#navbar-iframe { height: 0px; visibility: hidden; display: none; }

Sunday, November 21, 2010

அலைவரிசை ஒதுக்கீட்டில் இராசா தவறு செய்யவில்லை :‘டிராய்’ தலைவர் பேட்டி!


மத்திய அமைச்சர் ஆ.ராசாவை எப்படியேனும் பதவியிலிருந்து விலக்கிவிட வேண்டும் என்ற கெட்ட எண்ணத்துடன் பத்திரிகைகளும், ஊடகங்களும் எத்தகைய விஷமப் பிரச்சாரங்களிலும், புளுகுப் பிரச்சாரங்களிலும் ஈடுபட்டு வருகின்றன என்பதற்கு, இப்போது மேலும் ஒரு சான்று கிடைத்திருக்கிறது.

மத்திய தொலைத் தொடர்புத் துறையில் செயலாளராக இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியான மாத்தூர் என்பவரை தேடிப்பிடித்து தங்களது விஷமப் பிரச்சாரத்திற்கு முட்டுக் கொடுக்க முனைந்திருக்கிறார்கள் அவர்கள்.

அவர்களுக்குப் பேட்டியளித்த அந்த மாத்தூர் எவ்வளவு பெரிய பொய்யானவர் என்பதும், எத்தகைய யோக்கிய சிகாமணி என்பதும், அவரது பேட்டியின்மூலமே நிரூபணமாகி இருக்கிறது.

ஜெயலலிதா உள்ளிட்ட ராசாவின் எதிரிகள் என்னென்ன பொய்க் குற்றச்சாட்டுகளை ராசாவுக்கு எதிராகக் கூறுகிறார்களோ, அவைகள் எல்லாம் உண்மைதான் என்று சித்தரிக்க முயன்றிருக்கிறார் மாத்தூர். அவர் தமது பேட்டியில்,
- ‘2 ஜி’ அலைக்கற்றை வரிசை ஒதுக்கீடு பற்றி நான் சொன்ன ஆலோசனைகளைப் புறக்கணித்துவிட்டார் அமைச்சர் ராசா. - ‘2 ஜி’ ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கியது தொடர்பான கோப்புகளில் நான் கையெழுத்திட வில்லை.
- எனது ஒப்புதலையும் ராசா பெறவில்லை.
- ஏலம் விடுவதன்மூலம் ‘2ஜி’ ஸ்பெக்ட்ரம் அலைவரிசைகளை ஒதுக்கீடு செய்யலாம் என்ற - எனது கருத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை ன்று குறிப்பிட்டிருக்கிறார். இதனை உடனடியாக மத்திய தொலைத் தொடர்புத்துறை திட்டவட்டமாக உரிய ஆவணங்களுடன் மறுத்து இருக்கிறது.
அதுமட்டுமின்றி -

- ‘2ஜி’ ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு உத்தரவில் மாத்தூர் கையெழுத்திட்டிருக்கிறார். அதனை நிருபிக்கும் ஆவணங்கள் இதோ என்று மாத்தூரின் கையெழுத்திட்ட ஆவணங்களையும் பத்திரிகைகாரர்களுக்கும், ஊடகங்களுக்கும் அளித்திருக்கிறது. அவரது பரிந்துரையின் அடிப்படையிலேயே ஸ்பெக்ட்ரம் ‘2ஜி’ அலைவரிசை ஒதுக்கப்பட்டிருக்கிறது.
- முன்னதாக ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை ஒதுக்கீடு செய்தது எப்படி என்பதற்காக, நடத்தப்பட்ட எல்லா ஆலோசனைக் கூட்டங்களிலும் மாத்தூர் கலந்து கொண்டார். கடைசியாக நடந்த கூட்டத்தில் அவர்தான் ஏற்கனவே ஸ்பெக்ட்ரம் அலைவரிசை கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்யலாம் என்ற பரிந்துரைகளையும் செய்தார்.

- 2008ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டது என்று அவர் இப்போது கூறுகிறார். அது முழுக்க முழுக்க தவறு.

- 2010 ஆம் ஆண்டு ‘3 ஜி’ ஸ்பெக்ட்ரம் அலை வரிசை ஒதுக்கீட்டுக்குத்தான் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. மாத்தூர் உண்மைக்கு மாறான தகவலை வெளியிட்டிருக்கிறார் என்று தொலை தொடர்புத்துறை மறுப்பு தெரிவித்ததன் மூலம் மாத்தூர் முகத்திரையையும், அவரை அவ்வாறெல்லாம் புளுகத் தூண்டியவர்களின் முகத்திரை களையும் கிழித்துவிட்டது.
இதிலே இன்னொரு விஷயம் கூர்ந்து கவனிக்கத்தக்கது. தங்களது கற்பனை எந்தத் தொலைவிற்குப் போகிறதோ அந்த அளவிற்கெல் லாம் ரூபாய் 20 ஆயிரம் கோடியில் ஆரம்பித்து 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி வரை "ஊழலின்" தொகையை உயர்த்திக் கொண்டே போன ராசாவின் எதிரிகள் மூக்கை அறுப்பதுபோல இன்னொரு செய்தியும் வந்திருக்கிறது.

