#navbar-iframe { height: 0px; visibility: hidden; display: none; }

Monday, August 24, 2009

பெரியாரின் பார்வையில் நாட்டு பற்று - மொழி பற்று : அமைச்சர் ஆ.இராசா உரை

ண்ணகிக்குச் சிலை வைத்தபோது தந்தை பெரியார் அதை ஏற்கவில்லை. ஏனென்றால் பெண்களை அடிமைப்படுத்துகின்ற ஒரு weapon, ஒரு கருவி கற்பு, கற்பு என்றால் அது ஆணுக்கும் இருக்க வேண்டும். நான் என்னவிதமான ஒழுக்கத்தை என்ன விதமான நடத்தையை இராஜதுரை அவர்கள் என்மீது காட்டவேண்டுமென்று எண்ணுகிறேனோ அதை நான் அவரிடத்திலேயும் காட்டவேண்டும், மற்றவருக்கும் காட்டவேண்டும். அது தான் கற்பு, அதுதான் ஒழுக்கம்.

ஒழுக்கத்துக்கு ரொம்ப எளிமையாக விளக்கம் சொன்னார் பெரியார்: ``நான் உன்னிடம் என்ன எதிர்பார்க்கிறேனோ அதை நீ என்னிடம் எதிர்பார்ப்பதற்கும் இன்னொருவனிடம் நான் எதிர்பார்ப்பதற்கும் ஒன்றாக இருக்கவேண்டும். இதுதான் ஒழுக்கம்’’. அந்த அடிப்படையில் கண்ணகிக்கு சிலை வைப்பதைக்கூட தந்தை பெரியார் விமர்சித்தார்.

ஆனால் அண்ணா வேறு விதமாகச் சொன்னார்: கற்பு உண்டா இல்லையா என்பது வேறு, கண்ணகி கற்புக்கு அரசியா என்பது வேறு , ஆனால் இந்த மண்ணில் ஒருகலாச்சாரப் படையெடுப்பு நடந்திருக்கிறது. ஒரு உயர்ந்த செம்மாந்த வாழ்க்கை, ஒருவனுக்கு ஒருத்திதான் வாழவேண்டுமென்கின்ற வாழ்க்கை. ஒரு வேளை விதவையாகிவிட்டால் அந்த விதவையை மறுமணம் வேண்டுமென்கின்ற உரிமைகூட இந்த தொல்சமுதாயத்தில் இருந்திருக்கிற இந்த தமிழ் சமுதாயத்தில் திடீரென்று `ஐவனுக்கும் தேவி அழியாத பத்தினி’ என்று திரௌபதி அம்மனுக்குக் கோயில் கட்டவேண்டிய அவசியம் என்ன? இந்தக் கலாச்சாரப் படையெடுப்பை மறுப்பதற்காகத்தான் கண்ணகிக்கு நான் சிலை வைக்கிறேன்.

கண்ணகிக்கு சிலை இந்த திராவிட இயக்கத்திற்கு அவசியப்பட்டதற்குக் காரணம் , இது எங்கள் அடையாளம், இது எங்கள் நாகரீகம், இது எங்கள் பண்பாடு, வரலாறு என்று சொல்வதற்கு ஒரு அண்ணா இந்த மண்ணிற்கு அவசியப்பட்டதாக அண்ணா கருதிக்கொண்டார். எனவே திராவிட சட்டகம் என்கின்ற சட்டகத்திற்குள் பெரியார் தன்னை அடக்கிக்கொண்டதற்குக் காரணம் ஆரியருக்கு எதிர்ப்பு, இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் பிராமணர்களுக்கு எதிர்தளத்தில் இயங்குவதற்கு ஒரு அடையாளம் தேவைப்பட்டது அவ்வளவு தான். அதற்காக திராவிடர் அல்லாத ஒரு சமுதாயம் இந்த மண்ணிலே வாழக்கூடாது என்றோ, அவர்களுக்கு உரிமையற்றுப் போய்விட வேண்டுமென்றோ பெரியார் ஒரு போதும் கருதியவர் அல்ல.

”எனக்கு மொழிப்பற்று கிடையாது, நாட்டுப்பற்று கிடையாது, தேசியக்கொடி என் கோவணத் துணி, இந்திய வரைபடத்தை எரிப்பேன்”

என்று எதையெல்லாம் எரிக்கமுடிந்ததோ அதையெல்லாம் செய்தவர் தந்தை பெரியார். இன்னும் கூட நான் சொல்லுவேன். ஒரு காலத்தில் இந்த நாட்டின் மீது சீனா படையெடுத்து வந்த போது இந்த நாட்டிலுள்ள தலைவர்களெல்லாம் துண்டேந்தி வசூல் செய்தார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேரறிஞர் அண்ணா உட்பட. ஆனால் பெரியார் அந்தக் காரியத்தைச் செய்யவில்லை. நான் கர்ப்பக்கிரகத்திற்குள்ளே போகிறேன் என்று சொன்னார்.
பத்திரிகையாளர்கள் கேட்டார்கள், ”சீனா படையெடுத்து வருகிறது, நாடு பறிபோகிறது, நீங்கள் இப்போதுதான் ஜாதியை ஒழிக்கிறேன். மதத்தை ஒழிக்கிறேன் என்கிறீர்களே?’’ என்று கேட்ட போது பெரியார் சொன்னார்: ”ஒ ரு வேளை சீனாக்காரன் படையெடுத்து வந்து என் சூத்திரப்பட்டம் போகுமானால், பற, பள்ளுபட்டம் போகுமானால் அவனையும் வரவேற்பதற்கு நான் தயார்’’

