#navbar-iframe { height: 0px; visibility: hidden; display: none; }
Showing posts with label உரைகள். Show all posts
Showing posts with label உரைகள். Show all posts

Friday, February 04, 2011

சாதனை செய்த ஆ.ராசாவை மனதார பாராட்டுகிறேன்: கலைஞர்

செல்வந்தர்கள் பயன்படுத்திய மொபைல் போனை கோடான கோடி ஏழை எளியவர்கள் பயன்படுத்த உதவியதற்காக சிறை சென்ற முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவை பாராட்டுகிறேன் என முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.


சென்னையில் வியாழக்கிழமை இரவு நடந்த தி.மு.க., பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், கேரளத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட ஒரு வரலாறு உண்டு. அந்த பண்டிகை ஆய்த பூஜை, தீபாவளி போன்று கொண்டாடுகின்றனர் என நான் நினைத்தேன். மாவலி சக்கரவர்த்தி என்ற மன்னன் நீண்ட காலமாக கேரளாவில் நல்லாட்சி புரிந்தான். இதில், ஒரு சில உயர் ஜாதியினர், நாங்களும் ஆட்சிக்கு வர வேண்டாமா என விஷ்ணுவிடம் வரம் கேட்டனர். அதன் அடிப்படையில், மாவலி சக்கரவர்த்தியை விஷ்ணு அழிக்கும் போது, மன்னன் சக்கரவர்த்தி ஒரு வரம் கேட்டான். என்னால் வாழ்ந்து வளம் பெற்ற குடிமக்கள், ஆண்டுக்கு ஒரு முறையாவது என்னை பார்த்து வாழ்த்து பெற வேண்டும் என்ற வரம் கொடுத்தால் சாகத் தயார் எனக் கூறினான். இந்த வரத்தை கடவுள் கொடுத்த பின், மன்னன் இறந்தார். இதனால் தான் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆனால், கொடுமை புரியும் அசுரர்களைத் தான் தேவர்கள் அழிப்பர் என்பதை புராணங்கள் கூறுகின்றன. ஆனால், நல்லவனாக ஆண்ட மாவலி மன்னனை அழித்ததாக இந்த கதை வருகிறது. நான் மாவலி மன்னன் அல்ல; மாவலி மன்னனின் மரபு வழி ஆட்சி செய்கிறவன். ந்த மாவலி மன்னனுக்கு நடந்தது போல், இன்றைக்கும் நமக்கு நடக்கிறது. ஆ.ராசா போன்றவர்களுக்கு இதே கொடுமை தான் நடக்கிறது. என்ன செய்வது இதுபோன்ற கொடுமைகளை நாம் அனுபவித்து ஆக வேண்டியுள்ளது என்றார்.

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் .ராசா என்ன குற்றம் புரிந்தார். செல்வனும், சீமாட்டியும் மட்டுமே பயன்படுத்திய மொபைல் போன் சேவையை, கோடான கோடி ஏழைகள் குறைந்த விலையில் பயன்படுத்துகின்றனர். இது .ராசா செய்த சாதனை. இதைத் தான் .ராசா செய்திருக்கிறார். இன்று டில்லி சிறையில் இருக்கும் .ராசாவின் சாதனைக்காக மனமார பாராட்டுகிறேன்; வாழ்த்துகிறேன் என்றும் முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.

தி.மு.க. ஆட்சியின் மூலம் எத்தகைய வரங்களை மக்கள் பெற்றனர் என்பதை சொல்கிறேன். கிராமங்கள், நகரங்களில் குடிசையில்லாத நிலையை ஏற்படுத்த வீட்டு வசதி திட்டம் கொண்டு வந்தோம். இத்திட்டத்தை செயல்படுத்தும்போது, சிலர் கேட்டனர்; அதற்கு பிறகும் திட்டம் வருமா, என சிலர் கேட்டனர். ஆனால், இத்திட்டம் தொடரும்: நாங்களும் தொடர்வோம். இத்தனை ஆண்டு காலத்தில் பல்வேறு சிறப்புமிக்க திட்டங்களை கொடுத்துள்ளோம். இதைப் பற்றி பாராட்டாவிட்டாலும் கவலைப்படவில்லை. என்னை பொறுத்தவரை நான் இல்லாத காலத்தில், நான் ஆற்றிய பணிகள் பல நூறு ஆண்டுகள் கழித்து என்றாவது நிலைக்கும். அவற்றை யாரும் அழிக்க முடியாது. தமிழ் சமுதாயத்திற்கும், திராவிட இயக்கத்திற்கும் நான் பல பணிகள் ஆற்றியிருக்கிறேன். அதை தொண்டர்கள் ஏற்று நடத்த வேண்டும் என்றும் தி.மு.க.தலைவர் கலைஞர் தெரிவித்தார்.

Read more...

Monday, September 27, 2010

ராஜராஜ சோழனை உலக சரித்திரம் அங்கீகரிக்கவில்லை: தஞ்சை விழாவில் ஆ.இராசா பேச்சு

தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் நிறைவு அடைந்ததை கொண்டாட அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவின் நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது.


விழாவில் பெரியகோவில் உருவம் பொறித்த சிறப்பு தபால் தலையை முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில் மத்திய தொலைத் தொடபு துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆ.ராசா வெளியிட்டார். அதை மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன் பெற்றுக்கொண்டார்.

பின்னர் உரையாற்றிய அமைச்சர் ஆ.ராசா, சரித்திரம் படைத்த தமிழருக்கு அஞ்சல் தலை வெளியிடும் மரபில் ராஜராஜசோழனை நினைவு கூர்ந்து சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை வழங்கிய தலைவர் கலைஞருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். விழாவில் எனக்கு முன்பு பேசியவர்கள் அனைவரும் மண்னன் ராஜராஜனின் பெருமைகளை பேசி, அவற்றோடு தலைவர் கலைஞரை ஒப்பிட்டார்கள். ராஜராஜன் பல சாதனைகளை படைத்த போதிலும், உலக சரித்திரம் அவரை அங்கீகரிக்கவில்லை என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், கணக்கு பார்க்கும் நாள் அல்லது கணக்கு தீர்க்கும் நாள் என்ற ஒன்று உள்ளதென்று அண்ணாவை படித்தவர்களுக்கும், பெரியாரை படித்தவர்களுக்கும் நன்றாக தெரியும். அதன்படி இன்று கணக்கு தீர்க்கும் நாள். 1956 ஆம் ஆண்டிலே நடந்த அரசியல் மாநாடொன்றில், தலைவர் கலைஞர் தனது 30-ஆவது வயதில் திராவிடத்தின் உலகத் தொடர்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார். அதில், தமிழன் சிங்களத்தை வென்றான்; சோழ தேசம் என்று சொல்லவைத்தான். உலக சரித்திரத்தில் நாகரீகம் கொடி கட்டி பறந்திட்ட தமிழர்கள் இன்று அதை இழந்து தவிக்கிறோம். இழந்த பண்பாட்டை , செங்கோலை மீண்டும் பிடிப்போம் என்று ஆவேசத்துடன் பேசியுள்ளார். பின்பு ஆட்சியில் அமர்வோம் என்பதை அறியாத வயதில் அது பற்றி தலைவர் கலைஞர் பேசியுள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கவியரங்கம் ஒன்றில், சோழன் அழைக்கிறேன் வா; சோழ நில கவிஞனே வா என்று தலைவர் கலைஞர் குறிப்பிட்டார். ஆவணப்படுத்துதல், பல்கலைகள் அமைத்தல் ஆகியவை ராஜராஜனுக்கு சொந்தம் அவை கலைஞருக்கும் சொந்தம். கணக்கு தீக்கும் நாள் ஒன்று இனி உண்டு என்றும் தெரிவித்தார்.

Read more...

Sunday, September 19, 2010

அனைத்து கிராமங்களிலும் ‘பிராட் பேண்ட்’ வசதி: அமைச்சர் ஆ.ராசா தகவல்

இந்தியாவின் அனைத்து கிராமங்களிலும் இன்னும் இரு ஆண்டுகளில் "பிராட் பேண்ட்" இணைப்பு வழங்கப்பட்டு விடும் என்று மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் அவினாசி அருகே பழங்கரையில் உள்ள ஐ.கே.எப். வளாகத்தில், பி.எஸ்.என்.எல். சார்பில் “வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தினருக்கு இலவச செல்போன் வழங்கும் திட்டம்” தொடக்க விழா 18ஆம் தேதி நடைபெற்றது. இத்திட்டத்தை தொடக்கிவைத்து பயனாளிகளுக்கு இலவச செல்போன்களை வழங்கி பேசிய மத்திய அமைச்சர் ஆ.இராசா,“. நான் 2007ஆம் ஆண்டு தொலைத்தொடர்பு துறை அமைச்சராக பதவியேற்கும் போது 30 கோடியாக இருந்த இணைப்பு, தற்போது 70 கோடியாக அதிகரித்துள்ளது. கிராமங்களில் இருந்த தொலைத்தொடர்பு அடர்த்தி 8லிருந்து 28 சதவீதமாகவும். நாட்டில் ஒட்டு மொத்தமாக 23லிருந்து 59 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது” என்றார்.

