#navbar-iframe { height: 0px; visibility: hidden; display: none; }

Sunday, May 02, 2010

ஆ. இராசா பதவி விலகமாட்டார்: தில்லியில் கலைஞர் அறிவிப்பு

புதுதில்லி:
இரண்டாம் தலைமுறை ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் சிக்கலில் நடுவண் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. இராசா பதவி விலகமாட்டார் என்று முதலமைச்சர் கலைஞர் கூறியிருக்கிறார்.

நடுவண் திட்டக்குழுக் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக முதலமைச்சர் கலைஞர் 2 நாள் பயணமாக காலை தில்லி வந்தார்.

தில்லி வானூர்தி நிலையத்தில் அவருக்கு நடுவண் அமைச்சர்கள் மு.க. அழகிரி,. ஆ.இராசா, து.நெப்போலியன், காந்திசெல்வன், மாநில அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி மற்றும் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

பின்னர் குடியரசு தலைவர் பிரதிபா பாட்டீலை அவரது மாளிகைக்குச் சென்று சந்தித்த கலைஞர், அடுத்த மாதம் 23ஆம் தேதி முதல் கோவையில் நடைபெறவிருக்கும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்கான அழைப்பிதழை வழங்கி, மாநாட்டில் கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த சந்திப்பின்போது, தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு, மகள் கனிமொழி, தலைமைச் செயலாளர் சிறீபதி ஆகியோர் உடனிருந்தனர்.

இதைத் தொடர்ந்து தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்கு நிச்சயமாக வருவதாக குடியரசு தலைவர் உறுதியளித்தார்” என்று தெரிவித்தார்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பாக தி.மு.க.வைச் சேர்ந்த நடுவண் அமைச்சர் ஆ. இராசா மீது ஏராளமான குற்றச்சாற்றுகளை சுமத்தி அவர் பதவி விலகவேண்டும் என்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருவது பற்றியும், இதை ஏற்று அவர் பதவியிலிருந்து நீக்கப்படுவாரா? அல்லது நீடிப்பாரா? என்றும் செய்தியாளர்கள் வினா எழுப்பினர். ஆனால், அதற்கு விடையளித்த முதலமைச்சர் கலைஞர், “உங்களுக்கெல்லாம் மகிழ்ச்சியான செய்தி எதையும் நான் கொண்டுவரவில்லைஎன்று கூறி நடுவண் அமைச்சர் இராசா பதவி விலக மாட்டார் என்று மறைமுகமாக செய்தியாளர்களுக்கு உணர்த்தினார்.

முதலமைச்சர் கலைஞரின் புதல்வரும், நடுவண் அமைச்சருமான மு.க. அழகிரி, நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட வினாக்களுக்கு பதில் அளிக்கவில்லை என்றும், இதுதொடர்பாக மக்களவைத் தலைவர் மீரா குமார் விடுத்த அழைப்பையும் அவர் நிராகரித்துவிட்டார் என்று கூறப்படுகிறதே? என்று செய்தியாளர்கள் கேட்டனர். இந்த விவரங்களையெல்லாம் நீங்கள் மு.க. அழகிரியிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் என்று தெரிவித்தார். ஆனால் செய்தியாளர்கள் விடாப்பிடியாக, “கட்சித் தலைவர் என்ற வகையில் மு.க. அழகிரியிடம் நீங்கள் விசாரிக்கலாமே?” என்று கேட்டனர். அதற்கு விடையளித்த கலைஞர், அப்படி விசாரித்தால் அதுபற்றி உங்களுக்குத் தெரியவருமே” என்று குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறை அதிகமாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் பரப்புரை செய்வது குறித்த வினாவிற்கு விடையளித்த கலைஞர்,
“இந்தியா முழுவதுமே மின்பற்றாக்குறை அதிகமாக உள்ளது. அதுபற்றி நான் விளக்கமாக அறிக்கை கொடுத்திருக்கிறேன். அதைப் படித்தால் உண்மை புரியும். மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டால் தமிழ்நாட்டில் மின்வெட்டு அவ்வளவாக இல்லை என்பதை புரிந்து கொள்ளலாம்” என்று கூறினார். மின்பற்றாக்குறை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படுமா? என்று கேட்டபோது, தாம் அளித்துள்ள அறிக்கையே வெள்ளை அறிக்கை போன்றதுதான் எனக் கலைஞர் தெரிவித்தார்.

2ஆவது நாளாக திங்கட்கிழமையும் தில்லியில் தங்கியிருக்கும் முதலமைச்சர் கலைஞர் காலை நடுவண் திட்டக்குழு துணைத் தலைவர் மான்டெக்சிங் அலுவாலியாவைச் சந்தித்து தமிழகத்திற்கான திட்ட ஒதுக்கீடு குறித்து பேச்சு நடத்த உள்ளார். பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரசு தலைவர் சோனியா காந்தி ஆகியோரையும் அவர் சந்தித்துப் பேசவுள்ளார். பிரதமருடனான சந்திப்பின்போது, சேலம் இரும்பு ஆலைக்காக நிலம் அளித்தோரின் வாரிசுகளுக்கு வேலை வழங்குவது தொடர்பாக வலியுறுத்த இருப்பதாக கலைஞர் கூறினார்.

மான்டெக்சிங் அலுவாலியவுடனான சந்திப்பின்போது திட்டக்குழுவில் தமிழத்தின் ஒதுக்கீட்டாக எவ்வளவு தொகை கேட்கப்பட்டது? எவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டது? என்னென் திட்டங்களுக்காக நிதியை ஒதுக்கக் கோரினோம்? என்னென்ன திட்டங்களுக்காக நிதி உதவி கோரினோம் என்பது பற்றியெல்லாம் சந்திப்பு முடிந்த பிறகு நானே உங்களைச் சந்தித்து தெரிவிப்பேன் என்று முதலமைச்சர் கலைஞர் செய்தியாளர்களிடம் கூறினார்.

0 comments:

  ©Template by Dicas Blogger.

TOPO