இந்தப் பிரச்சினையை எதிரிகள் முதன் முதலாக எழுப்பிய அந்த வினாடியில் இருந்து ஆ.ராசா ஒரு விஷயத்தை திருப்பித் திருப்பி சொல்லிக் கொண்டே இருக்கிறார். அது என்ன?
"ஸ்பெக்ட்ரம் அலை வரிசைகள் ஒதுக்கீடு செய்தது பற்றிய அதிகாரம் அமைச்சராகிய எனக்குக் கிடையாது. நானாக - எனது விருப்பத்திற்கேற்ப அலைவரிசையை ஒதுக்கீடு செய்து தீர்மானித்து விட முடியாது."
அந்த அதிகாரம் முழுக்க முழுக்க ‘டிராய்’ என்ற அமைப்பின் கையிலேயே உள்ளது. அதுதான் ஏலம்விடும் முறை யையும் விலை நிர்ணயம் உண்டா? இல்லையா? என்பதையும் தீர்மானிக்கும் சக்தி படைத்தது.

அலைவரிசை ஒதுக்கீட்டில் ‘டிராய்’ அமைப்பின் தீர்மானமே இறுதியானது. அது என்ன சொல்கிறதோ அதன்படிதான் தொலை தொடர்புத் துறை அமைச்சர்கள் அலைவரிசை ஒதுக்கீட்டை அமல்படுத்த முடியும். ஆக, முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்ற இந்த முறை 1999 ஆம் ஆண்டு முதல் டிராயின் வழிகாட்டுதலின்படி பிரமோத்மகாஜன், அருண்ஷோரி, தயாநிதிமாறன் போன்று எனக்கு முன்னரே அமைச்சர்களாக இருந்தவர்கள் அனைவராலும் கடைப்பிடிக்கப்பட்ட ஒன்றுதான்.

1999ல் ‘டிராயின்’ வழிகாட்டுதலின்படி அலைக்கற்றை வரிசை எந்த முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டதோ அதேமுறையில்தான் நானும் ஒதுக்கீடு செய்தேன்; எனவே, நான் எந்தத் தவறும் செய்யவில்லை; குற்றமும் இழைக்க வில்லை"
- என்று திரும்பத்திரும்ப மட்டுமின்றி மாநிலங்களவையில் இந்தப் பிரச்சினை குறித்து நடந்த விவாதத்தில் மேலும் எதிர்க்கட்சிகளுக்கு பதிலளித்து அழுத்தந்திருத்தமாக வலியுறுத்திக் கூறியிருக்கிறார்.

எனினும், ராசாவின் எதிரிகள் சாதாரணமான வர்களா? அவர்களுக்கு தலையில் மட்டும்தானா மூளை இருக்கிறது? முதுகில் தொங்கும் நூலிலும் மூளை படைத்தவர்களாயிற்றே. சும்மா இருப்பார்களா? ஆ.ராசா இந்த ஒதுக்கீட்டை தன்னுடைய விருப்பத்திற்கேற்றவாறு செய்திருக்கிறாரே தவிர, சட்ட அமைச்சகத்தின் ஆலோசனையைக்கூட புறந்தள்ளி விட்டார். ‘டிராய்’ என்ன சொல்லுகிறது என்பதற்காகக் கூட அவர் கவலைப்படவில்லை என்று இன்னொரு குற்றச்சாட்டை - இன்னொரு புளுகை அவிழ்த்து விட்டார்கள்.

மத்திய சட்டத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி; காங்கிரசுடன் கூட்டுச் சேர ஜெயலலிதா விருப்பம் தெரிவித்தபோது அளித்த பதிலில்,
இரண்டாவது தலைமுறை அலைவரிசை ஒதுக்கீடு குறித்து மத்திய தலைமை தணிக்கை அதிகாரியின் அறிக்கையை, எதிர்க்கட்சிகள் கூறுவதுபோல் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா மீதான கண்டனம் என்று கூறமுடியாது என்றும், அந்த அறிக்கை இறுதியான ஒன்றல்ல என்றும் ஆ.ராசாவின் எதிரிகளின் முகத்தில் கரி பூசுவது போலவும், மூக்கை உடைப்பது போலவும் கருத்துத் தெரிவித்திருக்கிறார். எனவே, சட்டத்துறையின் ஆலோசனையையும் ராசா கேட்கவில்லை என்று பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் நடத்தி வரும் இன்னொரு புளுகும் தகர்ந்து தரைமட்டாகி விட்டது.