அடுத்த இரு ஆண்டுகளில் உள்ளூர் அழைப்புகளுக்கான கட்டணம் வெறும் 10 பைசாவாக குறையும். கடந்த மூன்றாண்டில் பல்வேறு வகையிலும் தொலைத்தொடர்புத் துறை ஒட்டுமொத்த வளர்ச்சி அடைந்துள்ளது. இதன் காரணமாக நாட்டிலுள்ள ஆறு இலட்சம் கிராமங்களில் 5.90 இலட்சம் கிராமங்கள் முழுவதும் தரைத் தொடர்பு வழியுடன் இணைத்துள்ள ஒரே நிறுவனம் பி.எஸ்.என்.எல். மட்டுமே ஆகும். சமீபத்தில் காஷ்மீரில் பெய்த அடைமழையின் காரமாக 'லே' என்ற நகரமே அழிவில் சிக்கியது. அப்போது அங்கு பல வகையில் உதவி செய்தது பி.எஸ்.என்.எல். தான் என்பது அப்பகுதி மக்களே கூறுகின்றனர் என்றும் அவர் கூறினார்.

”மத்திய தொலைத்தொடர்பு துறையின் விதிமுறைகளை தளர்த்தியதன் பயனாக தனியார் நிறுவனங்கள் தங்களுடைய லாபத்தில் 5 சதவீதத்தை கிராமப்புற தொலைத்தொடர்பு மேம்பாட்டுக்கு அளிக்க வேண்டும் என்ற விதி அமுல்படுத்தப்பட்டதால், தற்போது 18 ஆயிரத்து 500 கோடி ரூபாய் சேமிப்பாக உள்ளது. இதன் மூலம் அடுத்த இரு ஆண்டுக்குள் நாட்டிலுள்ள அனைத்து கிராமங்களும் கண்ணாடி இழை (ஆப்டிக் பைபர்) மூலம் இணைக்கப்பட்டு “பிராட் பேண்ட்” சேவை வழங்கப்படும். தற்போது அவினாசியில் முன்னோடி, சோதனை திட்டமாக வழங்கப்பட்டுள்ள இலவச மொபைல் போன் திட்டத்தின் தாக்கம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, படிப்படியாக நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்” என்று அமைச்சர் ஆ.இராசா தெரிவித்தார்.

Read more...

Saturday, August 14, 2010

வேதாந்திரி மகரிஷி அஞ்சல் தலை வெளியீட்டு விழாவில் அமைச்சர் ஆ.ராசா பேச்சு

சென்னை, ஜவஹார்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று வேதாத்திரி மகரிஷி நூற்றாண்டு மற்றும் சிறப்பு அஞ்சல்தலை வெளியீட்டு விழா நடைபெற்றது. வேதாத்திரி மகரிஷி உருவம் பொறித்த சிறப்பு அஞ்சல் தலையை முதலமைச்சர் கருணாநிதி வெளியிட, மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆ.ராசா பெற்றுக்கொண்டார்.


இந்த விழாவில் அமைச்சர் ஆ.இராசா ஆற்றிய சிறப்புரை:

தத்துவஞானி வேதாந்தி மகரிஷி நூற்றாண்டு விழாவின் தலைவர் தமிழர்களின் தனிப்பெரும் தலைவர் கலைஞர் அவர்களே... இந்த விழாவில் முன்னிலை உரையாற்றிய அருள் செல்வர் பொள்ளாச்சி மக்கலிங்கம் அவர்களே... மதிப்பிற்குரிய அண்ணண் டாக்டர் பாலசுப்பிரமணி அவர்களே..., மேடையில் வீட்டிருக்கின்ற சான்றோர் பெருமக்களே...., விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்துள்ள அமைச்சர் பெருமக்களே.... அனைவருக்கும் வணக்கம்.

நாட்டுக்கு தன்னை அர்பணித்து கொண்ட அரசியல் தலைவர்கள், இந்தியாவின் பண்பாட்டு கலாசாரத்தின் அடையாள சின்னங்களாக விளங்கின்ற தொல்நிறுவனங்கள். இவைகளை நினைவூட்டுகின்ற விதமாகவும் பெருமை சேர்க்கின்ற விதமாகவும் தலைவர்களுக்கும் நிறுவனங்களுக்கும் அஞ்சல் தலை வெளியீட்டு விழாக்களை இந்திய அஞ்சல் துறை நடத்தி வருகிறது என்பதை அறிவீர்கள்.

அந்த வகையில் இந்திய தத்துவ மரபு என்ற பொருளில் இந்திய தத்துவத்துக்கும் மரபியலுக்கும் வலுசேர்க்கும் வகையில் பல்வேறு தத்துவங்களை வழங்கி இருக்கின்ற பல்வேறு தலைவர்களுக்கும் கடந்த காலங்களில் அஞ்சல் தலையை இந்திய அஞ்சல் துறை வெளியிட்டு மகிழ்ந்திருக்கிறது. இந்திய சிந்தனை மரபு போக்கில் வேதாந்தம் - சித்தாந்த என்ற இரண்டு பிரிவுகளில் வேதாந்தங்களை ஏற்றுக்கொண்டிருக்கின்ற வேதாந்தங்களாக இருந்தாலும், சாங்கியமாக இருந்தாலும், யோகமாக இருந்தாலும், பவுத்தமாக இருந்தாலும், ஜெயினமாக இருந்தாலும், இவைகளுக்கெல்லாம் மதிப்பளிக்க வேண்டும் என்ற உன்னத கொள்கை இந்திய அஞ்சல்துறைக்கு உண்டு. அந்த கொள்கையோடு, இந்த அஞ்சல் தலையை இந்திய அஞ்சல் துறை வழங்கியிருக்கிறது. இதில் சிறப்பு என்னவென்றால், வேதாந்திரி மகரிசிக்கு அஞ்சல் தலையை வெளியிடுகின்ற வாய்ப்பை பகுத்தறிவு தத்துவத்தின் தலைவர் கலைஞர் பெற்றிருக்கிறார்.

இங்கே பேசிய நிறுவன முன்னணி தலைவர்களெல்லாம் இந்த தத்துவம் கடவுள் கொள்கை சாராதது என்று குறிப்பிட்டு சொன்னார்கள். பெயரள்ளவோ கண்ணுக்குதான் கண்ணாடி. ஆனால், மூக்கு கண்ணாடி என்றாகிவிட்டது என ஒரு கவிஞன் சொன்னதை போல, வேதங்களை சார்ந்திருந்தாலும் சாராவிட்டாலும் பெயரென்னவொ வேதாந்திரி மகரிசி என ஆகிவிட்ட காரணத்தாலும் அது இந்திய பண்பாட்டு கூறுகளில் ஒன்றாக ஆகவேண்டும் என்ற அவசியத்தினாலும் இந்த அஞ்சல் தலை வெளியிடப்படுகிறது.

உள்ளம் பெருங்கோயில், ஊனுடம்பே ஆலயமாம், தெள்ளத் தெளிந்தார்க்கு ஜீவன் சிவலிங்கம், கல்லபுலனைந்தும் காலா மணி விளக்கே என்ற தத்துவத்தை உலகிற்கே முன்மொழிந்தவர்கள் தமிழர்கள். அந்த தத்துவத்தை சார்ந்து இன்றைக்கு மகரிசிக்கு அஞ்சல் தலையை தலைவர் கலைஞர் வெளியிட்டிருக்கிறார்.

அத்வைதம் பெரிதா துவைதம் பெரிதா? வசிஸ்டா துவைதம் பெரிதா? என்ற ஆராய்ச்சிக்கு நான் போக விரும்பவில்லை. பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ஒன்று என்கிறது ஒரு தத்துவம். பரமாத்மாவும் ஜீவாத்மாவும் வெவ்வேறு என்கிறது ஒரு தத்துவம். சில நேரங்களில் பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ஒன்றாகவும் சில நேரங்களில் விலகி இருப்பதற்கும் பெயர் இன்னொரு ஒரு தத்துவம். எனவே அந்த தத்துவங்களுக்குள்ளே ஒற்றுமை இல்லாத போது, நான் மனிதர்களின் ஒற்றுமைக்காக கவலைபட்டு கொண்டிருக்கிற ஒருவன், அந்த தத்துவங்களை பற்றி கவலைப்படவில்லை என்று சொன்ன தலைவர்தான் நமது தலைவர் கலைஞர். அவர் இன்றைக்கு மனிதர்கள் புரிந்துகொள்ளவேண்டிய தத்துவத்தின் அடையாளமாக திகழ்ந்த மகரிசி அவர்களுக்கு அஞ்சல் தலையை வெளியிட்டிருக்கிறார்கள்.

அன்புதான் கடவுள் என்று சொன்னாலும், மனிதனுக்கு மனிதன் இடையே காட்டும் இரக்க உணர்வுதான் கடவுள் என்று சொன்னாலும், கள்ளமில்லா உள்ளம் அதுதான் கடவுளின் இல்லம் என்று சொன்னாலும், ஏழையின் சிரிப்பிலே காண்போம் என்று அண்ணா சொன்னாரே அதுதான் கடவுள் என்று சொன்னாலும், அப்படி பட்ட கடவுளோடு எனக்கு சமரசம் உண்டு என்று சொன்னவர் கலைஞர். அவரின் கரங்களால் இந்த அஞ்சல் தலை வெளியிடப்பட்டிருக்கிறது. உலக அமைதிக்கான நிகழ்ச்சி இது.

தொலைதொடர்பு வளர்ந்திருக்கிறது; தகவல் தொழில்நுட்பம் இன்றைக்கு வளர்ந்திருக்கிறது. இந்த வளர்ச்சியில் தொலைவிலுள்ள துருவங்கள் அருகே வந்துவிட்டன. கூப்பிட முடியாத தூரத்தில் இருக்கும் துருவங்கள் இணைந்து விட்டன. ஆனால் அண்டை வீட்டுக்காரன் அந்நியப்பட்டு போய் விட்டான். எனவே அமைதி இல்லை என்று ஒரு புது கவிஞன் சொன்னான். அந்த அமைதி வருவதற்கு இந்த அஞ்சல் தலை வெளியீடு பயன்படும் என்ற நம்பிக்கையில், தலைவர் கலைஞர் அவர்களை வணங்கி விடைபெறுகின்றேன்.

