#navbar-iframe { height: 0px; visibility: hidden; display: none; }

Thursday, June 17, 2010

தெலுங்கு மொழியில் ‘பெரியார்’ திரைப்படம் : அமைச்சர் ஆ.இராசா பேச்சு


ஆந்திர மாநில பகுத்தறிவாளர் கழகம் சார்பில்பெரியார்திரைப்படம் தெலுங்கு மொழியில் மொழி மாற்றம் செய்யப்பட்டது. இத்திரைப்படத்தின் தெலுங்கு பாடல் ஒலிப்பேழை வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடைபெற்றது.

இந்த ஒலிப்பேழையை மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ. இராசா வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.

அமைச்சர் பேசியது வருமாறு:
ஒலிப்பேழை வெளியீட்டு விழாவில் பங்கேற்பதில் நான் அளவற்ற மகிழ்ச்சியடைகிறேன். என்னுடைய மகிழ்ச்சி இரண்டு கோணத்தில் அமைகிறது. இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் எத்தகைய புரட்சிகரமான முன்னேற்றம் அடைய வேண்டுமென தந்தை பெரியார் அவர்கள் ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்பு கண்ட கனவு நனவாகி இருக்கிறது. பெரியாரின் கொள்கை வெற்றியடைந்ததற்கு அடையாளம்தான் இந்த விழா. இது ஒரு மகிழ்ச்சி. இந்த விழாவில் சாதாரண, சாமானிய தமிழனாகிய நான், இந்தத் துறைக்கு அமைச்சராக பங்கேற்றிருப்பது இன்னொரு மகிழ்ச்சியாகும். இதைவிட பெரியாரின் கொள்கையை அரசியல் களத்திலும், சமூகத் தளத்திலும் சாதனைகளாக மாற்றிய மாபெரும் தலைவரான கலைஞரின் தம்பியாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பது பெருமை அளிக்கிறது.

தந்தை பெரியார் அவர்கள், திராவிடர் கழகம், திராவிட இயக்கம் என்கிற சட்ட அமைப்புகளில் ஆற்றியிருக்கின்ற மகத்தான கொள்கை பணிகளை தென்னகம் தாண்டி வட இந்தியா முழுக்க இன்றைக்கு வரவேற்றுக் கொண்டிருக்கின்ற சூழலில் அரசு கருவூலத்திலிருந்து 95 இலட்சம் ரூபாயை ‘பெரியார்’ திரைப்படத்திற்கு தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் வழங்கியிருப்பதும், அந்தப் படத்தை தெலுங்கு மொழியில் மொழி பெயர்த்து இங்கே வெளியிடுவதும் மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும்.

வடபுலத்தில் இருக்கின்ற சமூகநீதி ஆர்வலர்கள், பகுத்தறிவாளர்கள், அம்பேத்கரிஸ்டுகள், இந்தப் பணியை வடபுலத்திலும் மிகச் சிறப்பான முறையில் மேற்கொள்ள வேண்டும். கடவுள் பற்றோ, நாட்டுப் பற்றோகூட எனக்குக் கிடையாது. எனக்கு இருப்பதெல்லாம் மனிதப் பற்று ஒன்றுதான் என்று முழங்கி, ஜாதி பேதம் ஒழிய வேண்டும் என்பதற்காக, தன் வாழ்நாட்களை அர்ப்பணித்த இந்தியாவின் தலை சிறந்த புரட்சியாளர்களில் ஒருவரான தந்தை பெரியாரையும் அவருடைய கொள்கைகளையும் அரசியல் எல்லை கடந்து, மாநில மொழி, இன தடைகளைக் களைந்து இந்தியா முழுக்க பரப்ப வேண்டிய அவசியம் இளைஞர்களுக்கு, பகுத்தவாளர்களுக்கு வேண்டுமென்கிற உணர்வை இந்த ‘பெரியார்’ திரைப்படம் ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.

சாதியே அடிப்படை காரணம்
வேறு எந்த நாட்டிலும் இல்லாத இந்தியாவில் உள்ள இந்து மதமும், அதன் வைதீகத் தளமும் ஏற்படுத்தியிருக்கின்ற ஜாதி என்கின்ற கொடிய நோய் தான் இந்தியாவின் வறுமைக்கும், சரிவுக்கும், தரித்திற்கும், அறியாமைக்கும் அடிப்படைக் காரணங்கள் என்றும், இவற்றைக் களையாமல் இந்தியாவின் வளர்ச்சி அரசியல் துறையாகட்டும், சமூகத் துறையாகட்டும், பொருளாதாரத் துறையாகட்டும், எந்தத் துறையிலும் வளர வாய்ப்பில்லை என்கிற எச்சரிக்கையை இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்பாகவே எச்சரித்தவர் தந்தை பெரியார் அவர்கள். பெரியாரின் எச்சரிக்கையை மறுத்த, மறுதலித்த, பல்வேறு அரசியல் கட்சிகள் இன்றைக்கு பெரியாரை அவரின் அடையாளமாக திகழ்ந்து கொண்டிருக்கின்ற ஒப்பாரும் மிக்காருமில்லாத தலைவர் கலைஞரை அரசியலிலும், நிருவாத்திலும், பின்பற்ற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