டிராய் இந்த விஷயத்தில் என்ன சொல்கிறது. டிராய் சொன்னபடிதான் ராசா நடந்து கொண்டாரா அல்லது தனது விருப்பத்திற்கேற்ப நடந்து கொண்டாரா என்ற கேள்விக்கு பதில் அளிப்பது போல் - 2ஜி ஸ்பெக்ட்ரம் ராசாவால் ஒதுக்கீடு செய்தது பற்றி ஒரு தகவல் 13.11.2010 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்தத் தகவலை வெளியிட்டவரும் அல்ப சுல்பமானவரல்ல. அவர்தான் டிராய் அமைப்பின் தலைவர் ஜெ.எஸ்.சர்மா.
அவர் -
"2008 ஆம் ஆண்டு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததில் விதிமுறைகள் எதுவும் மீறப்படவில்லை" - என்று குறிப்பிட்டிருக்கிறார்.

செய்தியாளர்களிடம் பேசிய டிராய் அமைப்பின் தலைவர் ஜெ.எஸ்.சர்மா, 2008 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட (அதாவது ராசாவால் வழங்கப்பட்ட) 2 ஜி ஸ்பெக்ட்ரத்திற்கு டிராய் அமைப்பு எந்த ஒரு விலையையும் நிர்ணயம் செய்யவில்லை. 6.2 மெகாஹட்ஸ்க்கு மேற்பட்ட அலைவரிசைக்கு மட்டுமே 3ஜி விலைக்கு இணையாக வசூலிக்க வேண்டுமென்று, இந்த 2010 ஆம் ஆண்டில்தான் ‘டிராய்’ பரிந்துரை செய்ததாகவும், 2008 ஆம் ஆண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட அனைத்து 2ஜி ஸ்பெக்ட்ரத்திற்கும் 3ஜி விலையில் மதிப்பீடு செய்து, அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக குற்றஞ் சாட்டுவது சரியல்ல.
என்றும் தெரிவித்திருக்கிறார்.

ஆக, 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டை நடத்துவது எப்படி என்பதைச் சொல்வதற்கு அதிகாரம் படைத்த டிராயின் தலைவரே ராசாவின் செயல்பாடு சரிதான் என்று நற்சான்றிதழ் வழங்கிவிட்டார்.
அதுமட்டுமின்றி,

இப்போது அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நஷ்டம் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி என்று பினாத்து கிறார்களே! அதை எப்படி கற்பனையாகக் கண்டு பிடித்தார்கள் என்பதையும் டிராய் தலைவர் அம்பலப்படுத்தியுள்ளார்.

இப்போது 3ஜி அலைக்கற்றை வரிசைக்கு டிராய் புதியதாக விலை மதிப்பீடு செய்து அறிவித்தது. 2010ல் அறிவிக்கப்பட்ட அந்த விலையோடு 2008ல் ஒதுக்கப்பட்ட விலையை ஒப்பிட்டு இதே மாதிரி செய்திருந்தால் அரசாங்கத்திற்கு 2008ல் இந்த 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அதிகமாகக் கிடைத்திருக்குமே! அந்தத் தொகை நஷ்டமாகிவிட்டதே! என்று கண்ணீர் வடிக்கிறார்களே, அது சரியல்ல என்பதை டிராயின் தலைவரே உறுதிபடக் கூறிவிட்டார்.

ஆ.ராசாவின் எதிரிகள் அவர் மீது கூறிய புளுகுகளும் நடத்திய விஷமப் பிரச்சாரங்களும் எத்தகையது என்பதை மாத்தூர் கையெழுத்திட்ட ஆவணங்களும் மத்திய சட்டத்துறை அமைச்சரின் கருத்தும், டிராய் தலைவரின் நற்சான்றிதழும் ஒரே நாளில் அடுத்தடுத்து உடைத்து பொடிப் பொடியாக்கி விட்டன.
அதனால் என்ன?
சிரங்கு பிடித்தவன் சொறிந்து கொண்டே இருப்பான். அவனை யார் தடுக்க முடியும்?

1 comments:

Current Political Trend November 23, 2010 at 11:41 AM  

காலம் கடந்த பதில் இது தான் இந்தியாவில் நடக்கும் ஒரு தலைபட்சமான நிலை-ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் தான் இந்த நாட்டை ஆளவேண்டும் என்று எழுதப்படாத சட்டம் நடைமுறையிலிருக்கிறது அதிலும் தாழ்த்தபட்ட வகுப்பை சார்ந்தவர்கள் உயர் பதவிக்கு வந்துவிட்டால் அதை உயர் சாதி இந்துக்களால் சகித்துகொள்ளமுடியாது அவர்களே எல்லாதிருட்டுத்தனங்களையும் பன்னிவிட்டு மாட்டிவிட்டுவிடுவார்கள் இது தான் இன்றைய நிலை

  ©Template by Dicas Blogger.

TOPO