Read more...

Thursday, August 12, 2010

ஸ்பெக்ட்ரம் விவகாரம் : தம்பிதுரைக்கு அமைச்சர் ஆ.ராசா பதில்

மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, 3 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை ஏல முறையில் ஒதுக்கீடு செய்ததில் 70 ஆயிரம் கோடி வசூலாகி இருக்கிறது எனவும், 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை குறைந்த விலைக்கு அனுமதித்ததன் மூலம் அரசுக்கு 1 லட்சம் கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது எனவும் அதிமுக எம்.பி. தம்பிதுரை குற்றம் சாட்டினார்.


தம்பிதுரையின் குற்றச்சாட்டை மறுத்து பேசிய மத்திய தொலை தொடர்புத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஆ.ராசா, ’’பாஜக ஆட்சி நடைபெற்ற கடந்த 1999-ஆம் ஆண்டில் இருந்தே 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு ஏல முறையில் நடைபெறவில்லை. தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையில்தான் ஒதுக்கீடு நடைபெற்றது. டிராய் அமைப்பின் சமீபத்திய பரிந்துரையில்கூட ஏல முறையை பரிந்துரைக்கவில்லை. 3 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு ஏல நடைமுறைகள், கடந்த மே மாதம் 19-ஆம் தேதியுடன் முடிவடைந்தது” என்று குறிப்பிட்டார்.

”பொதுத்துறை நிறுவனங்களான பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல். ஆகியவற்றுக்கு அதிக பட்ச ஏலத்தொகைக்கு சமமாக செலுத்தவேண்டும் என்ற நிபந்தனையுடன் முன்கூட்டியே ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதன்படி எம்.டி.என்.எல். நிறுவனம் டெல்லி மற்றும் மும்பை 3ஜி சேவையை ஏற்கனவே தொடங்கிவிட்டது. பி.எஸ்.என்.எல். நிறுவனம் 463 நகரங்களில் தனது சேவையை தொடங்கி உள்ளது. ஏலத்தில் எடுத்த நிறுவனங்கள், தங்கள் சேவையை தொடங்கியதும் 3ஜி சேவை கட்டணமும் குறையத்தொடங்கும். இரண்டு அலைவரிசைகளுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு என்னவென்றால், 2 ஜி அலைவரிசை குரல் சேவைக்கும், 3ஜி அலைவரிசை வீடியோ மற்றும் புள்ளிவிவர பரிமாற்ற சேவைக்கும் பயன்படுத்தப்படுகிறது’’ என்றும் அமைச்சர் ஆ.இராசா தெரிவித்தார்.

Read more...

Tuesday, August 03, 2010

ஊட்டியில் ரூ.50 கோடியில் தகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சி பூங்கா: மத்திய அமைச்சர் ஆ.ராசா தகவல்

கோவை:


நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ரூ.50 கோடி செலவில் உலகத்தரம் வாய்ந்த தகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சி பூங்கா அமைக்கப்படும் என்று மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் .ராசா கூறினார்.

கோவை பீளமேட்டில் ரூ. 380 கோடி மதிப்பில் கட்டப்பட்ட "டைடல் பார்க்' பிரமாண்ட கட்டடத்தை தமிழக முதலமைச்சர் கருணாநிதி திங்கட்கிழமை மாலை திறந்து வைத்தார். இந்த விழாவுக்கு துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்றார். மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.ராசா, மாநில தொழில்நுட்பத் துறை அமைச்சர் பூங்கோதை, தமிழக அரசின் தலைமை செயலாளர் சிறீபதி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

விழாவி்ல் பேசிய மத்திய அமைச்சர் ஆ.இராசா, ”மத்திய தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சராக பணியாற்ற வாய்ப்பு வழங்கியதற்காக முதலில் முதலமைச்சருக்கு நான் நன்றி கூறவே விரும்புகிறேன். கொங்கு மண்டலத்தில் தலைவர் கலைஞரின் ஆட்சி களத்திலும், அரசியல் களத்திலும் பதிவான பதிவுகள் எத்தனையோ இருந்தாலும், இந்த மாவட்டத்திற்கு இந்த தகவல் தொழில்நுட்ப பூங்காவை தந்த முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவில் நான் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக பொறுப்பு ஏற்றபோது, மத்திய அரசின் சார்பில் ஒரு தகவல் தொழில் நுட்ப திட்டம் வடிவமைக்கப்பட்டது. இந்த திட்டத்தை இந்தியாவில் எந்த மாநிலத்தில் நிறைவேற்றலாம் என்றபோது எந்த மாநிலத்தில் அதிகமான தொழில்நுட்ப பூங்காக்கள் உள்ளதோ? அதிலும் எந்த மாவட்டத்தில் அதிக அளவு தகவல் பரிமாற்றம், -கவர்னஸ் இருகிறதோ? அங்கு அமைக்கலாம் என்றபோது, அது தானாகவே தமிழ்நாடு பக்கம் வந்தது. அதிலும் இந்த மாவட்டத்தில் அமைத்து இருப்பது மிகவும் சிறப்பு. மேலும் இந்தியாவில் உள்ள அனைத்து தகவல் தொழில்நுட்பபூங்காக்களையும் இணைத்து இதன்காரணமாக உலகத்தரம் வாய்ந்த ஒரு ஆராய்ச்சி மையத்தை இந்தியாவில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த ஆராய்ச்சி மையம் ரூ.50 கோடி செலவில் ஊட்டியில் அமைக்கப்பட உள்ளது. அந்த மையத்தையும் நீங்கள் தான் திறக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

Read more...

தி.மு.க. ஒரு சமுதாய இயக்கம்: கலைஞர்

திராவிட முன்னேற்ற கழகம் என்பது ஒரு அரசியல் இயக்கம் மாத்திரம் மட்டும் அல்ல. அது ஒரு சமுதாய இயக்கம் என்று கோவையில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் கலைஞர் தெரிவித்தார்.


"டைடல் பார்க்' கை திறந்து வைப்பதற்காக தனி விமானம் மூலம் கோவைக்கு வந்த முதலமைச்சருக்கு விமான நிலையத்தில் இருந்து விழா நடைபெற்ற இடம் வரை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சாலையின் இரு புறங்களிலும் வரவேற்பு பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. ஏராளமான தொண்டர்கள் மேளம் கொட்டினார்கள்.

பிறகு மாலை 6.00 மணிக்கு கோவை வ.உ.சி., பூங்கா மைதானத்தில் நடந்த தி.மு.க.,வின் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் கலைஞர் சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், யாராலும் நம்மை வீழ்த்த முடியாது. நாம் வீழ்த்தப்பட்டாலும் மீண்டும் எழக்கூடிய ஆற்றல் பெற்றவர்கள். திராவிட முன்னேற்ற கழகம் என்பது ஒரு அரசியல் இயக்கம் மாத்திரம் மட்டும் அல்ல. அது ஒரு சமுதாய இயக்கம். திராவிட முன்னேற்ற கழகம் நடத்துவது அரசியல் நிகழ்ச்சிகள் அல்ல. சரித்திர சுவடுகள். வரலாற்று ஏடுகள். அந்த வரலாற்று ஏடுகளிலேதான், கடந்த மாதம் அந்த ஏடு செம்மொழி ஏடாக இங்கே வெளிவந்தது. அந்த ஏடு மீண்டும் அரசியல் ஏடாக, திராவிடத்தை தட்டி எழுப்புகின்ற ஏடாக, இன்றைக்கு உங்களுக்கு படிக்க கொடுக்கப்பட்டு இருக்கிறது என்று குறிப்பிட்டார்.

இந்த பொதுக்கூட்டத்தில், துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் ஆ.ராசா, மாநில அமைச்சர் பொன்முடி, தி.மு.க.வில் அண்மையில் இணைந்த முத்துசாமி, சின்னசாமி உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.

முன்னதாக, மாலை 4 மணிக்கு கோவை பீளமேட்டில் நடந்த விழாவில் ரூ. 380 கோடி மதிப்பில் கட்டப்பட்ட "டைடல் பார்க்' பிரமாண்ட கட்டடத்தை தமிழக முதலமைச்சர் கருணாநிதி வைத்தார். இந்த விழாவுக்கு துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்றார். மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.ராசா, மாநில தொழில்நுட்பத் துறை அமைச்சர் பூங்கோதை, தமிழக அரசின் தலைமை செயலாளர் சிறீபதி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

விழாவி்ல் பேசிய முதல்வர் கலைஞர், அரசியல் ஆனாலும், கலைத்துறையானாலும் என்னை வளர்த்தது கோவை என்று குறிப்பிட்டார். மேலும், தமிழகத்தில் அரசு விழாக்கள் எங்கு நடந்தாலும் ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் தமிழில் பேச வேண்டும் என்றும், தமிழ் தெரியாத வடமாநில அதிகாரிகள் தமிழில் பேச பயிற்சி எடுத்து கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

Read more...

Thursday, June 17, 2010

தெலுங்கு மொழியில் ‘பெரியார்’ திரைப்படம் : அமைச்சர் ஆ.இராசா பேச்சு


ஆந்திர மாநில பகுத்தறிவாளர் கழகம் சார்பில்பெரியார்திரைப்படம் தெலுங்கு மொழியில் மொழி மாற்றம் செய்யப்பட்டது. இத்திரைப்படத்தின் தெலுங்கு பாடல் ஒலிப்பேழை வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடைபெற்றது.

இந்த ஒலிப்பேழையை மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ. இராசா வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.

