#navbar-iframe { height: 0px; visibility: hidden; display: none; }

Thursday, September 10, 2009

பெரியாரும் அம்பேத்கரும் பொருள்முதல்வாதிகள் : அமைச்சர் ஆ.இராசா பேச்சு

ஒரு பொருள்முதல்வாதிக்கு இருக்கவேண்டிய அடிப்படையான பண்பு என்ன என்று சொன்னால், இயற்கைக்கும் மனிதனுக்கும் உள்ள உறவை இயற்கையாகவே பார்ப்பது. சிம்பிளா சொன்னா அவ்வளவுதான். மெட்டீரியலிசம்னா போட்டுக் குழப்பிகிட்டு இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. மெட்டீரியலிசம்னு சொன்னா, இயற்கைக்கும் மனிதனுக்கும் உள்ள உறவை இயற்கையாகவே பார்ப்பது.

இந்த மார்க்சிய கண்ணோட்டத்தோடு சமூகத்தைப் பார்த்த இரண்டு தலைவர்கள் இந்தியாவில் உண்டு என்றால் அவர்கள் பெரியாரும் அம்பேத்கரும்தான். வேறு எந்த கம்யூனிஸ்ட்காரர்களும் கிடையாது.

கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மிகப்பெரிய தலைவர் எஸ்.ஏ. டாங்கேவே ”வேதத்திலிருந்து தான் கம்யூனிசம் வந்தது’’ ன்னு சொல்லிட்டுப் போயிட்டாரு. வேதத்துக்கும் கம்யூனிசத்துக்கும் என்ன சம்மந்தம்? இன்றைக்கு இருக்கின்ற இந்த மேடையில் நின்று கொண்டு சொல்கின்றேன். பெரியாருக்கும் அம்பேத்கருக்கும் பொருத்தப்பாட்டைப் பற்றி இன்றைக்கு பேசிக்கொண்டிருக்கின்றோம். ஒரு கால கட்டத்தில் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் பெரியாரையும் அம்பேத்காரையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இவர்களுடைய வாழ்க்கைத் தளம், இவர்களுடைய நெறி எல்லாம் ஒரு சின்ன சிட்டிகைக்குள் அடைக்கப்படவேண்டியவை என்று கம்யூனிஸ்ட்கள் கருதினார்கள். வர்ணபேதம் பேசப்பட வேண்டியதில்லை என்று கருதினார்கள். ஆனால் அப்படிப் பேசாமல் இருப்பதற்கு அவர்கள் மார்க்சியத்தைப் படிக்காமல் போனார்கள் என்பதுதான் உண்மை.

பெரியார் பிறப்பதற்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் சுதந்திரப் போர் என்கின்ற தலைப்பில் இந்தியாவைப் பற்றி காரல் மார்க்ஸ் எழுதுகிறார்: ”பசுவையும் குரங்குகளையும் வணங்குகிற மூடத்தனம் இருக்கின்ற தெற்காசியாவில், குறிப்பாக இந்தியாவில், மனிதனை இன்னொரு மனிதன் கருவியாகக் கருதுகிற புரட்சி வருவதற்கான சாத்தியக் கூறுகளே இல்லை” என்று சொன்னார்.

காரல் மார்க்ஸ் சொன்ன அறிவுரையை ஏற்க மறுத்த மார்க்சியவாதிகள் ஏறத்தாழ 150 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றைக்கு தந்தை பெரியாரின் தடியையும், அம்பேத்கரின் கண்ணாடியையும் போட்டுக்கொண்டு அருந்ததியர்களின் மாநாட்டில் உரிமைக்காகக் கலந்து கொள்கிறார்கள் என்றால் பெரியாரும் அம்பேத்கரும் இன்னும் நூறு ஆண்டுகளுக்குத் தேவைப்படுகிறார்கள் என்பதைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். இதுதான் இவர்களுக்கு இருக்கிற பொருத்தப்பாடு .

பெரியாரும் அம்பேத்கரும் ஒரு தளத்தில் நின்றார்கள்
இந்துயிசம் என்று வருகிற போது இரண்டு பேரும் ஒரு தளத்தில் நின்றார்கள் . அதற்கு என்ன காரணம்? இரண்டுபேரும் ஒருவிதத்திலே நாத்திகவாதிகள். அம்பேத்கர் தன்னை ஒரு இடத்திலேகூட நாத்திகவாதி என்று வெளிப்படையாகச் சொல்லிக்கொள்ளவில்லை. ஆனால் இருக்கிற கட்டமைப்பை உடைக்க வேண்டுமென்று விரும்பியவர்.

