#navbar-iframe { height: 0px; visibility: hidden; display: none; }

Friday, July 17, 2009

இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் தொழிற்சாலைக்கு புத்துயிரூட்டி சீரமைக்க வேண்டும் : அமைச்சர் ஆ.இராசா வேண்டுகோள்



புதுதில்லி:
உதகமண்டலத்தில் உள்ள இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் தொழிற்சாலைக்கு புத்துயிரூட்டி சீரமைக்க வேண்டும் என்று நடுவண் தொலைத்தொடர்பு மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆ.இராசா, நடுவண் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இது தொடர்பாக நடுவண் கனவகை தொழில்கள் மற்றும் பொது நிறுவனங்கள் துறை அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் அவர்களுக்கு அமைச்சர் ஆ.இராசா கடிதம் எழுதியுள்ளார்.

அதன் விவரம்:
"நீலகிரி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் தொழிற்சாலையை புதுப்பிக்க வேண்டும் என்று உங்களை கேட்டுக்கொள்கிறேன். இந்தக் கோரிக்கையை பொது நிறுவனங்கள் சீரமைப்பு வாரியம் இம்மாதம் 17-ஆம் தேதியன்று பரிசீலிக்க உள்ளது. கனவகை தொழில்துறை அமைச்சகத்தின் 100 நாள் செயல் திட்டத்தில் இந்தத் தொழில்சாலையை புனரமைக்கும் திட்டத்தையும் சேர்த்துள்ளதற்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

எனது நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள இந்தத் தொழிற்சாலை தென்கிழக்கு ஆசியாவிலேயே போட்டோ நுட்பம் சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்யும் ஒரே தொழிற்சாலையாகும். போட்டோ நுட்பம் சார்ந்த துறையில் நம் நாடு தன்னிறைவு பெறுவதற்காகவும், வேலைவாய்ப்பு குறைவாக உள்ள பிந்தங்கிய மாவட்டமான நீலகிரியின் சமூக பொருளாதார வளர்ச்சியையும் நோக்கங்களாக கொண்டு இந்தத் தொழிற்சாலை அமைக்கப்பட்டது. நவீன தொழில்நுட்பத்தின் காப்பாளராகவும் இராணுவம் சார்ந்த துறைகளின் தேவைகளை நிறைவேற்றுவதாகவும் இந்தத் தொழிற்சாலை விளங்குகிறது.

சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளையும் புதுமையான தொழில்நுட்பத்தையும் பெற்றிருந்தபோதிலும் தனது கட்டுப்பாட்டில் இல்லாத பல்வேறு காரணங்களால் இந்தத் தொழிற்சாலை நலிவடைந்தது வருத்தத்திற்குரிய ஒன்று. நலிவடைய தொடங்கிய ஆரம்ப கட்டத்திலேயே அதனை சரி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படாததால் இந்தத் தொழிற்சாலை இப்போதுள்ள நிலையை எட்டியுள்ளது தெளிவாக தெரிகிறது.

இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலையை புதுப்பிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை மிக விரைவிலேயே எடுக்க வேண்டியிருப்பது அத்தியாவசியமான ஒன்று. இதனை தாமதப்படுத்தினால், இத்தொழிற்சாலை விற்பனை சந்தையில் தனக்குரிய இடத்தையும் உற்பத்தி திறனையும் இழந்து விடும். ஏனெனில் இந்தத் தொழிற்சாலைக்கு இயங்குமுதல் எதுவும் இல்லை. இதன் பணியாளர்கள் கடந்த 16 ஆண்டுகளாக 1987-ஆம் ஆண்டின் ஊதிய விகிதத்திலேயே ஊதியம் பெற்றுக்கொண்டு இன்னும் பணியாற்றி வருகிறார்கள்.

இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலைக்கு புத்துயிரூட்டும் திட்டப்படி, ரூ.200 கோடி இயங்குமுதல் மற்றும் ஊதியத்துக்காக ரூ.50 கோடி. பழுது பார்க்கும் பணிகளுக்காக ரூ.9 கோடி. பிற செலவுகளுக்காக ரூ.43 கோடி தேவைப்படுகிறது.

இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் தொழிற்சாலைக்கு புத்துயிரூட்டும் திட்டத்தில் சாதகமான முடிவை எடுக்குமாறு பொதுத்துறை நிறுவனங்கள் சீரமைப்பு வாரியத்தை அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இம்மாதம் 17-ஆம் தேதியன்று நடைபெறும் கூட்டத்தில் சீரமைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பரிந்துரைக்கும் பணியை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்" என்று அமைச்சர் ஆ.இராசா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

0 comments:

  ©Template by Dicas Blogger.

TOPO