அமைச்சர் பேசியது வருமாறு:
ஒலிப்பேழை வெளியீட்டு விழாவில் பங்கேற்பதில் நான் அளவற்ற மகிழ்ச்சியடைகிறேன். என்னுடைய மகிழ்ச்சி இரண்டு கோணத்தில் அமைகிறது. இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் எத்தகைய புரட்சிகரமான முன்னேற்றம் அடைய வேண்டுமென தந்தை பெரியார் அவர்கள் ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்பு கண்ட கனவு நனவாகி இருக்கிறது. பெரியாரின் கொள்கை வெற்றியடைந்ததற்கு அடையாளம்தான் இந்த விழா. இது ஒரு மகிழ்ச்சி. இந்த விழாவில் சாதாரண, சாமானிய தமிழனாகிய நான், இந்தத் துறைக்கு அமைச்சராக பங்கேற்றிருப்பது இன்னொரு மகிழ்ச்சியாகும். இதைவிட பெரியாரின் கொள்கையை அரசியல் களத்திலும், சமூகத் தளத்திலும் சாதனைகளாக மாற்றிய மாபெரும் தலைவரான கலைஞரின் தம்பியாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பது பெருமை அளிக்கிறது.

தந்தை பெரியார் அவர்கள், திராவிடர் கழகம், திராவிட இயக்கம் என்கிற சட்ட அமைப்புகளில் ஆற்றியிருக்கின்ற மகத்தான கொள்கை பணிகளை தென்னகம் தாண்டி வட இந்தியா முழுக்க இன்றைக்கு வரவேற்றுக் கொண்டிருக்கின்ற சூழலில் அரசு கருவூலத்திலிருந்து 95 இலட்சம் ரூபாயை ‘பெரியார்’ திரைப்படத்திற்கு தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் வழங்கியிருப்பதும், அந்தப் படத்தை தெலுங்கு மொழியில் மொழி பெயர்த்து இங்கே வெளியிடுவதும் மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும்.

வடபுலத்தில் இருக்கின்ற சமூகநீதி ஆர்வலர்கள், பகுத்தறிவாளர்கள், அம்பேத்கரிஸ்டுகள், இந்தப் பணியை வடபுலத்திலும் மிகச் சிறப்பான முறையில் மேற்கொள்ள வேண்டும். கடவுள் பற்றோ, நாட்டுப் பற்றோகூட எனக்குக் கிடையாது. எனக்கு இருப்பதெல்லாம் மனிதப் பற்று ஒன்றுதான் என்று முழங்கி, ஜாதி பேதம் ஒழிய வேண்டும் என்பதற்காக, தன் வாழ்நாட்களை அர்ப்பணித்த இந்தியாவின் தலை சிறந்த புரட்சியாளர்களில் ஒருவரான தந்தை பெரியாரையும் அவருடைய கொள்கைகளையும் அரசியல் எல்லை கடந்து, மாநில மொழி, இன தடைகளைக் களைந்து இந்தியா முழுக்க பரப்ப வேண்டிய அவசியம் இளைஞர்களுக்கு, பகுத்தவாளர்களுக்கு வேண்டுமென்கிற உணர்வை இந்த ‘பெரியார்’ திரைப்படம் ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.

சாதியே அடிப்படை காரணம்
வேறு எந்த நாட்டிலும் இல்லாத இந்தியாவில் உள்ள இந்து மதமும், அதன் வைதீகத் தளமும் ஏற்படுத்தியிருக்கின்ற ஜாதி என்கின்ற கொடிய நோய் தான் இந்தியாவின் வறுமைக்கும், சரிவுக்கும், தரித்திற்கும், அறியாமைக்கும் அடிப்படைக் காரணங்கள் என்றும், இவற்றைக் களையாமல் இந்தியாவின் வளர்ச்சி அரசியல் துறையாகட்டும், சமூகத் துறையாகட்டும், பொருளாதாரத் துறையாகட்டும், எந்தத் துறையிலும் வளர வாய்ப்பில்லை என்கிற எச்சரிக்கையை இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்பாகவே எச்சரித்தவர் தந்தை பெரியார் அவர்கள். பெரியாரின் எச்சரிக்கையை மறுத்த, மறுதலித்த, பல்வேறு அரசியல் கட்சிகள் இன்றைக்கு பெரியாரை அவரின் அடையாளமாக திகழ்ந்து கொண்டிருக்கின்ற ஒப்பாரும் மிக்காருமில்லாத தலைவர் கலைஞரை அரசியலிலும், நிருவாத்திலும், பின்பற்ற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

பெண்களுக்குச் சொத்துரிமைச் சட்டம்
1929-இல் செங்கல்பட்டு மாநாட்டில் பெண்களுக்கு சொத்துரிமை வேண்டும் என்றார் பெரியார். ஆரம்பப் பள்ளிகளில் பெண்களே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்றார் பெரியார். அரசு அதிகாரங்களில் பெண்கள் பங்குபெற வேண்டும் என்றார் தந்தை பெரியார். 1950-களில் இதே சீர்திருத்தக் கருத்தை நாடாளுமன்றத்தில் சட்டமாக்கிட எல்லா வழிகளிலும் எத்தணித்தார் அம்பேத்கர். அப்போதெல்லாம் மேல்தட்டு வர்க்கத்தினரால் அம்பேத்கரின் முயற்சி முறியடிக்கப்பட்டது. இந்தச் சட்டங்களை, திட்டங்களை அரசு சட்டத்தில் அரியணை ஏற்றிய தலைவர்தான் எங்களுடைய தலைவர் கலைஞர் அவர்கள்.

சைமன் கமிசனே வா
இன்றைக்கு சாதிவாரியாக கணக்கெடுப்புத் தேவையா? இல்லையா? என்கிற விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. இதேபோல 80 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் சமூக அமைப்பே ஆராய முற்பட்ட சைமன் கமிசனை திரும்பிப்போ என்று தேசியவாதம் என்கிற பெயரில் கூச்சல் எழுந்தபோது, சைமன் கமிசனே வா என்று வரவேற்று, இந்த நாட்டில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வி அறிவு இல்லாதவர்களாக, தற்குறிகளாக சுரண்டப்படுகின்ற மனிதக் கருவிகளாக கொடுமைப்படுத்தப்படுவதை இந்தியா அறிய வேண்டும். இவைகளுக்கெல்லாம் கழுவாய் வழங்கப்பட வேண்டும் என்று எதிர்த்துக் குரல் கொடுத்தவர் தென்னிந்தியாவில் பெரியார் ஒருவர்தான் என்பதை இன்றைய தலைமுறை உணர வேண்டும்.

புரட்சிகரமான திட்டங்கள்
இந்தியாவில் இருக்கின்ற மாநிலங்களில் தமிழ்நாட்டில்தான் உழைக்கின்ற மக்களாக சூத்திரர்களும், பஞ்சமர்களும், அரசியல் அதிகாரத்திலும், அரசு உயர் பணிகளிலும் முன்னேறியிருக்கிறார்கள் என்றால், அதற்குக் காரணம் பெரியாருடைய இயக்கமும், அந்த இயக்கத்தின் தளபதிகளான அறிஞர் அண்ணாவும், தலைவர் கலைஞரும் வழங்கிய, வழங்கிக் கொண்டிருக்கின்ற புரட்சிகரமான திட்டங்களே காரணமாகும். சாதி, பேதமற்ற சமுதாயம் காண பாடுபட்ட பெரியாரின் பெயரால் சாதியற்ற சமத்துவபுரங்களை தமிழகத்தில் உருவாக்கி, இந்தியாவிற்கே அறிமுகப்படுத்தியவர் கலைஞர் அவர்கள். தன்னை ஒரு நாத்திகன் என்றும், தன்னுடைய பாதை பெரியாரின் பாதை என்றும் பிரகடனப்படுத்திக் கொண்ட தலைவர் கலைஞரை போன்ற பகுத்தறிவுவாதிகள் ஆட்சிக்கும், அதிகாரத்திற்கும் வருகிறபோதுதான், சமூகக் கொடுமைகள் களையப்பட்டு, முன்னேற்றமும், வளர்ச்சியும், சமூகநீதியும் சாதாரண சாமானிய உழைக்கும் வர்க்கத்திற்குக் கிடைக்கும் என்பதை இளைஞர்களும், குறிப்பாக பொதுவாழ்க்கைக்கு வருகின்ற இளம் தலைவர்களும் உணர்வதற்கு தெலுங்கு மொழியில் வெளிவருகின்ற பெரியார் திரைப்படம் ஒரு அடித்தளமாக அமையும் என்று நம்புகிறேன்.

Read more...

Sunday, May 02, 2010

சமூகத்துக்கு பயன்படுவதே சிறந்த கல்வி: அமைச்சர் ஆ.இராசா

அப்பலோ கல்வி குழுமத்தின் சார்பில் பட்டமளிப்பு விழா சென்னை வாணிமகால் அரங்கில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக நடுவண் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் .இராசா கலந்துகொண்டார்.

மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய அமைச்சர் பேசியதாவது:

ஒரு நதி எப்படி கடலில் கலப்பதையே நோக்கமாக கொண்டு செயல்படுகிறதோ, அது போல் நீங்கள் அனைவரும், ஒரு இலட்சியத்துடன் உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். நல்லவர்கள் நதி நீரை பருகுவார்கள். கெட்டவர்கள் அதில் கல்லை விட்டெறிவார்கள். ஆனாலும் நதி ஓடிக் கொண்டே இருக்கிறது. கடைசியில் அது கடலில் கலக்கிறது. அதுபோல், நீங்களும் உங்கள் பாதையில் குறுக்கிடுவதை புறக்கணித்து விட்டு பயணப்பட வேண்டும்.