இவ்வாறு சொல்லுவதற்கு ஒரே ஒரு தலைவன் தான் இந்த மண்ணிலே இருந்தார். எனவே இருவரும் வேறுபட்ட அடையாளங்களோடு இருந்த தலைவர்கள். அம்பேத்கர் தேசியத்தை விரும்பியவர், பெரியார் தேசியத்தை விரும்பியவர் அல்ல. தேசியம் ஒரு கற்பிதம் என்று சொன்னவர்,
நாட்டுப்பற்று பொய் என்று சொன்னவர், நேற்றுவரை பாகிஸ்தான் நம்மோடு இருந்தது, நாளைக்கு அது பிரிந்துபோய் விட்டால் அதன்மீதும் நாட்டுப்பற்று உனக்கு வருமா எனக் கேட்டவர். எனவே பெரியாருக்கு நாட்டுப்பற்று கிடையாது, பெரியாருக்கு மொழிப்பற்று கிடையாது. உண்மையில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தையேகூட தமிழ் மேல் இருக்கிற காதலால் தந்தை பெரியார் செய்யவில்லை, இந்தி இங்கு வந்துவிடக்கூடாதே என்கின்ற அந்த வேகத்தில்தான் தந்தை பெரியார் செய்கின்றார்.

அதற்கு ஒரு அருமையான தலையங்கத்தையே தீட்டினார். தந்தை பெரியார் எழுதிய தலையங்கத்தில் ஒன்று, இரண்டு உணர்ச்சிப் பூர்வமானவை.

நாகம்மை மறைந்த போது எந்தக் கணவனும் அப்படி எழுத முடியாது.

தன்னுடைய துணைவியார் மறைந்த பொழுது எழுதினார்:
``எனக்கு இருக்கிற ஒரே தடையும் போய்விட்டது, என்னுடைய சுகம் போய்விட்டது எனச் சொல்வேனா? சொத்துப் போய்விட்டது எனச் சொல்வேனா? எனக்கு இருந்த ஒரே ஒரு நலன் போய்விட்டது என்று சொல்வேனா? நாகம்மை வாழ்ந்தது எனக்காகவே தவிர தனக்காக அல்ல’’
என்றெல்லாம் குறிப்பிட்டு விட்டுச் சொல்கிறார்: ”இருந்தாலும் ஒழிந்தது, இன்றோடு எனக்கிருந்த ஒரு தடை ஒழிந்தது. இனிமேல் இந்தத் தமிழ்ச்சமுதாயத்திற்காக என் வாழ்நாட்களை அர்ப்பணிக்கப்போகிறேன்''

மனைவி இறந்த போது கூட இப்படி ஒரு கட்டுரையை ஒரு தலைவனால் எழுத முடியுமென்கின்ற வரலாறு பெரியாருக்கு உண்டு.

அந்தப் பெரியார் மறைமலையடிகளுக்கு ஒரு முறை ஒரு கடிதம் எழுதினார்: நான் உங்களைப் பல்வேறு விதமாக விமர்சித்திருக்கிறேன். உங்களுடைய சைவக்கோட்பாடு மீது எனக்கு நம்பிக்கை இல்லை. நீங்கள் பேசுகின்ற தனித்தமிழ் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஏனென்றால் தனித்தமிழ்க் கோட்பாடு என்பது பிராமணர்களுக்கு எதிராக சைவ வேளாளப் பண்பாடு என்கின்ற தளத்தோடு நின்று போய்விட்டது. தனித்தமிழ் இயக்கம் தேவைதான். தனித்தமிழ் இயக்கம் எதுவரை வந்தது என்றால் மொழியைப் பிரித்துப் பார்த்ததே தவிர கீழே இருக்கிற ஜாதி ஒழிய வேண்டுமென்று விரும்பவில்லை. அது சைவ வேளாளப் பண்பாடு என்கின்ற அந்தத் தளத்தோடு தனித்தமிழ் இயக்கம் நின்று போய் விட்டது. இதை தந்தை பெரியாரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால், உங்கள் மீது எனக்கு நிறைய கருத்து மாறுபாடு உண்டு, உங்களோடு உடன்படாத தளங்கள் நிறைய உண்டு, என்றாலும் தமிழை நாம் காப்பாற்றவேண்டியதற்குக் காரணம், தமிழர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து விடுவார்கள், தமிழ் மொழி இல்லாவிட்டால் தமிழ் மக்கள் சுபிட்சமாக வாழமுடியாது என்பதற்காக உங்களை அழைக்கிறேன். கடந்த காலத்தில் தவறு செய்திருந்தால் அய்யா அவர்கள் மன்னித்து அருளுங்கள் என்று எழுதியவர் தந்தை பெரியார்.

ஆக, நான் இவ்வளவு பூடகம் போட்டுப் பேசுவதற்குக் காரணம், அம்பேத்கர் இயங்கிய தளம் வேறு, தந்தை பெரியார் இயங்கிய தளம் வேறு, இவர்களுக்குள் இருக்கிற ஓர்மை வேறு இடத்திலே வருகிறது. எதிலே வருகிறது?
(தொடரும்...)

0 comments:

  ©Template by Dicas Blogger.

TOPO