#navbar-iframe { height: 0px; visibility: hidden; display: none; }

Monday, August 17, 2009

பெரியார் - அம்பேத்கர்- இன்றைய தேவை :அமைச்சர் ஆ.இராசா கருத்துரை

மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் . இராசா அவர்களை ஒரு அரசியல்வாதியாக எல்லோருக்கும் தெரியும். ஆனால், பலருக்கும் தெரியாத அவரின் முகம் ஒன்று இருக்கிறது. அந்த முகம்தான் அவரை கட்சி பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறது. அது பெரியார் - அம்பேத்கர் ஆகிய இருபெரும் தலைவர்களின் கொள்கைகளை கற்றுணர்ந்து செயல்படுத்த முனையும் ஒரு கருத்தியல் சிந்தனையாளர் என்பதாகும்.

அமைச்சரின் அறிவு சார்ந்த அந்த இன்னொரு பக்கத்தை அறிய பலருக்கும் வாய்ப்பு கிடைத்திருக்காது என்று எண்ணுகிறோம். ஆகவே, 22.02.2008 அன்று திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயராய்வு மையமும், மகளிரியல் துறையும் இணைந்து நடத்திய ` பெரியார் அம்பேத்கர் : இன்றைய பொருத்தப்பாடுஎன்ற தலைப்பிலான கருத்தரங்கில் அமைச்சர் . இராசா பங்கேற்று ஆற்றிய உரையை இயக்கவாதிகளுக்கும் பொதுமக்களுக்கும் அறிய தருகிறோம்.

63 நிமிடம் 36 நொடி நேரம் அமைச்சர் பேசியதை எழுத்து வடிவில் வாசகர்களுக்கு தரும்போது, ஒரே நேரத்தில் அவ்வளவையும் படிப்பது பலருக்கும் முடியாத செயல் என்றே தோன்றுகிறது. ஆகவே, வரலாற்றில் மிகச் சிறந்த இந்த பேருரையை கொஞ்சம் கொஞ்சமாக தொடர் போல் தொடர்ச்சியாக சில நாட்களுக்கு பதிவிட முடிவு செய்துள்ளோம்.

அமைச்சர் .இராசாவின் இந்த உரையை படிக்கும், உங்கள் கருத்தை பகிர்ந்துகொள்ள வேண்டுமென விரும்புகிறோம்.

இதோ அமைச்சர் ஆ.இராசா பேசுகிறார்:

பெரியார் - அம்பேத்கர் : ஒருகட்டுக்குள் அடங்காத இரயில்கள்
பெரியார் - அம்பேத்கர் என்னும் இரு தலைவர்களைப் பற்றிப் பேசுகிறபோது இந்தத் தலைவர்களுக்கிடையே வந்து போகிற சில தலைவர்களைப் பற்றிய விமர்சனம் - மத்தியிலே அமைச்சராக இருக்கிற நான் இந்தத் தலைப்பிலே பேச இருக்கிற காரணத்தினால் - சில தலைவர்களைப் பற்றி அங்கொன்றும் இங்கொன்றுமாக இந்த இருபெரும் தலைவர்கள் சொல்லியதைச் சொல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் மாணவர்களோ, பத்திரிகையாளர்களோ அதைத் தனித்தனியாக அப்படியே பார்க்கவேண்டுமே தவிர அதையே அந்தத் தலைவர்களுக்கு இருக்கிற அடையாளமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதை என் உரையின் தொடக்கத்திலேயே நான் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். ஏனென்றால், ஒரு அரசியல் கூட்டத்தில் பெரியாரைப் பேசுவதென்பது வேறு, ஒரு சமூகக் கூட்டத்தில் அல்லது ஒரு பொருளாதாரக் கூட்டத்தில் அம்பேத்கரின் தத்துவங்களை எடுத்துவைப்பதென்பது வேறு.

ஆனால், பல்கலைக்கழக மாணவர்களுக்கு முன்னால் இருபெரும் தலைவர்களைக் கொண்டு வந்து நிறுத்துவது என்பது, அதுவும் ஒரு அரசியல்வாதியாகிய நான் கொண்டு வந்து நிறுத்துவது என்பது வேறு. என்னையும் அறியாமல் இரயில் தடம் புரண்டுவிடுமோ என்ற பயத்தோடு நான் இங்கு நின்றுகொண்டிருக்கிறேன். ஏனென்றால் இந்த இரண்டு இரயில்களும் - பெரியார் அம்பேத்கர் என்கின்ற இரண்டு இரயில்களும் - ஒருகட்டுக்குள் அடங்காத இரயில்கள் - எந்த தண்டவாளத்திற்கும் கட்டுப்படாத இரண்டு இரயில்கள். எந்தத் தண்டவாளத்திற்கும் கட்டுப்படாத இரண்டு இரயில்களை தண்டவாளத்தோடு கூடிய ஒரு போக்கான ஒரு போக்கிற்கு கொண்டுவந்து நிறுத்துவது என்பது அறிவார்ந்த வேலையா, ஆபத்தான வேலையா என்று எனக்குத் தெரியாது. ஆனால் உத்தரவை எஸ்.வி. இராஜதுரை அய்யா அவர்கள் பிறப்பித்திருக்கிற காரணத்தினால் நான் முயற்சி செய்கிறேன் அவ்வளவு தான்.

