#navbar-iframe { height: 0px; visibility: hidden; display: none; }

Wednesday, July 22, 2009

இப்படி ஒரு போராளியைப் பெறுவது எளிதல்ல! : அமைச்சர் ஆ.இராசா

தெற்காசியாவில் குறிப்பாக இந்தியாவில் பசுவையும் குரங்கையும் மண்டியிட்டு வணங்கும் மூடத்தனம் இருக்கும் வரை - மனிதர்களுக்குள் பிறவி ஏற்றத் தாழ்வுகள் இருக்கும் வரை சமூக மாற்றமோ, பண்பாட்டுப் புரட்சியோ வருமா? என்பது ஐயத்திற்குரியதே என்று காரல் மார்க்ஸ், "இந்தியாவில் முதல் சுதந்திரப் போர்’’ என்னும் கட்டுரையில் கூறியுள்ளார். இதை இந்நாட்டு மார்க்சியவாதிகள் மறந்து போனது எவ்வளவு பெரிய தவறு என்பதை இப்போது அவர்களும் மற்றவர்களும் உணருகின்ற காலம் வந்திருக்கின்றது. இந்த மாற்றம் தானகவோ, சுயதாக்கத்தாலோ வந்ததல்ல; பெரியார் - அண்ணா என்னும் இரு பெரும் தலைவர்களும் அவர்களது இயக்கங்களான திராவிடர் கழகமும் திராவிட முன்னேற்றக் கழகமும் ஆற்றிய அரும்பணிகளால் விளைந்த விளைச்சல்கள்.

இளைஞர்களின் பார்வை எந்த வட்டத்தில் ஏறக்குறைய 75 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தத் தத்துவங்கள் தேவைப்படுகின்றன என்பது மகிழ்ச்சிக்குரியதா?, ஆராய்ச்சிக்கும் வியப்புக்கும் உரியதா? என்பதை எடைபோட வேண்டிய இளைஞர்களின் பார்வை எந்த வட்டத்திற்குள்ளும் கட்டுப்படாமல் காணாமல் போய்க்கொண்டிருப்பதும் கள்ள மனிதர்களோடு களவு போவதும் நல்ல அறிகுறியல்ல! என் மதிப்புக்குரிய ஆசிரியர் வீரமணி அவர்களின் பிறந்த நாளில் என்னுள் பிறக்கும் முதல் ஏக்கப் பெருமூச்சு இதுதான்!

1840-களில் காரல்மார்க்ஸ் தந்த எச்சரிக்கையை தகவல் பரிமாற்றம் இல்லாதா அந்தக் காலத்தில் உணர்ந்து உழைத்த புரட்சியாளர் தந்தை பெரியார்.

அந்தத் தத்துவங்களை முன்னெடுத்து அரியணையேற்றி மாற்றங்களையும் - மறுக்கப்பட்டவர்களுக்கு உரிமைகளையும் உறுதியையும் தர ஆவன செய்தவர் அண்ணா.

இவர்கள் இருவரோடும் - இவ்விரு இயக்கங்களோடும் இந்தத் தத்துவ அரசியல் ஓட்டம் நின்றிருந்தால் இந்த மண்ணில் மனிதர்களுக்குப் புதிய பொருளை அகராதிகள் மீண்டும் வழங்கியிருக்கும். இயற்கை வழங்கிய அருட்கொடை என்னவெனில் தலைவர் கலைஞரும் ஆசிரியர் வீரமணியாரும் வாழ்ந்து கொண்டிருப்பதோடு தத்துவம் தழைத்தோங்க தங்களையே தாரை வார்த்துக்கொண்டிருப்பதுதான்!

1980-களில் திராவிடர் கழகத்தின் மாணவரணியில் நான் பணியாற்றியபோது இலால்குடி இடையாற்று மங்களம் அசோகன், சேலம் அசோகன் உள்ளிட்ட நண்பர்களோடு ஆசிரியர் அவர்களை தொலைவில் நின்றும் பின்பு அருகில் இருந்தும் அறியும் வாய்ப்பை பெற்றேன். அப்போது, இலால்குடி பரமசிவம் கல்யாண மண்டபத்தில் சமூக நீதி மற்றும் மண்டல் குழு குறித்த 2 நாள் பயிலரங்கு நடைபெற்றது. அதில், விதைக்கப்பட்ட விதைகள் ஆசிரியர் ஆற்றிய அந்த அற்புதமான விளக்க உரைகள் என்னுள் எப்போதும் காண சாகா வரம் பெற்றவை.

அன்று முதல் இன்று வரை அரசியல் தளத்தில் பிறழ்வுகள் நேர்ந்தபோதும்கூட அவரிடம் மலைத்து போகிற பல காரணிகளை நான் கண்டு வியக்கிறவன்.
எப்போதும் நின்றுவிடாத அவரது அறிவுத்தேடல்! தேடிய அறிவை தனது இலட்சியத்தை வென்றெடுக்க மட்டுமே பயன்படுத்தும் பாங்கு!கொள்கையைப் பேசுகிறபோது எதிரிகளையும் தம் பக்கம் ஈர்க்க வைக்கும் அறிவார்ந்த பேச்சு! எழுத்து!
தாம் வாழ்நாளில் தாம் கொண்டிருக்கும் கொள்கையால் சமூகத்தை ஓர் ஆங்குலமாவது உயார்த்திட முடியாதா என்பதில் அவர் காட்டும் உறுதி.
"ஓய்வு என்று தனியே ஒன்றில்லை; அது இன்னொரு பணியில் தன்னை இருத்திக்கொள்வது" என்று சேகுவாரா கூறினார். அவரின் சொற்களோடு இணைந்தது ஆசிரியரின் அயராத உழைப்பு!
இப்படி ஒரு சமூகப் போராளிக்காகத் தமிழ்ச் சமுதாயம் இன்னொரு முறை தவமிருக்க உறுதியாக முடியாது.

பிறந்த நாள் மகிழ்ச்சிக்குரியதுதான் என்றாலும் அவருக்கு வயது எழுபத்தைந்தா?! எழுபத்தைந்து ஆண்டு ஆகிவிட்டதே என்ற ஏக்கம் மனத்தில் ஒருபுறம்! ஏன் இவருக்கு எழுபத்தைந்து என்று இயற்கையின் மீது எரிச்சல் மறுபுறம்!
ஆயினும், இவர் காலத்தில் அல்லாமல் எப்போது வெல்லும் பெரியாரியம் என்ற வினா நாற்புறம்!

வாழ்க அசிரியர் பல்லாண்டு! வளர்க அவரது தொண்டு தலைவர் கலைஞருடன் இணைந்து..!
( திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் பிறந்த நாள் பவள விழா சிறப்பு மலருக்காக அமைச்சர் ஆ.இராசா எழுதியது)

0 comments:

  ©Template by Dicas Blogger.

TOPO