கடந்த 1999-ஆம் ஆண்டு மத்திய அரசு தொலைத் தொடர்பு கொள்கை வகுத்தபோது, 2012 ஆம் ஆண்டுக்குள் 60 கோடி தொலைப்பேசி இணைப்புகள் வழங்கப்பட வேண்டும் என இலக்கு நிருணயிக்கப்பட்டது. ஆனால், 2010-ஆம் ஆண்டிலேயே கடந்த மாதமே நம் நாடு இந்த இலக்கை அடைந்துவிட்டது.

பல்வேறு துறைகளிலும் நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது. எனவே, அறிவார்ந்த சமுதாயம் என்பது சமூகத்தை முன்னேற்ற பயன்பட வேண்டும். சமுகத்திற்கு பயன்படுவதே சிறந்த கல்வி.

இவ்வாறு அமைச்சர் ஆ.இராசா பேசினார்.

இந்தப் பட்டமளிப்பு விழாவில், அப்பல்லோ கல்வி குழுமத்தின் தலைவர் சுப்பிரமணி, முதல்வர் சுதாகர் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Read more...

Wednesday, April 14, 2010

அம்பேத்கர், பெண்ணுரிமைக்காக போராடவில்லையா? : அமைச்சர் ஆ.இராசா பேச்சு

பெரியார் பேசிய அளவிற்கு, போராடிய அளவிற்கு அம்பேத்கரை ஒரு பெண்ணுரிமைப் போராளியாக அடையாளப்படுத்த முடியவில்லை என்று சொல்லுகிறார்கள். அம்பேத்கர் பெண்ணுரிமைக்காக தனியாகக் குரல் கொடுக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால், அவருடைய குரல் வேறு விதமாக இருக்கிறது.

Rise and fall of Hindu women என்று ஒரு சிறு நூலை எழுதியிருக்கிறார். பெரியார் பெண் விடுதலையை பகுத்தறிவிலிருந்து - பகுத்தறிவுத் தளத்திலேயிருந்து பார்த்தார். அம்பேத்கர் ஜாதி ஒழிய வேண்டுமென்று விரும்பினார், பெரியாரைப் போலவே ஆய்வு செய்தார், எழுதினார், எல்லாம் உண்மைதான். ஆனால், விடுதலையை ஒரு ஆன்மீகத் தளத்திலிருந்து பார்க்க விரும்பினார். பவுத்தத்திற்குப் போனார். பவுத்தத்தில் பெண்களுக்கு எல்லா உரிமையும் இருந்தது. அதைவிட அம்பேத்கரை நாம் அறிந்துகொள்ளவேண்டிய ஒரு இடம். நான் அதற்குப் பின்னால் வருகிறேன்.

பெரியார் செய்த காரியத்தை, பிரச்சாரம் செய்த காரியத்தை அம்பேத்கர் மிகச் சாதுர்யமாக அரசியல் சட்டத்திலே கொண்டு வர முயற்சி செய்தார் என்பதை நான் அடுத்த ஓரிரு நிமிடங்களில் சொல்ல இருக்கிறேன். இந்த இடத்திலே வருகிற பொழுது Suppression of women, Mf Graded inequality, Prohibition of education, Prohibition of ower Ban on property, Suppression of women- இதுதான்.
இந்த இந்துயிசம் இந்த ஐந்து கோட்பாடுகளை வைத்திருக்கிறதே இதனுடைய விளைவு இந்த சமூகத்தில் மட்டும்தானா? அரசியலில் கிடையாதா என்றால் அரசியலில் இந்த சமூகத்தினுடைய அமைப்பின் சார்ந்த சாரம் எல்லா இடங்களிலேயும் ஒரு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.
பெருஞ்சித்திரனார் ரொம்ப அழகாகச் சொல்லுவார்- இந்த நாட்டினுடைய விடுதலையை நான் குறைவுபடுத்தவில்லை, நான் இந்திய அரசாங்கத்தினுடைய அமைச்சர், என்னுடைய காரில் தேசியக்கொடி பறந்துகொண்டிருக்கிறது. எனக்கு தேசப்பற்று இருந்தாக வேண்டும். ஆனால் வரலாற்றைச் சொல்லுகிற பொழுது சரியாகச் சொல்லவேண்டும் பெருஞ்சித்திரனார் சொல்லுகிறார்:
வெள்ளைக்காரர்களுக்கு வால்பிடித்தார்களா?
நல்லவேளை வெள்ளைக்காரன் வந்தான், நம்மையெல்லாம் காப்பாற்றினான், அவன் மட்டும் வராமல் போயிருந்தால் நாமெல்லாம் நரியாக, பூனையாக ஊளையிட்டுக்கொண்டிருந்திருப்போம். இதை நாம் மறுப்பதற்கில்லை. அதனால்தான் பெரியார் மீதும் அம்பேத்கர் மீதும் ஒரு மிகப்பெரிய குற்றச்சாட்டு இருக்கிறது. இவர்கள் வெள்ளைக்காரர்களுக்கு வால்பிடித்தார்கள். சுதந்திரம் வேண்டாம் என்று பெரியார் சொன்னார். அம்பேத்கர் இன்னும் வேகமாக ஒரு இடத்திலே சொன்னார். பெரியாருக்கும் அம்பேத்கருக்கும் இருக்கிற ஒற்றுமையைப் பார்க்க வேண்டும்.
பெரியார் சுதந்திரத்தைப் பற்றிப் பேசுகிற போது, வெள்ளைக்காரர்கள் கொள்ளைக்கார பிராமணர்களுக்கு எழுதிக் கொடுத்த மேட் ஓவர். - இந்த வார்த்தையை அய்யா அப்படியே சொல்லியிருக்கிறார்:
சுதந்திரம் என்பது வெள்ளைக்காரர்கள் கொள்ளைக்கார பிராமணர்களுக்கு எழுதிக் கொடுத்த மேட் ஓவர். நான் ஏற்றுக்கொள்ளவில்லை என்றார். இதைச் சொல்லுகிற போது 1947. ஆனால் இது 1937 , 39லேயே அம்பேத்கருக்கு ஒரு சங்கடம் வருகிறது.
இரண்டாம் உலகப்போர் வந்த போது அந்த இரண்டாம் உலகப்போரில் வின்சென்ட் சர்ச்சில் இங்கிலாந்தினுடைய பிரதமர். நம்முடைய நாடு அவருக்குக் கீழே இருக்கிறது. அவர் ஹிட்லரை எதிர்க்கவேண்டும் என்பதற்காக இந்தியத் துருப்புகளைப் பயன்படுத்துகிறார். யாருக்கு எதிராக? நாஜிப்படைகளுக்கு எதிராக. ஹிட்லருக்கு எதிராக இந்தியாவினுடைய துருப்புகளை அவர் பயன்படுத்துகிற பொழுது, காந்தி ஒரு கேள்வியை வைக்கிறார் காங்கிரஸ் சார்பில்.
என்ன கேள்வி என்றால் ``வின்சென்ட் சர்ச்சில் அவர்களே, உங்களுக்கு எதிரி ஹிட்லர், எங்களுக்கு அல்ல. இந்தப் போரில் எங்களுடைய சிப்பாய்களை, எங்களுடைய துருப்புக்களை, எங்களுடைய ஆயுதங்களை நீங்கள் பயன்படுத்தப்போகிறீர்கள். இந்த வெற்றிக்குப் பின்னால் எங்களுக்குக் கிடைக்கப் போவது என்ன?’’ என்று கேட்கிறார்.
What will be the benefit after the war, having deployed our sources? இது காந்தி வைக்கிற கேள்வி, வின்சென்ட் சர்ச்சிலுக்கு. வின்சென்ட் சர்ச்சில் ரொம்ப அமைதியாக பதில் சொன்னார்: To restore traditional Britain -நான் என்னுடைய மரபுமிக்க தொன்மைமிக்க பெருமை மிக்க பிரிட்டனை நான் மீண்டும் பெறுவதற்காகத் தான் போராடப் போகிறேன்.

எவ்வளவு பெரிய கொழுப்பு? காந்தியாருக்குக் கோபம். என்னுடைய சகோதரன் இரத்தம் இழக்கிறான். என்னுடைய சகோதரன் வாழ்வை இழக்கப்போகிறான். குற்றுயிரும், குலைஉயிருமாக இளம் மனைவிகளை இழக்கப்போகிற கணவனை என் கண்ணெதிரிலே பார்க்கிறேன். ஆனால் நீ சொல்லுகிறாய், To restore traditional Briton உன்னுடைய சிப்பாய்களை நான் கொல்லப்போகிறேன் என்று சொன்னால் இது உனக்குத் திமிரல்லவா என்று கேட்கிறார். இது யங் இண்டியாவில் வருகிறது.

காந்தியை தடுமாறவைத்த அம்பேத்கர்!
அடுத்தநாள் அம்பேத்கர் கேட்கிறார். Yes, the question that was asked by Mr.Gandhi is legitimate காந்தி கேட்கிற கேள்வி ரொம்ப நியாயமான கேள்வி. ஆனால் திரும்ப நான் கேட்கிறேன் காந்தியை. வின்சென்ட் சர்ச்சிலுக்கு சிப்பாயை அனுப்பிவிட்டு என்ன பயன் என்று கேட்கிறாயே? நான் கேட்கிறேன், இந்தியாவிற்கு சுதந்திரம் வேண்டுமென்று நீ கேட்கிறாயே, அந்த சுதந்திரத்திற்குப் பின்னால் எனக்கும் பிற்படுத்தப்பட்டவனுக்கும் பற, பள்ளனுக்கும் என்ன கிடைக்கப் போகிறது? What will be the social order after independence since you are fighting for independence? இந்தக்கேள்விக்குப் பதில் சொல்லிவிட்டு நீ அவனுக்குக் கேள் என்று அம்பேத்கர் கேட்டபோதுதான் காந்தி தடுமாறிப் போனார்.