ஆங்கிலத்திலே சொல்லுவார்கள் comparision is always odious ஒருவரை இன்னொருவரோடு ஒப்பிடுவது என்பது அவரை புண்படுத்துகிற மாதிரி இருக்கும். நீ இராஜாவைப் போல் இல்லை என்று சொன்னால் அல்லது இராஜா 31 வயதில் 32 வயதில் அமைச்சர் ஆகிவிட்டான் நீ ஏன் அமைச்சர் ஆகவில்லை என்று யாராவது என்னுடைய வகுப்புத் தோழரைப் பார்த்து அவருடைய தாய் தந்தையர் கேட்டால் கேட்பதற்கு இனிப்பாக இருக்கும், ஆனால் அந்த ஒப்புமை odious புண்படுத்தக் கூடியதாக இருக்கும். ஆனால் comparision of values is something productive என்று சொல்லுவார்கள். இரண்டு மனிதர்களின் மதிப்பீடுகளை தனித்தனியாக ஒப்பீடு செய்வதென்பது வேறு, நேரடியாக ஒரு மனிதனை இன்னொரு மனிதனோடு சேர்த்துப் பார்ப்பது என்பது வேறு.

எனவே, அந்தக் கோணத்தில் பெரியாரையும் அம்பேத்கரையும் நாம் இங்கே பார்க்க இருக்கிறோம். இதிலே பெரியாரும் அம்பேத்கரும் முரண்பட்டு நிற்கக் கூடிய இடங்கள் கூட உண்டு. பெரியாரையும் அம்பேத்கரையும் முரண்படுத்திப் பார்த்தவர்கள் கூட சில இடங்களில் பெரியாரையும் அம்பேத்கரையும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.

பெரியாரைப் பற்றிச் சொல்லவேண்டுமென்றால், கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்து மதத்தை எழுதியவர். தன் வாழ்நாளெல்லாம் கண்ணன்தான் தன்னைக் காப்பாற்ற வேண்டுமென்று தன்னுடைய கடைசி நாட்களைக் கழித்தவர். இந்து மதத்தைத் தூக்கி நிறுத்தியவர். ஆனால் வாழ்நாளெல்லாம் இந்து மதம் வேண்டாமென்று சொன்ன பெரியார் மரித்த போது அந்தக் கண்ணதாசன் பாடினான்:

சரித்திரம் மறைந்த செய்தி தலைவனின் மரணச்செய்தி
விரித்ததோர் புத்தகத்தின் வீழ்ச்சியைக் கூறும் செய்தி
நரித்தனம் கலங்கச்செய்த நாயகன் மரணச் செய்தி
மரித்தது பெரியாரல்ல, மாபெரும் தமிழர் வாழ்க்கை

என்று முடித்தான்.
கடவுளை நம்புகிற, இந்துமதத்தைப் போற்றுகிற கண்ணதாசனே கூட பெரியார் மரித்துப் போனதற்குப் பிறகு மரித்தது பெரியாரல்ல மாபெரும் தமிழர் வாழ்க்கை என்று சொன்னார் என்றால் கண்ணதாசன் இருவிதமான கோணங்களைப் பெற்றிருக்கிறார் என்றாலும் பெரியாரை மதித்திருக்கிறார் என்று பொருள்.

அதைப்போல அம்பேத்கரை விமர்சனம் செய்தவர்கள் இருக்கிறார்கள். கடவுள் பெயரை நாக்கிலும், கட்டாரியைக் கக்கத்திலும் வைத்திருக்கிற ஒரு ஆளுக்குப் பெயர் மகாத்மா என்றால் a person who is keeping god’s name in his tongue, keeping knife in his armpit is deserved for appellation of Mahatma, then Mohandass Karamsanth Gandhi is also a Mahatma என்று அம்பேத்கர் சொல்கிறார். கடவுள் பெயரை நாக்கிலும், கட்டாரியைக் கக்கத்திலும் வைத்திருக்கி ற ஒரு ஆளுக்குப் பெயர் மகாத்மா என்றால் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியும் மகாத்மாதான் என்று கொடூரமான விமர்சனத்தை முன்வைத்தவர் அம்பேத்கர். ஆனால் அந்த அம்பேத்கரைப் பார்த்து நீங்கள் ஒரு மிகப்பெரிய தேசபக்தர் உங்களைப் போன்ற ஒரு தேசியவாதியை நான் பார்த்ததில்லை என்று காந்தி சொல்லுகிறார். அதனால்தான் சொல்லுகிறேன் comparison is sometimes odious ஒப்பீடு என்பது சில நேரங்களில் புண்படுத்தும் எனவே, அவரை அவராகவே பார்ப்பது என்ற அந்தக் கோணத்தில்தான் இந்தக் கருத்தரங்கில் நான் கலந்து கொள்ள விரும்புகிறேன்.

(தொடரும்...) அடுத்து,
பெரியாரும் அம்பேத்கரும் சுயபரிசோதனை செய்துகொண்ட தலைவர்கள்

1 comments:

குப்பன்.யாஹூ August 18, 2009 at 11:14 PM  

Thanks for sharing. All the very best for Minister Honorable Raja

  ©Template by Dicas Blogger.

TOPO