பெண்களுக்குச் சொத்துரிமைச் சட்டம்
1929-இல் செங்கல்பட்டு மாநாட்டில் பெண்களுக்கு சொத்துரிமை வேண்டும் என்றார் பெரியார். ஆரம்பப் பள்ளிகளில் பெண்களே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்றார் பெரியார். அரசு அதிகாரங்களில் பெண்கள் பங்குபெற வேண்டும் என்றார் தந்தை பெரியார். 1950-களில் இதே சீர்திருத்தக் கருத்தை நாடாளுமன்றத்தில் சட்டமாக்கிட எல்லா வழிகளிலும் எத்தணித்தார் அம்பேத்கர். அப்போதெல்லாம் மேல்தட்டு வர்க்கத்தினரால் அம்பேத்கரின் முயற்சி முறியடிக்கப்பட்டது. இந்தச் சட்டங்களை, திட்டங்களை அரசு சட்டத்தில் அரியணை ஏற்றிய தலைவர்தான் எங்களுடைய தலைவர் கலைஞர் அவர்கள்.

சைமன் கமிசனே வா
இன்றைக்கு சாதிவாரியாக கணக்கெடுப்புத் தேவையா? இல்லையா? என்கிற விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. இதேபோல 80 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் சமூக அமைப்பே ஆராய முற்பட்ட சைமன் கமிசனை திரும்பிப்போ என்று தேசியவாதம் என்கிற பெயரில் கூச்சல் எழுந்தபோது, சைமன் கமிசனே வா என்று வரவேற்று, இந்த நாட்டில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வி அறிவு இல்லாதவர்களாக, தற்குறிகளாக சுரண்டப்படுகின்ற மனிதக் கருவிகளாக கொடுமைப்படுத்தப்படுவதை இந்தியா அறிய வேண்டும். இவைகளுக்கெல்லாம் கழுவாய் வழங்கப்பட வேண்டும் என்று எதிர்த்துக் குரல் கொடுத்தவர் தென்னிந்தியாவில் பெரியார் ஒருவர்தான் என்பதை இன்றைய தலைமுறை உணர வேண்டும்.

புரட்சிகரமான திட்டங்கள்
இந்தியாவில் இருக்கின்ற மாநிலங்களில் தமிழ்நாட்டில்தான் உழைக்கின்ற மக்களாக சூத்திரர்களும், பஞ்சமர்களும், அரசியல் அதிகாரத்திலும், அரசு உயர் பணிகளிலும் முன்னேறியிருக்கிறார்கள் என்றால், அதற்குக் காரணம் பெரியாருடைய இயக்கமும், அந்த இயக்கத்தின் தளபதிகளான அறிஞர் அண்ணாவும், தலைவர் கலைஞரும் வழங்கிய, வழங்கிக் கொண்டிருக்கின்ற புரட்சிகரமான திட்டங்களே காரணமாகும். சாதி, பேதமற்ற சமுதாயம் காண பாடுபட்ட பெரியாரின் பெயரால் சாதியற்ற சமத்துவபுரங்களை தமிழகத்தில் உருவாக்கி, இந்தியாவிற்கே அறிமுகப்படுத்தியவர் கலைஞர் அவர்கள். தன்னை ஒரு நாத்திகன் என்றும், தன்னுடைய பாதை பெரியாரின் பாதை என்றும் பிரகடனப்படுத்திக் கொண்ட தலைவர் கலைஞரை போன்ற பகுத்தறிவுவாதிகள் ஆட்சிக்கும், அதிகாரத்திற்கும் வருகிறபோதுதான், சமூகக் கொடுமைகள் களையப்பட்டு, முன்னேற்றமும், வளர்ச்சியும், சமூகநீதியும் சாதாரண சாமானிய உழைக்கும் வர்க்கத்திற்குக் கிடைக்கும் என்பதை இளைஞர்களும், குறிப்பாக பொதுவாழ்க்கைக்கு வருகின்ற இளம் தலைவர்களும் உணர்வதற்கு தெலுங்கு மொழியில் வெளிவருகின்ற பெரியார் திரைப்படம் ஒரு அடித்தளமாக அமையும் என்று நம்புகிறேன்.

1 comments:

Sakya J. Mohan June 19, 2010 at 12:34 PM  
This comment has been removed by a blog administrator.

  ©Template by Dicas Blogger.

TOPO