இன்னொரு இடத்திலே பெரியார் சொல்லுகிறார்: ”நான் நாத்திகன் என்றுகூட சொல்லிக்கொள்ள விரும்பவில்லை. நான் தாராளவாதி’’ என்று சொல்லுகிறார். அதற்கு என்ன காரணமென்றால் , பெரியாருடைய நாத்திகம், இன்றைக்கும் சொல்லுகின்றேன். திராவிடர்கழகத்தின் மீது அல்லது பெரியாரின் கருப்புச் சட்டைக்காரர்கள் மீது இருக்கிற மிகப் பெரிய குற்றச்சாட்டு. பெரியார் என்றால் இவர்கள் அறிந்தது, அல்லது பெரியார் என்றால் இவர்கள் அடையாளப்படுத்த விரும்புவது கடவுள் மறுப்பாளராக மட்டும்தான் பெரியாரைப் பார்க்கிறார்கள். மதம் வேண்டாம், கடவுள் வேண்டாம், மோட்சம் இல்லை, நரகம் இல்லை என்று சொல்லுவதற்காக மட்டுமே பெரியார் தேவைப்படுகிறார் என்கின்ற ஒரு வறட்டுத்தனமான நாத்திகத்திற்குள் பெரியாரை அடக்குவதற்கு இன்றைக்கு இருக்கிற பெரியாரிஸ்ட்டுகள் தெரிந்தோ, தெரியாமலோ ஆளாகிறார்கள் அல்லது ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள் என்கின்ற ஒரு குற்றச்சாட்டில் இருக்கிற உண்மையை நாம் மறுதலிப்பதற்கில்லை.

அதனால்தான் பெரியார் சொல்லுகிறார்: நான் நாத்திகன் என்பதைக் காட்டிலும் ஒரு தாராளவாதி என்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இப்படி அவர் சொல்லுவதற்குக் காரணம் , பெரியாரின் நாத்திகம் சமூகம் சார்ந்தது. அறிவியல் பூர்வமாக அணுகி கடவுள் இல்லை என்று சொல்கிறார்.

பெரியார் சொல்லுகிறார்: ”மனிதனுக்கு மனிதன் தொடக்கூடாது, கண்ணில் படக்கூடாது , தொட்டால் தீட்டு, நடந்தால் தீட்டு என்று சொல்லுகின்ற ஒரு நாட்டை பூகம்பத்தால் அழிக்காமலோ, சண்டமாருதத்தால் தூளாக்கப்படாமலோ, சமுத்திரம் பொங்கி எழுந்து அமிழச் செய்யாமலோ இருப்பதைப் பார்த்த பிறகும்கூட கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்றால் அதை எப்படி நான் நம்புவது ?’’ என்று கேட்டார். எனவே பிரச்சனை கடவுளுக்கும் பெரியாருக்கும் அல்ல. இந்த சமூகத்தின் மீது பெரியாருக்கு அக்கறை இருக்கிறது. ஜாதிப் பிரச்சனையைப் பெரியார் தொடுகிற போது கடவுள் குறுக்கே வருகிறார். ஏன் காரணம் இப்படி இருக்கிறாய் என்று கேட்ட போது, இல்லை இப்படித்தான் சாஸ்திரம் சொல்லுகிறது என்ற விளக்கம் சொல்லப்பட்டது.

அதனால் தான் அம்பேத்கர் Annihilation of Caste என்ற புத்தகத்திலே சொன்னார், ”You must take the stand that Buddha took; You must take the stand that Guru Nanak took; those leaders who not only denied the sastras and also the authorities of sastras. வேதங்களை மறுப்பது மட்டுமல்ல, வேதங்களுக்கு ஆதாரமாக இருக்கிற எல்லாவற்றையும் நீ அறுத்து விடு என்று Annihilation of Caste இல் சொல்லுவதற்குக் காரணம், இங்கேதான் அந்த மய்யப்புள்ளி இருக்கிறது.

அதனால் தான் பெரியார் சொன்னார். ”நான் ஜாதியை ஒழிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். நான் ஜாதியை ஒழிக்க விரும்புகிற இந்தப் போரில் உன்னுடைய கடவுளை, மதத்தைக் காப்பாற்றிக் கொள்ள முடியுமென்று சொன்னால், காப்பாற்றிக் கொண்டு போ.”

நம்மால முடியலைங்கறது தானே பிரச்சனை. ஜாதியை ஒழிக்க வேண்டுமென்று முயற்சி செய்கிற போது அந்த ஜாதி எங்கே இருக்கிறது என்றால் வர்ணாஸ்ரமத்திலே இருக்கிறது. வர்ணாஸ்ரமம் எங்கே இருக்கிறது என்று சொன்னால், வர்ணாஸ்ரமத்தைப் படைத்தது நானே என்று கண்ணன் சொல்கிறான். ஆக, Philosophy of Hinduism - இந்துயிசத்தின் தத்துவம் என்று வருகிறபோது, அம்பேத்கர் தனியாகவே இதற்கென்று ஒரு சேப்டரே எழுதுகின்றார். Philosophy of Hinduism என்று வருகிற போது தந்தை பெரியார் சொன்ன அந்தத் தத்துவத் தளத்திலேதான் அம்பேத்கர் நிற்கிறார். அம்பேத்கர் செய்த ஆய்விலேதான் தந்தை பெரியார் நிற்கிறார். இது இவர்களுக்கிடையிலே இருக்கிற ஓர்மை.

(தொடரும்...) அடுத்து.

இந்துத்துவா என்னும் கொள்கையின் அடிப்படைக் கூறுகள்?

0 comments:

  ©Template by Dicas Blogger.

TOPO