#navbar-iframe { height: 0px; visibility: hidden; display: none; }

Thursday, August 06, 2009

திராவிட இயக்க சாதனையின் அடையாளம் அமைச்சர் ஆ.இராசா : கி.வீரமணி பெருமிதம்


குருவரெட்டியூர், ஆக.5-

தபால் கொடுக்கக் கூட தெருவுக்குள் செல்லமுடியாத சமூகத்தில் பிறந்த ஆ.இராசா, தபால் துறைக்கே அமைச்சராக இருக்கிறார். இதுவே திராவிட இயக்க சாதனைக்கு அடையாளம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி குறிப்பிட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகில் உள்ள குருவரெட்டியூரில் 18.7.2009 அன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் ஒரு பகுதி:

மனிதன் நாயைக் கொஞ்சுகிறான். பூனையை மடியில் தூக்கி வைத்துக் கொஞ்சுகிறான். இன்னும் மிருகங்களைக் கொஞ்சுகிறான். ஆறறிவு படைத்த எனது சகோதரன் அவனைத் தாழ்த்தப்பட்டவன், பள்ளன், பறையன், சக்கிலியன் என்று சொல்லி இன்னும் ஒதுக்கி வைக்கிறான் என்று சொன்னால் இதைவிட வேறு கேடு என்ன என்று மனிதநேயத்தோடு தந்தை பெரியார் அவர்கள் தான் கேட்டார். அப்படி கேட்டதோடு அவர் வீட்டுக்குப் போகவில்லை. இதை மாற்றியமைப்பதற்காகத்தான் என்னுடைய வாழ்க்கையை மக்களுக்காக அர்ப்பணிக்கிறேன் என்று சொல்லி மிகப்பெரிய அளவுக்குத் தொண்டாற்றியவர்.

உதாரணத்திற்கு ஒன்றைச் சொல்கின்றேன். இந்த நூலில் ஆய்வாளர் ஒன்றை எழுதியிருக்கின்றார். 1924ஆம் ஆண்டில் தென்னார்க்காடு மாவட்டம் கமலாபுரம் கிராமத்தில் அக்கிரகாரத்தில் அமைந்திருந்த தபால் நிலையத்திற்கு - ஓர் தொடக்கப் பள்ளிக்குச் செல்ல முடியாத அளவிற்கு தாழ்த்தப்பட்ட தோழர் தடுக்கப்பட்டார். இதன் விளைவாக பொதுக் கடமைகளில் அதாவது தபால் அலுவலங்களில் கடிதங்களைப் போடுவது, அங்கிருந்து தொடக்கப் பள்ளிக்குச் சென்று வருவது போன்ற கடமைகளை செய்ய முடியாத அளவிற்கு அவர் தடுக்கப்பட்டார்.

தபால் நிலையத்தில் ஒரு போஸ்ட்மேனாக இருக்கக் கூடியவர் அக்கிரகாரத்திற்குச் சென்று கடிதத்தைப் போடமுடியவில்லை. அக்கிரகாரத்திற்குப் போகக் கூடாது. போனால் தீட்டு. பிணமாகவாவது போக முடியுமா என்றால் முடியாது. மேல் ஜாதிக்காரன் இருக்கின்ற, வசிக்கின்ற இடத்தில் தாழ்த்தப்பட்டவன் பிணமாகக் கூட போக முடியாது. இவ்வளவு பெரிய காட்டுமிராண்டிகளைக் கொண்ட சமுதாயம் நம் சமுதாயம்தான். ஆனால், இன்றைக்கு எப்படி ஆகியிருக்கிறது? யாராவது சட்டப் பூர்வமாக சொல்ல முடியுமா?

நீ பறையன் நீ பள்ளன், நீ சக்கிலி, நீ கீழ் ஜாதிக்காரன், ஆகவே நீ தபால்காரனாக இருக்கக் கூடாது என்று சொல்கின்ற துணிச்சல் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, வேறு எங்காவது உண்டா என்றால் இல்லை. இன்றைக்கு அதே சமுதாயத்தைச் சார்ந்த ஒருவர், இன்றைக்கு இந்தியாவிலே அஞ்சல் துறைக்கே அமைச்சராக மத்திய அமைச்சராக இருக்கின்றார்; அவர் தான் ஆ.இராசா அவர்கள். எல்லா பார்ப்பானும், பாப்பாத்தியும் அதிகாரிகளாக இருக்கின்றவர்கள் கைகட்டி நிற்கிறார்களே. அதற்குப் பிறகு இவர் உத்தரவு போடுகிறார். சார் என்ன சொல்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். இன்றைக்கு எவ்வளவு பெரிய சமுதாய மாற்றம் வந்திருக்கிறது.

தந்தை பெரியார் அறிவு ஆசானுடைய இடையறாத போராட்டங்கள்; அவருடைய அறிவுக் கருத்துகளை எங்கு பார்த்தாலும் மக்கள் மத்தியிலே எதிர்த்து எதிர்நீச்சல் அடித்துச் சொன்னதன் விளைவாக ஏற்பட்ட மாறுதல்கள் அவை. இப்படி எத்தனையோ சொல்லலாம். நடைமுறை உதாரணத்திற்காக உங்களிடம் சொன்னேன். 80 ஆண்டுகளுக்கு, 85 ஆண்டுகளுக்கு முன்னாலே தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த ஒரு தபால்காரர் கூட அக்கிரகாரத்திற்குள் நுழைய முடியவில்லை. ஆனால், இன்றைக்கு அந்த தபால்துறைக்கே மத்திய அமைச்சராக ஆ.இராசா, விளங்குகிறார். இது திராவிடர் இயக்கத்தின் சாதனைகள். பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராசர், முத்தமிழ் அறிஞர் கலைஞர் போன்றவர்களுடைய முயற்சி, உழைப்பு, சாதனையாகும். இத்தனைக்கும் அடித்தளம் யார்? தந்தை பெரியார் மூலக்காரணம்; தந்தை பெரியார் அவர்களுடைய உழைப்பு.

(நன்றி: விடுதலை இதழ் - 5.8.2009)

இணைப்பு : http://files.periyar.org.in/viduthalai/20090805/Page04.html

0 comments:

  ©Template by Dicas Blogger.

TOPO