இது வரலாறு. இதைத் தான் தந்தை பெரியார் வெள்ளைக்காரர்கள் கொள்ளைக்கார பிராமணர்களுக்கு எழுதிக்கொடுத்த மேட் ஓவர் என்று சுதந்திரத்தைச் சொல்கிறார்.

Read more...

Thursday, April 08, 2010

செல்பேசிகள் மூலம் சுகாதாரம், கல்வி, வணிகச் சேவைகள் குறித்து ஆய்வு : அமைச்சர் ஆ.இராசா

புது தில்லி:

சுகாதாரம், கல்வி, வேளாண்மை, வணிகம் போன்ற பல்வேறு துறைகளில் பொது மக்களுக்கு மொபைல் போன்கள் மூலம் சிறப்பான சேவைகள் அளிப்பது குறித்து விரிவாக ஆராய வேண்டும் என்று மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் . இராசா கேட்டுக் கொண்டுள்ளார்.

புது தில்லியில் 7.4.2010 அன்று டிராய் எனப்படும் இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் சார்பில் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் நீடித்த முன்னேற்றத்திற்கு செல்பேசி பயன்பாடுகள் என்பது குறித்த தேசிய கருத்தரங்கு நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட அமைச்சர் ஆ.இராசா உரையாற்றுகையில், “நம்முடைய பொருளாதாரத்தின் விரைவான வளர்ச்சிக்கும் பல்வேறு துறைகளின் நவீனமயமாக்கலுக்கும் தொலைத் தொடர்புகள் ஒரு முக்கிய ஆதரவு சேவையாக உருவாகியுள்ளது. தகவல் மற்றும் தொலைத் தொடர்பு தொழில்நுட்ப வசதிகள் சிறந்த தகவல்கள் கிடைப்பதற்கு உதவுவதுடன் பொது மக்களின் சிறப்பான கல்விக்கும் சமூக இணைப்பு முன்னேற்றத்திற்கும் மேம்பட்ட வணிக வாய்ப்புகளுக்கும் உதவுகிறது. இன்றைக்கு இந்திய தொலைத் தொடர்பு இணைப்பானது உலகில் வேகமாக வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத் தொடர்பு தொழில்நுட்ப சந்தையில் இரண்டாவது பெரிய தொலைத் தொடர்பு இணைப்பாகத் திகழ்கிறது. இவ்வாண்டு பிப்ரவரி மாதம் வரை 60 கோடி தொலைபேசி சந்தாதாரர்கள் உள்ளனர். 2014-ஆம் ஆண்டில் இது 100 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரியில் மட்டும் 18 மில்லியன் சந்தாதாரர்கள் அதிகரித்துள்ளனர். கிராமப்புற பகுதிகளில் 32 சதவீத தொலைபேசிகள் உள்ளன’’ என்று குறிப்பிட்டார்.

”வெகு அண்மைக்காலம் வரை செல்பேசிகள் (மொபைல் போன்கள்) குரல் மற்றும் வார்த்தை செய்திகள் அனுப்புவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டன. ஆனால் தற்போது அடிப்படையான குரல் சேவைகளையும் தாண்டி இணையம் மற்றும் அகண்ட அலைவரிசை சேவைகளையும் அளிக்கக் கூடிய வகையில் உள்ளன. அகண்ட அலைவரிசை சேவையின் பரவல் நம்நாட்டில் குறைவாக உள்ளது. நிலையான கம்பிவட இணைப்புகளுக்கு மட்டுமே தற்போது அகண்ட அலைவரிசை அளிக்கப்படுகிறது. இந்த கம்பிவட இணைப்பு அகண்ட அலைவரிசை வழங்குவதற்கு உகந்ததாக இல்லை. 3ஜி அலைவரிசை தற்போது ஏலம் விடப்பட்டு இருப்பதால் சேவைகளை தனியார் நிறுவனங்களும் வழங்க முடியும். இந்த 3ஜி அலைவரிசை மூலம் கம்பிவடம் இல்லாத அகண்ட அலைவரிசை சேவைகளையும் வழங்க முடியும். இதன் மூலம் அதிகளவில் அகண்ட அலைவரிசை சேவை கிடைக்கும்’’ என்றும் அமைச்சர் ஆ.இராசா தெரிவித்தார்.

பல்வேறு சேவைகளை வழங்குவதில் மிக சக்தி வாய்ந்த ஒரு சாதனமாக செல்பேசிகளின் பயன்பாடு உருவாகி இருக்கிறது. இதன் பயனாக கணினி, தொலைக்காட்சி, திரையரங்கம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக நான்காவது திரையாக செல்பேசி உருவாகியிருக்கிறது.
அடிப்படையான தொலைத் தொடர்பு சேவைகள் மட்டுமின்றி செல்பேசி - ஆளுமை, செல்பேசி-வணிகம், செல்பேசி - கல்வி, செல்பேசி -வேளாண் , செல்பேசி - சுகாதாரம் போன்ற சமூக நன்மைக்கான மேம்பட்ட சேவைகளை செல்பேசிகள் மூலம் அளிக்க வேண்டிய அவசியத்தை இது உணர்த்துகிறது. செல்பேசிகளின் பயன்களை தொழில்நுட்ப முன்னேற்றங்கள் அதிகப்படுத்தியுள்ளன. கணினி செயல்பாடுகள், மென்பொருள், மல்டி மீடியா, விளையாட்டு மற்றும் இ படிப்பு போன்ற மேம்பட்ட வசதிகள் காரணமாக ஸ்மார்ட் செல்பேசிகள் அதிக அளவில் பிரபலமடைந்து வருகின்றன. 2015-ஆம் ஆண்டில் கப்பலில் அனுப்பப்படும் மூன்றில் ஒரு பங்கு செல்பேசிகள் ஸ்மார்ட் செல்பேசிகளாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது’’ என்றும் அவர் கூறினார்.

”தற்போது இந்தியாவில் சுமார் 80 முதல் 90 இலட்சம் ஸ்மார்ட் போன்கள் உள்ளன. இது வருங்காலத்தில் வேகமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வளர்ச்சி மற்றும் செல்பேசிகளின் பயன்பாட்டை அதிகப்படுத்த வேண்டிய தேவையுள்ளது. இந்தியாவில் பொழுது போக்கு, தகவல், விளம்பரம் மற்றும் சமூக இணைப்பு ஆகியவற்றுக்காக மட்டுமே தற்போது செல்பேசிகள் பயன்படுத்தப்படுகின்றன.
கட்டணங்களை கட்டுதல், தொடர்வண்டி பயணச்சீட்டு முன்பதிவு செய்தல், பணபரிமாற்றம் ஆசிய வணிக சேவைகளுக்கும் செல்பேசிகள் பயன்படுத்தப்படுகின்றன. செல்பேசிகளின் வணிக சேவை துறையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதும் இன்னும் அவை தொடக்க நிலையிலேயே உள்ளன. உருவாகி வரும் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பொது மக்களுக்கு சிறந்த முறையில் சேவை செய்வதில் அரசு அக்கறையுடன் உள்ளது. சுகாதாரம், கல்வி, வேலை வாய்ப்பு, காவல் துறை, செலுத்துதல், நீதி மற்றும் சட்ட சேவைகள் போன்றவை தொடர்பான பல்வேறு வகையான அரசு சேவைகளை செல்பேசிகள் மூலம் அளிக்க முடியும்’’ என்றும் அமைச்சர் ஆ.இராசா குறிப்பிட்டார்.

”கிராமப்புற மக்களில் பெரும்பாலோர் ஒரு வங்கிக் கணக்கைகூட வைத்திருக்கவில்லை என்பதை தேசிய மாதிரி ஆய்வு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அடிப்படையான நிதிச் சேவைகள் பெறுவதற்குகூட அவர்களுக்கு வசதியில்லை என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது. விவசாயக் குடும்பங்களில் 13 விழுக்காட்டினர் மட்டுமே வங்கிக் கடன்கள் பெறுகின்றனர். எல்லா கிராமப்புற பகுதிகளிலும் வங்கிக் கிளைகள் இல்லாததே இதற்கு அடிப்படை காரணமாகும். வங்கிகளுடன் தொடர்பு இல்லாதவர்களுக்கு செல்பேசி மூலம் வங்கிச் சேவை அளிப்பது பயனுடையதாக அமையும். செல்பேசி - வங்கிச் சேவைக்காக மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் துடிப்புடன் பணியாற்றி வருகிறது. இத்திட்டம் அடுத்த சில மாதங்களில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது’’ என்றும் அமைச்சர் கூறினார்.

”அண்மையில் அனைவருக்கும் கல்வி உரிமையை அரசு அறிமுகப்படுத்தியது. கிராமப்புற மற்றும் தொலை தூரப் பகுதிகளில் முறையான கல்வி நிறுவனங்கள் குறைவாக உள்ளன. அதற்கு செல்பேசி கல்வி முறை சிறப்பானதாக இருக்கும். இதே போல சுகாதாரச் சேவைகள், வேளாண் சேவைகள் போன்றவற்றையும் செல்பேசிகள் மூலம் சிறந்த முறையில் வழங்க முடியும். ஒவ்வொரு தனிநபருக்கும் தனிப்பட்ட முறையில் சேவைகளை வழங்குவதற்கு செல்பேசிகளின் பயன்பாடு குறித்து ஆராய்வதற்கான நேரம் தோன்றியுள்ளது. அந்த வகையில் செல்பேசிகளின் பயன்பாட்டு வளர்ச்சிக்கு நிறைய வாய்ப்புள்ளது. அத்திசையில் இந்த கருத்தரங்கம் ஒரு முக்கிய நடவடிக்கையாகும்’’ என்றும் அமைச்சர் ஆ.இராசா சுட்டிக்காட்டினார்.

Read more...

