை 95 பேர் இருக்கிற சமூகத்தை அறியாமையிலும், ஏழ்மையிலும், கல்வியறிவில்லாமலும் வைத்திருக்கிற ஒரு கொடுமைக்குச் சொந்தக்காரர்கள் யாரென்று சொன்னால் இந்தியாவில் பிராமணர்களைத் தவிர வேறு யாரும் கிடையாது. இது அம்பேத்கர் அவர்கள் சொன்னது.

இதைத் தான் அய்யா தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள்: உலகத்திலே எந்த தேசத்திலேயும் இப்படி இல்லையே, வேற்றுமைகள் இருக்கிறது. ஆனால் அந்த வேற்றுமைகளை பிறப்போடு முடிச்சுப் போடவில்லையே என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள். ஆக அந்த இரண்டு பேருக்கும் இருக்கின்ற ஒற்றுமை என்ன என்று சொன்னால், இந்து மதத்தை எதிர்ப்பது. அதற்குக் காரணம் , மனிதனை மனிதனாகப் பார்ப்பது. அது ஒரு விதம்.

(தொடரும்)... அடுத்து,
அம்பேத்கரும் பெரியாரும் பொருள்முதல்வாதிகள்

0 comments:

  ©Template by Dicas Blogger.

TOPO