#navbar-iframe { height: 0px; visibility: hidden; display: none; }

Monday, May 24, 2010

ஆ.இராசா மீது எந்த தவறும் இல்லை: பிரதமர் மன்மோகன் சிங் விளக்கம்

புதுதில்லி, மே 24-

இந்திய தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் பரிந்துரைத்த வழி காட்டுதல்களின் அடிப்படையிலேயே 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடந்ததால், அமைச்சர் .இராசா மீது எந்த தவறும் இல்லை என்று, பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டார்.

ஐ.மு., கூட்டணி அரசு இரண்டாவது முறையாக பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதையொட்டி, 4 ஆண்டுகளுக்கு பின்னர் பிரதமர் மன்மோகன் சிங் தில்லியில் பத்திரிகையாளர்களுக்கு அளித்த சிறப்பு நேர்காணலின்போது இதனை குறிப்பிட்டார்.

2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் ஊழல் நடந்து விட்டதாக எழுந்த புகார்கள் பற்றி பாராளுமன்றத்தில் ஏற்கெனவே விவாதிக்கப்பட்டுள்ளது. நானும் மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஆ.இராசாவை அழைத்து பேசினேன். அவர் என்னிடம் முழு விளக்கம் கொடுத்தார்.

இந்திய தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் பரிந்துரைத்த வழி காட்டுதல்களின் அடிப்படையிலேயே தான் நடந்து கொண்டதாகவும், 2003-ஆம் ஆண்டில் இருந்து நடைமுறையில் இருக்கும் கொள்கை அடிப்படையில்தான் முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் ஆ.இராசா வெளிப்படையாக விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக தொலை தொடர்பு ஆணையமும் அவருக்கு ஆதரவு தெரிவித்து உள்ளது.

அமைச்சர் ஆ.இராசா அளித்துள்ள விளக்கத்தில் 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு அந்த நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட கொள்கை அடிப்படையில் நடந்ததை தெரிவித்துள்ளார். ஆகவே அமைச்சர் ஆ.இராசா மீது தவறு இல்லை. இதில் உள்ள முழு பிரச்சினையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
மத்திய ஊழல் தடுப்பு ஆணையர் கேட்டுக் கொண்டதற்கிணங்க தற்போது இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. அந்த விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் நான் ஒரு தீர்க்கமான கருத்தை வெளியிடுவது சரியாக இருக்காது. 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுக்கும், 3 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதை ஒத்துக் கொள்கிறேன். இந்த விவகாரத்தில் சரியானதை காண வேண்டியது அவசியமாகும்.

ஊழல் மிகப் பெரிய பிரச்சினையாக இருப்பதை ஆட்சி தொடக்கத்தில் இருந்தே நான் கூறி வருகிறேன். ஆட்சியில் எந்த மட்டத்தில் ஊழல் நடந்தது கண்டு பிடிக்கப்பட்டாலும் நாங்கள் உறுதியான நடவடிக்கை எடுப்போம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு பிரதமர் மன்மோகன்சிங் கூறினார்.

0 comments:

  ©Template by Dicas Blogger.

TOPO