Tuesday, March 30, 2010

அறிவு சமூகத்துக்கு பயன்பட வேண்டும் : பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் ஆ.இராசா பேச்சு

சென்னை அண்ணா பல்கலை கழகத்தில் செயல்பட்டுவரும் கிண்டி பொறியியல் கல்லூரி, சென்னை தொழில்நுட்பக் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, கட்டடக் கலை மற்றும் திட்டமிடும் கல்லூரி ஆகியவற்றில் 2009-ஆம் ஆண்டில் பயின்று தேர்ச்சி பெற்ற 124 தங்கப் பதக்க சாதனையாளர்கள் உட்பட 4151 மாணவர், மாணவியருக்கு பட்டமளிப்பு விழா மார்ச் 26ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு பல்கலைக் கழகத் துணைவேந்தர் மன்னர் ஜவகர் தலைமை ஏற்றார். மத்திய தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.இராசா முதன்மை விருந்தினராக பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டம் வழங்கி சிறப்புரையாற்றினார்.

அமைச்சர் ஆ.இராசா பேச்சு:

அண்ணா பல்கலைக் கழகத் துனைவேந்தர் மன்னர் ஜவகர் அவர்களே, பதிவாளர் அவர்களே, துறை தலைவர்களே, பட்டம் பெறும் மாணவர் கண்மணிகளே, பேராசிரியர்களே, பத்திரிகையாளர்களே உங்கள் அனைவருக்கும் வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துகொள்கிறேன்.

அண்ணா பெயரால் சிறப்பாக செயல்படும் இந்த மாதிரி பல்கலைக் கழகங்களில் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லையே என்ற ஏக்கமும், ஆசையும் என் மனத்தில் எப்போதும் இருக்கிறது. இங்கு உரையாற்றுகிற வாய்ப்பை பெற்றமைக்காக துணைவேந்தருக்கு நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.

பெரும்பாலான பட்டமளிப்பு விழாக்களில் பேசுகிறவர்கள் மாணவர்களுக்கு ஒளியூட்டுகிற கருத்துக்களை மட்டுமே பகிர்ந்துகொள்வார்கள். நானும் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் கருத்துக்களையோ, ஒளியூட்டுகிற கருத்துக்களையோ பேசி உரையை நிறைவு செய்ய விரும்பவில்லை.

பட்டமளிப்பு விழா ஒன்றில் அறிஞர் அண்ணா உரையாற்றுகையில், இளைஞர்களே சாதியை ஒழிக்க முன்வாருங்கள், அடக்கு முறைகளை ஒழிக்க முன்வாருங்கள். இவையெல்லாம் சகோதரத்துவத்திற்கும் சமத்துவத்துக்கும் எதிரானது என்று முழங்கினார். அண்ணாவின் பெயரால் செயல்படும் பல்கலைக் கழகம் என்பதால், அண்ணா கண்ட சமூகத்தை உருவாக்குவதற்கு தேவையான கருத்துக்களை உங்கள் முன் பகிர்ந்துகொள்ளலாமென எண்ணுகிறேன். அதே நேரத்தில் ஆங்கிலத்தில் உரையாற்றுவதை காட்டிலும், அனைவராலும் எளிதாக விளங்கிக் கொள்ள இயலும் என்பதால் தாய்மொழியான தமிழில் கருத்துக்களை பகிர்ந்துகொள்கிறேன்.

ஒரு படித்தவருக்கும், சிந்தனையாளருக்கும் வேறுபாடு இருக்கிறது. எல்லா படித்தவர்களும் சிந்தனையாளராக ஆக முடியாது. தான் கற்ற கல்வியை - அறிவை சமுதாயத்திற்காக பயன்படுத்துபவனே சிந்தனையாளன். மாணவர்கள் சிந்தனையாளர்களாக வர வேண்டும் என்று அண்ணா குரிப்பிட்டார். அண்ணா வழியில் வந்த இயக்கத்திற்கு தலைமையேற்று முதல்வர் கலைஞர் ஆட்சி செய்கிற இந்த காலக்கட்டத்தில் - மத்தியில் அமைச்சராக இருக்கும் நான், பாடத் திட்டங்கள் சொல்லும் கருத்துக்களே உரையாக இருக்க கூடாது என்று எண்ணுகிறேன்.

பருவ கால மற்றங்கள் பற்றி மத்திய அரசோ, பிற மாநில அரசுகளோ கண்டுகொள்ளாத நேரத்தில், நான் சுற்றுச் சூழல் அமைச்சராக இருந்தபோது பருவக் கால மாற்றத்திற்கென தனி துறை ஒன்றை இந்த பல்கலைக் கழகத்தில் கலைஞர் உருவாக்கினார்.

இப்போது பருவ நிலை மாற்றம் நம்மை அச்சத்தில் மூழ்கடிக்கிறது. நான் ஒரு கல்லூரியில் பேசும்போது சொன்னேன்: நான் பள்ளிக்கு போகிறபோது வழியெங்கும் இருக்கிற தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் குடிக்க முடியும். என் மகள் பள்ளிக்கு போகிறபோது தண்ணீர் பாட்டில் கொண்டு போகிறாள். எல்லா இடங்களில் இயல்பாக கிடைக்கிற தண்ணீர் அசுத்தமானதால் பாட்டிலில் தண்ணீர் கொண்டுபோகிற நிலை வந்திருக்கிறது. எனக்கு இருக்கிற கவலையெல்லாம், இன்று என் மகள் தண்ணீர் பாட்டிலை கொண்டுபோகிறாள். என் மகளின் பிள்ளை சுவாசிப்பதற்கான காற்றை சிலிண்டரில் அடைத்து கொண்டு செல்கிற காலம் வரும் என்று குறிப்பிட்டேன். எனவே இது போன்ற சமூக அக்கறையை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

1950 ஆம் ஆண்டில் இந்தியாவின் ஜி.டி.பி. உற்பத்தி 5 விழுக்காடு, அது இன்றைக்கு 8 விழுக்காடாக உயர்ந்திருக்கிறது. உலகமே பொருளாதார சரிவால் கதிகலங்கி போயிருக்கிற இந்த நேரத்திலும் கூட இந்தியா 7 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியில் இருக்கிறது. கட்டுமானத் துறையில் 47 விழுக்காடு உயர்ந்திருக்கிறது. தகவல் தொடர்பு துறையிலும் இந்தியா வளர்ந்திருக்கிறது.

நம் நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக் கழகங்களையும் 5 ஆண்டுகளில் ஒரு குடையின் கீழ் இணைக்கிற திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கிவிட்டுதான் இங்கு வந்திருக்கிறேன். நாம் அறிவியலில் உயர்ந்திருக்கிறோம், பொருளாதாரத்தில் உயர்ந்திருக்கிறோம், தொலைத் தொடர்பு துறையில் வளர்ந்திருக்கிறோம். இந்திய தொலைத் தொடர்பு துறை 1999ஆம் ஆண்டிலேயே 6 ஆயிரம் மில்லியன் இணைப்புகளை உருவாக்கி சாதனை படைத்திருக்கிறது. அத்துறை 2 ஆண்டுகளுக்கு முன்னரே தனது இலட்சியத்தை நிறைவேற்றியிருக்கிறது. ஆனாலும் நாம் செல்லும் இடம் வெகு தொலைவில் இருக்கிறது.

ஒரு மனிதனின் அறிவு சமூகத்திற்கும் நாட்டிற்கும் பயன்பட வேண்டும். இல்லையெனில் அவனை மனிதனென்று சொல்ல முடியாது. அவன் விலங்குக்கு சமம். காரணம், பகுத்தறிந்து எது நல்லதோ அதன்படி செயல்படுகிற ஆறாம் அறிவு மனிதகுலத்திற்கு மட்டுமே உரியது. விலங்குக்கு ஆறாம் அறிவு கிடையாது. இங்கு இருக்கிற இளைஞர்களில் எத்தனை பேருக்கு சமூக அக்கறை இருக்கிறது. பாடத் திட்டம் சிலுவை அல்ல, அதிலேயே அறைந்தபடி திரிய, பாடத் திட்டம் அலங்காரப் பொருளும் அல்ல, அதை சூட்டிக்கொள்ள, படிப்பு மட்டுமே வாழ்க்கையின் முற்றுப்புள்ளி அல்ல. அதை கடந்து சமூகம் பரந்து விரிந்திருக்கிறது.

புதிய அரசியல்வாதிகள் ஆட்சிக்கு வருகிறார்கள். முன்னேற்றங்கள் நடைபெறுகின்றன. அரசியல் மாற்றம் மட்டுமே சமூக மாற்றமா என்றால் இல்லைவே இல்லை. 1980ஆம் ஆண்டில் பிரதமராக இந்திராகாந்தி இருந்தபோது, இனி வறுமை இருக்காது என்று சொல்லி வறுமை ஒழிப்பு திட்டத்தை கொண்டுவந்தார். அதற்கு பிறகும் வறுமை ஒழிப்புக்கென பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அந்த திட்டங்களுக்கெல்லாம் எதிர் மறை விளைவு ஏற்பட்டது. பொருளாதார மாற்றம் என்பது மாற்றம்தான், ஆனால் அது நிரந்தர மாற்றமல்ல. சட்டத்தின் மூலம் மாற்றத்தை கொண்டுவர புதிய சட்டங்களை இயற்றுகிறோம். அச்சட்டங்களால் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அதே நேரத்தில் அவற்றால் பாதகங்களும் ஏற்பட்டிருக்கின்றன. சட்டங்களும் திட்டங்களும் சமூக வளர்ச்சிக்கு பயன்படுகிறவை என்றாலும் அவை மாறுதலுக்கு உட்பட்டவை. எனவே சமூக மாற்றத்திற்கு படிப்பை பயன்படுத்த வேண்டும். இதனை இளைஞர் சிந்திக்க வேண்டும்.

