#navbar-iframe { height: 0px; visibility: hidden; display: none; }

Monday, November 23, 2009

நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவை தடுக்க முன்னெச்சரிக்கை: அமைச்சர் ஆ.ராசா


ஊட்டி, நவ. 23-
நீலகிரி மாவட்டத்தில் குன்னூர்- கோத்தகிரி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நடுவண் அமைச்சர் ஆ. ராசா பார்வையிட்டார். அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர்
குன்னூர், காட்டேரி, மரப்பாலம் வழியாக சின்ன குரும்பாடி எனும் ஆதிவாசி மக்கள் குடியிருப்பு பகுதிக்கு வந்தார். நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு போக்குவரத்து வசதி எதுவும் இல்லாமல் அவதிப்பட்டு வந்த ஆதிவாசி மக்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு நிரந்தர வீடு அமைக்க வேண்டும் என்று அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர்.

அதையடுத்து பர்லியாருக்கு சென்ற அமைச்சர் ஆ.ராசா, பர்லியார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தங்கவைக்கப்பட்டு இருந்த மரப்பாலம், வடுகன்தோட்டம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

மேட்டுப்பாளையத்தில் உள்ள நீலகிரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலகத்தில், பவானி ஆற்றின் கரையோரப் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 50 பேருக்கு இலவச வேட்டி, சேலை, நிவாரணத்தொகையை அமைச்சர் ஆ.ராசா வழங்கினார்.

பின்னர் அமைச்சர் ஆ.ராசா செய்தியாளர்களுக்கு அளித்த நேர்காணலில் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் அதிக அளவில் நிலச்சரிவுகள், பூமியில் பிளவுகள் ஏற்பட்டு உள்ளன. புவியியல் துறை துணை இயக்குநர் தலைமையில் அமைக்கப்பட்டு உள்ள குழுவினர் நிலச்சரிவு மற்றும் பூமி பிளவுக்கான காரணம் பற்றி ஆராய்ந்து, ஒரு மாத காலத்திற்குள் அறிக்கை தர உள்ளனர். அந்த அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட நிருவாகத்தோடு கலந்து பேசி எந்த மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது என ஆலோசிக்கப்படும். பின்னர் மேல்நடவடிக்கை தொடர்பாக நடுவண், மாநில அரசுகளை அணுகி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அமைச்சர் ஆ.ராசா கூறினார்.

அமைச்சர்
ஆ.ராசாவுடன் தமிழக அமைச்சர் கா.இராமச்சந்திரன், குன்னூர் சட்டப்பேரவை உறுப்பினர் சவுந்தரபாண்டியன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பா.மு.முபாரக், பா.அருண்குமார் மற்றும் கட்சி பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

0 comments:

  ©Template by Dicas Blogger.

TOPO