பெர்னாஷா சொன்னார்: சரித்திரத்தை கற்காதவன் சரித்திரத்தில் நிற்க முடியாது என்றார். நாமும் சரித்திரத்தை அறிந்து செயல்பட வேண்டும்.

இந்த உலகத்தில் நடக்கும் மாற்றங்கள் புதுமையானவை அல்ல. பழமையில் இருந்து சிறிது பிறழ்ந்து புதிய உருவாகிறது. இதனை நூறு ஆண்டுகளுக்கு முன்னர் நியூட்டன் சொன்னார். நான் பேசுகிற இந்த ஒலிபெருக்கி, ஒரு உலோகம் வெட்டப்பட்டதில் இருந்து உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த மேடை, மரங்கள் வெட்டப்பட்டதில் இருந்து உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த உலகமே ஐந்து பூதங்களால் ஆனது. இதை மாற்றவே இயலாது, பழயவை இல்லாமல் புதியதை சமைக்க முடியாது என்று பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியம் சொல்கிறது.

1866, 1882 ஆம் ஆண்டுகளில் டார்வின், மேண்டலின் ஆகிய இரண்டு அறிஞர்கள் சொன்னார்கள்: மனிதன் தானே தோன்றியவன் அல்ல, ஒரு பழைய உயிரில் இருந்து சில மாற்றங்கள் ஏற்பட்டு மனித உரு கிடைத்திருக்கிறது. இந்த உண்மையை மதங்கள் மறுக்கின்றன. உண்மைகளை கற்று பகுத்தறிவது மூலமே உணரலாம். அந்த வாய்ப்பும் மறுக்கப்பட்டது.

இந்தியாவின் பெரும் அறிஞர்களாக இருந்தவர்களெல்லாம் செய்த கொடுமை என்னவென்றால் மற்றவர்களை படிக்கவிடாமல் செய்து தற்குறிகளாக வைத்திருந்தார்கள் என்று அம்பேத்கர் அறைந்து சொன்னார்.

ஒன்றறிவதுவே உற்றறிவதுவே இரண்டறிவதுவே அவற்றொடு நாவே மூன்றறிவதுவ அவற்றொடு மூக்கே நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே ஆறறிவதுவே அவற்றொடு மனனே நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே

இவ்வுலகில் ஆறுவகை உயிர்கள் இருக்கின்றன. அதில், ஆறாம் அறிவு மனிதனை சிந்திக்க தூண்டுகிறது. இதனை தமிழுக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியர் பல நூறு ஆண்டுகளுக்கு முன் குறிப்பிட்டுள்ளார்.

நான் சட்டம் படித்தவன் ஆதலால் ஒன்றை சொல்கிறேன்: நீதிமன்ற சாட்சிய சட்டத்தில் நேரடி சாட்சி, ஆவண சாட்சி, வழக்க சாட்சி என்ற மூன்று வகை இருக்கிறது. அந்த மூன்று வகையில் ஓலையை சாட்சியாக கொண்டு வந்து திருமணத்தை நிறுத்தியதாக பெரிய புராணத்தில் இருக்கிறது. திராவிட இயக்கத்தில் இருக்கிறவர் பெரிய புராணத்தையும் கடவுளையும் மேற்கோள் காட்டி பேசுகிறேனே என்று எண்ணுகிறீர்கள். நாங்கள் கடவுள் இல்லை என்று சொல்லுகிறோம்; இந்த நாட்டை காப்பாற்ற கடவுள் இல்லையே என்ற வருத்தம் எங்களுக்கு உண்டு.

சேக்கிழாரின் பெரியபுராணத்தில் - திருத்தொண்ட புராணத்தில் - ‘தடுத்தாட கொண்ட புராணம்’ எனும் பகுதி உள்ளது. சுந்தரரின் திருமண நாளன்று ஊர் கூடியிருந்தது. ஆங்காங்கே அலங்காரங்கள், வாத்திய இசைகள் முழங்க மணமேடையில் வீற்றிருந்த அழகிய சுந்தரர், புரோகிதரின் மந்திரத்தைத் தொடர்ந்து மணமுடிக்க இருக்கும் தருவாயில் திருமணப் பந்தலுக்குள் ‘நிறுத்துங்கள்’ எனும் ஒலி அனைவரையும் ஆச்சர்யத்தில் திகழ்த்தியது. வயதான அந்தணக் கிழவன், நெற்றியில் திருநீறு பூசி, பூ நூல் அணிந்து இடது கையில் குடையுடன், மூங்கில் தண்டுடன் நிதானமாய் நடந்து வருகிறார். ஊர் மக்கள் ‘’ஐய நின் வரவு நல்வரவு ஆகுக’’ எனக் குரல் எழுப்பினர். வந்த கிழவனார் ஊர் மக்களிடம் முறையிட்டார். ‘’இந்த நாவல் ஊரன் எனக்கு அடிமை’’ என்று கூறி, அதற்குச் சுந்தரருடைய முன்னோர்கள் எழுதிக் கொடுத்த ஆவணத்தைச் சபையில் வைத்தார். ஆவண ஓலையைக் கண்ட சுந்தரர் பிடுங்கிக் கிழித்துப் போட, மீண்டும் மற்றொரு ஓலையைக் காட்டி சுந்தரர் தமக்கு அடிமை எனக் கூறித் திருமணத்தைத் தடுத்து சுந்தரரை அழைத்துக் கொண்டு திருவருட்துறைக் கோயிலை அடைந்து மறைந்தார். ஆக, ஆவண சாட்சி பற்றி பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட பெரிய புராணத்தில் இருக்கிறது.

சட்ட அறிவு, தொழில்நுட்ப அறிவு, கட்டடக் கலை அறிவு பெற்றிருந்த நாடு, இந்த நாடு. இதனை மாற்றங்களும், புதிய கல்வி மாற்றங்களும் உங்களை மறக்க வைத்திருக்கின்றன என்பதால் சொல்கிறேன். பட்டம் பெறுகிற நீங்கள், சமூக உணர்வு உள்ளவர்களாக மாறி, சமுதாயத்தில் நிலவும் கொடியவைகளை நீக்க வேண்டும். உங்களின் பட்டம் அண்டை வீட்டில் இருப்பவருக்காவது பயன்பட வேண்டும்.

தொலைதொடர்பு வளர்ச்சியால் உலகமே நெருக்கமாகிவிட்டது அண்டை வீடுகள் அந்நியமாகிவிட்டன

என்று ஒரு கவிஞர் சொன்னார். கூலி வேலை செய்து படிக்கவைத்த குடும்பத்தில் பிறந்த பிள்ளைகள், படித்து முடித்து அமெரிக்காவில் வேலை செய்கிறார்கள். சொந்த ஊரில் இருக்கிற தாய் - தந்தையரை கண்டுகொள்வதில்லை.

ஈ மெயிலில் நீ மேய்ந்திருக்கிற நேரத்தில் என் உடலில் ஈ மொய்த்த சேதி உனக்கு வரும். உன் மீது நம்பிக்கையில்லை தபால்காரர் மீது நம்பிக்கையில் இந்த கடிதத்தை எழுதுகிறேன்.
என்று அமெரிக்காவில் இருக்கிற மகனுக்கு ஒரு தந்தை கடிதம் எழுதியதாக இன்னொரு கவிஞர் எழுதினார்.

காதல் உள்ள இதயங்கள் இப்போது சுருங்கிவிட்டன. காதல் உணர்வு எல்லோருக்குமே தேவையானது. பால் உணர்வு மிருகங்களுக்கு போதும். பாச உணர்வு சகோதரர்களுக்கு போதும். பால் உணர்வும் பாச உணர்வும் சேரும் புள்ளியே காதல். ஆனால் இப்போது இளைஞர்கள் பலர் பால் உணர்வுடனே காதலிக்கிறார்கள். அதற்கு பெயர் காதல் அல்ல.

உன்னை பார்த்தபோது
முதல் ஆச்சரியம்
உன் வீட்டு நிலைக்கண்ணாடியை
பார்த்தபோது இரண்டாம் ஆச்சரியம்
உன் அழகில் உடையாமல் இருக்கிறதே..

இப்படி ஒரு இளைஞன் காதல் கவிதை எழுதுகிறான். கல்லூரி மாணவர்களுக்கு நடந்த கவிதை போட்டியில், ஒரு கல்லூரி மாணவி எழுதினார்:

என்னை
மானே என்றாய்..
மலரே என்று சொன்னாய்..
தேனே என்றாய்...
என்னை மனுசியாக
எப்போது பார்ப்பாய்..

என்று காதலனிடம் சொல்வதாக சிறப்பான எழுதினார். அந்தக் கவிதையில் பெண்களை இந்த சமூக வைத்திருக்கும் நிலையை சிந்திக்க தூண்டும் கருத்துக்களும், சமூக உணர்வு கருத்துக்களும் இருக்கின்றன.

நாம் செய்கிற ஒவ்வொரு செயலும் சக மனிதனுக்கும் சமூகத்துக்கும் பயன்பட வேண்டும். கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம் கிடைக்க வேண்டும். ஜனநாயகம் என்பது ஓட்டுக்களால் மட்டுமே உருவாக்கப்படுவது மட்டுமல்ல; மனிதனை உருவாக்கும் கூட்டு முயற்சி அது. சமூக அக்கறையுடன் இங்கிருந்து உங்கள் பயணம் தொடங்கட்டும்.

இந்த வாய்ப்பை அளித்த பல்கலைக் கழகத் துணைவேந்தர் உட்பட அனைவருக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்.

Read more...

  ©Template by Dicas Blogger.

TOPO